ஸ்ரீராம் சர்மா
தமிழ் சினிமாவின் முதல் திரைப்படம் கீசக வதம்!
கீசக வதத்தின் மூலம் அடியெடுத்து வைத்த தமிழ் சினிமா இன்று Me Tooவில் வந்து தொக்கி, சிக்கி நிற்கிறது.
அன்றைய கீசக வதத்தின் கதையும் இன்றைய Me Too பெண்ணியப் போர்க் குரலும் ஒன்றுபோலப் பொருந்தி நிற்பது காலத்தின் கறுப்பு நகைச்சுவை. அந்த அவல ஆச்சரியமே இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது.
**கீசக வதம் கதையைப் பார்ப்போம்!**
பாரதப் பெருங்கதையில் கௌரவர் சூழ்ச்சியினால் பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்யப் புகுந்தார்கள். விராட மன்னனிடம் மாறுவேடத்தில் தஞ்சம் அடைந்தார்கள்.
மூத்தவர் தர்மர் கங்கன் என்னும் பெயரில் தஞ்சம்கொள்ள, பீமன் வல்லாளன் என்னும் பெயரில் விராட அரசவையின் சமையல்காரனாக முடங்குகிறான்.
அர்ஜுனனோ பிருஹன்னளை என்னும் அலியாக அந்தப்புரத்தில் அமைய, தமக்ரிந்தி என்னும் பெயரில் குதிரைக் காப்பாளனாக நகுலனும், சகாதேவன் தந்திரி பாலன் என்னும் பெயரில் மாட்டுத் தொழுவத்திலும் அரச தோரணை ஏதும் இன்றி அடிமை வேலை செய்தபடி அஞ்ஞாத வாசத்தைக் கடத்துகிறார்கள்.
சரி, அவர்களோடு சென்ற திரௌபதை என்னவானாள் ?
சைரந்தரி என்னும் பெயரில் நாடோடி போல விராட தேசத்துத் தெருவில் சுற்றி வந்தவள் விராட தேசத்து ராணி சுதேஷ்னாவின் கண்பட்டு அவளுக்குச் சேடியாளாள்.
காலப்போக்கில் அவள் திரௌபதை என்றும் அவளது உண்மைக் கதையினைக் கேட்டும் நெகிழ்ந்த ராணி சுதேஷ்னா தனது அந்தரங்கத் தோழியாக்கிக்கொண்டாள் !
விராட ராணி சுதேஷ்னாவின் உடன் பிறந்த தம்பிதான் கீசகன்.
கீசகன் சாதாரணப்பட்டவன் அல்லன். தேசத்தின் படைத் தலைவன். மன்னனின் மைத்துனன் என்பதால் செல்வாக்கு மிகுந்தவன். செல்வாக்கின் மிகுதியாக அட்டூழியம் செய்து வருபவன். விராட மன்னனாலும் அடக்க முடியாத அளவுக்குத் தன்முனைப்பு கொண்டவன். மமதையாளன்.
அப்பேர்பட்ட கீசகன், பாண்டவர்களின் அஞ்ஞாத வாசம் முடியும் தருணத்தில் ஒருநாள் தன் அக்காள் விராட ராணியின் அந்தப்புரத்தில் துணிந்து நுழைந்தான். கீசகனின் மரணக்குறி அங்குதான் தோன்றியது.
கீசகனின் காமக் கண்ணில் பேரழகியான திரௌபதை என்னும் சைரந்தரி பட்டே விட்டாள். அவளது சௌந்தரிய தேகத்தைக் கண்டு வெயிலிடைப்பட்ட வெண்ணெயாய் உருகி மயங்கினான் கீசகன்.
ஓர் இரவேனும் சைரந்தரியோடு வாழ்ந்தாக வேண்டும் என்ற சபலம் அவன் உச்சியைப் பிடித்து ஆட்டியது.
தாய்க்கு நிகரான தன் அக்காளிடம் கூசாமல் கேட்டான் கீசகன்…
“இவள் எனக்கு இன்றே வேண்டும்.”
ராணி சுதேஷ்னா பதறியபடி தடுத்தாள்.
