பூணூல் புரளி! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

காசி நகர் கங்கைக் கரையில் பூணூலை வீசியெறிந்தார் பாரதியார். அது சித்தர் வழி.

அந்தப் பழைய பூணூலைக் காசியிலிருந்து மீட்டெடுத்து வந்து திருவள்ளுவருக்குப் போட்டுவிடுவது வீண் பழி.

அந்த வீண் பழியைச் சுமத்தியவர்கள் சாதாரணர்கள் என்றால் மனம் புறந்தள்ளிவிடும்.

அதையே அறிவார்ந்தோர் செய்துவிட்டால்?

மாயவரம் வரை எதிரொலித்துவிடும்.

“என்னப்பா… திருவள்ளுவர் திருவுருவம் பத்தி இப்படி அபாண்டமாக துக்ளக்கில் எழுதியிருக்காங்களாமே…? கேட்டதும் எனக்குப் பதைபதைச்சுப் போச்சுது. நாங்களெல்லாம் இன்னும் உயிரோடுதானே இருக்கோம். மின்னம்பலத்துல நீட்டி முழக்கி எழுதுற உனக்கு இதையெல்லாம் கேட்க தோணலையா… இன்னமும் நாங்களேதான் போராடணுமா ?”

87 வயது கொண்ட மாயவரம் பதி சார் என்னை அலைபேசியில் அழைத்து நா தழுதழுக்கக் கடிந்துகொண்டபோது கண்கள் கசியத் திக்கித் திணறிப் போனேன்.

மதிப்பிற்குரிய துக்ளக் பத்திரிக்கையில் 22.08.2018 தேதியிட்ட இதழில், மரியாதைக்குரிய திரு. பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்களின் வாய்மொழியாகத் திருவள்ளுவர் திருவுருவம் குறித்தான வீண் பழி ஒன்று சுமத்தப்பட்டுவிட்டது.

கலைஞரை அட்டைப்படமாக இட்டுவந்த அந்த துக்ளக்கில் விவரமானவர் என நம்மால் நம்பப்படும் பீட்டர் சார்தான் இப்படிச் சொல்லிவிட்டார்…

“சர்மா என்ற ஓவியர் வரைந்த அந்தப் படத்தில் வள்ளுவருக்குப் பூணூல் இருந்தது. கலைஞர், அந்த ஓவியரிடம் திருவள்ளுவர் மார்பில் குறுக்கே ஒரு துண்டை வரையும்படி கூறினார்…”

அதாவது, பிராமணக் குலத்தில் வந்த கே.ஆர்.வேணுகோபால் சர்மா தன் போக்கில் திருவள்ளுவருக்குப் பூணூல் இட்டுவிட்டதாகவும், அதனைக் கலைஞர் சொன்ன பிறகு திருத்திக்கொண்டதாகவும் படிப்போர் பொருள் கொள்ளும்படியாகச் சொல்லிவிட்டார்.

கலைஞரை ஏற்றிப் போற்றிச் சொல்ல ஆயிரம் உண்டு. தன் வாழ்நாளில் கலைஞரே சொல்லாத ஒன்றை அவர் மேல் ஏற்றிச் சொல்லும் அபத்தம் எதற்கு? ஓவியப் பெருந்தகையின் கெழுதகைய நண்பர் கலைஞர். இதனை அவர்களது ஆன்மாக்கள் ரசிக்காது.

இந்த அபத்தப் பழியை இன்னமும்கூட அழுந்தக் கண்டிக்க முடியும். ஆனால், பீட்டர் சார் என் மனம் கவர்ந்தவரல்லவா ?

நிற்க.

முற்காலத்தில், திருவள்ளுவருக்கு மனம் போன போக்கில் பற்பல உருவங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. விபூதி பூசியபடி, ருத்ராட்சம் அணிந்தபடி, சைவ உருவங்கள் இருந்தன. நாமம் அணிந்தபடியான வைணவ உருவங்களும் சமண பௌத்த மதக் குறியீடுகளாக மழுங்க மொட்டையடிக்கப்பட்ட உருவங்களும்கூட இருந்தன.

உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஓதிக் கொடுத்த பேராசான் திருவள்ளுவனுக்குச் சாதி ஏது? மதமேது? இனமேது? பேதங்கள்தான் ஏது?

