நித்ய கன்னிமார் – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

மொழிகள், இதயத்தின் இரட்டைச் சாளரங்கள்.

மனதில் கிளர்ந்தெழும் அன்பை, பாசத்தைப் பரிபூரணமாக விழிகளில் தேக்கிக் காட்டும் கொடுப்பினை பெண்மைக்கே உரித்தானது. அது தாய்மைக்கே வாய்க்கப் பெற்றிருக்கிறது.

உண்மையைக் கக்கும் கூரிய விழிகளுக்கு முன்னால் நூறு சைன்யமும் தோற்றுத்தான் போகும் என்கிறது தான்சானியப் பழமொழி ஒன்று. அதற்கு காலத்தால் அழியாத உதாரணம் மகாபாரதம்.

இன்றைய அரசியல் கண்றாவிகளெல்லாம் ஒன்றுமே இல்லை என்னும் அளவுக்கு அன்றைய பாரத மண்ணில் நிகழ்ந்த கொடூர போர் மகாபாரதம். உதிர நதி ஓடிய அந்த பதினெட்டு நாள் குருக்ஷேத்திரக்களத்தில் யுத்தத்துக்குண்டான மொத்த தர்மங்களும் மீறப்பட்டன.

ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் சொல்லப்பட்டு இப்படியும் அப்படியுமாக நிகழ்ந்த கேடுகளின் முடிவில் பாண்டவர் வென்றனர். நூறு பேர் மாய, பாண்டவர்கள் வெற்றி முகட்டை எட்டிப்பிடிக்கக் காரணமாய் போனது பீஷ்மரின் வீழ்ச்சி.

வீழ்பவரா பீஷ்மர்? உன்னைப் போலொரு பிள்ளை இந்த மண்ணில் பிறப்பது அரிதினும் அரிது “பீஷ்ம… பீஷ்ம…” என வானோரால் ஆச்சர்யத்துடன் போற்றப்பட்டவர் அவர். தான் விரும்பும்போது மட்டுமே மரணமடைய முடியும் என்னும் “இச்சா வரத்தை”ப் பெற்றவர் பீஷ்மர்.

போர்க்களத்தில் அர்ச்சுனன், தருமன், வீமன், நகுலன், சகாதேவன் ஏன் கண்ணனையும்கூட எள்ளி நகையாடும் வீரம் படைத்தவர் அவர். அப்படிப்பட்டவரை வீழ்த்தியது எது?

இரண்டு தூய விழிகள்.

அந்தத் தூய விழிகளுக்கு சொந்தக்காரி சிகண்டி. அந்தத் தூய விழிகள் கேட்ட ஒரே கேள்வி, “தேவவிரதா… எனது பெண்மையைப் புறக்கணித்து அவமதித்தது தர்மம்தானா?”

துருபதன் மகளான சிகண்டி, ஒரு திருநங்கை. ஆம்… ஓர் உண்மையான திருநங்கையின் விழிகள் அமேசான் ஓடையைப் போன்றது. அதில் தென்படும் அப்பழுக்கற்றத் தன்மை ஓர் உண்மையான ஆடவனை நிச்சயம் தடுமாற வைத்து விடும்தான்.

மற்ற இரு பாலினர்களான ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி… குடும்பம், குட்டி, சொத்து, சுகம், போட்டி, பொறாமை, மண், பெண், பொன் எனப் பலவகைகளில் பல பேராசைகள் இருப்பதால், பலப்பல மாச்சரியங்களும் அவர்களின் மனதில் கொட்டி இருக்கும். அதனால், அவர்களின் கண்களின் படலங்கள் கசடாகத்தான் கிடக்கும்.

ஆனால், ஓர் உண்மையான திருநங்கைக்கு அந்த பாரங்கள் எல்லாம் இல்லை. அவள் மனதில் இருப்பது ஒரே நோக்கம்தான். தனக்குள் மிளிரும் பெண்மையை இந்த உலகம் மதிக்க வேண்டும். அவ்வளவுதான்.

வேறு கல்மிஷங்கள் ஏதும் அவள் மனதில் இருக்க வாய்ப்பில்லை. அதனால்தான், துருபதன் மகள் சிகண்டியின் விழிகளின் தூய்மை கூர்மையாகிக் கொழுந்துவிட்டு, பீஷ்மர் போன்ற மகாரதர்களையே சாய்த்து, பாரதப் போரையே திருப்பிவிடும் சக்தி படைத்ததாக இருந்தது.

