ஸ்ரீராம் சர்மா
உலகின் ஆதிப் பல்கலைக்கழக்கழகங்களில் ஒன்று நாளந்தா.
நாளந்தா என்றால் “அறிவை அளிப்பவர்” என்கிறது பௌத்தம்.
பள்ளி, கல்லூரிப் படிப்பைக் கடந்து வரும் மாணவர்களுக்குச் சமூக அறிவினை அடையாளம் காட்டி அதனை மேலும் நயம்படுத்திச் சொல்லிக் கொடுக்கத்தான் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
ஆனால், காலப் போக்கில் சகலமும் சிதிலப்பட்டுப்போயின.
தகுதி வாய்ந்த ஆசிரியர்களெல்லாம் பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் இருக்க, வெறும் பட்டத் தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு இடத்தை அடைத்துக்கொள்ளும் பாழ் முறையை, அந்நியரான மெக்கலே பிரபு அறிமுகப்படுத்திக் கெடுத்துவைக்க, இன்றுவரை அதற்குக் குடை பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள் பாழும் அரசியலாளர்கள்.
அதனைத் துணிந்து சொல்லி தன் மாணவர்களை வழி நடத்தும் குணத்திறன் படைத்த பெருந்தகையாளர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் பேராசான் கோபாலன் இரவீந்திரன் அவர்கள்.
வர்க்க மாச்சரியங்கள் அகற்றிப் புத்தொளி விசாரங்களைத் தேடித் தேடிக் கொண்டுவந்து கொட்டித் தன் துறைசார் மாணவர்களை நல்வழிப்படுத்தும் பெரும் குணம் கொண்ட பேராசான் அவர்.
“வணக்கங்க சர்மா, நலமாயிருக்கீங்களா? உங்களது மின்னம்பலக் கட்டுரைகள் எல்லாம் தரமா இருக்குங்க. வாழ்த்துகள். இந்த மண்ணின் தொன்மங்களைக் குறித்த உங்களது சிறப்பான பார்வையை வழக்கம்போல நமது மாணவர்களோடு பகிர்ந்துகொள்ள வாருங்களேன்” என்று அவருக்கே உண்டான கனிவோடு அழைத்தார்.
“ஓவியம், காவியம், பெண்ணியம்” என்னும் தலைப்பில் திருவள்ளுவர், கண்ணகி மற்றும் வேலு நாச்சியாரை முன்னிறுத்திச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இரண்டு மணி நேரம் உரையாற்றினேன்.
நிற்க.
எனது அமர்விற்குப் பிறகான கூத்தாட்ட விற்பன்னர்களின் ஆச்சரியம் பற்றியதே இந்தக் கட்டுரை.
**கூத்து!**
தொன்றுதொட்டு ஆகிவந்த மானுடக் கூட்டத்தின் ஆழ்மன வெளிப்பாடுகளே இந்த மண்ணில் பல்வேறு கலைகளாக நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.
மாபாரதம், ராமாயணம் முதற்கொண்டு சகலமும் அதற்கான வடிகால்களே.
வெளிப்பாட்டுக் கலை வடிவங்களின் ஆதியாக நின்றது கூத்து வடிவம்.
ஆதி சிவனது ஆட்டத்தையும்கூடக் கூத்து என்றே நிலைநிறுத்துகின்றன சைவ சித்தாந்தப் பதிப்புகள். அந்தக் கூத்தை, “நாட்டார் வடிவம்” எனத் தள்ளிவைத்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை.
காய்ந்த வெளியினில் மழை துவங்கும் நேரம் ஏகாந்த வாசனை ஒன்று பீறிட்டு எழக் கண்டிருப்போம்.
நகரத்திலேயே பிறந்து வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கும்கூட அந்த வாசம் இனம் புரியாததோர் கிளர்ச்சியைத் தூண்டிவிடும்.
காரணம், அது முன்னோர் கண்ட ஆதி சுக ஸ்வாசம். ஆம், கூத்துக் கலை என்பதும் அப்படிப்பட்ட ஆதி சுகம்தான். அது நமது மரபணுக்களுக்குள் பொதிந்திருக்கின்றது.
அந்த உண்மையான கொண்டாட்டத்தை, அந்த ஆதி அழகை, இன்றைய நகரங்களின் துணுக்குத் தோரண தமாஷ்கள் சாகடித்துக்கொண்டிருக்கின்றன.
