‘தன் விடுதலை’! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

இந்த உலகத்தில் நீர் வாழ்வன, நில வாழ்வன, வான் வாழ்வன என எல்லாவற்றிலும் ஆண் பெண் பேதம் உண்டு. கற்பாறைகளிலும்கூட ஆண் பாறை, பெண் பாறை உண்டு என்கிறது சிற்ப சாஸ்திரம்!

சொல்லப் போனால், பெண்ணின் வலது மார்பகத்தை விட, இடது மார்பகத்தை சற்றே பெரிதாகப் படைத்திருக்கிறது இயற்கை. எல்லாம் காரணத்தோடுதான்.

உலகில் தோன்றிய மதங்கள் அனைத்தும், ஆணுக்கோர் இடமும் பெண்ணுக்கோர் இடமும் கொடுத்து அதன்படியே வாழச் சொல்கிறது. பேதங்கள் இல்லாமல் உலகம் சுழலாது என்பது அறிவியலின் ஆதாரக் கோட்பாடு.

பேதங்கள் தவிர்க்க முடியாதது.

ஆனால், அதன் பொருட்டு உயர்வு – தாழ்வு பார்க்கும்போதுதான் பிரச்னை எழுகிறது. கேள்வி ஓங்குகிறது. சமூகம் திணறித் திமிறுகிறது. அறிவுலகமும் அதை வெறுக்கிறது.

‘ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி’ என்று சொன்ன ஞானகுருவான பாரதி கூடவே, ‘எட்டும் அறிவினில்’ என்றும் சொல்லி வைத்தான்.

பல விஷயங்களில் ஆண்களையும் எட்டி நிற்கும் அறிவு பெண்களுக்கு உண்டுதான். ஆயினும், பெண்களை – ஆண்களோடு முட்டவைத்து விட்டால் இந்த சமூகம் பாழ்பட்டு விடும்.

ஆணும் பெண்ணும் இயைந்து வாழ்வதில்தான் உலக நன்மை விடிகிறது.

பாலினத்தில் உயர்வு தாழ்வு என்பதை விட்டொழித்தால் அன்றி இந்த சமூகத்துக்கு விடிவில்லை!

1908 வாக்கில், விவேகானந்தரின் முதன்மை சீடரான நிவேதிதா தேவியை சந்தித்தப் பிறகு மகாகவி பாரதியார், ‘பெண் விடுதலை’ என்னும் ஒரு கட்டுரையில் இவ்வாறு சில கட்டளைகளை இடுகிறார்.

• பெண் வயதுக்கு வரும் முன்பு திருமணம் செய்து கொடுக்கக் கூடாது.

• அவர்களுக்கு விருப்பமில்லாத ஒருவனை மணம் செய்து கொள்ள வற்புறுத்தக் கூடாது.

• பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.

• திருமணமே செய்யாமல் தன் உழைப்பினால் கௌரவமாக வாழ விரும்பும் பெண்களுக்கு அவ்வாறே வாழ வழி செய்ய வேண்டும்.

• கணவன் இறந்த பின்பு மறுவிவாகம் செய்ய அனுமதிக்க வேண்டும்

• பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் சமப் பங்கு தர வேண்டும்.

• பெண்களுக்கு உயர் கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும்.

சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டில் மற்ற எல்லோரையும் விட பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற கல்வி, கேள்விகளை மட்டுமே முன்வைத்து மனத் தூய்மையோடு அரசாண்ட ஆட்சியாளர்களால் பெண் விடுதலை என்பது இன்று ஏறத்தாழ ஈடேறி விட்டது எனலாம்.

சரி, கட்டுரையின் நோக்கத்துக்குள் செல்வோம்.

அன்றைய சுமைகள் ஏதும், இன்றைய பெண்களுக்கு இல்லை. கடந்த கால சுமைகளை கடந்து விட்ட இன்றைய பெண்களுக்குத் தேவைப்படுவது எல்லாம் ‘தன் விடுதலை’ மட்டுமே!

