ஸ்ரீராம் சர்மா
பதினாறாம் நூற்றாண்டின் கேரள மண்ணில் பிறந்த அவரது இயற்பெயர் இன்னதென்று யாராலும் அறிய முடியவில்லை. பெற்ற தாய் – தந்தை யார் என்று அறிந்தார் இல்லை. ஆயினும், இன்றும் நிலைத்து நிற்கிறார். காலம் கடந்தும் நிற்பார்.
இப்படிப்பட்ட “லட்சணங்கள்” கடவுளுக்கே உரியது என்பதால் அவரை, “அவதரித்தார்” என்று அறிமுகப்படுத்துவதுதான் அழகு.
**“எழுத்தச்சன்” **
“அச்சன்” என்றால் மலையாளத்தில் தந்தை என்று பொருள். “எழுத்தச்சன்” என்றால் “மலையாள எழுத்துக்கு இவரே தந்தை” என்பது அர்த்தமாகும்.
ஆனால், அந்த எழுத்தை கற்றுக் கொள்ள அவர்பட்ட பாடு சொல்லி மாளாதது.
“எழுத்தச்சன் புரஸ்காரம் விருது” என்பது இன்று மலையாள எழுத்துலகில் மிக உயரிய விருதாக கொண்டு கொண்டாடப் படுகின்றது என்றாலும் அவரது ஆரம்ப கால வாழ்க்கை அவ்வளவு ரம்மியமானதாக இருந்திருக்கவில்லை.
எழுத்தச்சன் ஓர் எளிய குடும்பத்தில் இரண்டாவது மகனாக பிறந்து, இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தார். அதன் பின் தன் அண்ணன், அண்ணியாரின் அன்பான அரவணைப்பில் வாழ்ந்தார்,
அருகிலிருந்த வேத பாட சாலையில் அதிகாலையில் அந்தண சிறுவர்கள் கூடியெழுப்பும் வேத கோஷங்கள் அவரை சுண்டி இழுத்தபடியே இருக்க, அங்கந்த வேலியோரம் சென்று நின்றபடி நாள் தவறாமல் கேட்டபடியே இருக்கலானார்.
“உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை..?” என அங்கிருந்த குருமார்களால் விரட்டியடிக்கப்பட, தன் அண்ணனிடம் வந்து ஆற்றாமையோடு முறையிட்டிருக்கிறார்.
செய்வதறியாத அவரது அண்ணனோ, “ தம்பி, நீ என்னோடு வந்து வியாபாரம் கற்றுக் கொள். அதுதான் நமக்கு சரி…“ என்று அறிவுறுத்த,
“கல்வி கற்க விரும்பும் என்னை, ஏன் எல்லோரும் ஒதுக்கி வைக்கின்றார்கள்…” என்று மனம் வெதும்பி வாரங்காலமாக சோறு தண்ணி இறங்காமல் அழுது கொண்டேயிருந்தார்.
ஈன்ற தாயாருக்கும் மேலாக அவர் மேல் பாசம் பொழிந்து வளர்த்து வந்த அவரது அண்ணியார் அவரது புலம்பலைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் தன் கணவரிடத்தில் அவரது நிலையைப் பற்றி ஓயாமல் எடுத்துச் சொல்ல,
பக்கத்து ஊருக்கு வியாபார நிமித்தமாக சென்ற அவரது அண்ணன் பழைய புத்தகக் கடை ஒன்றில் “வேத விளக்க நூல்” ஒன்றை சல்லிசாக வாங்கி வந்து தம்பிக்கு பரிசளித்து தேற்றியிருக்கின்றார்.
அதன் பிறகு, ஊணுறக்கமில்லாமல் அந்த நூலை ஒரே மூச்சாக படித்துக் கரைத்துக் குடித்தார்.
தன் அண்ணன் – அண்ணியாரிடம் ஆசி பெற்று வீட்டை விட்டு அகன்றார். நாடெல்லாம் சுற்றி அலைந்தார். தமிழ்நாட்டுக்கும் வந்திருக்கின்றார். தமிழ் மொழியையும் கற்றிருக்கின்றார்.
