பாரதியின் கற்பனா விலாஸம்! – ஸ்ரீராம் சர்மா

public

ஸ்ரீராம் சர்மா

*(எளிய அறிமுகம்)*

தமிழை, அதன் ஆழமறிந்து அசத்தியதில் கம்பனுக்கு இணையாக பாரதியைக் கொள்ளலாம்.

இந்திய விடுதலைக்கு முன்பான காலகட்டத்தில் எந்த விதமான பொருளாதாரப் பின்னணியும் இல்லாமல் ஆங்கிலேயரை ஆக்ரோஷத்தோடு எதிர்த்த வீரக் கவிஞன் பாரதி.

குடும்ப வாழ்க்கையும், கொடுமதியாளர்களின் அரசியலும் அந்த எளிய கவிஞனின் அன்றாடத்தைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த வேளையிலும்,

தமிழை, அதன் சுவையினை, அதன்பாற்பட்ட கற்பனையினை ஓயாமல் ஊடாடிக் கொடுத்த பாரதி என்னும் அந்த மகா மனுஷனை, எழுத்தைத் தொடும் ஒவ்வொரு நொடியும் மூச்சு வாங்க ஆராதித்துக் கொண்டிருக்கிறேன்.

பாரதியாரின் தமிழாண்மையை இன்றைய தலைமுறையினருக்குஎப்படியாவது எடுத்துச் சொல்லிவிட வேண்டும் என்னும் எண்ணம் எனக்குண்டு. முழுமையாக எடுத்துச் சொல்லும் தகவு உண்டா? அறியேன். ஆனால், ஆசை உண்டே. ஆசைதான் வெட்கமறியாதே? தொடர்கிறேன்.

பாரதியாரின் ஒவ்வொரு படைப்பும் ஓராயிரம் பெறும். இந்தக் கட்டுரையில் பாஞ்சாலி சபதத்தை மட்டும் பார்ப்போம்.

துணிந்து சொல்கிறேன். பாஞ்சாலி சபதம் என்னும் காவியம் மட்டும் ஹிந்தி மொழியில் அல்லது வங்காள மொழியில் எழுதப்பட்டிருந்தால் அது தேசிய காவியமாகப் போற்றப்பட்டிருக்கும்.

தமிழில் எழுதியதால் தடமற்றுப் போனது. அது, தமிழுக்கு நட்டம். தமிழர்களுக்கு நட்டம் என்பதைவிட இலக்கிய ரசனாவாதிகளின் உலகுக்கே நட்டம்.

இந்தக் கட்டுரையில், பாரதியின் காவியத்தை என் மனம் உள்வாங்கிக்கொண்ட விதத்திலேயே விரித்துரைத்திருக்கிறேன். அதன் வரிகளை ஆங்கங்கே மேற்கோள் காட்டியிருக்கிறேன். அவ்வளவே.

மின்னம்பலத்தின் செழித்த வாசகர்கள், பாரதியின் வரிகளை முனைந்து முழுமையாக படிக்கப் புகுந்தால் இந்தக்கட்டுரையை எளிதில் விஞ்சலாம். பாரதியின் கற்பனா விலாஸத்தை, அவரது கரை கடந்த ஞானத் தமிழை இன்னும்கூட அணுகி விதிர்க்கலாம்.

கட்டுரைக்குள் புகுவோம்.

**பாஞ்சாலி சபதம்**

இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஈடு இணையற்ற காவியமான பாஞ்சாலி சபதத்தில்…

ப்ரம்மஸ்துதி – சரஸ்வதி வணக்கம் முடித்து, அஸ்தினாபுரத்துக்குள் அட்டகாசமாகப் புகும் பாரதியின் விஸ்தாரக் கற்பனையைச் சொல்லி மயங்க ஒரு கர்ப்பம் போதாது.

இதோ, அத்தினாபுரத்தின் புத்தியை இரண்டே வரிகளில் காட்டி விடுகிறார்.

**மெய்த்தவர் பலருண்டாம் – வெறும்**

**வேடங்கள் பூண்டவர் பலருண்டாம்**

இப்படி இடித்துரைத்தவர் யமுனா நதி தீரத்தில் அமைந்த அந்த மணி நகரின் பெருமைகளையும் விட்டுக் கொடுக்காமல்அடுக்குகிறார்.