நியோகி வம்சத்தில் வந்த ஓவியப் பெருந்தகை வேணுகோபால் சர்மா அவர்களும் அந்த இயல்பின் வழியே சாதி, மத, இன, மொழி பேதங்களற்ற தூய வாழ்வை மேற்கொண்டவராகவே திகழ்ந்தார்.

(நியோகி வம்சம் – வியக்க வைக்கும் வரலாறு என்னும் தலைப்பிட்ட எனது [மின்னம்பலக் கட்டுரை]( https://minnambalam.com/k/2017/07/08/1499452233) மிகுதி தரும் )

**கே.ஆர். வேணுகோபால் சர்மா என்பவர் யார்?**

1908ஆம் ஆண்டு சேலம் ஜில்லா காமாட்சிப்பட்டியில் தோன்றிய ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்கள் ஆதியில் மைசூர் சமஸ்தானத்தில் பால விகடகவியாகத் திகழ்ந்தவர்.

அதன் பின் கத்யேவார் சமஸ்தானத்தில் சில காலம் இருந்தார்.

பின்பு, தன் சொந்த ஊர் சேலம் ஜில்லாவுக்குத் திரும்பியவர், மகாத்மா காந்தியை நேரில் கண்டு அவரையே ஓவியமாக வரைந்து அளித்தார்.

சொந்த ஜில்லாகாரரான மூதறிஞர் ராஜாஜியின் வற்புறுத்தலுக்கு இணங்கச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். பிரிட்டிஷ் படையினர் துரத்த நண்பர்களின் உதவியோடு மும்பையில் தலைமறைவு வாழ்க்கைக்குப் போனார். அங்கே, புகழ்பெற்ற பகவான் தாதா அவர்களிடம் சினிமா தொழில்நுட்பம் கற்றார்.

சுதந்திர இந்தியாவுக்குத் திரும்பி சித்ரகலா ஸ்டூடியோவை நிர்மாணித்து, மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர், எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கு உற்ற தோழனாய் வரலாற்றுச் சிறப்பு மிக்க அவரது சந்திரலேகா திரைப்படத்தின் ட்ரம் டான்ஸ் பாடல் ஆக்கத்துக்கு ஆணி வேராக இருந்தார்.

இதுபோன்ற இன்னும் பற்பல செய்திகளையும் ஆதாரங்களோடு, அந்தக் காலத்து அரிய புகைப்படங்களோடு நான் எழுதி வெளியிடவிருக்கும் ‘தூரிகைக்குப் பின்னால்’ என்னும் நூலில் காணலாம்.

தனது நாற்பது ஆண்டுக் காலத் தமிழாய்வு மற்றும் ஓவிய ஆய்வின் வழியே தனது பன்னிரண்டாம் வயது முதல் திருவள்ளுவருக்கோர் சீரிய உருவம் ஒன்றைச் சமைத்துவிட வேண்டும் என முயன்றுகொண்டே இருந்தவர்,

நூற்றுக்கணக்கான திருவள்ளுவ ஓவியங்களை வரைந்து, வரைந்து சலித்து மனக்கண்ணில் கண்டதை ஓவியமாகக் காண முடியாமல் தத்தளித்தார். இது குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் திருமிகு அரங்க ராமலிங்கம் அவர்கள் மிக அருமையாக எழுதியுள்ளார்.

தனக்கு ஒப்பு இல்லாத ஒரு திருவள்ளுவத் திருவுருவத்தை மாற்றாருக்குக் காணத் தரத் தயங்கி மேலும் மேலும் முயன்றபடியே இருந்தவர் கே.ஆர். வேணுகோபால் சர்மா.

இந்தக் காலகட்டத்தினிடையே அவர் மூன்று திரைப்படங்களைத் தயாரித்து இயக்க முயன்றார். அதில் சமஸ்தானத்தில் சம்பாதித்த தன் கைப்பொருளையெல்லாம் இழந்தார்.

எஸ்.எஸ்.வாசன், அண்ணா, தமிழ்வாணன் ஆகியோரின் கூட்டு ஆலோசனையின்படி சினிமா தயாரிப்பைக் கைவிட்டு சென்னையில் இருந்த தன் கடைசி வீட்டைத் தக்க வைத்துக்கொண்டார்.

முடிவாக, திருவள்ளுவர் திருவுருவத்தை முனைப்பாக நின்று அரும்பாடுபட்டுக் கண்டடைந்து வரைந்து முடித்தார்.