**‘தன் விடுதலை’ என்பது என்ன?**

இனி, விடுதலை என்பது வெளியிலிருந்து கிடைப்பதல்ல. நமது அடிமை சங்கிலியை நாமே பூட்டிக்கொள்ளாமல் இருப்பதே என்னும் மனத் தெளிவுக்குப் பெயர்தான் ‘தன் விடுதலை’!

பெண்களின் ‘தன் விடுதலை’க்கு யாரால் கேடு வரும்? நிச்சயம் ஆண்களால் வரும்.

கல்வி, பொருளாதார, சமூக விடுதலையை அடைந்துவிட்ட பெண்களை ஆண் சமூகம் வேறொரு வகையில் அடிமை செய்ய தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கும். அதிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்வதே ‘தன் விடுதலை’ ஆகும்.

**நவீன சிந்தனையாளர்கள் என்ற பெயரில்…**

“பெண்களே, நீங்கள் அப்பாவிகள். உங்களை குடும்பம் என்னும் பெயரில் நசுக்குகிறார்கள். உங்கள் குரல்வளையை நெரிக்கிறார்கள். கல்வி அறிவு பெற்ற, காசு பணம் சேர்க்க முடிந்த உங்களால் இன்னும் என்னவெல்லாம் செய்து விட முடியும் தெரியுமா? யாருக்கும் அடங்காமல், எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு வெளியேறுங்கள்; பொது வெளிக்கு வாருங்கள்; இதோ, நான் இருக்கிறேன்” என்பார்கள்.

நிறைந்து எழுந்து வரும், பெண்ணுலகத்தைத் தங்கள் வசப்படுத்த ஆணுலகத்தில் சிலர் இப்படியாகப் பசப்புவார்கள். குழப்புவார்கள். அதிகார, ஆகிருதி காட்டி அசத்துவார்கள்.

பெண்களே உங்களுக்கு இங்கே மதிப்பில்லை; பாதுகாப்பில்லை என்று ப்ரஸ்தாபிப்பார்கள். மாய வலையினை வலிந்து வீசுவார்கள்.

பொருளாதார, கருத்து சுதந்திரம் பெற்று விட்ட பெண்குலம் அசட்டுத் துணிச்சலோடு, அவர்களின் உசுப்பலுக்கு அடிப்பணிந்து, பொதுவெளிக்கு வரும் நேரம் பார்த்து லாவகமாக அடிமை சங்கிலியைப் பூட்டி விடுவார்கள்.

அவர்கள் எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, பேச்சாளர்களாக, சினிமா நடிகர்களாக, சமூக சிந்தனையாளர்களாகப் பல்வேறு வடிவில் வலை வீசி வருவார்கள்.

இவர்களிடமிருந்துதான் இன்றைய பெண்கள் தப்பித்துக்கொண்டாக வேண்டும். இவர்களில் 90 சதவிகிதம் ஒரு குடும்பத்தோடு, ஒரு மனைவியோடு வாழ்ந்தவர்களாக இல்லை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“பெண்களுக்கு தன்னிரக்கம் உண்டாக்கி அவர்களை கண்ணீர் சிந்த வைப்பவனை நம்பி விடக்கூடாது” என்கிறது அர்த்த சாஸ்திரம்!

அவர்கள் மிகவும் நாகரீகமானவர்களாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள். ஆழ்ந்த ஞானம் இல்லாவிட்டாலும் பேச்சு வன்மை மிதமிஞ்சி இருக்கும். பெண்களை அணுகி, அவர்களுக்குண்டான துன்பங்களை எல்லாம் பெரிதுபடுத்திப் பேசிப் பேசிக் காட்டுவார்கள்.

பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும் தன்னிரக்கத்தை மேலும் மேலும் அதிகப்படுத்தி அதில் தோய விடுவார்கள். அவர்கள் அறியாமலேயே கலக மனப்பான்மையை மனதில் விளைவித்து விடுவார்கள் என்றும் எச்சரிக்கிறது.

