இரட்டைக் குழல் துப்பாக்கி! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

– ஸ்ரீராம் சர்மா

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. காரண, காரியங்களோடும் ஆளும்கட்சியின் சர்வ வல்லமையோடும் அது அரங்கேற்றப்பட்டேவிட்டது. அதுகுறித்த வைகோவின் உணர்வுபூர்வமான எழுச்சியுரை உட்பட சகலத்தையும் அறிவார்ந்த வாசகர்கள் கூடிய நமது மின்னம்பலம் பதிவு செய்தாகி விட்டது. மேற்கூறிச் சொல்லுமளவுக்கு அரசியல் ஆள்வினையுடையவன் அல்லன் எனினும் ஒரு கலை இலக்கிய எழுத்தாளனாக பொது மக்களின் பரிசாரகனாக எனது எளிய ஆதங்கத்தையும் இங்கே பதிந்துவிட முனைகிறேன். அவ்வளவே!

நீட்டி முழக்க என்ன இருக்கிறது!?

மரியாதைக்குரிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வைகோவைப் பற்றிய தனது அறிக்கையை இன்னமும் கொஞ்சம் நிதானமாக அளந்திருக்கலாம் என்பதே எனது துணிபு. அன்றந்த அவையில் அப்படி என்னதான் சொல்லிவிட்டார் வைகோ?

**வைகோவின் நேரம்**

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட மசோதாவைக் குறித்து ஆளும்கட்சியினரை நோக்கி அவர் கர்ஜிக்க முடிவெடுத்தபோது அவருக்கு அனுமதிக்கப்பட்டது வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே. அந்த முடிவை தன்னியல்பின் வழியே சீறி எதிர்த்தவர்…

“இது சரிதானா… இரண்டு மணி நேரமாக வெற்றுக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் இந்த அவையில்… எனது நியாயத்தை எடுத்துரைக்க வெறும் மூன்று நிமிடங்கள் மட்டும்தானா? சொல்லுங்கள் இது நியாயம்தானா? உங்களைக் கேட்கிறேன் அரசாங்கத்தாரே…” என்று அவர் முகம் திருப்பிக் கேட்க விரும்பிய நேரம் வைகோவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.

அந்த தோரணை, நீண்ட நெடிய நாடாளுமன்ற அனுபவம்கொண்ட வைகோவுக்கே உண்டான அனுபவத்தின் வெளிப்பாடு என்றாலும்… அதற்குண்டான காரணத்தை அழகிரி போன்றவர்கள் இப்படிப் புரிந்துகொள்வது நலம்.

உலக கவனத்தை ஈர்க்கக்கூடிய முக்கியமானதொரு மசோதா ஒன்றின் மீது ஆழங்காற்பட்ட அனுபவம் மிகுந்த நாடாளுமன்றச் செயற்பாட்டாளர் ஒருவரின் கருத்தைப் புறக்கணிக்கப் புகுந்தால் அது உலக மீடியாக்களின் கவனத்தை ஈர்த்துவிடக் கூடும். அது, தங்களது மசோதாவின் நியாயத்தைப் பலவீனப்படுத்திவிடும் என்று எண்ணியோ, என்னமோ ஆளுங்கட்சியாளர்கள் அனுமதித்து விட்டார்கள் . அவ்வளவுதான் . நாடாளுமன்றப் புலி என்று பேரெடுத்த வைகோ தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பைக் கொண்டு இப்படி நீட்டினார்…

“காஷ்மீரத்து அரசியலின் இன்றைய நிலைக்கு மூல காரணம் காங்கிரஸ்தான்… பாஜக அதை முடித்துவைத்து விட்டது. இது ஜனநாயகப் படுகொலை… ஆம், இது கொலை… கொலை… கொலை..” என்று ஆவி ஓய நீள முழங்கி அமர்ந்தார். என்ன சொல்லிவிட்டார் வைகோ?

**வள்ளுவனின் கூட்டணி தர்மம்**

கடந்த காலத்தில் காஷ்மீரத்து அரசியலில் காங்கிரஸ் செய்த காரியங்கள் ஏதொன்றும் கண்ணியமானதல்ல, கடமைப்பாற்பட்டதல்ல என்றார். அதிலென்ன தவறு? சுயநலம் கொண்ட அன்றைய காங்கிரஸாரின் இடையறாத நீச்சச் செயற்பாட்டின் ஒட்டுமொத்த விளைவே இன்றைய நிதர்சனம் என்று எடுத்துக் கூறிவிட்டார் . அது சரிதானே !

கூட்டணியில் இருப்பவர் அப்படி சொல்லலாமா என்கிறார் நமது மரியாதைக்குரிய அழகிரி சார். ஏன் சார் சொல்லக் கூடாது? உலக அரசியல் அனைத்துக்கும் ஒரே வேதமாக விளங்கக் கூடிய நமது ஒப்பற்ற திருக்குறள் சொல்கிறது…

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பாரி லானுங் கெடும்.

