ஸ்ரீராம் சர்மா
பல விதமான கலாச்சாரங்களைத் தன்னுள்ளடக்கிப் பரந்து விரிந்த இந்த பாரதத் திருநாட்டில் ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் தனித் தனியே சில குண விசேஷங்கள் உண்டு.
அதனதன் வெளிப்பாடாகவே அந்தந்த மண்ணின் இயல், இசை, நாட்டியக் கலை வடிவங்கள் அனைத்தும் தோன்றிவந்திருக்கின்றன.
நமது நாட்டில் கதக், கதக்களி, ஒடிசி, குச்சுப்டி, சாத்ரியா, மணிப்புரி, கூமர், யக்ஷகானா, விலாஸினி நாட்டியம், கௌடிய நிருத்யா, சம்பல்புரி, மோகினியாட்டம் எனப் பலவகையான நாட்டிய வடிவங்கள் இருந்தாலும், நமது தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான பரத நாட்டியத்துக்கு மட்டுமே இலக்கணம் என்று ஒன்று உண்டு.
ஆம், இலக்கணம் அமையப் பெற்ற ஒரே நாட்டிய வடிவம் நமது பரத நாட்டியம் மட்டுமே. அதனை உலகுக்குச் சமைத்தளித்தவர் பரத முனிவர்.
ஏறத்தாழ இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பரத முனிவர் சமஸ்கிருத மொழியில், 6000 ஸ்லோகங் களையும் 36 அதிகாரங்களையும் உள்ளடக்கிய பரத சாஸ்திரம் என்னும் அதியற்புதமான நாட்டிய இலக்கண நூலைப் படைத்தருளினார் என்கிறது வரலாறு.
ஈடு இணையற்ற இலக்கணக் குறிப்புகளைக் கொண்ட பரத நாட்டிய வடிவம் மற்றெங்கிலும்விடத் தமிழ்நாட்டில்தான் தழைத்தோங்கி வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம், தமிழகம்தான் பரத சாஸ்திரத்தை உயர்த்திப் பிடித்தது. அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்களுக்கு சமஸ்கிருத மொழி பரிச்சயமானதாக இருந்தது. “தொல்காப்பியர் காலந்தொட்டே தமிழோடு மிக நெருங்கிய தொடர்புகொண்ட மொழி சமஸ்கிருத மொழி” என்கிறார் பன்மொழிப் புலவரும் மொழியியல் வல்லுனருமான பேரறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்.
ஒரு காலத்தில், பரத சாஸ்திரம், தொல்காப்பியம், நன்னூல், சிலப்பதிகாரம் போன்ற அசகாயப் படைப்புகளால் நம் தமிழ்நாட்டில் வழி வழியாக பரதக் கலை செழித்திருந்தது. 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு வேறு, வேறு கலாச்சாரங்களைக் கொண்ட அன்னியப் படையெடுப்பாளர்களின் ஆக்ரமிப்புக்களால் உயர்ந்த நிலையில் இருந்த அந்த நாட்டியக் கலை கொஞ்சம் கொஞ்சமாக நலிந்துகொண்டேவந்து தேய்ந்து நின்றது.
அதைக் காணப் பொறுக்காத நம் முன்னோர்கள், இலக்கணத்தோடு கூடிய நம் பரத நாட்டியத்தை விட்டுக் கொடுக்க மனமின்றி மீண்டும் முனைந்து மீட்டுருவாக்கம் செய்து கொண்டுவந்தார்கள்.
அப்படி அவர்கள் மீட்டுருவாக்கம் செய்தபோது பற்பல பாணிகள் கிளைத்தன. காஞ்சீவரம் பாணி, வழுவூர் பாணி, பந்தநல்லூர் பாணி, தஞ்சாவூர் பாணி, மைசூர் பாணி என ஒவ்வொரு பாணியும் தனக்கெனத் தனித்த சிறப்பினைக் கொண்டு ஜொலித்தன.