அதன்பின், எங்கள் “எழுத்தச்சன்” இவரே என்று சாதி பேதமற்று எல்லோரும் ஒன்றிணைந்து கூடிக் கொண்டாடி ஏற்றிப் போற்றியதெல்லாம் வியக்க வைக்கும் வைக்கும் வரலாறு.
“எழுத்தென்றால் இதுவல்லாவோ எழுத்து” என்று மேலோர் எனப்பட்டோரெல்லாம் விழிவிரித்து நிற்கும் படியாக “அத்யந்த ராமாயணம்” என்னும் நூலைப் படைத்தார். மகாபாரதத்தை தன் வழியே மொழி பெயர்த்தார்.
கிளிப்பாட்டுப் ப்ரஸ்தானம், தேவி மகாத்மியம், கணபதிஸ்தவம், கேரள நாடகம், கேரளோபதி என பற்பல நூல்களைப் படைத்தார். அவரது விளக்க நூல்களைக் கண்ட அன்றைய மொழியாளுனர் அனைவரும், “காணாத எழுத்து இது” என மூச்சடைத்துப் போனார்கள்.
அந்த நாளில் நிகழ்ந்த “வேத சதஸ்” களில் எல்லாம் எழுத்தச்சனின் விளக்கங்கள் ஈடு இணையற்ற குறிப்பீடுகளாக ஜொலித்து நின்றிருக்கின்றன.
இராமாயண, மகாபாபாரத வாக்கு வாதங்களில் ஈடுபடுவோர் “இதனை எழுத்தச்சனே மேற்கோள் காட்டி இருக்கின்றார். பிறகென்ன…?” என்று எடுத்துச் சொல்லி நிறுவும் அளவுக்கு அவரது புலமை ஒளி வீசியிருக்கின்றது.
இறுதியாக அவர் வசித்த இடம் “துஞ்சன் பறம்பு”.
**எழுத்தச்சனின் மொழி**
இன்றும் கூட, ஒவ்வொரு ஆண்டும் “விஜய தசமி” அன்று துஞ்சன் பறம்பில் சாதி வேறுபாடில்லாமல் அனைவரும் ஒன்று கூடுகின்றார்கள். 51 எழுத்துக்களில் “எழுத்தச்சன்” அமைத்த மொழி வழியில் தங்கள் குழந்தைகளுக்கு “ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ“ என்னும் ஆரம்பப் பாடத்தை சொல்லிக் கொடுக்கச் செய்கின்றார்கள். கல்வியில் செழிக்கிறார்கள்.
மனித வாழ்வு அபிலாஷை மிக்கது. மனித அபிலாஷைக்கு மொழி அவசியம். மொழி தழைக்க வேண்டும் என்றால் எழுத்து அவசியம். எனில், எழுத்தச்சன் என்றும் இருப்பார்.
அவரது பிறப்பின் மூலமும் இயற்பெயரும் இன்னமும் அறிய முடியவில்லைதான். பிறப்பின் மூலத்தை அறிய முடியா விட்டால்தான் என்ன ? பிறப்பால் வரும் பெயர் புகழுக்கு ஆகுமா ? பிறந்தும் பயனில்லாதவன் மேல் இடுகாட்டுத் தீ இசைந்தாடி எழுமா ?
சின்னஞ்சிறு வயதில் எனது தந்தையாரால் கற்பிக்கப்பட்டு மனதில் ஆழ ஊன்றிப் போன நறுந்தொகைப் பாடல் ஒன்று நினைவிலாடுகின்றது.
நாற்பாற் குலத்தின் மேற்பாலொருவன்
கற்றிலனாயிற் கீழிருப்பவனே.
**இதன் அரும்பொருள் :**
அந்தண குலம், அரச குலம், வணிக குலம், வேளாண்மைக் குலம் என்னும் இந்த நான்கில் மேல் குலத்தில் பிறந்து விட்டாலும் கூட, கல்வி – கேள்வி இல்லாதவனாக ஒருவன் இருப்பானேயானால் அவன் மேற்சொன்ன நான்கு குலத்துக்கும் கீழானவனாகவே கருதப்படுவான்.