முன்னோர்களின் எச்சரிக்கையை, கட்டுப்பாட்டை மீறும் இளம் பெண்கள், ஒருகட்டத்தில் தன்னை அறியாமலேயே, ‘அறியாதோர்’ தோளில் சாயும் நிலைக்கு ஆட்பட்டு விடுவார்கள்.

நாள் செல்ல செல்லத்தான் பாதாளத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது பெண்களுக்குப் புரியவரும். அதற்குள் காரியம் கெட்டிருக்கும். சுற்றம் வேறாகி – சொந்த வாழ்க்கை பாழாகி எல்லாம் முடிந்து விட்டிருக்கும்.

ஆம், பெண் மனம் எளிதில் வசமிழக்கக் கூடியது. பெண்களின் இன்றைய மன அழுத்தம் பெரிது. இன்றைய பொருளாதார சமூகத்தில் நேரிடைப் பங்கெடுத்துக் கொள்ளும் இளம் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சுயநலம் கொண்ட நவீனம் பூசிய துர் மதியாளர்களிடமிருந்து தங்களைப் விழிப்போடு பாதுகாத்துக்கொண்டாக வேண்டிய காலம் இது.

ஆண் மனம் அசட்டையானது. அது கவலையற்று திரியும். ஆனால், பெண் மனம் பேதலித்தபடியே வாழ்நாளைக் கடத்தும். ஆகவே, கவனம் அதிகம் வேண்டும். பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு இந்தக் கட்டுரையின் அவலக் கூவல் புரியும்.

பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதென்பது இன்றியமையாதது.

இன்று, பற்பல துறைகளிலும் பெண் ஆளுமைகள் உயர்ந்தெழுந்து நிற்பதைக் காண முடிகிறது. அது இந்த சமூகத்துக்கு நல்லது.

புராண காலத்திலேயே பெண்களின் பொது வாழ்க்கை பங்கெடுப்பு என்பது இருந்திருக்கிறது. பொது வாழ்க்கையில் இறங்கி தீயசக்தியை முடித்து வைத்த புரட்சிப் பெண் தெய்வம்தான் மகிஷாசுரமர்த்தினி எனப்படும் துர்கை. சூர்ப்பனகையும் அப்படித்தான். கண்ணகியின் வரலாறும் அதுதான்.

பொது வாழ்க்கையில் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்றாலும், அந்தப் ‘பெண்மணி’யாகப்பட்டவள் தன்னியல்பாக எழுந்து வந்தவராக இருந்தாக வேண்டும். அப்படிப்பட்டவர்களால்தான் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.

அந்நியரால் உசுப்பட்டவளாக ஒரு பெண் பொது வாழ்க்கைக்கு வந்து விடக் கூடாது. அப்படி நேர்ந்து விட்டால் அவளது எதிர்காலம் என்பது கேள்விக்குரியதாகி விடும்.

எந்தவொரு பெண்ணும் தானாக எழுந்து வரும்போது, அவளைத் தீய சக்திகள் எளிதில் அணுகிவிடாது. அப்படியே அணுகினாலும், அதை சமாளிக்கும் திறன் தன்னியல்பாக எழுந்து வந்த காரணத்தால் அந்தப் பெண்ணுக்கு நிச்சயம் வாய்த்து அவளைக் காப்பாற்றிக் கொடுத்து விடும்.

ஆம், தன்னியல்பாக எழுந்து வந்த பெண்களே இந்தச் சமூகத்தில் சாதித்திருக்கிறார்கள். இந்தச் சமூகத்தில் உயர்ந்து நிற்கும் எந்தப் பெண் ஆளுமையும், இன்னொரு ஆண் சொன்ன பேச்சைக் கேட்டு வந்தவராக காண முடியவில்லை.

தானே முடிவெடுத்து, திடமாக முன்னேறி வந்தவர்களாகவே இருக்கிறார்கள். சொல்லப்போனால் ஆண்களின் தடைகளை மீறிக்கொண்டும் எழுந்தவர்களாகவே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மட்டுமே எவராலும் எளிதில் வீழ்த்த முடியாதவர்களாக உயர்கிறார்கள்.