அன்றைய குருமார்கள் ஆழ்ந்த ஞானம் படைத்தவர்களாக விளங்கினார்கள். குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை, குரு காஞ்சீவரம் எல்லப்ப நட்டுவனார், குரு தண்டாயுதபாணிப் பிள்ளை, குரு வழுவூர் ராமையாப் பிள்ளை, குரு பால சரஸ்வதி அம்மா போன்றோர் நாட்டிய சாஸ்திரத்தின் வேர்களில் அமுது பாய்ச்சினார்கள்.
அவர்களுக்கு அமைந்த அற்புதமான குரு சிஷ்யப் பரம்பரையால் பரதம் மேலும் சிறப்புடன் வளர்ந்தது. ஆனால், சென்ற தலைமுறையின் நாட்டியத் தாரகைகளான பத்மா சுப்ரமண்யம், அலர் மேல் வள்ளி, சுதா ராணி ரகுபதி, ரமா வைத்யநாதன், மாளவிகா சாருக்கேய், அனிதா ரத்னம், ஊர்மிளா சத்யநாராயணன், மதுமதி ப்ரகாஷ், மணிமேகலை சர்மா போன்ற “லாஸ்யத்தில்” ஆழங்காற்பட்டவர்களை இன்று காண்பது அரிதாகிவிட்டது.
பரதத்தின் இன்றைய நிலை சொல்லிக்கொள்ளும் தரத்தில் இல்லை என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்ல சங்கடமாக இருக்கிறது.
சென்ற தலைமுறையினரிடத்தில் இருந்த பொறுமையும் உழைப்பும் இன்றைய தலை முறையினரிடத்தில் கிஞ்சித்தும் இல்லாமல் போய்விட்டதே வீழ்ச்சிக்குக் காரணம்.
ஒரு முழுமையான நர்த்தகியிடத்தில் இருக்க வேண்டிய பத்து அம்சங்களை மகாபாரத சூடாமணி என்னும் நூல் பட்டியலிட்டு அறிவுறுத்துகிறது. அதனைப் பொருள் மாறாமல் அப்படியே எளிமைப்படுத்தி இங்கே தருகிறேன்.
**உறுதியான மனம், மெருகான அசைவுகள், தீர்க்கமான விழிகள், அளவான தேகம், சலியாத உள்ளம், நுண்ணொழுக்கம், சுய சிந்தனை, ஒருமித்து இருக்கும் குணம், உயர்ந்த நோக்கம், அளவோடு கூடிய பேச்சு** எனப் பத்து அம்சங்கள் ஒரு நாட்டிய மாணவிக்கு இருந்தாக வேண்டும். .
இவையனைத்தும் ஒருங்கே அமைய வேண்டுமானால் நல்ல குருவை நாடி, பொறுமையாகப் பயில வேண்டும். பரத நாட்டியத்தை முறையாகக் கற்றுக் கொடுக்கும் குருமார்கள் அருகிக்கொண்டேவரும் காலம் இது. தன் முனைப்போடு தேடிச் சென்று போய் முறையாகக் கற்றுக்கொள்ளும் அக்கறையும், பொறுமையும் இன்றைய மாணவர்களிடம் அவசியம் தேவை.
பெற்றோர்களும் அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். சேர்த்துவிடும் அன்றே “குழந்தைக்கு அரங்கேற்றத்த எப்ப வெச்சுக்கலாம்ங்குறீங்க…?” என்று மோவாயை முட்டிக்கொண்டு ஆரம்பித்துவிடக் கூடாது.
அவசரத்தோடு வெளிப்படும் எந்தக் கலையும் நின்று நிலைக்காது. பரத நாட்டியம் என்பது இன்றைய உலகில் உயர் கலாச்சாரத்தின் சின்னமாகிவிட்டது. ஃபேஷனாகிவிட்டது. நட்டுவனார்கள் உயிரைக் கொடுத்து மீட்டெடுத்த கலை சந்தைப் பொருளாகி விட்டது.