அந்த “கெக்கே பிக்கேக்களுக்கு” அள்ளிக் கொடுக்கும் ஸ்பான்ஸர்கள் அதற்காகப் பேரசிங்கப்பட வேண்டும்.
பொருள்முதவாதம் கொண்டு மேற்கத்திய பாதிப்புகளோடு கூடிய “தியேட்டர்” அடாவடிகளைக் கண்டு சலித்த எனக்கு,
முண்டி மூதறித்து ஆதிக் கலையின் அபூர்வக் கோணங்களை உமிழ்ந்து நின்ற அந்த உண்மைக் கலைஞர்களைக் காணக் காண மேனி சிலிர்த்தது.
**ரூபன்**
அந்தக் கூத்துக் கலைஞனுக்கு வயது 34. தனது 14 வயது முதல் கூத்துக் கட்டியவன்.
சிறு வயதிலேயே தகப்பனை இழந்த ரூபன் தன் தாய்க்கு பாரமாக இருக்கக் கூடாது என்று பள்ளி பருவத்திலேயே சுண்டல் விற்று அலைந்தவன்.
எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத அவனுக்கு ஆசிரியனாக வந்து வாய்த்தார் கமலக்கண்ணன் என்னும் கூத்தாசிரியர்.
அவரது தயவால் கூத்துக் கலையைப் பரிபூரணமாகக் கற்றுத் தேர்ந்து இன்று வருடத்துக்குச் சராசரியாக 250 கூத்து நிகழ்வுகளை அரங்கேற்றி ஆடுகிறார் ரூபன்.
திருவள்ளூர் மாவட்ட கிராமியத் தெருக்கூத்து கலைஞர்கள் நாடக சங்கத்தின் தலைவர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்காக “ஸ்த்ரீ பார்ட்” எனப்படும் பெண் வேடமிட்டு “நல்ல தங்காள்” கதையினை அரிதாரம் பூசி ஆடிக் காட்டத் தயாரானார். மேக்கப் செய்ய அவர் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே.
தத்ரூபமாக ஒரு பெண்ணாகவே தன் நடை உடை பாவனைகளைக் கொண்டிருந்தார்.
நல்ல தங்காளாக மாறிய அவர் தன் அண்ணன்களிடம் சீர் கேட்டு அழுது ஆடியபோது பல்கலைக்கழக மாணவர்கள் கண்கள் கசிய விக்கித்துப் போனார்கள்.
கலையும் மானுடமும் ஒன்றிணைந்து பீறிட்ட அந்தக் கணம் சென்னைப் பல்கலைக்கழகம் தன் உண்மை அந்தஸ்தை அடைந்து மேலும் சிவந்தது.
“ஆண் வேடமும் செய்வீர்களா ரூபன் …”
“ஓ…தோ…”
அடுத்த 10 நிமிடங்களில் ஆக்ரோஷம் மிக்க துரியோதனனாய் அரிதாரம் பூசி மகுடம் தாங்கி நின்றார்.
மூன்று குழந்தைகளுக்குத் தகப்பனான அவரிடம் கேட்டேன்.
“அச்சு அசலாக ஒரு பெண்ணைப் போலவே நடை உடை செய்கிறீர்களே. உங்களது மனைவி உங்களது கூத்தைக் கண்டதுண்டா ?”
“அடப் போங்கையா, நான் நல்ல தங்காளா நடிச்சு ஒப்பாரி வெக்கும்போது பாக்குற ஜனமெல்லாம் ஓ…ன்னு அயுதுனு இருக்கும். இது மட்டும் முன்ன ஒக்காந்து சிரிச்சுக்குனு இருக்கும்…”
“முத்துப் பவுடர்” எனப்படும் ஒருவகையான ரசாயனம் கலந்த தூளை விதவிதமான வண்ணங்களில் வைத்திருக்கின்றார்கள்.
ஒரு ஸ்பாஞ்ச், சில குச்சிகள் மற்றும் தண்ணீர் இந்த மூன்றை மட்டுமே வைத்துக்கொண்டு பல விதமான வேஷங்களைக் கண நேரத்தில் முகத்தில் வரைந்து தோன்றுகிறார்கள். தனியாக மேக்கப் மேன் என்று யாருமில்லை. சகலமும் ஒன் மேன் ஷோ.