எழுத்தறியாத ஒருவனை மக்கள் வணங்கினாலும் அவனைத் தாங்கும் இந்த பூமி சலித்துக் கொள்ளும். தூற்றித் தூர எறிந்து விடும் என்பதுதான் அதன் உள்ளர்த்தம்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றான் திருவள்ளுவப் பேராசான். “கேடில் விழுச்செல்வம் கல்வியே” என்றான்.
பொறிவாய்ப் பட்டழியும் இந்த பூமிதன்னில் கல்வியே உயர்ந்தது என்றால், “எழுத்தச்சன்” என்பான் மிக, மிக உயர்ந்த குலத்தான் ஆவான்.
எழுத்தச்சனின் ஆச்சரிய வரலாறு இவ்வாறு இருக்க,
“மனிதனுக்கு கல்வி – கேள்வி மட்டும் போதாது, சமூகப் பொறுப்பாற்றலும் வேண்டும்…” என்றார் அதே கேரள மண்ணில் தோன்றிய சமூகப் பெரியார் ஸ்ரீ நாராயண குரு.
**யார் இந்த ஸ்ரீ நாராயண குரு ?**
28. 8. 1885 ல், செம்பழுந்தி என்னும் கேரள கிராமத்தில், ஈழவா எனப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உதித்தவர் ஸ்ரீ நாராயண குரு. இவரைப் பெற்றோர் மாடன் ஆசான் – குட்டி அம்மாள்.
இளம் வயதிலேயே தாயை இழந்தவர், இராமாயண மகாபாரத கதைகளை கிராமிய மொழியில் சொல்லி வந்த தன் தந்தையாரை பின்பற்றலானார். ஆயுர்வேத மருத்துவரான இவரது மாமா கிருஷ்ணன் என்பவரிடத்தில் சமஸ்கிருத மொழியைக் கற்றுக் கொண்டார்.
அமரகோசம் எனப்படும் நிகண்டையும், சித்தரூபம், பால புரோபதனம் போன்ற நூல்களையும் கற்றுத் தேர்ந்தார்.
அதன் பின் நாடெங்கும் சுற்றி அலைந்து ஆன்மீகத்திலும் – சமூகப் புரட்சியிலும் அவர் ஆற்றிய பணி மகத்தானது.
நம்பூதிரிகளைத் தவிர வேறு யாரும் கோயில்களுக்கு உள்ளே நுழையக் கூட முடியாத அந்த கெடுபிடியான காலத்தில் பற்பல கோயில்களைக் கட்டி அனைத்து சாதியினரையும் “ஆலயப் பிரவேசம்” செய்ய வைத்தார்.
அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில், இந்தியராகிய நாம் ஆங்கிலேயரால் பிரித்தாளப்படுகிறோம் என்றுக் கருதியவர் “சாதியால் பிரிவதுதான் நமக்குக் கேடு” என்று எடுத்துச் சொல்லி “அருவிப்புறம் சிவன்” கோயிலை நிர்மாணித்து, அனைவரையும் அங்கே வழிபடச் செய்தார்.
தன் கருத்திலும், வயதிலும் மூத்தவரான மகாகவி சுப்பரமணிய பாரதியாரை அந்தக் கோயிலுக்கு அழைக்க, பாரதியாரும் பெரும் கொண்டாட்ட மனநிலையில் அங்கே சென்று ஈசனை வழிபட்டிருக்கிறார். பிற்காலத்தில் அந்தக் கோயிலில் சிறப்பைக் குறித்தும், ஸ்ரீ நாராயண குருவின் சமூகத் தொண்டைக் குறித்தும் தன் கைப்பட எழுதியும் வைத்திருக்கிறார் பாரதியார்.
