ஆலிவ் ரிட்லிகளின் திகைப்பு..! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

இருள், உலகின் ஆதி சொத்து!

ஒளி, வந்தேறி!

மனிதர்களாகிய நமக்கு வாய்த்த முதல் சொந்தம் தாயின் கருவறையில் கண்ட அந்த இருள்தான்.

இருள், மெல்ல மெல்ல நீங்கி ஒளி உண்டாவதைக் கொண்டாடும் இந்த உலகம் ஒளி, மெல்ல மெல்ல இருளின் மடி புகுவதையும் கொண்டாட வேண்டும் என்பது எனது விருப்பம்.

என்னளவில் கற்ற இலக்கியங்களும் கூட விடியலைக் கொண்டாடிய அளவுக்கு இருளைக் கொண்டாடவில்லையே என்ற ஏக்கமும் எனக்குண்டு.

“காலையிளம் பரிதி வீசும் கதிர்களிலே நீலக் கடலோர் நெருப் பெதிரே சேர் மணி போல்…” என்று ஒளியின் வரவினைத் தன்னை மறந்து கொண்டாடும் மகாகவி பாரதி கூட,

இருள் சூழும் போதினில், “நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ?” என்கிறார்.

தலைவர்கள் வெளியிடும் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் வாழ்த்தில் கூட, “இருளைக் கிழிக்கும் ஒளியினைப் போல உங்கள் வாழ்வு வளம் பெறட்டும்” என்றுதான் வாழ்த்துகிறார்கள். “பாவ இருள் கிழிக்கும் ஒளி” என்கிறார்கள் மத குருமார்கள்.

சென்ற நூற்றாண்டில் பாரதிக்குப் பிறகு நமக்கு வாய்த்த அற்புதமான கவிஞன் கண்ணதாசன். “கர்ணன்” திரைப்படப் பாடலில் இப்படி எழுதினார்…“தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தந்தாய் போற்றி”

ஒளியின்றி இந்த உலகம் இல்லைதான். உலக உயிர்களுக்கு ஒளி அமிர்தம்தான்.

ஆனால், அளவுக்கு மிஞ்சினால்…?

டர்ட்டிள் வாக்

சென்னை நகரத்தில் திருவான்மியூரை மையமாகக்கொண்டு, மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நீலாங்கரை – பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகளில் இந்த “இரவு நேரக் கடலோரப் பணி” மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் புண்ணியமான “டர்ட்டிள் வாக்” பணியில் பல அமைப்புகள் ஈடுபட்டிருக்கின்றன. குறிப்பாகக் கல்லூரி மாணவ மாணவியர் இதில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.

“டர்ட்டிள் வாக்” என்பது என்ன ?

கடல் ஆமைகளில் “ஆலிவ் ரிட்லி” என்று ஒரு வகையுண்டு. இந்த வகை ஆமைகள் பங்குனி மாதத்தில் கடற்கரையை நாடி முட்டையிடுவது வழக்கம். அதனால் இவற்றை “பங்குனி ஆமைகள்” என்றழைப்பதும் உண்டு.

நூற்றாண்டுகளாக, தாங்கள் முட்டையிட ஏற்ற இடமாக பங்குனி ஆமைகள் தேர்ந்தெடுத்த ஸ்தலம் சென்னை திருவான்மியூர் கடற்கரை. திரு + ஆமை + ஊர் என்பதுதான் திருவான்மியூர் என்று மருவியது என்று கீர்த்தி சொல்வோரும் உண்டு.

பத்து லட்சம் பங்குனி ஆமைகள் வாழ்ந்திருந்த இந்தப் பூமியில் கடந்த 500 வருடங்களில் ஏறத்தாழ ஒன்பது லட்சம் ஆமைகள் அழிந்து போய்விட ஒரு லட்சம் ஆமைகள் மட்டுமே இன்று இருப்பதாகச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். அவையும், வேகமாக அழிந்து போய்விடக்கூடும் என்று அஞ்சுகிறார்கள்.

காரணம், இருளைக் கிழித்தெழும் “அபத்த ஒளி” !

ஆம், பங்குனி மாதத்து ஆமைக் குஞ்சுகள் கடற்கரை மணலில் முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடன், வழி வழியே வந்த பிறவி இயல்பின்படி, தங்கள் ஆதி வாழிடமான கடலுக்கே திரும்புகின்றன.

மனிதர்களுக்கு “டி.என்.ஏ” என்கிறோம் அல்லவா, அதுபோல் ஆமைகளுக்கே உண்டான உள்ளுணர்வு அது.