60 ஆர்ட்டிஸ்டுகளோடு மூன்று மேக்கப் மேன்கள் சகிதமாக “வேலு நாச்சியார்” தியேட்டரை மேடையேற்றிவரும் இயக்குனனான எனக்கு அவர்களது அர்ப்பணிப்புக் குணம் பிரமிப்பைத் தந்தது.
கோபாலன் இரவீந்திரன் சார் என் பக்கம் திரும்பினார்.
“சர்மா, உங்களிடம் ஒரு வேண்டுகோள்..”
“உத்தரவிடுங்கள் சார்…”
“நீங்கள் உங்களது வேலு நாச்சியார் ஸ்கிரிப்டைக் கூத்துக் கலையின் மூலமாகவும் கடத்தியாக வேண்டும்…”
அந்தக் கணமே எனது வேலு நாச்சியார் ஸ்கிரிப்ட்டை ரூபனை வைத்து கூத்துக் கலை வடிவத்தில் கடத்த முடிவெடுத்தேன்.
“இது எம்மாம் பெரிய பாக்கியம் எங்களுக்கு. அந்தம்மா வரலாற்றை ஊருக்கெல்லாம் சொல்ல நாங்க குடுத்துத்தான் வெச்சிருக்கணும். கதை வசனத்தை மட்டும் நீங்க கொடுங்க ஐயா. மத்ததை நான் பாத்துக்கிறேன்…” என்று என் கரம் பற்றிக்கொண்டார் கூத்தாசிரியர் பெரியவர் கமலக்கண்ணன்.
மின்னிய அவரது கண்களுக்குள் சிவகங்கை தெரிந்தது.
**கமலக்கண்ணன்**
கூத்து வாத்தியாரான இவருக்கு வயது 77. இன்னமும் அர்ஜுனன் தபஸ் ஆடுகிறார்.
40 அடி உயரப் பனை மரத்தை நட்டு அதன் மேல் ஏறி நின்று ஊசிமுனைத் தவம் செய்யப் போகிறேன் என்று உச்ச ஸ்தாயியில் இவர் பாடப்பாட, கூடி நிற்கும் கிராமம் சிலிர்த்துப்போகும் என்று மெச்சி சொன்னார் ரூபன்.
“அட, எனுக்கு என்னப்பா தெரியும். வேஷம் கட்டிட்டா நானாவா இருப்பேன்…” என்ற ஆசிரியர் கமலக்கண்ணன் நாட்டை ராகத்தில் ஓங்கிக் குரலெடுத்துப் பாட ஆரம்பித்தார்.
பலவிதமான தாள கதிகளைத் தொடை தட்டிக்கொள்ளாமல் வெகு அநாயசமாக வெளிப்படுத்தினார்.
ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே கூத்தை வளர்த்துவந்த இவருக்கு இன்னமும் தாகம் அடங்கவில்லை.
கருடசாமி சபாவின் ஓனரான பெரியவர் கமலக்கண்ணன் அவர்களுக்கு ஒழுக்கம் முக்கியம்.
பொதுவாகக் கூத்துக் கலைஞர்கள் என்றாலே சாராயத்துக்கு அடிமையாவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு.
ஆனால், இதுவரை சோமபான வாடையை நுகர்ந்ததே இல்லை என்கிறார் பெரியவர் திரு. கமலக்கண்ணன். அவரை அப்பா என்று அழைக்கும் ரூபனும் அப்படியே. தங்கள் குழுவுக்கும் அதையே போதித்து வலியுறுத்தி வளர்க்கிறார்கள்.
**நல்லிணக்க ஞானம்**
கூத்துக் கலைஞர்கள் தங்களுக்குள் சாதிப் பாகுபாடு பார்ப்பதில்லை.
வன்னியர், ரெட்டியார், முதலியார், வண்ணார், தாழ்த்தப்பட்டவர்கள் எனப்படும் பிரிவினர் எனச் சகலரும் ஒன்றிணைந்து கூத்துக் கலை வளர்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்டவர்கள் எனப்படுபவர்களே பெரும் பங்களிக்கின்றனர் என்கிறார் ரூபன்.
தந்தை வழியில் இவர் PLC கிறிஸ்துவர் என்றாலும் ஏறத்தாழ 20 வகையான இந்துப் புராண நாடகங்களை வசனங்களோடு ஒப்பிக்கிறார். தனது நாடகக் குழுவுக்கும் பொன்னியம்மன் நாடக சபா என்றே பெயரிட்டிருக்கிறார்.