அது ஆண்டு 1959. மாயவரம் மதீனா லாட்ஜில் வைத்துத்தான் திருவள்ளுவருக்கு இறுதி வடிவம் கொடுத்தார்.

அந்த மதீனா லாட்ஜுக்கு அன்றைய உரிமையாளராக லீசுக்குக் கொண்டிருந்தவர் பெரியவர் மாயவரம் பதி அவர்கள்.

எனது தந்தையாரைக் காண அன்றைய நீதிபதிகள், அரசியலாளர்கள், தமிழ்வாணன், சேதுவாத்தியார், பாரதிதாசன் போன்ற அறிஞர்கள் எனப் பலப்பலப் பெரியோர்கள் வருவதுண்டு. அத்தனை பேருக்கும் பொங்கிப் போட்டவர் மாயவரம் பதி சார்.

திருவள்ளுவர் திருவுருவத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து அதனை உலகோர் ஏற்றுக்கொள்ளும் வரை எனது தந்தையார் கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களுக்கு ஓர் உதவிக்கரமாகத் திகழ்ந்தவர் மாயவரம் பதி சார்.

1959ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருவுருவம் கண்டடையப்பட்டு, உலகம் தழுவிய தமிழறிஞர்களால் அது ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு, தபால் தலையில் அச்சேறி, பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் தலைமையிலான அன்றைய மாநில அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்டு, 1964இல் சட்டசபையில் அன்றைய ஜனாதிபதி ஜாகீர் உசேன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டு, 1967இல் அண்ணா அவர்களின் ஆட்சியில் அரசாங்க அமைப்புகள் அத்தனையிலும் திருவள்ளுவர் திருவுருவப் படம் நீக்கமற வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு (G.O.M.S. 1193) அதன் பின் கலைஞர், எம்ஜிஆர் போன்றோரின் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டதே கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் திருவள்ளுவர் திருவுருவம்.

ஆம், திருவள்ளுவருக்குத் திருவுருவம் கொடுத்த வகையில் அவர் இழந்த காலமும், பொருளாதாரமும் மிக அதிகம். 1989இல் மறைந்த அவர் தன் இறுதி நாள்வரை எந்த அரசாங்கத்திடமிருந்தும் எந்த சலுகையும் பெற்றுக்கொள்ள மறுத்தே நின்றார். மறைந்தார்.

திருவள்ளுவர் திருவுருவம் கண்டடைய எனது தகப்பனார் கண்ட போராட்டம் கொஞ்ச நஞ்சமில்லை. அது குறித்த உண்மைகள் புகைப்பட, கடித ஆவணங்களாக என்னிடம் இருக்க,

அதனை முழுமையாக எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை அவரது மகன் என்ற முறையில் மட்டுமல்லாமல், அஞ்சுதல் அறியாமல் உண்மையை ஓங்கி வலியுறுத்திவரும் எழுத்தாளன் என்னும் வகையிலும் எனக்குண்டு.

**பூணூல் கதை**

தமிழோவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்கள் திருவள்ளுவர் திருவுருவத்தை வரைந்து முடித்தபோது அவரது கழுத்தில் ஒரு பருத்தி நூலை அணிவித்திருந்தார் (கீழே உள்ள படத்தைக் காண்க).

அந்த ஓவியத்தின் மேல் பட்டுத் துணியைப் போர்த்தி வைத்திருந்தார்.

அப்போது அவரைக் காண வந்தார் பாவேந்தர் பாரதிதாசன்.

“வாரும் கவியே, உள்ளே சென்று அந்த துணியை விலக்கிப் பாரும்…”

“என்ன உலகமே? (தமிழ். தெலுகு, மலையாளம், கன்னடம், கொங்கணி, ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் எனப்பன் மொழிகளில் பாண்டித்யம் பெற்றவர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா. ஆங்கிலப் புத்தக வாசிப்பில் அண்ணாவும் இவரும் புத்தகத் தோழர்கள். அதனால், அப்பாவை உலகமே என்று அழைப்பது பாவேந்தருக்கு வழக்கம்) இன்று என்ன புது அதிசயம் வைத்திருக்கிறீர்கள்…?”

“நீங்களேதான் சென்று பாருங்களேன்…”

“சரி, பார்த்தால் போச்சு…”

திரையை விலக்கிப் பார்த்த பாரதிதாசனார் அடுத்த கணம் ஆஹாவென இரைந்தார்.