தென்னக அரசியலின் பேராளுமையான கலைஞரின் கண்டெடுப்பு வைகோ. கலைஞரின் மனசாட்சி எனப்படும் முரசொலி மாறன் அவர்களின் கூர்த்த வார்ப்பு வைகோ. மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை மக்களவை உறுப்பினராகவும் நின்று நிறைந்த அனுபவம்மிக்கவர் வைகோ.

23 வருட காலம் நாடாளுமன்றம் காணாதபோதும் ஓயாது, ஒழியாது மாநிலமெங்கும் சுற்றிச் சுழன்று அரசியல் செய்தவரான வைகோ நீண்ட இடைவெளிக்குப் பின்னான தனது கன்னிப் பேச்சில்… “23 ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருந்தன்மையோடும், பேரன்போடும் என்னை இந்த அவைக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனத் தன்னிலையைத் தெளிவுறச் சபையில் பதிந்தார்.

வைகோவின் வெளிப்படையான அரசியல் விசுவாசம் இவ்வாறிருக்க, தன் வசமிழந்த திடீர்த் தலைவர் அழகிரி சார் மிக மட்டமாக அதை மடைமாற்றப் பார்க்கிறார். அந்த சபையில், வைகோ பாஜகவை மட்டுமே சகட்டு மேனிக்குச் சாடித் தீர்த்திருக்க வேண்டும் என்பதுதான் அழகிரி சார் போன்ற அரசியல்வாதிகளுக்கே உண்டான “ஐயன்மாரே” எதிர்பார்ப்பு.

“ஐயன்மாரே கூக்குரல்…” அடிமை அரசியலைக் கொண்டவர்களுக்கு வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம். ஆனால், வைகோ போன்ற நெடுங்கால அரசியல் ஆளுமையை அதன் வழியே செல்ல விடுவதுதான் சரி என்று விவரமானவர்கள் வழி மொழிந்து வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்கள் என்பதை என்றுதான் உணரப் போகிறார்?

**கொள்வினைக் குற்றம்**

வைகோவை அனுப்பிவைத்தது நாங்கள்தான் என்கிறார் தமிழ்நாட்டின் திடீர் காங்கிரஸ் தலைவர். எங்களால்தான் வைகோ எம்.பி ஆனார் என்று இன்னமும் இறுமாந்து கொண்டிருக்கிறார் அவர். ஐயோ பாவம். வேலூர் எம்.பி உட்பட ஒட்டுமொத்த 38 எம்.பி.க்களையும் தன்னகத்தே கொண்டு வர ஸ்டாலின் என்னும் ஆகப் பெரிய அரசியல் ஆளுமையின் ராஜதந்திரமும் அயராத உழைப்பும்தான் காரணம் என்பதை எப்போதுதான் அவர் புரிந்துகொள்ளப் போகிறார் !

ராகுல்தான் பிரதமர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அன்று சொன்னதை ராகுலின் பேராளுமைக்கான வழிமொழிதல் என்று இன்னமும் அவர் நம்பிக்கொண்டிருப்பாரென்றால் அவருக்காகப் பரிதாபப்பட யாரேனும் உண்டா அங்கே?

அன்பே உருவான ஸ்டாலின் என்னும் அரசியல் ஆளுமைக்கும் விசுவாசமே உருவான வைகோவுக்கும் இடையே இன்று இருக்கும் மகா புரிதலை… இற்றுப்போன காங்கிரஸின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவர் எடைபோட முனைவது என்பது அன்னாரது அபத்த அரசியலின் ‘கொள்வினைக் குற்றம்’ தானே அன்றி வேறென்ன? கொண்ட கடமையில் தனக்குச் சரி என்று பட்டதை அந்த அவையில் பேசிவிட்டார் வைகோ. அவ்வளவுதான்.

**அழகிரி சாருக்கு சில கேள்விகள்**

வைகோ பேசியதைச் சீறும் மரியாதைக்குரிய அழகிரி அவர்களே… உங்களைப் பணிவோடுதான் கேட்கிறேன்… ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட மசோதாவை எதிர்த்து ஓட்டுப் போடாமல் உங்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் 12 பேர் கேன்டீனுக்கு ஓடிப்போய் விட்டார்களே. அது ஏன் என்று கேட்பீர்களா?

அந்த 12 பேரும் நீங்கள் வார்த்தைக்கு வார்த்தைக் கொண்டாடும் உங்கள் உத்தமர் நேருவின் முகத்தில் கரி பூசி விட்டார்களே? அதுகுறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்தவாவது உங்களுக்கு அனுமதி உண்டா? சொந்தக் கட்சிக்கே துரோகம் செய்யலாமா என்று பாவ் பஜ்ஜி சாப்பிடப் போனவர்களை இழுத்துக் கேட்கும் உரிமை தேசியக் கட்சியின் மாநிலத் தலைமையான உங்களுக்கும் உண்டு என்பதை உணர்வீர்களா ?