அவ்வாறு, முட்டைகளிலிருந்து வெளிவரும் பங்குனி ஆமைக் குஞ்சுகள் தனியல்பாக வாழிடம் சேர்ந்துகொள்ள, அவற்றுக்குத் துணை கோலுவது, வானில் ஒளிரும் நிலவும், அருகே ஒளிரும் நட்சத்திரங்களும்!

நிலா – நட்சத்திர ஒளியானது கடலில் பட்டுத் தெறிக்க, அந்த மெல்லிய ஒளியின் துணையைக்கொண்டு, மெல்ல நகர்ந்து, தங்கள் வாழிடமான கடலை அடைவதே ஆமைகளின் இயல்பு.

இப்படி வழி வழியாகப் பழக்கப்பட்டு வந்த அந்த ஆமைகள் இன்று திகைத்துத் தடுமாறுகின்றன.

காரணம், இயற்கையான கடலுக்கு எதிர்புறம் செயற்கையாக அமைந்து விட்ட நகரம். அந்த நகரெங்கிலும் ஓங்கி நிற்கும் பளீச்செனும் பல்புகளின் ஆர்ப்பாட்ட “செயற்கை ஒளி”.

அந்தப் பகட்டு ஒளி, இயற்கையான இருள் நேர நட்சத்திர ஒளியைக் காட்டிலும் ஓங்கித் தெரிய… முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக் குஞ்சுகள் “எந்த ஒளி நம் வாழிட ஒளி” என்று தெரியாமல் திகைத்து, கடலுக்கு எதிர்ப்புறமாக நகர் நோக்கிப் பாய்ந்து நகர்ந்து, அப்பாவிகளாய் செத்து மடிகின்றன.

அந்தக் கொடூரத் திகைப்பிலிருந்து அவற்றைக் காக்க, மணல் வெளிதோறும் ஓயாமல் நடந்து, அரவணைத்தெடுத்து ஆமைகளின் இயற்கை வாழிடமான கடல் நோக்கி பத்திரமாக அனுப்பி வைக்கும் பணிதான் “டர்ட்டிள் வாக்”.

மாணவ மாணவியரின் இந்த அருஞ்செயலினால் ஆண்டுக்குப் பல நூறு ஆமைக்குஞ்சுகள் தப்பிக்கின்றன. வாழிடம் சேர்கின்றன. நல்ல விஷயம். மனதார வாழ்த்துவோம்.

இந்தக் கட்டுரை அந்த மாணவர்களைப் பற்றி கவலைப்படுகிறது.

அவர்கள் உள்ளிட்ட இந்த உலகமே வழி தவறும் பங்குனி ஆமைகளாகத்தானே நகர்ந்து கொண்டிருக்கிறது? அதனால் தானே வேக வேகமாக நிம்மதியை இழக்கிறது. எளிதில் நோய்ப்படுகிறது.

ஆம், ஆலிவ் ரிட்லியின் திகைப்பு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

அதை அறியாமல் அப்பாவிகளாகத் தங்கள் வாழ்நாளைக் கடத்துகிறார்களே என்பதுதான் எனது ஆதங்கம். அந்த ஆபத்திலிருந்து அவர்கள் தப்பித்தாக வேண்டும் என்பது எனது நோக்கம்.

மின்னம்பல வாசகர்களில் இளைஞர்கள் அதிகம். அவர்களின் தோளணைத்து நல்லன பகிர்வது எனது கடமையாகும்.

நண்பர்களே,

பூமி என்பது பிரம்மன் அருளோ, நெபுலா துகளோ எதுவாக இருந்தாலும் உயிர் வாழ்க்கையே இங்கு பிரதானம். உயிர் வாழ்க்கைக்கு ஒளிபோலவே இருளும் அவசியம்.

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்வதும் இரவும் பகலுமாக மாற்றி மாற்றித் தருவதும் காரணம் பற்றித்தான்.

ஒளியையும் இருளையும் சரிசமமாக அனுபவித்துத் திளைத்தவர்கள் நம் முன்னோர். நம்முள் பொதிந்திருப்பது அவர்களின் டி.என்.ஏ.தான் என்பதால் அவர்களின் வழி காண்பதே நமக்கும் நல்லது.

ஆனால், நாம் அதன் எதிர்ப் பாட்டையில் செல்ல முற்படுகிறோம்.

