விநாயக் வே. ஸ்ரீராம்
ஈராயிரம் ஆண்டுகட்கு முன் இந்தத் தமிழ் மண்ணில் படைக்கப்பட்ட ஈடு இணையற்றப் பொக்கிஷம் திருக்குறள். அது உலகார்ந்தப் பொதுமறை. அந்தப் பொதுமறையைப் படைத்தவர் எவ்வாறு தோற்றமளித்திருக்கக் கூடும் என்னும் பேராவல் பல காலமாக இருந்தே வந்தது. அந்தத் தோற்றத்தைக் காணப் பற்பலரும் முயன்றபடியே இருந்தனர்.
முடிவில், 1959இல் திருவள்ளுவருக்குத் திருவுருவம் ஒன்றைக் கண்டடைந்தார் சேலம் காமாட்சிப்பட்டியைச் சேர்ந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா.
திருக்குறள் பொதுமறை என்றால் அவரது திருவுருவமும் பொதுத் தோற்றமாகவே இருக்க முடியும் என்பதே ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் துணிபு. இது குறித்து செழித்த மின்னம்பலத்தில் நிறையவே எழுதி வைத்திருக்கிறேன்.
அன்றந்தத் தமிழகத்தில் தனது வாழ்நாள் முயற்சியாக அரும்பாடுபட்டுக் கண்டடைந்த திருவள்ளுவரை அவர் பொதுவெளிக்குக் கொண்டுவந்து வைத்தபோது அனைத்து அறிஞர் பெருமக்களும் ஆரவாரமாக ஆமோதித்தனர்.
பெரியவர்கள் பக்தவத்சலம், காமராசர், அண்ணா, மு.வ, கி.ஆ.பெ. விசுவநாதம், பாரதிதாசன், தோழர் ஜீவா, கல்கி, சாண்டில்யன், கவியரசர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி, அலமேலு அப்பாத்துரையார், தமிழ்வாணன், திருமுருக கிருபானந்த வாரியார் இன்னும் எண்ணற்றோர் பேரெழில் கொஞ்சும் திருவள்ளுவரின் திருவுருவத்தை உளமாற அங்கீகரித்து வாழ்த்தினர். அறிஞர் பெருமக்களின் வாழ்த்துகள் அடங்கிய அந்த ஒலி நாடாக்களை இன்னமும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
திருவள்ளுவர் திருவுருவம் குறித்து அவ்வப்போது சில புரளிகள் கிளம்பும். அனைத்தையும் கடந்து உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் குடிபுகுந்து கொண்டது அந்தத் திருவுருவம்.
1964இல் சட்டசபையில் அன்றைய துணை ஜனாதிபதி ஜாகீர் உசேன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தபால் தலையில் கொண்டு வரப்பட்டது.
அதன்பின் 1967இல் அண்ணா அவர்களால் போடப்பட்ட திருவள்ளுவர் திருவுருவத்தின் மீதான அரசாணை (G.O.M.S 1193) திருவள்ளுவர் திருவுருவத்தை தமிழகமெங்கும் கொண்டு சேர்த்தது.
அதன்படி இது குறள்வழி ஆட்சி என்பது போல அமைச்சர் அலுவலகங்கள் முதல் நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், அஞ்சலகங்கள், பள்ளி – கல்லூரிகள், அரசுப் போக்குவரத்துகள் என எங்கெணும் திருவள்ளுவர் நீக்கமற நிறைந்தார். என்ன காரணமோ தெரியவில்லை அரசாங்கத்தின் அந்த நிலையாணை மெல்ல மெல்லக் கைவிடப்பட்டு இன்று திருவள்ளுவர் தேடிக் கண்டுபிடிக்கும் நிலையில் இருக்கிறார்.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 17ஆம் நாள் ஓவியப்பெருந்தகையின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். அன்று மட்டும் எங்களால் இயன்ற அளவுக்கு 100 பேருக்கு திருவள்ளுவர் திருவுருவத்தைச் சட்டமிட்டுப் பரிசளித்து மகிழ்ந்து கொள்கிறோம்.
முடங்கிக்கிடக்கும் திருவள்ளுவரின் மீதான அரசாணைக்கு உயிரூட்டப்படுமானால் இன்னும் எவ்வளவோ செய்யலாம். அது இந்த அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது.
திருக்குறள் – திருவுருவம் இரண்டும் ஒன்றுக்கொன்றுப் பின்னிப் பிணைந்தவை.
திருவள்ளுவரை ஒரு திருக்கோயில் தேராக உருவகப்படுத்திக் கொண்டோமானால் திருவள்ளுவரின் திருக்குறள் அதன் வலச் சக்கரம் எனில், திருவள்ளுவரின் திருவுருவம் அதன் இடச்சக்கரம்.
இரண்டில் எது பழுதடைந்து நின்றாலும் இழுக்கே !
வாழிய குறள்! வாழிய அவரது திருத்தோற்றம்!
**கட்டுரையாளர் குறிப்பு:**
விநாயக் வே.ஸ்ரீராம் எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதனைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
[மழித்தலும் நீட்டலும்!-1](https://minnambalam.com/k/2018/01/06/14)
[மழித்தலும் நீட்டலும்!-2](https://minnambalam.com/k/2018/01/15/17)�,”