இன்றைய சமூகத்திலும்கூட, அவ்வாறான அப்பழுக்கற்ற விழிகள் திருநங்கைகளிடம்தான் காண முடிகிறது. ஏய்க்கும் விழிகள் நிறைந்த பாழும் சமூகத்தில், ஏங்கும் விழிகள் அவர்களுடையது. அதைக் காணும்போது அவர்கள் மேல் நமக்கு ஆதூரம் மேலிடத்தான் செய்கிறது.

சமீபத்தில், வட அமெரிக்காவில் இருந்து எனது நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ஓர் அதிர்ச்சி தரும் செய்தியைச் சொன்னார். “அங்கே, ஆண்கள் திருநங்கைகளோடு இணைந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.”

உண்மையில், இதைப்பல வருடங்களுக்கு முன்பே நான் எதிர்பார்த்தேன். அது குறித்த ஓர் டாக்குமென்ட்டரியையும் செய்திருக்கிறேன்.

அதில், திருநங்கைகளை ‘மூன்றாம் பால்’ என்று அழைப்பதே ‘நாகரிகக் கொச்சை’ என்று சொல்லியிருக்கிறேன். ‘மூன்றாம் பால் அல்ல; மூன்று பாலினங்களில் ஒரு பால்’ என்பதே நியாயம் என்று நெடுக வலியுறுத்தியிருக்கிறேன்.

அவர்கள் மூன்றால் பால் என்றால், முதல் பால் யார்? ஆண்களா? எனில், இரண்டாம் பால் என்பது பெண்களா? ஆண்கள் ஏன் இரண்டாம் பாலாக இருந்து கொள்ளக்கூடாது? யார் கொடுத்த உரிமை இது? சட்டம் இப்படி சொல்கிறதென்றால், பாரபட்சம் பார்க்கும் சட்டத்தை வைத்துக்கொண்டு இந்த உலகம் நாகரிகமாகிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், இயற்கை சிரிக்காதா? என்றெல்லாம் அதில் கேட்டிருக்கிறேன்.

ஆணாக இருந்தும் ஏன் திருநங்கைகளின் பக்கம் நிற்கிறேன்?

மனிதப் பிறப்பு என்பது என்ன? X – Y குரோமோஸோம்களின் குருட்டுக் கபடி ஆட்டம். அந்தக் குருட்டுக் கபடிக்கும் திருட்டு விசில் கொடுத்தது யார் குற்றம்? படுக்கையில் கிடந்தவர்களும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. திருட்டு விசிலடித்தது யாரென்றும் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. தெரிந்தும், திருநங்கையின் விழிகளில் அன்பு ததும்பி வழிகிறது.

பிறந்து, விளையாடும் சிறு பிராயத்திலேயே ‘நளினங்கள்’ வெளிப்பட்டுப்போக, ‘அது அப்படித்தான்’ என்று பெற்றோர் மிரள்கின்றனர். இது, ஓர் ஆணாக நின்று நமக்கு கொள்ளியும் போடாது; ஒரு பெண்ணாக சென்று வாரிசையும் தராது. எங்காவது செத்து ஒழியட்டும் என்று சினம்கொண்டு சிடுசிடுவென்று விரட்ட ஆரம்பிக்கின்றனர்.

தெரிந்தும், திருநங்கையின் விழிகளில் அன்பு ததும்பி வழிகிறது.

சொந்தபந்தம் மறுக்கப்பட்டு, வீதியில் இறக்கிவிடப்பட்டு, சொத்து சுகங்களில் பங்கேதுமில்லை என முற்றுமுதலாக மறுதலிக்கப்படுகிறாள் ஒரு திருநங்கை. கல்யாணமும், கட்டிலும் கொள்ளமுடியாத நித்ய கன்னியாம் அவளுக்கு என்னதான் இருக்கிறது எதிர்காலம்?

தெரிந்தும், திருநங்கையின் விழிகளில் அன்பு ததும்பி வழிகிறது.

‘அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள்’ என்கிறது மத்தேயு 1:18. அது வேதாகமத்தின் பூமி. இது வெறும் காமத்தின் பூமி. எங்கிருந்து இறங்கிவிடும் ஆவி?

தெரிந்தும், திருநங்கையின் விழிகளில் அன்பு ததும்பி வழிகிறது.

ஆம், அவளது ஒரே தேவை பெண்மை. அவள் வெளிப்படுத்த விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அது அன்பு, அன்பு மற்றும் அன்பு! பெண்மைதான் தனது ஒரே குறிக்கோள் என்று வாழும் ஒரு ஜீவனிடத்தில் எவ்வளவு மென்மை இருக்கும்? எவ்வளவு நளினம் இருக்கும்?