மாபாரதக் கதையினை இவர் சொல்லக் கேட்க அவ்வளவு புதுமையாக இருக்கிறது.
எனது பாட்டி இடி இடித்தால் காதுகளைப் பொத்தி இரு கண் இறுக மூடி “அர்ஜுனா…அர்ஜுனா” என்று உச்சரிப்பதைக் கவனித்திருக்கிறேன்.
அதற்கான புராண வரலாற்றை இடி தேவன் – மின்னொளி – கொடிக்கால் தேவி என மூன்று கேரக்டர்களை வைத்துக்கொண்டு ரூபன் விளக்கிய விதம் ஆச்சரியப்பட வைத்தது.
மகாபாரதக் கர்ணனுக்கு மனைவியாக சுபாங்கி என்னும் நங்கையைத்தான் சொல்வார்கள். கர்ணன் திரைப்படத்திலும் அவ்வாறே சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால், அரசியல் காரணங்களுக்காக அன்று துரியோதனன் தன் தங்கை துச்சலையின் மகளான பொன்னருவியைக் கர்ண வீரனுக்குக் கல்யாணம் செய்துவைத்திருந்தான் என்பது பலருக்குத் தெரியாது என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்.
கர்ணன் போருக்குப் போனபோது அந்தப் பொன்னருவி என்ன பாடுபட்டாள் என்பதை ரூபன் வசனங்களோடு நடித்துக் காட்ட, ஆச்சரியப்பட்டுப் போனேன்.
**மொழி வளம்**
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இந்தக் கூத்துக் கலை இல்லை என்றே சொல்ல வேண்டும். அவர்கள் கரகாட்டம் – ஒயிலாட்டம் – குறவன் குறத்திக் கூத்து என ஆட்டத்தின்பால் கவனம் செலுத்திவிட்டனர்.
நாடக நிகழ்த்துக் கலை என்பது வட மாவட்டங்களில் மட்டுமே ஓங்கி வளர்ந்திருக்கிறது. அதன் பெரும் பலனாக அவர்களின் தமிழ் இன்னமும் சிதையாமல் இருக்கிறது.
தென்மாவட்ட மக்களுக்கு இருப்பதுபோல் “லகர ளகர” குழப்பங்கள் ஏதும் இல்லாமல் அட்சர சுத்தமாகத் தமிழாடுகின்றனர்.
மருவிப் பேசுவதுண்டு. “மானசீகமாக” என்பதை “மானுட பூஜையாக” என்கின்றனர். ஆனால் டிக்க்ஷன் கெட்டுப்போக விடுவதில்லை.
சொல்லப்போனால், சொல்லின் அர்த்தம் மேலும் வலுப்பட்டு நிற்பதைக் உணர முடிகிறது.
காரணம், அவர்கள் பேசும் வசன மொழிகள் அனைத்தும் ஆத்மார்த்தமாகப் படைக்கப்பட்டவை.
புராண நாடகங்களை வழிவழியாக மனனம் செய்ததால் அவர்களது மொழியில் வடமொழித் தாக்கம் அதிகம் இருக்கிறது.
டிக்க்ஷன் கெடாத அவர்களது மருவிய மொழியில் அதனைக் கேட்கும்போது இனம் புரியாததோர் அதிர்வு மனமெங்கும் இதமாகப் பரவுகின்றது.
**குணம்**
அத்துணைக் கலைஞர்களிடமும் அவ்வளவு வினயம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் உயர்த்திப் பேசிக்கொள்வதைக் காணக் காண நமது உள்ளமும் அழகாகிவிடுகிறது.
ரஜினி என்றொருவர் கிருஷ்ணர் வேஷத்துக்கான அரிதாரத்தை வெகு அழகாகப் போட்டுக் காத்திருந்தார். ஆனால், நேரமின்மை காரணமாக அவர் அங்கே நடித்துக் காட்ட முடியாமல் போனது. ஆயினும் கொஞ்சமும் மனம் நோகாமல் புன்னகையோடு கிளம்பிப் போனார்.
கூடி வந்த கார்மேகம் தப்பித் தாண்டிச் சென்றுவிட்டாலும் சலித்துக்கொள்ளாமல் தன் வயல் வெளியைக் காதலோடு கண்டு நகரும் ஒரு விவசாயியின் பெருங்குணத்தை அவரிடம் கண்டேன்.
