வழக்குரைஞர் பால ஸ்ரீனிவாசன்
கருத்தோ நிகழ்வோ முறையாக குறித்த காலத்தில் பதிவு செய்து வரலாறாக ஆக்காவிட்டால் காலப் போக்கில் அக்குறித்த நிகழ்வுகள் திரிபும், மாற்றமும், மறைப்பும், பிறழ்ச்சியும் நிகழ வெளிப்பட்டு விடும். இதனைப் பட்டறிந்து உணர்ந்ததன் விளைவே இந்த வரலாற்றுப் பதிவு.
நிகழ்வோடு தொடர்பற்றவர்களும் – தொடர்ந்து முழுமையாக கண்ணுறாத பேர்களும் – காலம் கடந்து கேட்டதை அப்படியே கொள்பவர்களும் பதிவு செய்வதைவிட சூழலில் தொடர்புடைய ஒருவரால் முறையாகப் பதிவு செய்யப்படுவதே உண்மை வரலாற்றுப் பதிவாகும். ஆகவே இஃதோர் உண்மை வரலாற்றுப் பதிவு எனக் கொள்ளலாம்.
ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு 2009ஆம் ஆண்டில் ஒருநாள் திருவள்ளுவர் திருவுருவத்தை நமக்குத் தந்து அழியாப் புகழ்கொண்ட ஓவியப் பெருந்தகை பல்துறை அறிஞர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகனும் குறும்படத்துக்காக சர்வதேச விருது வென்றவரும் வேலு நாச்சியார் தமிழ் தியேட்டர் படைப்பாளருமான ஸ்ரீராம் சர்மா அவர்களிடமிருந்து உலாப் பேசி அழைப்பொன்று வந்தது.
“அண்ணா நானறிந்த தமிழறிஞராக மட்டுமின்றி வழக்கறிஞராகவும் நெறியாளராகவும் இருந்து எனக்கோர் உதவி செய்வீர்களா…?” என்றார்.
கல்லூரி மாணாக்கராக இருந்தபோது என்னுடன் பயணித்த மிக இளைய பேச்சாளர் ஸ்ரீராம். போட்டியாளராக அறிமுகமாகிப் பின் பாசத்தோடு நெருங்கிவிட்ட பண்பாளர். 1900களில் வெண்ணிலா இலக்கிய வீதி அமைப்பின் மூலம் தமிழ் வளர்த்தவர் கேட்கிறார் என்பதாலும் அவர் மேல் எனக்கு பேரன்பு உண்டு என்பதாலும். “என்ன செய்ய வேண்டும் தம்பி…சொல்லுங்கள்” என்றேன். அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தோம்.
திருவள்ளுவர் திருவுருவ வரலாறு குறித்து (1959 – 1960) முழுமையாக என்னிடம் எடுத்துச் சொன்னார். முடிவில்… 1959 ஜனவரி 3 அன்று பாரதிதாசன், பி.கே.ஏ.கோவிந்தராசன், நா.இராசவேலு ஆகிய மூவர் சாட்சிகளாக ஒப்பமிட குடியேற்றம் ராம.தமிழ்ச்செல்வன் என்பவரிடமிருந்து ஸ்ரீராம் சர்மாவின் தந்தையார் கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்கள் திருவள்ளுவர் திருவுருவப் படத்தை அச்சிடுவதற்காக ரூபாய் 5,000 கடனாகப் பெற்றுக் கொண்டதற்கான வியாபார ஒப்பந்தப் பத்திரம் அடங்கிய புத்தகம் ஒன்றைக் காண்பித்தார்.
“சரி தம்பி, 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இப்போது என்ன விஷயம்?” என்றேன்.