அளவுக்கு மீறிய அறிவியலோடு அவசரப்படுகிறோம். காப்பாற்ற ஆளில்லாத பங்குனி ஆமைகளாக ஆபத்தை அறியாமல் நகர்கிறோம்.

காரணமில்லாமல், நம்மை அபரிமிதமாக ஒளிவசப்படுத்திக் கொள்கிறோம்.

பகலில் இயற்கையான சூரிய ஒளி உங்களை வாட்டுகிறது. பகல் செத்த பின்பும் செயற்கை ஒளி உங்களை விடாமல் விரட்டுகிறது.

வீடோ அலுவலகமோ எங்கெணும் ஒளிரும் அந்த “அபத்த ஒளி” உங்களை அறியாமல் உங்கள் ஆழ்மனதை நெருக்குகிறது. ஒரு நோயாகவே தொடர்கிறது.

இறங்கி நடந்தால், நகரெங்கிலும் தெரு விளக்கொளி. உறங்கப் போகும் வரையில் டி.வி, செல்ஃபோன் ஒளி. கண்ணசற உறங்கி, விழித்தால் ஒளி. இப்படி எந்த நேரமும் ஒளியோடே உழல்கிறீர்கள்.

இது கடந்தேறியாக வேண்டிய காலக் கொடுமை.

இருளை உணர்ந்திருக்கின்றீர்களா? இருளின் சுகம் உங்களுக்குத் தெரியுமா? 30, 40 வருடங்களுக்கு முன் நம் ஊரில் மாலை ஆறு மணிக்கு மேல் இருள் கவிந்துவிடும் என்பது தெரியுமா? இருள் கவிந்த தெருவில் இறங்கி நிற்கும் சுகம் அறிவீர்களா?

எதிரிலிருப்பவரின் முகம் மங்கலாகத் தெரிய, பேசும் குரலொன்றே பிரதானமாகி விட, அதில் அன்பும் அக்கறையும் மேலிட்டு நிற்கும் என்பதை அறிவீர்களா?

ஒளி குறைந்த உலகில் பார்க்கும் திறன் கூர்மையாகும். மூளை பலவித நடைக்குப் பழகும். வீடும் தெருவும் நெருங்கி அமர்ந்து உறவாடும். பரஸ்பர மன பாரங்கள் மெல்லத் தீரும். அமைதியான இருளில் மெல்லப் பேசுவதனால் உடல் சக்தி சேமிக்கப்படும்.

இருட்டு உலகில், பரஸ்பரக் காவல் உணர்வு அதிகமாகும் என்பதைச் சொன்னால் புரிந்துகொள்வீர்களா ?

நூற்றாண்டுக் காலமாக நம் முன்னோர் வாழ்ந்த இந்த மண்ணில், நமக்கான வம்ச விந்தில் இத்தனை ஒளிவசப்பட்ட வாழ்வின் செய்தி இல்லை.

விழி மூடினால் மட்டுமே இருள்; விழித்தால் ஒளி என்னும் மரபு மீறிய வாழ்க்கையினால்தான் நோய்கள் அதிகரிக்கின்றன. மனம் பேதலிக்கிறது. நிம்மதிக்கு அலைகிறது.

சர்ச்சுகளிலும், மசூதிகளிலும் போய் மண்டியிட்டுக் கேட்கிறீர்கள். கோயிலில் கண்ட அந்த சாமி மங்கிய இருளில், தான் இருந்துகொண்டு சூசகமாய் உங்களுக்கு உணர்த்துவதைப் புரிந்துகொள்ளாமல் மீண்டும் தெரு ஒளியில் வந்து வீழ்ந்து புலம்புகிறீர்கள்.

காதல் வளர்க்க விரும்புவோர் ஒளியைத் தவிர்ப்பது ஏன் என்று எண்ணிப் பாருங்கள். “கேண்டில் டின்னர்”, “மூன் லைட் டின்னர்” எல்லாம் மெல்லிருளின் மடியில்தானே. முத்தமிட மூடும் விழிகளில் அசையத் தெரிவது அந்த மெல்லிருள் தானே.

ஆம், இருள்தான் நமக்கான ஆதி சுகம்.

எந்த நேரமும் ஒளி என்பது கோழி வளர்ப்புக்குச் சமானம். கோழி வளர்க்கும் கொட்டகையில்தான் ஓரடி உயரத்தில் நூறு வாட் பல்புகள் எந்த நேரமும் ஒளி உமிழ்ந்தபடியே இருக்கும்.