அதனால்தான் கடந்த இரண்டு தசாப்தங்களில் பரத நாட்டிய வடிவத்தின் நேர்த்தி வேகமாகக் குறைந்துகொண்டேவருகிறது.
அது, பாட்டோ – பரதமோ அதனதன் *நுணுக்கங்களில்* காட்டும் அக்கறையை அதன் *நேர்த்தியில்* காட்டத் தவறுகிறது இந்தத் தலைமுறை என்பது வேதனையளிக்கிறது.
சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று, மேற்கத்திய நடன வகைகளைக் கண்டு மயங்கி அதன் வேகத்தை பரத நாட்டியத்திலும் புகுத்த முனைகிறார்கள்.
வேகம் என்பது, வர்ணம் அல்லது தில்லானாவில் இருந்தால் சரி. மொத்த நிகழ்வும் பரபரவென இருப்பது சரிதானா? பரத நாட்டியத்துக்கே உண்டான அந்த ‘சுகம் – சௌக்கியம்’ எல்லாம் நீர்த்துப்போய்விடாதா? வெயில் நாட்டில் கோட்டு சூட்டோடு சுத்துவது கோமாளித்தனமல்லவா?
கலை என்பது காலத்துக்கேற்றாற்போல் புதுமைப்படுத்தப்பட வேண்டியதுதான். ஆனால், அந்தப் புதுமை அந்தக் கலையின் வரையறைக்கு உள்ளிருந்துகொண்டே செய்யப்படுவதாக இருந்தாக வேண்டியது அவசியம். அல்லவெனில், அந்தக் கலையின் ஆன்மா சிதையும். பிறகதனை பரதம் என்று அழைப்பதில் அர்த்தமில்லாமல் போய்விடும்.
ஒரு முறை, பரத மேதை டாக்டர் பத்மா சுப்ரமண்யம் அவர்கள், ‘குறத்தி’ பாடலில் ஒரு புதுமையைச் செய்தார். குறத்தி துணி உலர்த்துவதாக சஞ்சாரம் செய்தபடியே வந்தவர், பாவனையாக துணியை கொடியில் போட்ட பின், சட்டென அதற்கு ‘க்ளிப்’ மாட்டிவிடுவதாக ஒரு முத்திரையை ஸ்ருஷ்டித்து அபிநயித்துக் காட்டினார். ‘க்ளிப்’பைக் ‘கண்ட’ அரங்கம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தது.
க்ளிப் என்பது பரதமுனியின் காலத்தில் இல்லை. அதற்கு பரத சாஸ்திரத்தில் தனி முத்திரை இல்லைதான். ஆனாலும், அதற்கொரு முத்திரையை உருவாக்கி, அதனைத் துக்கடாப் பாடல்களில் பயன்படுத்தியிருந்தார். அது உறுத்தலாக இல்லாதது மட்டுமின்றி மிகுந்த வரவேற்பையும் பெற்றது.
போலவே, விமானம், ராக்கேட், ரயில், கம்ப்யூட்டர் என எல்லாவற்றிற்கும் முத்திரை உண்டாக்கப்பட வேண்டும். அது அந்தக் கலை வடிவத்தின் வரையறையைக் கடக்காமல் பிரயோகிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
இதுவரை மூன்று நாட்டிய நாடகங்களை எழுதியிருக்கிறேன். மூன்றிலும், வரையறைக்குட்பட்டு இயல் துறையில் என்னளவில் புதுமை செய்திருக்கிறேன்.
சலீம் அனார்கலி – நாட்டிய நாடகத்தில்,
**“மகரந்தம் சிதறாத மலராக நான்;
மயங்கியே நின்றேன் மேரே ஜான்”** என்று உருது வார்த்தையைப் பயன்படுத்தினேன்.
வேலு நாச்சியார் படைப்பிலும் உருது, ஆங்கில வார்த்தைகளைப் பிரயோகித்திருக்கிறேன். செட்டே போடாமல் ஒரு சிம்மாசனம்கூட போடாமல் வேலு நாச்சியார் வரலாற்று நாட்டிய நாடகத்தை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறேன்.