“எங்கள் தந்தையார் திருவள்ளுவர் திருவுருவத்துக்காகப்பட்ட இந்தக் கடனை அடைத்துவிட விரும்புகிறேன். மேற்கண்ட பெரியவர் ராம.தமிழ்ச்செல்வன் அவர்கள் இருக்கும் இடத்தை நீங்கள் அறிந்து சொன்னால் இருவருமே சென்று சந்தித்து வருவோம்” என்றார்.
தான் பிறப்பதற்கு முன்பே தன் தந்தை பட்ட கடனை அதுவும் திருவள்ளுவருக்காகப்பட்ட கடனை ஒரு மகனாகத் திருப்பி அடைத்துவிட வேண்டும் என்று விரும்பி என்னை அழைத்த தம்பி ஸ்ரீராம் சர்மா மீது எனக்கு அளவற்ற அன்பு பெருகியது.
350க்கும் மேற்பட்ட சேக்கிழார் விழாக்களை நடத்திய ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி மு.கிருஷ்ணன் ஐயா அவர்களின் மூலமாக தமிழ்ச்செல்வன் அவர்களை எனது மாணவப் பருவத்தில் சந்தித்திருக்கிறேன்.
ஓவியப் பெருந்தகையை அவரது துளசிங்கப் பெருமாள் கோயில் தெரு வீட்டில் மூன்று முறை சந்தித்து உரையாடும் பெரும் பேற்றை பெற்றவன் நான். அவரது முகமும் எனக்குள் நிழலாடியது.
ராம.தமிழ்ச்செல்வனின் ஊர் குடியாத்தம் (குடியேற்றம்) என்றதும் உடனடியாக பெரும்புலவர் ஆசிரிய பதுமானர் அவர்களைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னேன். அவரும் பெரிதும் மகிழ்ந்து உதவ முன்வர அடுத்த நாளே நானும் ஸ்ரீராம் சர்மாவும் குடியாத்தம் சென்று இறங்கினோம்.
ஐயா பதுமனார் எங்களை மிக விருந்தோம்பி உணவு உண்ண வைத்த பின்பு ராம.தமிழ்ச்செல்வன் அவர்களின் வீடு இருக்கும் வழி சொல்லி அனுப்பி வைத்தார். மகிழுந்தில் போய் இறங்கிய எங்களை அவரது குடும்பத்தார் நன்கு வரவேற்று உபசரித்தனர்.
நோய்வாய்ப்பட்ட நிலையில் படுத்திருந்தார் ராம.தமிழ்ச்செல்வன். ஸ்ரீராம் சர்மாவை இன்னார் என அறிமுகப்படுத்தி வைத்து வந்த விஷயத்தை சொன்னதும் சட்டென்று எழுந்து அமர்ந்தார். தந்தை பட்ட கடனை அடைக்க வந்திருக்கிறாயே என்று தம்பி ஸ்ரீராமின் கடப்பாட்டுணர்வை வாழ்த்தினார். அழைத்து வந்த எனக்கு நன்றி கூறினார்.
நினைவுபடுத்திக்கொண்டு வாய்மொழியாக 5,000 ரூபாய் கடன் குறித்துக் கூறினார் ராம.தமிழ்ச்செல்வன்.
“50 ஆண்டுக் காலம் ஆகிவிட்டது. அசல் 5,000த்தோடு மேலும் 5,000சேர்த்து ரூபாய் 10,000 ஆக கொடுத்து விடுங்கள்” என்றார்.
என்னை நோக்கித் திரும்பிய தம்பி ஸ்ரீராம், “சரி அண்ணா, ஐயாவின் விருப்பப்படியே கொடுத்து விடுகிறேன். இதனால் என் தந்தையின் பெயர் தாழ வேண்டாமே…” என்றார்.
நான், ராம.தமிழ்ச்செல்வன் அவர்களிடம், “ஐயா, தாங்கள் சொன்னது போலவே ரூபாய் 10,000 கொடுத்துவிட தம்பிக்கு சம்மதம்தான். ஆனால், கைவசம் இப்போது அவ்வளவு பணம் அவர் கொண்டு வரவில்லை என்பது எனக்குத் தெரியும். மேலும், அவரது தந்தையார் கையொப்பமிட்ட பத்திரத்தின் ஒரிஜினல் தங்களிடம் இருக்கிறதல்லவா…” என்றேன்.