வரலாற்று வேலு நாச்சியார், தாலிபானை எதிர்த்த மலாலா, ஐசிஐசிஐ வங்கியின் முதன்மை ஆளுமை சந்தா கோச்சார், எஸ்பிஐ-யின் அருந்ததி பட்டாச்சார்யா, தமிழ்நாட்டை ஆண்ட ஜெயலலிதா, கவிஞர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் என அனைத்துப் பெண் ஆளுமைகளும் தன்னியல்பாக சிந்தித்துப் போராடி எழுந்து உயர்ந்தவர்கள்தாம்.

அவர்களின் வரலாற்றை உன்னித்துப் பாருங்கள்.

ஆண்கள் அவர்களோடு பயணப்பட்டிருப்பார்களே தவிர, தகப்பன், சகோதரன், கணவன் உள்ளிட்ட குடும்ப ஆண்களைத் தவிர்த்து, வேறு எந்த அந்நிய ஆணின் விரலையும் பிடித்துக்கொண்டு பயணப்பட்டு எழுந்தவர்களாக அவர்கள் இருந்ததில்லை என்னும் உண்மை புரியும்.

தன்னியல்பாக தனக்குள் எழுந்த புரட்சிகரமான சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்து சாதிக்கும் ஆளுமைகளாகவே இவர்கள் காணப்படுகிறார்கள்.

அப்படிப்பட்ட தன்னியல்பான எழுச்சிகள்தான் என்றென்றும் சாஸ்வதப்படும். எத்தனை எத்தனை ஆபத்துகள் வந்தாலும் அதனையெல்லாம் கடந்து நிலைத்திருக்கும்.

அதனால்தான், நவீன சிந்தனையாளர்கள் என்ற பெயரில் துர்போதனை செய்யும் சூழ்ச்சியாளர்களிடமிருந்து இன்றைய இளம் பெண்கள் விலகி இருக்க வேண்டும் என்கிறேன். குடும்ப ஆண்களைத் தவிர மற்ற அந்நிய ஆண்களின் மூளைக்கு உங்களை இரையாக்கிக் கொள்ளாதீர்கள் என்கிறேன்.

“கடந்த கால வரலாற்றில் பெண்களுக்கு எத்தனை கொடுமைகள் நிகழ்ந்திருக்கின்றன தெரியுமா?” என்று அவர்கள் அங்கலாய்த்துக் காட்டுவார்கள். அத்தனை கொடுமைகளும் பேதமில்லாமல் ஆண்களுக்கும் நிகழ்ந்திருக்கின்றன என்பதே உண்மை. இதுகாறும் நிகழ்ந்த போர்களில் எத்தனையோ ஆண்கள் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லவா?

வரலாறு முழுவதும் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ஆயிரமாயிரம் அநீதிகள் இழைக்கப்பட்டே வந்திருக்கின்றன.

சுயநலம் மிகுந்த பேராசை பிடித்த அயோக்கியர்களால் இழைக்கப்படும் அநீதி என்பது, ஆண் – பெண் பேதம் பார்க்காது.

அதனைக் கண்கூடாக நாம் முள்ளிவாய்க்காலில் கண்டோமல்லவா?

இந்த மண் ‘பெண்மையை’ என்றும் விட்டுக் கொடுத்ததேயில்லை என்னும் உண்மையை உணர வேண்டும்.

கண்ணகி, தன் முலையெறிந்து மதுரையை எரித்தாள் என்பது காவியத்துக்கு அழகாக இருக்கலாம்.

ஆனால், கண்ணகி என்னும் அப்பாவிப் பத்தினியாகப்பட்டவள், தனக்கு நிகழ்ந்து விட்ட ஓர் அநியாயத்தை இந்த ஊர் உலகம் அறிய வேண்டும் என்று நடுத்தெருவில் தன் முலையினை அரிந்து கொண்டு ஆவேசமாக நிற்க, அதனைக் காணப் பொறுக்காத மதுரை வாழ் இளைஞர்கள் ஆர்த்தெழுந்து மன்னனே ஆனாலும் மன்னிப்பதில்லை என்று மதுரையம்பதிக் கோட்டையை தீயிட்டுப் பொசுக்கி அழித்தார்கள் என்று புரிந்துகொள்வதே நன்று.