ஆக, துருத்திக்கொண்டு நிற்காமல், இயல்பானதாக இருக்குமேயானால் அந்தப் புதுமை சபையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும் என்பது நிச்சயம்.
இயலில், இசையில் செய்யப்படும் இது போன்ற புதுமைகள் நாட்டியத்திலும் செய்யப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள். விருப்பம்.
உதாரணத்துக்கு, ‘காலை’ என்பதற்கு பரதத்தில் ஒரு முத்திரை இருக்கிறது. அது, சூரியன் உதிக்கும் அதிகாலையை உணர்த்தும் ஓர் முத்திரை. ஆனால், ‘இளங் காலை’, ‘முதிர்காலை’ என்பதற்குத் தனித்தனி முத்திரைகள் இருப்பதாகத் தெரியவில்லை.
பெண்கள் சுதந்திரமடைந்துவிட்ட காலத்தைச் சொல்லும் பரத நாட்டியப் படைப்பில் “வேலைக்கு கிளம்பினாளாம் வேதவல்லி….” என்றொரு பாடல் எழுதப்படுமானால், அந்த வரியை விவரித்து ஆடும்போது அவள் அதிகாலை கிளம்புவதாகத்தான் முத்திரை காட்டப்படும்.
பாவம், 10 மணி அலுவலகத்துக்கு அதிகாலை 5 மணிக்கே அனுப்பப்பட்டுவிடுவாள் வேதவல்லி.
சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால், அதனைக் குறிக்க ஒரு முத்திரை இதுவரை இல்லை.
“இருப்பதை முதலில் ஒழுங்காக ஆடட்டும். பிறகு பார்க்கலாம்…” என்று சொல்லிவிடலாம். ஆனால், பரத நாட்டியக் கலையினை காலத்திற்கு ஏற்றாற்போல் செழுமைப்படுத்திக் கொடுக்காமல் விட்டுவிட்டால்,
இளந் தலைமுறையினர் மேற்கத்தியக் கலைகளால் பாதிக்கப்பட்டு தங்களை அறியாமலேயே அதைப் பரதத்துக்குள் புகுத்திவிட வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அது, நமது தமிழ் மண்ணின் கலாச்சாரப் பெருமையின் மேன்மையைச் சீர்குலைத்துவிடும். காலப்போக்கில் இதன் தனித்தன்மை அழிந்துவிடக்கூடும்.
ABHAI போன்ற பரத நாட்டிய விற்பன்னர்களை உள்ளடக்கிய அமைப்புகள் ஒன்று கூடி, குழு அமைத்து இது குறித்து ஆராய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
பரதத்தின் உன்னதம் தாழ்ந்துகொண்டே வருகிறது என்பதற்கு இன்னுமொரு உதாரணம் சொல்வேன்.
பரத நாட்டியத்தில், “தாண்டவம்” என்றும் “லாஸ்யம்” என்றும் இரு வகை உண்டு. தாண்டவம் என்றால் கோபத்தோடு ஆடுவது என்ற எண்ணிவிடக் கூடாது. தாண்டவம் என்பது ஆண்மையோடு ஆடுவது.
**“தாண்டவம்” என்பது சிவனுக்குரியது.
“லாஸ்யம்” என்பது பார்வதிக்கே உரியது** என்பது மரபு.
அதாவது, ஆண்களுக்குரிய தாண்டவம் என்னும் ஸ்டைல் கொஞ்சம் நிமிர்த்த மேனியாகவே இருக்கும். இதனை, ‘உத்ததம்’ என்னும் சொல்லால் குறிக்கிறார் பரத முனிவர்.
பெண்களுக்கே உரியது ‘லாஸ்யம்’ எனப்படும் ஸ்டைல். அது, நளினத்தின் உச்சத்தைக் காட்டித்தரும். இதை ‘சுகுமாரம்’ என்னும் சொல்லோடு குறிக்கிறார்.