இன்றைய பெண்களிடம் காண முடியாததோர் நளினமும் அன்பும் திருநங்கைகளிடம் கொட்டிக்கிடப்பதைக் கண்டுதான் ஆணாகப்பட்டவன் திருநங்கையோடு இணைந்து வாழ விரும்புகிறான் போலிருக்கிறது..

இன்றைய பெண்கள் சமத்துவம், நாகரிகம் என்ற பெயரில் ஆடை, நடை, பேச்சு என சகல விஷயங்களிலும் ஆண்களுக்கு நிகராக வேடமிட்டுக்கொள்வதால், அவர்களிடம் மிளிர்ந்திருக்க வேண்டிய பெண்மை தொலைக்கப்பட்டு, ஆண்களின் கவனத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்நியப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆண்மையை உசுப்பவல்ல; பெண்மையை இங்கே தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது. ஆணாகப்பட்டவன் தன் வம்சம் தழைப்பதையே ஆழ்மனதில் விரும்புவான். ஆண்கள் செக்ஸுக்காகவும், இன விருத்தி உந்துதலுக்காக மட்டும்தான் இன்று பெண்களை நாடுகிறார்கள்.

ஒரு திருநங்கையால் தனக்கு பிள்ளை பெற்றுக்கொடுக்க முடியாது என்னும், சந்ததி சார்ந்த செய்தி மட்டும் அவனது மூளைக்கு உரைக்காவிட்டால் அவன் ஒரு திருநங்கையோடு வாழவே விரும்புவான் என்றே தோன்றுகிறது.

முன்பெல்லாம் 30 வயதைக் கடந்த முதிர்க்கன்னிகளின் கருமை படர்ந்த கண்களில் காணப்பட்ட வெறுமை, இன்று 18 வயதைக் கடக்கும் இளங்கன்னி பெண்ணிடமே வந்துவிடுகிறது.

பெண்மையை, ஆண்மையிடமிருந்து அச்சத்துடன் விலக்கி வைக்கும்படியான ஏராளமான கட்டுரைகள் இன்றைய பெண்களுக்கு படிக்கக் கிடைக்கின்றன. தொலைக்காட்சியின் சீரியல்கள் ‘நீ ஆங்காரமாக, அழுபவளாக, சூழ்ச்சி செய்பவளாகவே இரு. அதுதான் உனக்குக் காவல்’ என்றே நாளும் சொல்லிக் கெடுக்கின்றன.

பட்டிமன்றப் பேச்சாளர்களோ, ‘பெண்மையே உன்னைப் போற்றுகிறோம்’ என்று கவிதையும், துணுக்கும் சொல்லி மயங்கடிக்கிறார்கள். அப்படிப் பேசுபவர்கள், அந்தரங்கத்தில் இரண்டு மூன்று பெண்களோடு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதை கண்டபின் வெறுத்துப் போகிறாள் பெண்.

இப்படியெல்லாம் திசை திருப்பப்படும், ஆண்களைப் பற்றி நல்ல அபிப்ராயமே இல்லாத ஒரு பெண்ணின் விழிகளில் ஆணை நோக்கி எப்படித் தூய அன்பு வெளிப்படும்? அதிருப்திதான் வெளிப்படும்.

அதனால்தான், மென்மையோடு தன்னை நோக்கும் திருநங்கையோடு வாழும் வழியை ஆண் தேர்ந்தெடுத்து விடுகிறான். வட அமெரிக்க கலாசாரம் நாளை இங்கும் வரலாம்.

இன்றைய பெண் பாவாடை தாவணியை மறுத்து, கூந்தலை வெட்டிக்கொண்டு தான் பெண் என்பதையே மறுக்க முற்படுகிறாள். ஆனால், திருநங்கைகளோ பட்டுப்புடவைக் கட்டுவதையே கொண்டாடித் தீர்க்கின்றனர். ரவிக்கையின் உள்ளே கரம் நீட்டி, அது வெளிப்படும்போது ‘அம்மவோ’ என்று பெருமூச்செரிந்து கொள்கின்றனர்.