ஆம், இந்த மண் பெண்மையை என்றும் விட்டுக் கொடுக்காது.

‘பானு மண்டல மத்யஸ்தா’ என்பது ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் 275ஆவது ஸ்துதி!

பெண்மையை – அம்பாளை சூரிய மண்டலத்தின் மத்தியும், அச்சும், ஆரமும் அவளே என்று பெண்மையை போற்றித் துதிக்கிறது!

அபிராமி அந்தாதியில்…

அபிராம பட்டர் பெண்மையை கண்ணீர் மல்க உச்சந்தலையில் வைத்துப் போற்றுகிறார்.

ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன், போதிர் பிரமன் புராரி, முராரி, பொதியமுனி, காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே!

தையல் என்றால் பெண். அதாவது, ‘பெண்மையை சுற்றியே மொத்த சராசரமும் இயங்குகிறது… பெண்மையே வாழி!’ என்று போற்றவே சொல்லிக் கொடுத்தார்கள் முன்னோர்கள்.

இது ஒருபுறமிருக்க, குடும்ப நலக் கோர்ட்டுக்குச் சென்று பார்த்தால் பெண்களால் ஓயாமல் துன்புறுத்தப்படும் ஆண்களையும் காண முடிகிறது.

பெட்டிப் பாம்புகளாக – மடிதஞ்சம் கொள்ளும் பூனைக் குட்டிகளாக பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட எத்தனையோ ஆண்கள், வாயாடிப் பெண்களைக் கட்டிக்கொண்டு வழி தெரியாமல் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்!

சொல் பேச்சைக் கேட்காத பெண் குழந்தைகளைப் பெற்றுவிட்டு அவதிப்படும் தகப்பன்களும் இதில் அடக்கம். தான் தோன்றிப் பெண் பிள்ளைகளால் நிம்மதியை இழக்கும் அண்ணன் – தம்பிமார்களும் அடக்கம்!

மொத்தமும், நவீன துர்மதியாளர்களின் தவறான வழிகாட்டுதலால்தான்.

அப்படிப்பட்ட தவறான துர்போதனைகளில் இருந்து, இன்றைய இளம் பெண்கள் தப்பித்தாக வேண்டும். இல்லையேல், சமூகம் நிம்மதி இழந்து நிலை குலைந்துவிடும்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி

பேணி வளர்த்திடும் ஈசன்;

மண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல

மாதரறிவைக் கெடுத்தார்.

ஆண்களின் பொய் மாய வலைகளிலிருந்து, தங்களை எட்ட வைத்துக் கொள்ளும் மன விழிப்போடு இன்றைய இளம் பெண்கள் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் இந்தச் சமூகக் கட்டுமானம் சிதறி விடும்!

மீண்டும் ஒருமுறை வலியுறுத்திச் சொல்கிறேன்…

அநீதி என்பது ஆண் – பெண் இருவருக்கும் பொதுமையாகவே இழைக்கப்பட்டு வருகிறது. அதைப் பொறுமையாக இருந்து குடும்ப அளவிலேயே எதிர்கொண்டு வெல்ல வேண்டும். அந்நியர்களின் துர் போதனைக்கு பெண்கள் ஆட்பட்டு விடலாகாது.

முக நூல் – ட்வீட்டர் – வாட்ஸ்அப் – இன்ஸ்ட்டாக்ராம் எனப் பல்கிப் பெருகிவிட்ட இந்த நாள்களில்… இளம்பெண்கள் தங்களை நோக்கி வீசப்படும் எந்த மாய வலையிலும் சிக்கிக்கொள்ளாமல் மிக மிக விழிப்போடு இருந்து, உயர்ந்தாக வேண்டும்!

‘தன் விடுதலை’ பெற்றாக வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: vesriramsharma@gmail.com

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share