அன்று இரவு கூத்துக் கலை நிகழ்வுக்கு ஒப்புக்கொண்டிருந்தபோதும் கொஞ்சமும் பதற்றப்படாமல், யாரையும் பதற்றப்பட வைக்காமல் வந்த வேலையை அருமையாக முடித்துக்கொண்டு மரியாதை மொழியோடு கிளம்பிப் போனார்கள்.
**அரசாங்கத்துக்கு ஒரு வார்த்தை**
தமிழை – தமிழின் தொன்மக் கலையினை, அரும்பாடுபட்டுக் காத்துவருகின்றவர்கள் கூத்துக் கலைஞர்கள்.
கோயில் விழாக்கள் – அரசியல் விழாக்கள் எனச் சகலவற்றிலும் இவர்களின் பங்கு இருக்கிறது. ஏறத்தாழ எட்டு மணிநேரம் மூச்சைப் பிடித்து ஆடிக்காட்டி கலை வளர்ப்பவர்கள் அவர்கள்.
“மங்கலப் பணமாக” அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியத் தொகை இரண்டு வேளை சோற்றுக்கு ஆகாது.
“பெடல் ஆர்மோனியம்” என்று ஒன்று உண்டு. மேற்கத்திய பியானோவுக்கு இணையானது பெடல் ஆர்மோனியம். காலால் மிதித்துக்கொண்டு இரண்டு கரங்களால் வாசிக்கும் அற்புத முறை அது.
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் மனோரமா அவர்களின் கூத்துக் காட்சியில் அதனைக் நாம் கண்டிருக்கிறோம். அந்த இசைக் கருவியினை இன்னமும் காப்பாற்றி வாசித்துவருபவர்கள் நமது கூத்துக் கலைஞர்கள்.
அவர்களின் கலையினை அனுபவித்துக்கொண்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தைத் திருப்பிச் செலுத்த மறுக்கும் ஒரு சமூகம் – ஓர் அரசாங்கம் மரியாதைக்குரியதாக இருக்காது.
ஆம், அவர்களை நிம்மதியாக வாழ வைக்கும் பொறுப்பு இந்தச் சமூகத்துக்கும் அரசாங்கத்துக்கும் சர்வ சத்தியமாக உண்டு.
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 300 கூத்துக் கலைஞர்கள் உள்ளார்கள். காஞ்சிபுரத்தில் இன்னமும் கூடுதலாக 400 பேர்வரை இருக்கலாம். ஆரணியிலும் உள்ளார்கள்.
ஏறத்தாழ 100 குடும்பங்கள் வரை கூத்துக் கலைக்காகத் தங்களை அர்ப்பணித்துள்ளார்கள் எனக் கொள்ளலாம்.
ஓடோடி மகிழ்விக்கும் கூத்துக் கலைஞர்களுக்குக் காலனி ஒன்றை அமைத்து வீடுகளைக் கட்டித் தருவது இந்த அரசாங்கத்துக்குப் பெரும் பாரமாக இருந்துவிடப் போவதில்லை.
அரசாங்கம் மனம் கனிந்து அவர்களுக்கு இருப்பிடம் அமைத்துக் கொடுத்துவிடுமானால் அந்த எளிய கலைஞர்கள் இன்னமும் நிம்மதியாக இந்த அருங்கலையினை வளர்த்து எடுத்து அடுத்த தலைமுறைக்கும் கடத்த ஏதுவாக அமையும்.
தாம்பாளத்தைக் கவிழ்த்து அதில் அரிதாரம் பூசும் முத்து வெள்ளைப் பவுடர் கொண்டு “ஓம்” என்று எழுதி அதன் நடுவே சூலம் வரைந்து கிராம தேவதைகளை தொழுது ஆரம்பிக்கும் அந்த எளிய மக்களது கூத்துக் கலை நிறைந்து ஒளி வீசட்டும்!
கலைகளை, கலைஞர்களை வாழ வைத்தால் இந்த அரசாங்கத்தை வரலாறு வாழ்த்தும்.
—————————————————————————————————–
(**கட்டுரையாளர் குறிப்பு:** ஸ்ரீராம் சர்மா எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதனைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன் ஸ்ரீராம் சர்மா.)
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**
**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**
**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**
**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
.
**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**�,”