தன்னிடம் ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட ஆணுறுப்பை வெட்டியெறிந்து உடல்ரீதியான விடுதலையை பெற்றுவிடும் ஒரு திருநங்கை, மனரீதியாக அடைக்கலம் தேட முற்படும்போது, அவள் காட்டக்கூடிய பரிபூரணமான அர்ப்பணிப்புத் தன்மை இன்றைய பெண்ணிடம் இருந்துவிட முடியுமா என்பது சந்தேகமே. மருத்துவ அறிவியல் இன்று முன்னேறி வருகிறது. ஹாங்காங், தாய்லாந்து போன்ற இடங்களுக்கு திருநங்கைகள் பறக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு நவீன சிகிச்சைகளின் மூலம் பெண் உறுப்பைப் போலவே அச்சு அசலாக அமைத்துக் கொடுத்து விடுகிறார்கள்.

ஒருவேளை, எதிர்கால அறிவியல் தொழில்நுட்பம், திருநங்கைக்கு கர்ப்பப்பை வரத்தையும் சேர்த்து அளித்துவிட்டது என்றால்… பெண்கள் வர்க்கத்தை, ஆண்கள் சீந்தக்கூட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ஆணின் உறுப்போடு பிறந்து பெண் தன்மையோடு வளர்வதும், பெண்ணுறுப்போடு பிறந்து ஆண் தன்மையோடு வளர்வதும் போலவே, ஆண் – பெண் உறுப்புகள் இரண்டினோடும் பிறந்து வாழும் ஜீவன்களும் உண்டு. இந்த மூன்று வகையினரில், இயற்கையோடு சிக்கிகொண்ட போராட்டத்தில் திருநங்கைகளே கரையேறிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்குக் காரணம் அவர்கள் காட்டும் தூய அன்பு.

ஆம், ஓர் ஆணின் அன்புக்குப் பதிலாக ஒரு திருநங்கை காட்டும் விசுவாசமும் மரியாதையும் ஆச்சர்யத்தை அளிக்கக்கூடியது என்பதற்கு ஓர் உதாரணம்…

அப்போதெல்லாம் அடிக்கடி மலேசியாவுக்குச் சென்று வருவது எனது வழக்கம். மலேசியாவில், கிளாங் என்னும் ஊருக்கு அருகே பண்டமாரன் என்றொரு இடம் இருக்கிறது. ஆங்கே, திருநங்கைகளுக்கான கோயில் ஒன்று உண்டு.

அவர்களது தெய்வத்தை அவர்கள் ‘மாத்தா’ என்று அழைப்பார்கள். வருடந்தோறும் அந்த மாத்தா கோயிலில் பெரிய அளவில் விழா எடுப்பார்கள். அப்போது, உலகெங்கும் இருந்துவரும் திருநங்கைகள் அங்கே கூடுவது வழக்கம்.

அந்த நேரத்தில் அங்கே நான் இருந்ததால், அதை ஒரு டாக்குமென்ட்டரியாக தயாரித்துவிட ஆசைப்பட்டு, இரண்டு மூன்று சிசிடி கேமராக்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இறங்கினேன்.

ஷூட்டுக்கு அனுமதிப்பதற்கு முன்னால், ‘நீங்கள் யார்… எதற்காக இதை எடுக்கிறீர்கள்’ என்றெல்லாம் என்னைப் பற்றித் துருவிக் கேட்டார்கள். என்னை, அங்கே அழைத்துப் போயிருந்த திரு.கிருஷ்ணன் அவர்கள் விவரம் சொல்லச் சொல்ல மகிழ்ந்தார்கள். ‘அப்படியென்றால், எங்கள் மாத்தாவுக்கு நீங்கள் ஒரு சுப்ரபாதம் எழுதித் தருவீர்களா?’ என்று அன்பொழுகக் கேட்டுக் கொண்டார்கள். மன நெகிழ்ச்சியோடு, இரண்டு நாள்கள் அவர்கள் கோயிலிலேயே தங்கி எழுதிக் கொடுத்தேன்.

மூன்றாவது நாள் திருவிழா. டாக்குமென்ட்டரி ஷூட்டிங்குக்கு தயாரான நான் பிரமித்துப்போனேன். வரிசை, வரிசையாக லக்ஸுரி கார்களில் ஃபிலிம் ஸ்டார்ஸ் போல வந்து இறங்கினார்கள். அழகென்றால் அழகு… அவ்வளவு அழகு. ஒருவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து, அடுத்தொருவர் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, பின்லாந்து, கனடா என்று வந்துகொண்டே இருந்தார்கள். எல்லோரும் மலேசியாவில் இருந்து போன தமிழ் திருநங்கைகள். அவர்கள் திருநங்கைகள் என்று சொன்னால்தான் தெரியும்.