இதை கேட்டதும் தமிழ்ச்செல்வன் ஐயா முகத்தில் சற்றே தயக்கம் ஏற்பட்டது. அதை அறிந்து கொண்டவனாக….
“ஐயா, உங்களுக்குத் தெரியாத வியாபார வழிமுறை இல்லை. ஒரிஜினல் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு கடனை திருப்புவதுதான் முறை. ஒரு வழக்குரைஞனாக நான் இருவருக்கும் அதைத்தான் சொல்ல முடியும். ஒன்றும் அவசரமில்லை. நீங்கள் ஒரிஜினல் பத்திரத்தை எடுத்து வையுங்கள். இவரும் சென்னை சென்று பணம் எடுத்துக் கொள்ளட்டும். தகவல் சொல்லி அனுப்பினால் உடனடியாக பணத்தோடு வந்து சேர்ந்து விடுகிறோம்” என்றேன்.
தயக்கத்தோடு “சரி…” என்றார்.
அதன் பிறகு பலமுறை முயன்றும் பதிலில்லை. அவர் மறைந்ததுகூட எங்களுக்குத் தெரியாது. ஒரு நிகழ்ச்சியில் ஐயா பதுமனார் அவர்கள் சொல்லித்தான் நான் அறிந்து கொண்டேன். அவரது மறைவு செய்தியை தம்பி ஸ்ரீராம் சர்மா அவர்களிடம் சொன்னேன். வருந்தினார்.
“அண்ணா, நாம் கொடுத்த வாக்கு வாக்குத்தான். அவர் இன்று இல்லை என்றாலும் பரவாயில்லை. அவரது வாரிசுகள் என்றேனும் அந்த ஒரிஜினலைக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்களானால் அவர் விரும்பிய அந்தப் பத்தாயிரத்தை என் குடும்பத்தின் சார்பாக நான் கொடுத்து விடுவேன். என்றும் அதில் மாற மாட்டேன்…” என்றார் ஸ்ரீராம் சர்மா.
நன்றி மறப்பது நன்றன்று என்ற குறளை உள்வாங்கிக் கொண்ட தம்பியை நினைத்து பெருமகிழ்வு கொண்டேன்.
நேற்று (ஜனவரி 15) தினத்தந்தி நாளிதழில் இந்தச் செய்தியை கவிஞர் பொன்னடியான் அவர்கள் எழுதியிருப்பதாக யாரோ தம்பி ஸ்ரீராமைத் தொடர்புகொண்டு சொல்ல அவர் என்னை அழைத்து, “அண்ணா என்று தீரும் இந்தத் திருவள்ளுவர் கடன்…?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டார்.
“தம்பி, அந்த ஒரிஜினல் இந்தப் பூமியில் இருக்குமானால் என்றேனும் ஒரு நாள் உன்னை வந்து அடையும். அதுவரை நீ அந்த பத்தாயிரத்தைப் பத்திரமாக வைத்துக் கொள். அது போதும்…” என்றேன்.
நிகழ்வறியாமல் திரிப்பவர்களுக்கு வரலாற்று உண்மையைத் தெரிவிக்கவே இப்பதிவினை செய்கிறேன். அறத்தின் வழி செல்ல விரும்பும் என் தம்பி ஸ்ரீராம் சர்மாவை வாழ்த்துகிறேன்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
மேற்கண்ட இந்தக் குறளுக்கு ஓவியப் பெருந்தகையின் கெழுதகைய நண்பரான முத்தமிழறிஞர் கலைஞர் இவ்வாறு உரை எழுதுகிறார் :
மனம் தூய்மையாக இருப்பதே அறம். மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.�,