இவ்விரண்டும் இன்று தலைகீழாகிக் கிடக்கிறது. ஆம், ஆண்கள் லாஸ்யமாக ஆடிக்கொண்டிருக்க, பெண்களெல்லாம் தாண்டவமாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஓர் உன்னதக் கலைக்கு, இதற்கு மேல் ஒரு அவலம் நேர்ந்து விட முடியாது. ‘அட்டமி’ மீட்டியபடி ஆடும் ஒரு ஆணைக் கண்டால் தலையிலடித்துக்கொள்ளலாம்போல இருக்கிறது. லாஸ்யமாக ஆடுவதுதான் பரதம் என்று அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இப்படி இவர்கள் ஆடித்தான் கலை விடிய வேண்டும் என்பதில்லை.
ஆண்களாவது சதவிகிதத்தில் மிகமிகக் குறைவு. முகம் திருப்பிக்கொண்டுவிடலாம். ஆனால், பெண்களின் சதவிகிதம்தான் பரதத்தில் நூற்றுக்குத் தொண்ணூத்தெட்டு.
அவர்களாவது ‘லாஸ்ய’மாக ஆடுகிறார்களா ?
பரத நாட்டியம் என்னும் பெயரில், அடித்துப் பிடித்து அடவுகளாலேயே மேடையை நிரப்பி விட்டுப் போகிறவர்கள்தான் இன்று அதிகம். ‘பாவம்’ (Bhavam) என்பதோ, ‘நளினம்’ என்பதோ பேருக்குக்கூடக் காணப்படுவதில்லை. எல்லாம் கணக்கு வழக்கு, வேக வேகமான அடவுகள், அலங்காரம், என்று கதை முடித்து விடுகிறார்கள்.
பாவம் (Bhavam) நிரம்பியிருக்க வேண்டிய கிருஷ்ணா நீ பேகனே பாரோ, சின்னஞ்சிறு கிளியே போன்ற பதங்களில்கூட ‘ப்ளாஸ்ட்டிக்’ தனமாக ஏதோ கை பிடித்துக் காட்டிவிட்டுத் திரை மறைந்துவிடுகிறார்கள்.
நல்ல குருவிடம் நின்று நிதானித்துக் கற்றுக்கொள்ளக் கூடாதா? பள்ளிப் படிப்பைக் கல்லூரி வரை சென்று முடித்து வர 18 வருட காலம் பொறுத்திருக்கும் மாணவர்களும் பெற்றோர்களும் பரதம் பயில ஐந்து வருடமாவது பொறுத்திருக்கக் கூடாதா? பொறுத்திருந்தால் ‘லாஸ்யம்’ வசப்பட்டுவிடாதா?
நோக்கமும் அக்கறையும் இருந்தால் நிச்சயம் முடியும்.
சமீபத்தில், வாட்ஸப் வீடியோ ஒன்றில், காரைக்கால் அம்மையார் திரைப்படத்தில், நடிகர் சிவக்குமார் அவர்களும் நடிகை ஸ்ரீவித்யா அவர்களும் இணைந்து ஆடிய சிவ பார்வதி நடன கண்டு வியந்துபோனேன்.
அந்தப் பாடலை கோரியோக்ராஃப் செய்த மரியாதைக்குரிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களையும், அந்தத் திரைப்படத்தை இயக்கிய ஏ.பி.நாகராஜன் அவர்களையும் எவ்வளவு தொழுதாலும் தகும்.
சிவகுமார் அவர்கள் ஒரு சிறந்த நடிகர். ஆனால், தேர்ந்த நடனக் கலைஞர் அல்லர். ஆனாலும், வெறும் பதினைந்து நாள் பயிற்சியில் அவர் ஆடிக் காட்டியிருக்கும் நாட்டியம் அசாதாரணமானது.
அதில், அவரது போர்ஷன் முழுவதும் அக்மார்க் தாண்டவ வகையைச் சேர்ந்தது எனலாம்.