செத்தொழிவதற்காகவே வளர்க்கப்படும் அந்தக் கோழிகள் பாவப்பட்ட ஜென்மங்கள் என்றால், நாம் யார்?

விடிவதற்காகக் கூவுகிறது சேவல் என்பார்கள். “ஐயகோ, சுகமான இந்த இருள் இனி எப்போது வாய்க்குமோ” என்று கூக்குரலிடுவதாகத் தோன்றுகிறது எனக்கு.

சேவல் தரிசிக்கும் அந்த விடிந்தும் விடியாத அந்த மெல்லிருளை என்றாவது நீங்கள் தரிசித்ததுண்டா ?

Non Stop அலாரம் வைத்துக் கொண்டாவது நாலரை மணிக்கு எழுந்து கொள்ளுங்கள். கலைய மனமின்றிக் கசிந்து வெளிரும் அந்தக் காரிருளை தரிசித்துப் பாருங்கள்.

பகற் சூடு தணியச் சூரியன், குளிர்க் கடலில் மெல்ல இறங்கும் அந்தியிருளை சந்தித்ததுண்டா ?

ஏதேனும் ஓர் மலைக் கிராமத்துக்கு செல்லுங்கள். வாய்த்தால் அங்கிருக்கும் நதிக்கரைக்குச் சென்று அமர்ந்துகொள்ளுங்கள்.

பகல் சாய்ந்து இருள் கவியும் அந்த நேரத்தில், வானம் அளந்தது போதுமென கூடு திரும்பும் பறவைகளின் ஆனந்த கூச்சலிடல் உங்கள் காதுகளில் கேளாப் பொருளாக வந்து, வந்து விழக் காண்பீர்கள். சில சமயம் இயற்கையின் குரலும் வாய்க்கக் கூடும்.

மெல்ல இருள் போர்த்தி நகரும் அந்த உலகம் உங்களுக்கொரு புதுப் பொருளை உணர்த்தித் தரும். மனம் லேசாகும்.

இல்லை, அங்கிங்கென்று பயணப்பட வாய்ப்பில்லை என்பீர்களா, கவலை வேண்டாம்.

இனி, மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டில், அலுவலகத்தில் செயற்கை ஒளியை ஆனவரைக் குறைத்துவிடுங்கள். மங்கிய வெளிச்சத்தைக் கொண்டாடுங்கள்.

இருளாரம்பப் பொழுதுகளில் மெல்லிய சங்கீதம் வைத்துக் கேளுங்கள். வீதிகளில், மொட்டை மாடிகளில், தோட்டங்களில் நண்பர்களோடு கூடி மெல்ல அளவளாவிப் பாருங்கள். இரவு என்பது தானாக வாய்த்ததோர் வரம். அதை வீணடிக்காதீர்கள்.

அறிவியல் ஆர்ப்பாட்டங்களினால், செயற்கை ஒளியால் நம் உலகம் சூடாகிக் கொண்டே வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் உலகம் பல மடங்கு சூடாகிக் கிடக்கிறது. ஒவ்வொரு குண்டு பல்பும் எதிர்காலத்தின் எதிரி.

செடி, கொடி, புழு, பூச்சி என உலகச் சூடால் அழிந்த மெல்லின உயிர்கள் எத்தனை கோடியோ… நாளை நாமும் அதிலொன்றாவோம் என்பதை உணருங்கள்.

கரண்ட் கட் ஆகும் நேரம், ஒரு சிறு டார்ச் லைட்டின் ஒளியைக் கொண்டே வீடளக்கத் தெரியும் நமக்கு, ஓயாமல் எதற்கு மூன்று நான்கு அறைகளில் வெளிச்சக் கூசல்?

அநாவசியமான ஒளிக்கற்றைகளை ஓடி ஓடி அணையுங்கள். வெளிச்சத்தின் அருமை தெரியவாவது இருளுக்குப் பழகுங்கள்.

ஒளியை அணைக்கும்பொழுதெல்லாம் தாயின் கருவறையில் நீங்கள் அனுபவித்த அந்த ஆதி சுகம் உங்களை சமீபிக்கும். அரவணைத்து, அனுபவித்து சுகித்துக்கொள்ளுங்கள்.

கல்லூரிக் காலத்தில் எழுதிய ஒரு கஸல் பல்லவி…

பொல்லாதவள்

அந்த

இருள் நாயகி!

கண் சிமிட்டும் போதெல்லாம்

முத்தம் கேட்கிறாள்!

கட்டுரையாளர் குறிப்பு:

எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ovmtheatrics@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share