அப்படியே உணர்ந்தாலும் உங்களுக்கு அந்த உரிமையை உங்கள் கட்சிதான் கொடுக்குமா? முக்கிய மசோதாவின் மேல் ஒரு தேசியக் கட்சிக்கு இரட்டை நிலைப்பாடா என்று உலகமே கெக்கலிக்கிறதே… அதுகுறித்து, அவமானம் உண்டா? ஆவேசம் உண்டா?

நேருவாவது உங்களது பழைய ரோஜாத் தலைவர். போகட்டும். இன்று, “போகாதே.. போகாதே… என் கணவா…” என்று மூக்கை சிந்தி அழைத்துக்கொண்டிருக்கிறீர்களே உங்களது ஆதர்சத் தலைவர் ராகுல் காந்தி… பெருந்தலைவரான அவர், சம்பந்தப்பட்ட ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு சட்ட மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரலே கொடுக்கவில்லையே அது ஏன் என்று கேட்கும் உயர்ந்த நிலையில் உங்களில் யாரேனும் உள்ளீர்களா ?

“இடிப்பாரையில்லாத…” என்ற குறளையெல்லாம் எடுத்துப் பேசும் உரிமை இங்கிருக்கும் காங்கிரஸாருக்கு இல்லவே இல்லை என்பதைக் குறித்துக் கொஞ்சமேனும் கூனுவீர்களா? குறுகிக் கொள்வீர்களா?

**ஆர்எஸ்எஸ்ஸின் தீர்மானம்**

காங்கிரஸ் கட்சியின் லோக்கல் சொத்துகளை அனுபவித்துக்கொண்டு அமைதியாக இருந்து விடுவோம். அதற்கு மேல் பேசினால் அன்னை சாட்டையை வீசிவிடுவார் என்னும் அச்சத்திலிருக்கும் உங்களுக்கு வைகோவின் உணர்வைப் பற்றிப் பேச அருகதை உண்டா என்று கேட்டால் உங்களுக்குக் கோபம் வரலாம். உண்மையான அரசியலை இனியேனும் புரிந்து கொள்ளுங்கள்.

ஆர்எஸ்எஸ்ஸின் அகில பாரத செயற்குழு சற்றேழத்தாழ 17 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 2002லேயே ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட மசோதா குறித்த தீர்மானத்தை நிறைவேற்றி விட்டது என்பதை ஆதாரபூர்வமான செய்தியாக உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதைக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி நகர்த்தி இன்று இரண்டாவது முறை முழு மெஜாரிட்டியுடன் அமர்ந்துவிட்ட பாஜக அதற்குச் செயல்வடிவம் கொடுத்துவிட்டது. இப்படி ஒரு நீண்ட கால செயல் திட்டம் தீட்டக் கூடிய செயலாற்றல் தேசியக் கட்சியான உங்களிடம் இருந்திருக்க வேண்டுமா இல்லையா?

அப்படி இல்லாத நிலையில், தேசியக் கட்சி என்று பீற்றிக்கொண்டிருக்கும் நீங்கள் சுயநலத்தோடு ஆங்காங்கே ஆடிய ஆட்டத்தை வயிற்றெரிச்சலோடு, வருட வாரியான ஆதாரங்களோடு வைகோ அவையில் எடுத்து வைத்த அந்த பேருண்மையை லோக்கல் அரசியலுக்குக் கேவலமாக மடைமாற்றுவது கடைந்தெடுத்த அரசியல் அசிங்கமல்லவா? பொய் மாயம் பேசி நீங்கள் சாதிக்கப் போவதுதான் என்ன? உணர்ந்தால்தானே ஐயா உயர்வு?

**காங்கிரஸின் கையறு நிலை**

இரண்டு முறை பாஜகவை முழு மெஜாரிட்டியோடு அமர வைக்குமளவுக்குச் சிதைந்துபோன உங்களது கையாலாகாத தலைமையைக் குறித்த கையறு நிலைதான் உங்களது இந்த மடை மாற்றும் அசிங்கம் என்று சொன்னால் அதை உங்களால் மறுக்க முடியுமா? பாஜகவைப் போல நீண்ட கால செயல் திட்டத்தினை அமைத்துக்கொள்ளும் மனப்பாங்கினை, அதற்குண்டான வலுவான தலைமையினை இனியேனும் தேடிக் கண்டடையுங்கள் .