சில போஸ்களில், அவரருகே ஆடும் ஸ்ரீவித்யா அவர்களின் பதியாமல் உயர்ந்திருக்கும் பாதமும், சிவகுமார் அவர்களின் பதிந்து அழுந்தியிருக்கும் பாதமும் அவர்கள் எந்தளவுக்குக் கலையினை உள்வாங்கி ஆடியிருக்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்திவிடுகின்றன.
இருவரது அடவுகளுக்கும் இடையே காணப்படும் வேறுபாட்டினை தாண்டவ – லாஸ்ய நடனத்துக்கான பாடமாகக்கூடக் கொண்டுவிடலாம். அடவு, தாளம், பாவம் (Bhavam), போஸ் என சகலவற்றிலும் அப்படி ஒரு பர்ஃபெக்ஷன்.
ஏதோ சினிமா நாட்டியம்தானே என்று எண்ணி அலட்சியம் காட்டிவிடாமல், பரதம் என்பதோர் உயர்ந்த கலை. அதற்கு நியாயம் செய்தாக வேண்டியது கலைஞர்களாகிய நமது கடமை என்னும் உயர்ந்த அக்கறை சிவகுமார், ஸ்ரீவித்யா இருவரின் ஒவ்வொரு அசைவிலும், அதன் பின்னாலான அயராத உழைப்பிலும் தெறித்து நின்று, இன்றைய தலைமுறையினருக்கோர் பாடமாகி நிற்கிறது.
கலை சார்ந்த பரிபூரணமான உழைப்பை உணர விரும்பும் ஒவ்வொருவரும் அந்தப் பாடலை யூ ட்யூபில் காண வேண்டும் எனத் துணிந்து பரிந்துரைக்கிறேன்.
இந்தப் பாடலுக்கு நடனம் ஆடியபோது சிவகுமார் அவர்களுக்கு வயது 32. கலையின் பால் அன்று அவர் செலுத்திய உழைப்பும், அக்கறையும்தான் இன்று 77 வயதிலும் ராமாயணத்தை, மாபாரதத்தைக் கடந்து, திருக்குறளையும் மனனம் செய்து மேடையேறி அசத்தும் உத்வேகத்தைத் தந்திருக்கிறது என்பதை இன்றைய தலைமுறைக் கலைஞர்கள் உணர்ந்துகொண்டாக வேண்டும்.
ஐந்தில் வளைந்த அம்பு அண்ட சராசரத்தையும் கடக்கும் என்பதை ஆழப் பதிந்துகொள்ள வேண்டும்.
பானை மேல் ஆடுவதிலும், பாம்பு நடனம் ஆடுவதிலும் கவனம் செலுத்தாமல் உண்மையான பரதக் கலையினை வளர்க்க இந்தத் தலைமுறை தயாரானால் நல்லது.
5000 பேரை ஆட வைத்து கின்னஸ் சாதனை செய்கிறேன் என்பதெல்லாம் வியாபாரத்துக்கு உதவலாம். வித்தைக்கு உதவாது. ஆடம்பரத்தால் வளர்வது கலையாக இருக்க முடியாது.
கவனியுங்கள்.
நான்கு ஜன்னல் வைத்த வீடாக இந்த உலகம் இருந்தபோது கலை அதனுள் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சுடரொளியில் கலை மஞ்சரித்துக்கொண்டிருந்தது.
இன்று, டெக்னாலஜியின் அசுர வேகத்தால் ஆயிரம் ஜன்னல் வைத்த வீடாக ‘அம்போ’வெனத் திறந்து கிடக்கிறது பூமி. எட்டுத் திசையிலிருந்தும் கட்டுக்கடங்காமல் காற்றும் கசடும் சூறையடிக்கின்றன.
திறந்த வீட்டில், சுழன்றடிக்கும் வியாபாரக் காற்றில் *கலைச்சுடர்* நின்று ஒளிர வேண்டும் என்றால், அதைப் பாதுகாக்க *பரதக் கரங்கள்* அருகே குவிந்தாக வேண்டும்.
இளைய தலைமுறையை அழைக்கிறேன் !
இருகரம் குவிக்கிறேன் !!