“தம்பி, அவள் இங்கே வேலை செய்யத்தான் வந்திருக்கிறாள். வேலை செய்ய வந்தவர்களைப் பெண்டாள நினைப்பது குற்றம். பாவம்…”
எவ்வளவோ எடுத்துச் சொன்னபோதிலும்… “இல்லை, இல்லை அவளை அடைந்தே தீருவேன்…” என்று ஒற்றைக் காலில் நின்றான் சபல வாய்ப்பட்ட கீசகன்.
அதன்பின் அன்றிரவு மெத்தையில் மறைந்திருந்த பீமன் கையால் வல்லடிபட்டு மாய்ந்தான். இதுதான் கீசக வதம் திரைப்படத்தின் கதை.
கீசக வதத்துக்குப் பின் பேசும் சினிமாவாகப் பரிணமித்து வளர்ந்து எழுந்த தமிழ் சினிமா தென்னிந்தியத் திரை உலகத்தின் கொட்டாரமாக விரிந்து நிமிர்ந்து வடஇந்திய சினிமாக்களுக்கே சவால் விட்டது.
படைப்புலகத்தின் உச்சங்களான மாடர்ன் தியேட்டர் சுந்தரம், ஏவி.மெய்யப்ப செட்டியார் போன்ற அசகாய சூரர்கள் சந்திரலேகா, அவ்வையார் போன்ற திரைப்படங்களை எடுத்து வடஇந்திய சினிமா தயாரிப்பாளர்களையே அசரடித்தார்கள்.
அந்த மரியாதையைத் தக்கவைத்துக்கொள்ளக் கடமைப்பட்ட தமிழ் சினிமா இன்று கீசக வதை கதைக்குள்ளேயே வலைபட்டுப் போயிருப்பது பேரவலம்.
வைரமுத்து – சின்மயி இடையிலான இன்றைய அவலங்கள் சமூக தூஷணைக்குத் தூபம் போட்டுக்கொண்டிருப்பது வேதனையை அளிக்கிறது.
“மீ டூ” என்னும் வடிவில் பெண்ணியம் இன்று புதுக்கோலம் கொண்டிருப்பது கலைத் துறையைக் கீழிறக்கிக்கொண்டிருக்கிறது.
இதில், வைரமுத்துவை மட்டும் தூற்றுவதிலோ அல்லது அவர் மட்டுமே இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்பதிலோ நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.
உண்மையில், மொத்த சினிமா இண்டஸ்ட்ரியே இதற்கு விடை கண்டாக வேண்டும். காய்த்த மரம் கல்லடிபடத்தான் செய்யும் என்று தோள் தட்டிக்கொண்டு நகர்ந்துவிடுவது அந்தத் தொழிலை மேம்படுத்திவிடாது.
சினிமா என்பது ஒரு வியாபாரம். எந்த ஒரு வியாபாரத்துக்கும் ஒரு முறையான அமைப்பும் நியாயமும் இருந்தாக வேண்டும். சிஸ்டம் என்று ஒன்று இல்லாது போனால் காலப்போக்கில் அந்தத் தொழில் நசிந்து போய்விடும்.
அந்த நாளில் சினிமாவில் பணம் போடும் முதலாளிக்கு மரியாதை இருந்தது. எந்தத் தொழிலுக்கும் அதுதான் அழகு. காரணம், பணம் முதலீடு செய்பவர் பணத்தை மீட்டெடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார்.
முதலாளியும் என்பவரும் மனிதர்தான், அவருக்கும் கேளிக்கை தேவைதான் என்றாலும் அந்தக் கேளிக்கையை மூன்றாம்பட்சமாகிக்கொள்வார். குறிப்பாக கேளிக்கையைத் தொழிலோடு கலக்க அஞ்சுவார்.
பணத்தை மீட்டெடுப்பது மட்டுமே ஒரே குறியாக இருப்பதால் தானும் முறைப்படி உழைத்து அனைவரையும் அவ்வாறே உழைக்க வைப்பார். அதனால் அந்தத் தொழில் வெற்றிகரமாக எழுந்து நிற்கும்.