“அட, நம்ம திருவள்ளுவர்…”

“அப்படியா, என் வேலை முடிந்தது.”

“ஆம், அரும்பாடுபட்டு அற்புதமான படைப்பைக் கண்டடைந்துவிட்டீர்கள். நீங்கள் ஓய்வெடுங்கள். இனி எங்கள் பொறுப்பு”

என்றவர் கூடவே ஓர் ஐயத்தையும் வெளிப்படுத்தினார்.

“உலகமே, அது என்ன திருவள்ளுவரின் கழுத்தில் கயிறு..?”

“ஓவிய இலக்கணத்தின்படி வெறுங்கழுத்தாக விடக் கூடாது. ஏதேனும் ஆபரணத்தை இட்டாக வேண்டும். நம் திருவள்ளுவருக்கு தங்கம், வெள்ளி ஆபரணங்களை இட முடியாது. பொருந்தாது. ஆகவே, ஓவிய இலக்கணத்தின்படி எளிமையான பருத்தி நூலை ஆபரணமாக அமைத்திருக்கிறேன்… ”

“திருக்குறளைக் கரைத்துக் குடித்துப் பல்லாண்டுக்காலத் தவப்பயனாய் வள்ளுவரைச் சமைத்துவிட்டீர்கள். ஆயினும் ஒன்றைச் சொல்வேன். திருவள்ளுவரின் கழுத்தில் இருக்கும் அந்தக் கயிற்றை நீக்கிவிடுங்கள்.”

“ஏன்…?”

“என்ன ஏன்? அந்தக் கழுத்துக் கயிற்றுக்கு ஒரு சாதிக்காரன் சொந்தம் கொண்டாடி வருவான். பிற சாதிக்காரன் அதனை எதிர்ப்பான். என்ன ஆறுதல் சொல்வீர்கள்? உங்களைப் போன்ற உயர்ந்த கலைஞர்களுக்கு இதுவா வேலை? உலகமே தெரியாத உங்களை உலகம் என்று அழைக்கிறேன் பாருங்கள்.”

“கவிஞரே, அந்தக் கழுத்தாபரணத்தை எடுத்தே ஆக வேணுமா..?”

“ஆம். நீக்கிவிடுங்கள். இது எனது வேண்டுகோள் ”

விடைபெற்றுச் சென்ற பாவேந்தர் பின்பு அதனை உறுதிப்படுத்தி கடிதமாகவும் எழுதி அனுப்பிவிட்டார். (கடித நகல் கீழே).

சரி, அப்படியே ஆகட்டும் என அதனை ஏற்றுக்கொண்ட வேணுகோபால் சர்மா அவர்களும் கழுத்தில் இருந்த அந்தப் பருத்தி நூலை அகற்றிவிட்டார்.

நன்றாக கவனிக்க வேண்டும்.

பருத்தி நூல் கழுத்தில்தான் இருக்கிறது.

பூணூல் என்பது தோளில் இருப்பது.

யாரோ, பாவேந்தர் நூலை அகற்ற வேண்டுகோள் வைத்துவிட்டார். அதனை வேணுகோபால் சர்மா ஏற்றுக்கொண்டுவிட்டார் என்று சொல்லியிருக்கக்கூடும்.

அதைக் கேட்ட செவி அடுத்தடுத்த செவிகளுக்கு தொடர்ந்து ஓத,

அதனைத் தவறுதலாக உள்வாங்கிக் கொண்ட ஏதோ ஒரு மட்டச் செவி தன் வாயால் வேறு மாதிரி ஓத,

அப்படியே வழிவழியாக வந்து வந்து கற்றறிந்த பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்களின் செவிகள்வரை அடைந்து கெட்டு முட்டி நிற்கிறது.

திருவள்ளுவர் திருவுருவத்தை அணுகிக் காணுங்கள். அவர் கையில் பிடித்திருக்கும் மேல் ஓலையில்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

என்னும் திருக்குறளைப் பொரித்து வைத்திருப்பார் கே.ஆர்.வேணுகோபால் சர்மா.

அது பேரறிவாளர்களுக்கே உண்டான பிறவிக் குணம்.

வணக்கம்!

(கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதனைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன் ஸ்ரீராம் சர்மா.)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share