கேளுங்கள்…

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட மசோதா அரங்கேற்றப்பட்ட அந்தத் தருணத்தில் உங்களது காங்கிரஸ் கட்சியின் ஸோ கால்டு பெரும் தலைவர்களான ராகுலும், அன்னை சோனியாவும் விழி பிதுங்கப் பார்த்துக்கொண்டிருந்த அந்த திகில் காட்சியை நாடே கண்டு விட்டதே… அதனை நீங்களும் கண்டிருப்பீர்கள்தானே ? சொல்லுங்கள், வைகோ மட்டும் எதிர்த்து என்ன ஆகப் போகிறது?

1952இல் பாபா சாஹேப் அம்பேத்கரால் பேசப்பட்டது இந்தச் சட்டம். அதை எங்களுக்கு இயன்றபோது செயல்படுத்துகிறோம் என்று பாஜக சொன்னபோது உங்களது தலைமையின் ஓங்கிய மறுப்புரை அங்கே ஒலித்திருக்க வேண்டுமா இல்லையா? யார் யாரையோ பேசவிட்டு அவர்களின் முதுகுக்குப் பின்னே வெறித்த பார்வையோடு வெறுமனே அமர்ந்திருந்த தமாஷ் தலைமையின் கீழிருக்கும் நீங்கள்… உங்களுக்கே உண்டான ரோஷத்தோடு கிளம்பி வந்து திமுகவிலோ அல்லது மதிமுகவிலோ சேர்ந்துவிட்டால் தேவலாம் என்றால் அதில் தவறேதும் உண்டா?

வைகோ அவரது தகுதிக்கு காஷ்மீரத்து தேசிய அரசியலைப் புள்ளிவிவரத்தோடு பேசுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிய நீங்களோ உங்கள் தலைமை அரிப்புக்கு அதை உங்கள் லோக்கல் அரசியலுக்கு மடைமாற்றி கேவலமாகத் திருப்பப் பார்க்கிறீர்கள். அது எடுபடாது என்பதை இனியேனும் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் அரிப்பை திமுக, மதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல; ஒட்டு மொத்த தமிழர்களும் “ச்சீச்சீ….இது கொச்சை…” என்கிறார்கள் என்பதைத் தயவு செய்து உணருங்கள்.

**முள்ளிவாய்க்காலும் காஷ்மீரும்**

வைகோவுக்கு உள் நோக்கமும் கோபமும் உண்டு என்கிறீர்கள். என்னதான் சொல்ல வருகிறீர்கள்?

உலக அரசியலால் என்றோ நிகழ்ந்துவிட்ட முள்ளிவாய்க்கால் கோபத்தை காஷ்மீர் மசோதாவின் மீது வைகோ துப்புகிறார் என்று நீங்கள் கூட்டிச் சொல்வீர்கள் என்றால்… அதே உலக அரசியல் பாற்பட்டு என்றோ நிகழ்ந்துவிட்ட போற்றுதலுக்குரிய நமது தேசப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் மரண சோகத்தை… முள்ளிவாய்க்காலின் ரத்தக் கரையோரத்தில் அப்பாவிக் குஞ்சு குளுவான்களின் மீது உங்கள் காங்கிரஸின் தலைமை கொடூரமாகக் கொண்டு துப்பியது என்ன நியாயம் என்று உலகார்ந்த தமிழ் மக்கள் கேட்பார்களா இல்லையா ?

வைகோ மீதான உங்களது அனுமானம் சரிதான் என்றால் அதிகப்படியாக அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். தமிழ் மக்களின் உணர்வை எதிரொலிக்கும் இடத்தில் வைகோவைக் கொண்டு நிறுத்தியது திமுகவின் வரலாற்றுக் கடமை. அதைச் செவ்வனே செய்து விட்டார் ஸ்டாலின் என்பதை உலகத் தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .

அதில், உங்களது காங்கிரஸின் பங்கு இல்லவே இல்லை என்பதை அவசியம் நீங்கள் புரிந்து கொண்டாக வேண்டும். காங்கிரஸின் தயவு இனி என்றும் தமிழர்களுக்குத் தேவைப்படாத ஒன்று என்பதையும் உணர்ந்து கொண்டே ஆக வேண்டும். மரியாதைக்குரிய அழகிரி சார், இறுதியாக உங்களுக்குச் சொல்ல ஒன்று உண்டு.

ஸ்டாலினும் வைகோவும் ஆழங்காற்பட்ட இரட்டைக்குழல் துப்பாக்கி. அது, நமுத்த ரவைகளை ரசிக்காது.

கட்டுரையாளர் குறிப்பு:

ஸ்ரீராம் சர்மா…

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து… வைகோ-அழகிரி காரசார மோதல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/12/68)**

**[சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/11/43)**

**[துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/12/9)**

**[மணிகண்டன் – உடுமலை ராதாகிருஷ்ணன் – வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/12/8)**

**[அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/12/37)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share