கேரளா மட்டுமல்லாமல் மங்களூரில், தமிழகத்தின் நாகர் கோயிலில், இலங்கையில் என பற்பல இடங்களிலும் சாதி பேதமற்ற கோயில்களை அமைத்தார் ஸ்ரீ நாராயண குரு..
**மலையாளம் பேசிய வள்ளுவர்**
ஆகச் சிறந்த கண காரியமாக பொதுமறையாம் திருக்குறளை மலையாளத்தில் மொழி பெயர்த்தார் ஸ்ரீ நாராயண குரு. ஆம், 1330 குறட்பாக்களுக்கும் மலையாள மொழியில் தெள்ளிய உரையை அமைத்துத் தந்தவர் ஸ்ரீ நாராயண குரு.
இது தவிர, ஜீவகாருண்ய பஞ்சகம், சிஜந்த சிந்தகம் உள்ளிட்ட 13 மலையாள படைப்புகளோடு, வேதாந்த சூத்திரம், பத்ரகாளி ஆஸ்தகம் உள்ளிட்ட 16 சமஸ்கிருத படைப்புகளோடு கூட தேவாரப் பதிகங்களையும் மலையாளத்தில் மொழி பெயர்த்து இருக்கின்றார்.
“ஈழவா” எனப்படும் தாழ்ந்த குலத்தில் உதித்தவர் என்றாலும் தன் கல்வியால் , அதன் பாற்பட்ட தெளிந்த ஞானத்தால் இந்த சமூகத்துக்கு மாபெரும் கொடையாக உயர்ந்து நின்றார் ஸ்ரீ நாராயண குரு.
இவரது கீர்த்தி உலகளாவியது. ஐரோப்பிய நாடுகளில் இவரை “இரண்டாம் புத்தர்” என்று ஏற்றிப் போற்றி வழிபடுகிறார்கள்.
இவரது பிறந்த நாள் – மறைந்த நாள் இரண்டையும் அரசாங்க விடுமுறை தினமாக கேரள அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது.
நறுந்தொகையின் அடுத்தொரு பாடல் அறிவிருத்துகிறது…
எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியிற் கற்றோரை மேல்வருக என்பர்.
ஒருவர், எந்த குடியை சார்ந்தவர் என்றாலும் அவர் கற்றவராக – கற்பிப்போராக இருந்தால் இந்த சமூகம் அவரை நன்றியோடு விரைந்தேற்றுக் கொள்ளும் என்பதே அதன் பொருள்.
தமிழகத்தில், சென்னை வேப்பேரியில் ஸ்ரீ நாராயண குருவுக்கு மாபெரும் கோயில் ஒன்று அமைக்கப் பெற்று “ஸ்ரீ நாராயண மந்திரம்” என்று அழைக்கப்படுகின்றது.
அதில் அவரால் ஓங்கி உரைக்கப்பட்ட உயரியதோர் பிரகடனம் ஒன்று ஆழப் பொதிக்கப்பட்டிருக்கின்றது
**“ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்”.**
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கே சாதி பேதமில்லாமல் கூடுகின்றார்கள். “அன்பின் வழியது உயிர் நிலை” என்னும் குறள் தத்துவத்தை கொண்டாடுகின்றார்கள்.
“ஸ்ரீ நாராயண மந்திரம்” என்னும் அந்தக் கோயிலுக்குள் செல்லும் போதெல்லாம் எனது மனம் ஆழ்ந்த அமைதிக்கு சென்று நெகிழ்ந்து கொண்டாடுகின்றது.
அந்தப் புனித கோயிலில் வாரம் இருமுறை வட சென்னைப் பெண் குழந்தைகளுக்கு பரதக் கலையை பயிற்றுவித்து வருகிறார் எனது மனைவியார் திருமதி. மணிமேகலை சர்மா.
நாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வேப்பேரி ஏறத்தாழ பதினைந்து கிலோமீட்டர் தூரம். சென்னைப் போக்குவரத்தில் காரோட்டிக் கொண்டு போவது கடினம். ஆனாலும், சலிக்காமல் சென்று பல்லாண்டுக் காலமாக இந்தப் பணியை செய்து வருகிறார். தென்சென்னை மக்கள் மட்டுமே கொண்டாடி வந்த பரதக் கலையை வட சென்னை மக்களுக்கும் கொண்டு சேர்த்து வருகிறார்.