சிவனுடை நண்பன், வட திசைக்கு அதிபதி எனப்படும் குபேரனின் பெருஞ்செல்வம் அத்தனையும்அத்தினாபுரத்தின் கஜானாவுக்குக் கொஞ்சமும் குறைவற்றது என்று ஏற்றிப் போற்றுகிறார்.மேலும்,

**தவனுடை வணிகர்களும் – பல**

**தரனுடைத் தொழில் செயும் மாசனமும்**

**எவனுடை பயமுமில்லா – இனிது**

**இருந்திடும் தன்மையது எழில் நகரே**

பாசனம் செய்யும் விவசாயிகள் முதற்கொண்டு அத்துணை வணிகர்களும் கள்ளர் பயமின்றி நிம்மதியாகத் தொழில் செய்து வாழ்ந்த வந்த நகர்தான் அந்த அத்தினாபுரம் என்று சான்றளிப்பவர் அதனை ஆண்ட மன்னவன் பெருமையையும் எடுத்துச் சொல்கிறார்.

**துரியோதனப்பெயரான்–நெஞ்சத்**

**துணிவுடையான்; முடி பணிவறியான்**

**கரியோராயிரத் தின்–வலி**

**காட்டிடுவான்**

ஆயிரம் யானைகளின் வலிமையைத் தன் தடந்தோள் வீரத்தில் காட்ட வல்லவன் துரியோதனன் என்கிறார்.

உயர்ந்த மதி நலம் படைத்த பீஷ்மரையும், தர்மத்தை உயிராகக் கொண்ட விதுரரையும், துரோணர் – கிருபர் ஆகிய மறை சார்ந்த மறவர்கள் இருவரையும் தன் அரசவையில் கொண்டவன் அந்த துரியோதனன் என்பவர் கூடவே ஒரு “தொக்கையும்” வைக்கிறார்.

என்ன அது ?

**புலை நடை சகுனியும் புறமிருந்தான்.**

அந்த எட்டு வரிக் கவிதையில் நான்காவது வரியாக இதனைச் செருகிச் செல்கிறார் பாரதியார். இது, காவியத்துக்கே உண்டான உத்தி.

ஒரு மகா அயோக்கியனைப் போகிற போக்கில் அறிமுகப்படுத்தி, பிறகு அவன் குணத்தை விரிக்கும்போது அவனது கொடுமையின் உச்சக்கட்டத்தை வாசகர்களுக்கு உணரவைக்கும் உத்தி.

இந்த உத்தியை நெடுகிலும் கையாள்கிறார் பாரதியார்.

சகுனியின் அருகில் வாழும் துரியனின் குணம் எப்படியிருக்கும்? பொறாமை சுமந்ததாகத்தானே இருக்கும்.

**காண்டகு வில்லுடை யோன்–அந்தக்**

**காளை யருச்சுனன் கண்களி லும்**

**மாண்டகு திறல்வீமன்–தட**

**மார்பிலும் எனதிகழ் வரைந்துளதே!**

காண்டீபம் என்னும் வில்லைக் கையில் பிடித்திருப்பதனால் அந்த அர்ச்சுனன் கண்களில் தெரியும் திமிர் என்னைக் கேலி செய்கிறதே. அகன்ற பாறையைப் போல் திகழும் அந்த வீமனின் மார்பில் அது ஆழ எழுதி வைக்கப்பட்டிருக்கிறதே!

வேந்தர்களும் குறு நில மன்னர்களும் பாண்டவர்களது அவையில் சென்று சென்று சென்று குவிகிறார்களே. ஆனிப் பொன் கலசங்களையும் மகுடங்களையும் மாணிக்க மரகதக் குவியல்களையும் மேலும், என்னவென்றே அறியாத புது வகை ஜொலிப்புகளையும் கொண்டுபோய்க் கொட்டிக் கொட்டிப் பணிகிறார்களே !

**பாண்டவர் முடியுயர்த்தே–இந்தப்**

**பார்மிசை யுலவிடு நாள்வரை; நான்**

**ஆண்டதொர் அரசா மோ?–எனது**

**ஆண்மையும் புகழுமொர் பொருளாமோ?**

ராஜசூய யாகம் செய்து முடித்துவிட்ட தருமனை எண்ணி எண்ணி துரியோதனன் நசும்புகிறான்.

குறித்துக்கொள்ளுங்கள்… பாரதியின் சொந்த ஈகோவுக்கு துரியன் பால் மாச்சரியம் இருக்க வாய்ப்பேயில்லை. பாரதியின் கவி உள்ளத்துக்குள் புகுந்து கொண்ட துரியோதனன்தான் நசும்புகிறான்.