மாறாக, முதலீடு செய்யும் முதலாளியை இரண்டாம்பட்சமாக்கி அவரது முதலீட்டால் பொருளும் புகழும் கொள்ளும் ஒருவர் சூழலைத் தன் கையில் எடுத்துக்கொள்ளும் அவலம் நேரிடும் போதுதான் அந்தத் தொழிலும் கெட்டு அதைச் சார்ந்த அனைவரும் கெட்டுப் போகிறார்கள்.
ஊரான் பணத்தில் உலைவைக்கும் ஒருவன் எதைப் பற்றிக் கவலைப்படுவான்? அப்படித்தான் கெட்டுப் போயிருக்கிறது இன்றைய சினிமா!
ஆளாளுக்கு லகான் பூட்டினால் குதிரை சீக்குப்பட்டுத்தான் போகும்.
அதனால்தான் முறையாக முதலீடு செய்யும் கொள்கை உடைய வங்கிகளும் கார்ப்பரேட் இன்வெஸ்டர்களும் சினிமாவை ஒரு தொழிலாகவே அங்கீகரிக்காமல் விலகி நிற்கிறார்கள்.
மக்கள் அலையலையாக தியேட்டர்களுக்குச் செல்கிறார்கள்தான். சினிமா நடிகர், நடிகைகளைக் கண்டால் கூட்டமாகக் கூடி ஆர்ப்பரிக்கிறார்கள்தான். ஆனாலும், அவர்களுக்கு சினிமாத் துறையின் மீது நல்ல அபிப்ராயம் இல்லை.
“அரசியல் ஒரு சாக்கடை” என்பது போல… “சினிமா என்பது தாசி வீடு” என்றுதான் இன்றைய பொது புத்தியில் உறைந்து போயிருக்கிறது. அது உடைபட்டாக வேண்டும்.
எத்தனையோ புத்திசாலிகள் தயாரிப்பாளர்களாகவும் இயக்குநர்களாகவும் கலைஞர்களாகவும் திரைக் கலைக்காக ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காமல் போய்விடக் கூடாது.
இன்றைய நிலையைவிடப் பற்பல மடங்கு மிளிரும் சக்தி தமிழ் சினிமாவுக்கு உண்டு. அப்படி மிளிர வேண்டும் என்றால் மீண்டும் அது முதலாளிகள் வசம் சென்றாக வேண்டும். கூடவே, அரசியல்வாதிகளையும் , குண்டாஸ்களையும் திரைத் தொழிலிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்.
பெண்களை சக கலைஞர்களாகப் படைப்பாளிகளாகப் பார்க்காமல் உடமையாகப் பார்க்கும் துர்க் குணம் அறவே ஒழிந்தாக வேண்டும். ஆயிரம் கனவுகளோடு திறமையை வெளிப்படுத்த வரும் பெண்களை சபலக் கண்கொண்டு பார்க்க அசிங்கப்பட வேண்டும். தன்மானம் உள்ள, தன் மீது உயர்ந்தபட்ச சுயமதிப்பீடு கொண்ட எந்த ஆண்மகனும் பெண்களை போகப் பொருளாக்கக் கூசுவான்.
சினிமா என்பதும் ஒரு தொழில். பிற தொழில்களைப் போல அதைத் திறமையினாலும் உழைப்பாலும் மட்டுமே மெருகேற்ற வேண்டும் என்னும் சிந்தனை சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் இன்றைய குண ஊழலுக்கு வித்து.
நல்ல சினிமா எடுத்து வெற்றி பெற்ற ஏவி.எம். செட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் போன்றவர்கள் எல்லாம் அன்று ஒரு கொள்கையை வைத்திருந்தார்கள்.
உன் அறிவை, திறமையைக் காட்டு. நீயும் பிழை. உன்னை நம்பிக் காசு போடும் நானும் பிழைக்கிறேன் என்று செயல்பட்டார்கள். உன் சபல ஆடம்பரத்துக்கு என் காசைத் தொடாதே என்று கண்டித்துச் சொன்னார்கள்.