அங்கே பரதம் பயில வரும் குழந்தைகளிடம் சாதி மதம் நிறம் மொழி என எந்த பேதங்களும் இல்லை. பரதக் கல்வி என்பது எல்லோருக்குமானது என்று தீர்க்கமாக சொல்லி வகுப்பெடுத்து வருகிறார். ஸ்ரீ நாராயண குருவின் வழி நிற்கிறார் மணிமேகலை சர்மா.
**பாதங்களின் பிரகடனம்**
அவரது அரவணைப்பில் அன்பே உருவாக அங்கே கூடும் குழந்தைகள் பரதக் கலை பயிலும் போது தங்கள் பாதங்களை தரையில் ஓங்கி, ஓங்கித் தட்டுகிறார்கள். அந்த தட்டலில், இந்த பூமி எங்களுக்கும் உரியது என்னும் பிரகடனம் ஓங்கித் தெறிக்கின்றது.
இதுகாறும், ஆயிரக்கணக்கான மாணவிகள் அங்கே பரதக் கலை பயின்று சென்றிருக்கிறார்கள். பரதக் கலையோடு ஸ்ரீ நாராயண குருவின் சீரிய கொள்கைகளையும் உள்வாங்கி உயர்த்திப் பிடித்து வாழ்கிறார்கள்.
**“சதயோத்ஸவ்”**
ஒவ்வொரு மாதமும் ஸ்ரீ நாராயண குரு அவர்கள் அவதரித்த “சதய நட்சத்திர” நாளில் “சதயோத்ஸவ்” என்னும் பெயரில் அங்கே பரத நாட்டிய நிகழ்வுகளை அரங்கேற்றுகிறார் மணிமேகலை சர்மா. அதில், பிற பள்ளிகளில் பயிலும் மாணவிகளையும் பங்கேற்க செய்கிறார். அனைவரும் கூடி தாங்கள் கற்ற கல்வி வழியே ஸ்ரீ நாராயண குருவுக்கு மாதா மாதம் பரதாஞ்சலி செய்து வருகிறார்கள்.
ஸ்ரீ நாராயண மந்திரத்தின் நிர்வாகிகள் அனைவரையும் அன்போடு வரவேற்று உரிய மரியாதை செய்து வழியனுப்பி வைக்கிறார்கள். தங்கள் அன்பின் வழியே ஸ்ரீ நாராயண குரு என்னும் அந்த ஈடு இணையற்ற உயர்ந்த ஆன்மாவை குளிரச் செய்கிறார்கள்.
ஈழவா குலத்தில் பிறந்த ஸ்ரீ நாராயண குரு, “சாதியென்ன சாதி; அன்பு ஒன்றே நீதி” என்றபடி இந்த உலகுக்கு ஆற்றிய பணி மகத்தானது. நன்றியோடு போற்றத்தக்கது.
இந்திய ஆன்மீக – சமூகப் புரட்சியாளர்களில் ஓங்கியதோர் ஸ்தானத்தைக் கொண்ட ஸ்ரீ நாராயண குரு 1928 ஆம் ஆண்டு தன் உலக வாழ்வை நீத்துக் கொண்டார்.
திருவனந்தபுரத்துக்கு வடக்கே 20 மைல் தொலைவில் அமைந்த சிவகிரி ஸ்தலத்தில் ஸ்ரீ நாராயண குருவின் உயிர் பிரிந்த அந்த அறையில் அவர் பயன்படுத்திய நாற்காலியும் தலையணைகளும் இன்னமும் அப்படியே இருக்கின்றன.
ஆங்கோர் விளக்கு எந்த நேரமும் எரிந்து கொண்டே இருக்கின்றது.
இருக்கும்.
**கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா**
திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: vesriramsharma@gmail.com
�,”