அதில் ஒருவர் உயரமும் அழகும் அச்சு அசல் தமிழ் நடிகை சோபனா போலவே இருந்தார். சுவிட்சர்லாந்திலிருந்து வந்திருந்தார். தன் பெயரை நந்தினி என்று சொல்லிக்கொண்டார். அருகே சென்று அவரைப் படமெடுக்க விரும்பி கேமராவை ட்ரைபாடிலிருந்து வெளியே எடுத்தேன்.

கவனித்துவிட்டவர் அவசர அவசரமாக அமெரிக்க ஆக்ஸண்டோடு கூடிய ஆங்கிலத்தில், மிக நாகரிகமான முறையில் மறுத்தபடி சொன்னார். ‘நோ லா, டோண்ட் ஷூட் மீ லா! என் ஹஸ்பண்டுக்கு தெரிஞ்சா கஷ்டப்படுவாருல்ல… சாரி லா…’

அதிர்ந்துப்போனேன். அவருக்குத் திருமணமாகி, ஆனந்தமாக குடித்தனம் செய்து கொண்டிருக்கிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம்? ஒன்றாக இணைந்து வாழும்போது, இப்படியென்று தெரியாமலா போகும் ?

‘என்னிடம் கண்ட பெண்மைதான் அவரை என்பக்கம் ஈர்த்தது. என்னை பெண்ணாகவே ஏற்று வாழ்ந்துகொண்டிருக்கிறார். அதில் குறுக்கிடுவது நான் அவருக்கு செய்யும் துரோகம். அவரது உணர்வை நான் மதித்தாக வேண்டும். பிறந்த வீட்டுக்கு சத்தம் போடாமல் வந்து போகும் ஒரு பெண்ணாகத்தான் இந்த மாத்தா கோயிலுக்கு வந்து போகிறேன்…’ என்பதுதான் நந்தினியின் மறுப்புக்கு அர்த்தமாக எடுத்துக்கொண்டேன்.

திருநங்கைகளை வெறும் செக்ஸ் சிம்பலாக மட்டுமே பார்த்திருந்த காலம் மலையேறி விட்டது. இன்று கல்வியிலும் மேம்பட ஆரம்பித்து விட்டார்கள். அரசாங்கம் அவர்களை வேலையில் அமர்த்திக்கொள்கிறது.

2011இல், திருநங்கைகள் வாரியம் அமைக்கப்பட்ட அந்த ஏப்ரல் 15ஆம் நாள் திருநங்கைகள் நாளாகவே கொண்டாடப்படுகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த ஜோயிதா மண்டல் நீதிபதியாகி இருக்கிறார். தமிழ்நாட்டின் லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய கன்னட சினிமாவுக்குத் தேசிய விருது கிடைக்கிறது. சப் இன்ஸ்பெக்டராக சேலம் ப்ரித்திகா யாசினி பொறுப்பேற்கிறார். சிறகுகள் வலிமையடையத் தொடங்கிவிட்டன.

எல்லாம் சரி, இவ்வளவு பெருமைகளை சொல்லி நாம் அரவணைத்தாலும் இவர்கள் தங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டியதும் நிறைய இருக்கிறது.

20, 30 வருடங்களுக்கு முன் சமூகம் இவர்களை ஒதுக்கித் தள்ளியது. அன்று, அவர்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். இன்று, சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ள முன்வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வட நாட்டில் இவர்களுக்கென்று தனி மரியாதை இருக்கிறது. குழந்தை பிறப்பு, கல்யாணம் என்றால் திருநங்கைகளை வீட்டுக்கு அழைப்பார்கள். எந்தப் பற்றும் இல்லாதவர்கள் மனதார வாழ்த்துவார்கள் என்று எண்ணி அவர்களை அழைத்து, ஆசீர்வதிக்க சொல்லி பணம் கொடுத்து மரியாதையோடு வழி அனுப்புவார்கள்.

இன்று நிலைமை மாறிவிட்டது. மருத்துவமனைகளில் ஆட்களை செட் செய்துகொண்டு, எங்கேயெல்லாம் குழந்தை பிறந்திருக்கிறது என முகவரியைப் பெற்றுக்கொண்டு, இவர்களே ஒரு கும்பலாக சென்று, ‘5,000 கொடு, 6,000 கொடு’ என்று அட்டகாசம் செய்கிறார்கள். தாதாக்களிடம் கூலியாளாக சேர்ந்து வசூலுக்குப் போகிறார்கள். கடன் வாங்கியவர்களின் வீட்டு வாசலில் நின்று கொண்டு ஆபாசமாக பேசியும் நடந்துகொண்டும் அசிங்கப்படுத்துகிறார்கள். இப்படியெல்லாம் செய்து தங்கள் மதிப்பை இழக்கிறார்கள்.