தருமனை எண்ணிக் காறுகிறான். தாழ்வு மனப்பான்மையோடு தூற்றுகிறான் துரியோதனன்.

**எப்படிப் பொறுத்திடுவேன்?–இவன்**

**இளமையின் வளமைகள் அறியேனோ?**

தருமனின் தோள் வலி எனக்கு ஈடானதா? அவன் என்ன எனக்கு நிகரானவனா ? தம்பிகளின் சாகஸங்களை வைத்துக்கொண்டு அவன் செய்யும் தகிடுதத்தம் எனக்குத் தெரியாதா?… என்று சாம்புகிறான்.

**ஏலங் கருப்பூரம்–நறும்**

**இலவங்கம் பாக்குநற் சாதி வகை;**

**கோலம் பெறக் கொணர்ந்தே–அவர்**

**கொட்டி நின்றார்; கரம் கட்டி நின்றார்;**

**மேலுந் தலத்திலுளார்–பல**

**வேந்தர்அப்பாண்டவர் விழைந்திட வே**

**ஓலந்தரக்கொணர்ந்தே–வைத்த**

**தொவ்வொன்றும் என் மனத் துறைந்ததுவே!**

ச்சீச்சீ… அத்தினாபுரத்து வேந்தனாக இருந்தும், எத்தனை உன்னிப்பாக எதையெதையெல்லாம் கவனித்து ஒரு அபலை குணத்தோடு பொறுமுகிறான் அந்த துரியோதனன் என்னும் எண்ணத்தை நமக்கு ஏற்படுத்திவிடுகிறார் பாரதியார்.

எதுகையும் மோனையும் குழைந்தாட, அசந்தர்ப்ப, அநாவசியச் சொற்கள் ஏதும் இல்லாமல் ஒரு பசுவின் மடிபோல் ஆனந்தமாகக் கவிதை சுரப்பது என்பது சாதாரண விஷயமில்லை.

அதனைச் சாதிக்க வேண்டுமென்றால் ஈகோ இல்லாத சுத்தமான மனம் வேண்டும். அது பாரதியாருக்கு வாய்த்திருந்தது. அதுதான் அவரது தமிழாண்மை.

துரியன் மொழியாக பாரதியார் சொல்கிறார்…

**தென்றிசைச் சாவகமாம்–பெருந்**

**தீவு தொட்டேவட திசையத னில்**

**நின்றிடும் புகழ்ச்சீ னம் – வரை**

**தேர்ந்திடும் பலப்பல நாட்டினரும்**

**வென்றிகொள் தருமனுக் கே – அவன்,**

**வேள்வியில் பெரும்புகழ் விளையும்வண்ணம்**

**நன்றுபல்பொருள்கொணர்ந்தார் – புவி**

**நாயகன் யுதிட்டிரன் எனவுணர்ந்தார்.**

சீனா என்னும் நாடு இருப்பது தமிழகத்திலிருந்து ஏறத்தாழ மூவாயிரத்து ஐநூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால். சாவகம் என்னும் அந்தத் தீவோ ஏறத்தாழ ஒன்பதாயிரத்து ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் இந்தோனேஷியாவில் அமைந்திருப்பது.

எந்த வசதியுமற்ற அடிமை இந்தியாவில், எட்டயபுரத்திலும் – திருவல்லிக்கேணியிலும் வறுமையில் புரண்டுகொண்டிருந்த பாரதியாரின் அகண்ட புவியியல் ஞானமும் கல்வி ஞானமும் ஆச்சரியப்பட வைக்கின்றன.

பாரதியாரின் மனக் கண்ணில் விரிந்த அந்தக் காட்சிகளைக் கண்டு நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. நமக்கும் அதுபோல் வாய்த்துவிடாதா என்று ஏங்காமல் உறங்க முடியவில்லை.

மாபாரதத்தின் ஒவ்வொரு கேரக்டரும், பாரதியாரின் மனதுக்குள் வலிந்து குடியேறி, வாழ்ந்து உரைத்த காவியமாகவே பாஞ்சாலி சபதம் விரிகின்றது

அப்படிக் குடியேறிய துரியோதனன் தன் மாமன் சகுனியை சாடிக் கேட்கிறான்.