ஆண்கள் இருக்கும் இடத்துக்கும், பெண்கள் இருக்கும் இடத்துக்கும் இடையே ஓலைத் தடுப்பு அமைத்து எச்சரிக்கை செய்தார்கள் என்று கவியரசர் கண்ணதாசன் தனது வனவாசம் புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.
இராம அரங்கண்ணல் தயாரிப்பில் கே.பாலசந்தர் இயக்க, நடிப்புலக மார்க்கண்டேயர் சிவகுமார் அவர்களும் லக்ஷ்மி அவர்களும் நடித்த நவகிரகம் திரைப்படத்தில் வி.குமார் இசையில் வாலி எழுதினார்…
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது – அதுவே
போதும் என்று பெண்மை இன்று கேட்டுக்கொண்டது.
இந்த கவனம் முதல் போட்ட தயாரிப்பாளரிடமிருந்துதான் துவங்கியிருக்கக்கூடும். ஆம், ஆபாசம் என்று மக்கள் ஏற்காமல் போய்விட்டால் போட்ட காசு போய்விடுமே என்னும் கவலை அவருக்குத்தானே இருக்க முடியும்.
பொதுவாகப் பணம் முதலீடு செய்யும் முதலாளிகளின் மேல் அன்றைய கலைஞர்களுக்கு மரியாதை இருந்தது. அன்றைய தயாரிப்பாளர்களுக்குக் காசு கொடுக்கும் ரசிகர்கள் மேல் மரியாதை இருந்தது. அதனால்தான் குண ஊழலை சினிமாவைத் தாண்டி வைத்துக்கொண்டார்கள்.
அந்தப் பொறுப்புணர்வு மீண்டும் வர வேண்டும். திறமையும் உழைப்பும் மட்டுமே உயர்வு தரும் என்னும் நிலையினை இந்திய, தமிழ் சினிமா அடைந்தாக வேண்டும்.
“அறிவுசார் தொழில்” என்னும் நிலையினை இந்தியத் தமிழ் சினிமா எட்டுமானால், வங்கிகள், கார்ப்பரேட்டுகள் சினிமா தொழிலில் இன்வெஸ்ட் செய்ய முன் வரும். அப்போது, இந்தியத் தமிழ் சினிமா மேலும் உயரும்.
சினிமாவை மட்டுமே நம்பி இங்கே லட்சக்கணக்கான மனிதர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். சினிமாவை ஓர் அத்தியாவசியப் பொழுதுபோக்காகக் கோடிக்கணக்கான மனிதர்கள் எண்ணுகிறார்கள்.
அந்த சினிமாவைக் காப்பாற்றியே ஆக வேண்டும். சினிமாவைக் காப்பாற்றியாக வேண்டும் என்றால் கீசகர்கள் தங்கள் சபலத்தைக் கைவிட்டாக வேண்டும்.
அப்படி முடியாதென்றால் அந்தக் கீசகர்களை விலகி இருக்கச் சொல்ல முதலாளிகளால் மட்டுமே முடியும். முதல் போட்டவருக்குத்தானே முட்டை போடும் வலி தெரியும்!
ஒழுக்கமில்லாத எந்தத் தொழிலும் சீழ்பட்டே போகும். திறமையோடு ஒழுக்கமும் சேருமானால் இந்திய, தமிழ் சினிமா இன்னுமின்னும் உயரும்.
சரி, ரசிகப் பெருமக்களுக்கு இதில் பங்கில்லையா என்றால் நிச்சயம் இருக்கிறது. நல்ல திரைப்படம் எது என்பதை கண்டு ஆராதிப்பதிலும், நல்ல திரைப்படத்தைக் கெடுக்கும் கீசகர்களை ஆராதிக்காமல் இருப்பதிலும் அது அடங்கி இருக்கிறது.
அதற்கு இந்த ME TOO இயக்கம் ஓர் ஆரம்பமாக இருக்குமென்றால் மகிழ்ச்சியே!
(**கட்டுரையாளர் குறிப்பு:** ஸ்ரீராம் சர்மா எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதனைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன் ஸ்ரீராம் சர்மா.)�,”