மற்றவர்களிடம் அடாவடி செய்வது மட்டுமல்லாமல், தங்களுக்குள்ளேயும் அடித்துக்கொள்கிறார்கள்.

எல்லோருமே வீட்டைவிட்டு வெளியேறி வாழ்பவர்கள்தான் என்பதால், ஆதரவும் அரவணைப்பும் வேண்டி தங்களுக்குள் தாய், மகள், சித்தி, பாட்டி போன்ற உறவுகளை அமைத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். உறவுகள் இருந்தால் தகராறு இல்லாமலா? மிக மோசமாக அடித்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் போல இவர்கள் தகராறு செய்தால் போலீஸால் தட்டிக் கேட்கவும் முடியாது. இப்படியாக செய்வதால் இவர்களிடையே இருக்கும் ஆக்கமுள்ள, புத்திசாலி திருநங்கைகளுக்குக்கூட வாடகைக்கு வீடு கொடுக்க அஞ்சுகிறார்கள்.

‘கம்யூன்’ வாழ்க்கையில் இருந்தவரைக்கும் அவர்களிடமிருந்த பரஸ்பரப் புரிதலும் அரவணைப்பும், குடும்ப செட்டப் ஏற்படுத்திக் கொண்ட பிறகு தொலைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

இதையெல்லாம் கடந்து வந்தால்தான் திருநங்கைகள் தங்களது தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். தங்களுக்கான நல்லதோர் எதிர்காலத்தை உண்டாக்கிக் கொள்ள முடியும்.

திறமையும் அன்பும் உழைப்பும் அவர்களிடம் கொட்டிக்கிடக்கிறது. வேலு நாச்சியார் என்னும் அறுபது கலைஞர்களோடு கூடியதோர் பிரம்மாண்டமான நாட்டிய நாடகத்தை எழுதி இயக்கிக் கொண்டிருக்கிறேன். ஒருமுறை அதில் ஃபோல்க் டான்ஸ் ஆடும் எட்டுப் பெண்களில் இரண்டு திருநங்கையரை ஆடச் செய்தேன். ஒருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும், மற்ற ஆறு பெண்களைவிட அந்த இரண்டு திருநங்கையர் மிக நளினமாகவே ஆடி அசத்தினார்கள். அந்த இரண்டு பேர் லிவிங் ஸ்மைல் வித்யா மற்றும் க்ளாடி என்று முடிவில் அறிவித்தபோது அரங்கம், ஆச்சர்யத்து கரவொலி எழுப்பி ஆரவாரமாக வாழ்த்தியது.

திருநங்கைகள் தங்களுக்குள் தீவிரமாக ஆலோசித்தாக வேண்டிய கட்டம் இது. கல்வியில் முழு கவனத்தை அவர்கள் திருப்பியாக வேண்டும். இசைக் கலைஞராகவோ, வாத்தியக் கலைஞராகவோ ஏன் ஒருவர்கூட இல்லை? ஓவியராக, புகைப்படக் கலைஞராக யார் இங்கே? ஹேர் ஸ்டைலிஸ்டாக, மேக்கப் நிபுணராக தயாராகலாமே?

எல்லோருக்கும் போல திருநங்கைகளுக்கும் காமம் ஒரு அங்கம்தான். சமூகத்தின் தீய அசக்திகள் அதிலேயே உங்களை அழுத்தி விடாமல் பார்த்துக்கொண்டு மேலெழுந்து வந்தாக வேண்டும்.

இல்லையென்றால், ஒரு ‘ஆணைப் போல’ அல்லது ஒரு ‘பெண்ணைப் போல’ சராசரியாகத்தான் வாழ்ந்து போக வேண்டியதிருக்கும். எனது இந்த வரிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அதுதான் உண்மை.

நம்புங்கள்… மனக்குப்பைகள் அண்டிவிடாத, தெளிந்த திருநங்கையாக பிறப்பது என்பது ஒரு வரம். அதை கறைபடியாமல் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

‘நித்ய கன்னிமாருக்கு’ வாழ்த்துகள்!

கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: [vesriramsharma@gmail.com](vesriramsharma@gmail.com)

கனவாய் போன கானக வாசம் !

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share