“ ஹா…ஹா…நீயெல்லாம் எனக்கொரு மாமனா? நீ கற்ற கற்பனைக் காவியங்களில் அந்த வழவழ தருமனைப் போல், தன் தம்பிகள் தயவில், ஆழ்கடலையும் நாட்டையும் ஆட்டை போட்டவன் உண்டா சொல்?

மாமனே…மாமனே… அந்தப் பேடித் தருமன் யாகம் ஒன்று வளர்த்தானே. அப்போது அவன் என்ன செய்திருக்க வேண்டும் சொல் மாமனே?

அவனது பெரியப்பாவின் பிள்ளை என்ற வகையில் மூத்தவனான என்னை அழைத்தல்லவா முன்னிறுத்தி இருக்க வேண்டும் ?

சந்திர குலத்தில் பிறந்த எனக்கு எந்த வகையில் மேம்பட்டவனென்று அந்தக் கண்ணனை அழைத்து முறை செய்தான் மாமனே? ஐயோ, அந்த ஏந்திழையாள் பாஞ்சாலி எனைப் பார்த்துச் சிரித்தாளே மாமனே. அதை எண்ணக்கூட மாட்டாயா மாமனே? “

இப்படி மாய்ந்து மாய்ந்து மருகும் துரியோதனனை பாரதியின் வரிகளில் படித்தால் ஆயாசம்தான் மிஞ்சும்.

இறுதியில், சூதில் துரியோதனன் வென்ற விதம் கேட்ட “ஒன்பதித் தொன்மர்” பாரதியின் உள்ளத்துக்குள் புகுந்துகொண்டு கெக்கலி கொட்டத் துவங்குகிறார்கள்.

**திக்குக் குலுங்கிடவே – எழுந்தாடுமாம்**

**தீயவர் கூட்டமெல்லாம்**

**தக்குத் தக்கென்றேஅவர் – குதித்தாடுவார்**

**தம்மிரு தோள் கொட்டுவார்.**

**ஒக்குந் தருமனுக்கே – இஃதென்பார் “ஓ,*

**ஓ” வென் றிரைந்திடுவார்.**

**கக்கக் கென்றே நகைப்பார் – “துரியோதனா**

**கட்டிக் கொள் எம்மை” என்பார்.**

கொல்கதாப் பாதையில், பர்ணபாஸை விடுதலை செய்து கல்வாரி மலையில் தருமத்தைச் சிலுவையிலேற்றியபோது ஏரோது கூட்டம் செய்த ஆர்ப்பரிப்பை அப்படியே பிரதிபலிக்கிறது துரியோதனச் சபை.

இதன் பிறகு பாரதியாரின் மனதுக்குள் புகுந்துகொண்ட சகுனி பேச ஆரம்பிக்கிறான். அவனை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

இதற்கு மேல் விரித்துரைப்பதற்கில்லை. ருசி காட்டுவது மட்டுமே என் வேலை. தேடி அடைந்து மூழ்கித் திளைத்துக்கொள்வதில் இருக்கிறது அவரவர் ரசனை.

ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.

இன்றைய இளைய தலைமுறையினர், பாரதியின் பாஞ்சாலி சபதக் காவியத்தை அவசியம் படித்தாக வேண்டும். தமிழுக்காக, ரசனைக்காக மட்டுமல்லாமல் இந்த நாட்டுக்காகவும் படித்தாக வேண்டும்.

ஆம், துரியனின் பேராசையைத் தன் மட்டப் புத்தியில் ஏற்றிக்கொண்ட கண்ணில்லலா திருதராஷ்டிரன், தர்மத்தை உயிராகக் கொண்ட விதுரனை அழைத்து, “போ, போய் அந்த பாண்டவர்களை சூது போருக்கு அழைத்து வா…” என உத்தரவிட்டபோது இப்படிக் கதறினான் விதுரன்…

**போச்சுது போச்சுது பாரத நாடு**

**போச்சுது நல்லறம் ! போச்சுது வேதம்!**

**ஆச்சரியக் கொடுங்கோலங்கள் காண்போம்**

**ஐய, இதனை தடுத்தல் அரிதோ !?**

மக்கள் நலம் பேணாத அந்தக அரசாட்சி நடக்குமென்றால் அதைத் தடுத்தாக வேண்டும். அதற்கு இளைஞர்கள் விழித்தாக வேண்டும்.

அதற்கு, பாரதியை முழுமையாகப் படித்தாக வேண்டும்.

*

(கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத்தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலுநாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. இவரைத் தொடர்புகொள்ள: ovmtheatres@gmail.com)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *