இன்று ரம்ஜான். உலகமெங்கும் முஸ்லிம் சகோதரர்கள் வானில் பிறை தோன்றிய சேதியைத் தங்களுக்குள் முகம்மலர பகிர்ந்தபடி கொண்டாடித்திளைக்கும் திருநாள். கொண்டாட்டம்தானே வாழ்க்கை.
ஓர் ஆச்சாரமான நியோகி பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன்தான் என்றாலும், என்னுடைய இளம் பிராயத்தில் ரம்ஜானை ஒரு முஸ்லிமுக்கு இணையாக நானும் கொண்டாடியிருக்கிறேன்.
“உங்களுக்கு கேடயமாக இருக்கிறது…” என்று சொல்லப்படும் ரம்ஜான் நோன்பை நானும் ஒருநாள் ஏந்திப் பிடித்துப் பார்த்திருக்கிறேன்.
திருவள்ளுவருக்கு திருவுருவம் கொடுத்த “ஓவியப் பெருந்தகை” கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் மகன் என்பதால் திருவல்லிக்கேணி ஏரியாவில் எல்லோருக்கும் ஓரளவுக்குப் பரீட்சயமானவனாக இருந்தேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லியே எங்கள் தந்தையார் எங்களை வளர்த்ததால், சாதி மத பேதமில்லாமல் எனக்கு வாய்த்த நண்பர்கள் அதிகம்.
அன்றைய திருவல்லிக்கேணியில் அஸ்கர் அலி என்றொரு நண்பன் எனக்கு. அவனுடைய தந்தையார் பிரசித்திபெற்ற திருவல்லிக்கேணி கோசாலாவை ஒட்டி, சோஃபா செட் தயாரிக்கும் சின்னதொரு கடையை வைத்திருந்தார். அவர் அரபு நாட்டு வேலைக்குச் சென்றுவிட, சிறு வயதிலேயே அந்தப் பொறுப்பு அஸ்கர் அலியிடம் திணிக்கப்பட்டது. பள்ளிக்கல்வியை நிறுத்திக்கொண்டு, முழு நேர வேலையில் இறங்கினான் அஸ்கர். அந்தக் கடைக்கு உள்ளே கிடக்கும் பழைய சோஃபாக்களில் சாய்மானமாகப் படுத்துக்கொண்டு கம்பராமாயணம், கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்று படித்துக் கொண்டிருப்பேன். ரெக்ஸின் குப்பைகளுக்கு இடையில் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கும் ஸ்பீக்கரில் இருந்து, நாகூர் சலீம் அவர்களின் பாடல்கள் எந்த நேரமும் சன்னமாக ஒலித்துக்கொண்டிருக்கும். பஞ்சுத் துகள்கள் எங்கெனும் பறந்து நகர்ந்தபடியே இருக்க, ஏதோ சுவனத்துக்குள் இருப்பதைப்போல தோன்றும். அது ஒரு பொற்காலம்.
பின்னாளில், ஆயிரக்கணக்கான இந்துமதப் பக்திப் பாடல்களை நான் எழுதியிருக்கிறேன். இன்னமும் உலகமெங்கும் இருக்கும் கோயில்களில் எனது பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், அந்தப் பாடல்களை எழுதுவதற்குண்டான படிப்புப் பயிற்சியை அஸ்கர் கடையில்தான் மேற்கொண்டேன் என்பது நெகிழ்ச்சிக்குரியது. இறைக்கருணையோடு சம்பந்தமுடையது என்றே நம்புகிறேன்.
திருவல்லிக்கேணி என்பது வைணவப் பூமியாக கொண்டாடப்பட்டாலும் ஆதியிலிருந்தே சாதி மத பேதங்களைப் பாராட்டாத பூமியாகவே இருந்திருக்கிறது. பாரதியார் வாழ்ந்த மண் என்பதாலோ என்னவோ அப்படிப் பழகிப் போயிருக்கிறது.
எல்லா மதங்களும் இணைந்து வாழ்வதுதான் திருவல்லிக்கேணி என்றாலும் திருவல்லிக்கேணிவாசிகளுக்கு, கிறிஸ்தவர்களைவிட இஸ்லாமியர்களே மிக நெருக்கமானவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அதற்குக்காரணம், திருவல்லிக்கேணியைச் சுற்றிலும் இஸ்லாமியப் பகுதிகள்தான். மீர்சாகிப் பேட்டை – ஆதம் மார்கெட் – சேப்பாக்கம் – நீலம்பாஷா தர்கா – லாயிட்ஸ் ரோடு எனச் சுற்றிலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் இருக்க, அதன் நட்ட நடுவில்தான் திருவல்லிக்கேணி அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் தொழுகை நேரங்களில் திருவல்லிக்கேணியைச் சுற்றிய வானமெங்கிலும் பாங்கு ஒலிக்கக் கேட்கலாம். ஆம், ஆழிசூழ் உலகம் என்பதுபோல அல்லா கூவலுக்கு நடுவே திருவல்லிக்கேணி.
அதனால் ரம்ஜான் கால சந்தோஷம் திருவல்லிக்கேணியில் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். ஜவுளிக் கடைகளும் ஃபேன்ஸி ஸ்டோர்களும் நிறைந்த பைகிராப்ட்ஸ் ரோட்டின் நீள அகலங்களில் திருநாள் சந்தோஷம் தெறிக்கும். பரஸ்பரம் வாழ்த்தொலிகளோடு கட்டித்தழுவிக்கொண்டு கடக்கும். கொஞ்சம்கூட மாச்சர்யம் இல்லாத மனிதர்களை நீங்கள் அங்கே காணலாம்.
சொல்லப்போனால் ரம்ஜான் நெருங்க நெருங்க முஸ்லிம்களைவிட இந்துக்கள்தான் பரவசமாக இருப்பார்கள். “ஏம்ப்பா… பிறை தெரிஞ்சிருச்சாமேப்பா… அட, இப்பத்தான் ரேடியோவுல சொன்னான்…” என்று ஆலாய்ப் பறப்பார்கள். காரணம், பிரியாணி!
என்னதான் வருடம் முழுவதும் பிரியாணி சாப்பிட்டாலும், அந்த ரம்ஜான் பிரியாணிக்கு இருக்கும் வாசனையும் சுவையும் அடடா! ஒவ்வோர் இஸ்லாமியர்களின் வீட்டிலும் ஓர் இனம்புரியாத, இதமான மணம் கமழ்ந்திருக்கும். ராயப்பேட்டை – நீலம்பாஷா தர்கா என்று சுற்றிச்சுற்றி பிரியாணி வெட்டிக்கட்டிக்கொண்டு வருவோம்.
பொதுவாக, ரம்ஜான் மாதத்தை இறையச்சம் பேணும் காலமாகவே முஸ்லிம்கள் கருதுகிறார்கள். ஆண்டு முழுவதும் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கெல்லாம் பிராயச்சித்தம் செய்து கொள்ள வாய்த்ததோர் புண்ணிய காலமாகவே ரம்ஜான் மாதத்தை நோன்பிருந்து கடக்கிறார்கள்.
பொய்யில்லை. புறம் பேசுவதில்லை. கோபம் இல்லை. காமம் இல்லை. குரோதம் இல்லை. மனிதர்களுக்கு இருந்து விடலாகாது என்று சொல்லப்பட்ட எந்தக் குணத்தையும் ரம்ஜான் காலத்தில் முஸ்லிம்களின் வாழ்வில் நாம் காண முடியாது. எஞ்சிய பதினோரு மாதங்களிலும் இவ்வாறே இருக்க அருள்புரியவாய் ரஹ்மானே என்னும் பிரார்த்தனையாகவும்கூட அது இருக்கும்.
ரம்ஜான் மாத திருவல்லிக்கேணி ஆச்சர்யமளிக்கக்கூடியது. சிறு வயதிலேயே எனக்குள் மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்கியிருக்கிறது.
உதாரணத்துக்கு, பள்ளிக் காலங்களில் கடற்கரையின் உள்ரோட்டில் நாங்கள் ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அதாவது, பாதி கிரிக்கெட் – பாதி வாய்ச்சண்டை என்று பொழுதைக் கழித்து வருவோம். மீர்சாகிப் பேட்டையிலிருந்தும் ஒரு கிரிக்கெட் டீம் வரும். குளத்து டீமுக்கும் மீர்சாகிப்பேட்டை டீமுக்கும் போட்டி நடக்கும் அந்த நேரங்களில் வாய்ச்சண்டை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். திருவல்லிக்கேணி பாஷையும் உருது பாஷையும் எல்லை மீறி சீண்டிக் கொள்ளும்.
ஆனால், ரம்ஜான் காலங்களில் நிலைமை அப்படியே மாறும். விளையாட்டின் நடுவில் வாய்ச்சண்டை ஏகத்துக்கும் குறைந்து போகும். அப்படி ஒரு தருணம் ஏற்பட்டுவிட்டால் குளத்து டீம் சிறுவர்கள்… “டேய் நீ ரம்ஜான் நோன்பு இருக்க… உனக்கே சரின்னா ஆடிக்கோடா!” என்பார்கள். “சரி, நான் அவுட்தான் போதுமா…” என்று பேட்டை வைத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பான் அந்த சிறுவன்.
ஆம், இறையச்சம் நிறைந்த நாள்களாக சிறுவயதில் இருந்தே ஊட்டப்பட்டுவிட்டது ரம்ஜான் காலம்.
ஒருமுறை அஸ்கரிடம் கேட்டேன்.
“நானும் உன்னோடு நோன்பு வைக்கலாமா அஸ்கர்?”
“அதுக்கென்ன ஸ்ரீராம்? தாராளமா இரு! நோன்பைப் பிடிக்காத கடவுள் உண்டா என்ன?”
மறுநாள் அதிகாலை இரண்டரை மணிக்கெல்லாம் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, மூன்று சப்பாத்திகளைப் பருப்போடு சாப்பிட்டு முடித்தோம்.
சரியாக மூன்றே கால், “ஸ்ரீராம். நாம் மூன்றரை மணிக்கு நோன்பை தொடங்கி விடப்போகிறோம். ‘இறைவா, இன்று முழுவதும் உன் நினைப்பிலேயே இருக்கப் போகிறேன். தீய எண்ணங்கள் என்னிடம் வந்து அண்டிவிடாமல் அருள்புரிவாயாக’ அப்படீன்னு உன் வழியில் உனக்கு தெரிஞ்ச மொழியில் கடவுளை வேண்டிக்கோ…” என்று அஸ்கர் சொல்ல, பிரார்த்தனையோடு அந்த நோன்பு நாளை தொடங்கினோம்.
துளி எச்சைக்கூட விழுங்காமல் மிகக் கவனமாக இருந்தோம். சில சமயம் திடீரென்று பழக்கத்தில் என்னையறியாமல் எச்சையை முழுங்கிவிட, குற்ற உணர்வோடு அஸ்கரை நோக்கி “ஐயோ, சாரிப்பா…” என்பேன்.
சோஃபாவில் ஆணி அடித்தபடியே என்னை நோக்கும் அஸ்கர் சிரித்துக்கொண்டே, “பரவாயில்லை… கன்டின்யூ பண்ணு…” என்பதுபோல தலையசைத்துக் காட்டுவான்.
பகல் முழுவதும் சாப்பிடாததால் பேச்சு குறைந்து போய்விட்டது. எச்சை விழுங்கிவிடக் கூடாது என்றே உஷாராக இருந்ததால்… என்னையே அறியாமல் எழும் தேவையில்லாத வேறு சிந்தனை எதுவும் எழாமல் கட்டுப்படலாயிற்று. இப்படி ஓர் ஒழுக்கப் பாட்டையில் சென்று கொண்டிருக்கிறேன் என்னும் மன நிறைவு முகத்தில் தன்னம்பிக்கையாகப் படர்வதை உணர முடிந்தது. தெருவில் எதிரே வருபவர்கள் யாவரும் நம்மைப் பார்த்து புன்னகைப்பது போலவே தோன்றியது. இதனாலெல்லாம் கிடைத்த மன சக்தி, நாளெல்லாம் உணவில்லாமல் இருக்கும் உடற்சோர்வை வென்று நிற்பதை உணர முடிந்தது. இப்படியே கடக்க மாலை முற்றியது.
மாலை ஆறு மணிக்கு அஸ்கரின் தாயார் இரண்டு குவளைக் கஞ்சியும் ஆளுக்கு இரண்டு பேரீச்சம் பழங்களையும் கொண்டுவந்து கடையில் கொடுத்துவிட்டுப் போனார்கள்.
சரியாக ஆறரை மணிக்கு நோன்பு முடித்து, அந்தக் கஞ்சியை வாயில் ஊற்றும் நேரம்… என்னையறியாமல் உடல் சிலிர்த்துக்கொண்டது. மனமெங்கும் ஓர் வெறுமை படர்ந்தது. குபுக்கென்று கண்ணீர்வர உடைத்துக்கொண்டு அழுதேன். எதற்காக வெறுமை படர்ந்தது? ஏன் அழுகை வந்தது?
ஒருநாள் முழுவதும், ஒரே நோக்கத்தோடு – நிறைவோடு நின்ற மன ஒழுக்கத்தின் அடர்த்தியை – அணுஅணுவாக அனுபவித்த பின்பு, அதை முடித்துக்கொள்ள விரும்பாமல் மயங்கும் எளிய மனதின் வெளிப்பாடாகவே அந்த அழுகை பீறிட்டது என்பதை மெல்ல மெல்ல உணர்ந்தேன்.
ஒருநாளுக்கே இப்படியென்றால், என்னைவிட சுத்தமாக, மாதம் முழுவதும் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களின் மன மேன்மை எத்தகையதாக இருக்கும் என்று இன்றும்கூட நான் எண்ணி எண்ணி வியந்து போவதுண்டு.
எட்டுக்கு எட்டு வீட்டில்… ஈச்சம்பாயில் படுத்துறங்கி… உலகம் முழுமைக்கும் தன் ஞான ஒளியை பரப்பி நின்ற நபிகளாரின் ஆன்ம உயரம் எத்தகையதாக இருந்திருக்கும்?
ஆம், ரம்ஜான் மாதம் என்பது மனிதர்களை அவர்களுக்கே அடையாளம்காட்ட கட்டளையிடப்பட்ட மாதம். சக மனிதனை அன்போடு நோக்கும்படிக்குச் சொல்லிக் கொடுக்கும் மாதம். நான் என்னும் ஈகோவை துடைத்தெறியச் சொல்லும் மாதம்.
“உன் நோன்புக்குக் கூலியாக நானே இருக்கிறேன்…” என்கிறான் இறைவன். அதைவிட வேறு என்ன வேண்டும்?
ஒருமுறை, இறைவனை நிந்தித்துக் கொண்டிருந்தானாம் ஒருவன். நபிகளாரின் மருமகனாகிய அலி அவர்கள் அதைப் பொறுக்க முடியாமல் அவனிடம் இறை நிந்தனையை நிறுத்த சொல்லி எச்சரித்தார்.
அவன் மேலும் மேலும் அவ்வாறு செய்யவே… அவனைத் தண்டிக்கும் வகையில் கையை ஓங்கிக்கொண்டு சென்றார். கோழையான அவன் அவரை எதிர்க்க துணிவற்று, சட்டென அவர் முகத்தில் காறி உமிழ்ந்துவிட, அந்தக் கணத்தில் அவனைவிட்டு அகன்று விட்டார் அலி அவர்கள்.
“ஏன்? உங்கள் வலுவுக்குமுன் அவன் ஒரு துரும்பாயிற்றே? அவனை அடித்துப் போடாமல் ஏன் நகர்ந்து விட்டீர்கள்?” என்று கேட்டபோது அவர் சொன்னாராம்…
“அவன் இறைவனை அவமானப்படுத்த முயலும்போது, அதைப் பொறுக்காமல் நான் கண்டிக்கப் போனேன். இப்போது, காறி உமிழ்ந்ததன் மூலம் அவன் என்னை அவமானப்படுத்தியிருக்கிறான். எனக்கென்ன கவலை? அவனை இறைவன் கண்டிக்கட்டும்.”
ஆம். இதுதான் இந்த நோன்புக் காலத்தில் கிடைக்கப் பெறும் ஆகப்பெரும் ஞானமாக இருக்க முடியும்!
இப்பேர்ப்பட்ட மன மேன்மையையை, மாறாத ஞானத்தை அருளும் இந்த ரம்ஜான் மாதம் முடியும் தருணம் உண்மையான ஒவ்வொரு முஸ்லிமின் மனத்திலும் நிச்சயம் ஓர் வெறுமை சூழத்தான் செய்யும். “விரத காலம் நழுவுதையே ரஹ்மானே…” என்று மனம் மயங்கும்.
அந்த வெறுமையையை அன்புகொண்டு அடைப்போம்! அந்த மன மயக்கத்தை சகோதர பாசம் கொண்டு போக்கிக்கொள்வோம்! இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்பதை தீன் எனப்படும் அதன் வழியில் வாழ்ந்துகாட்டி உலகுக்கு உணர்த்துவோம்! நோன்பு நாளை கொடுத்த இறையோனை கோடி முறை தொழுதெழுவோம்!
அன்பைத் துறப்பதும்; ஆசையை அதிகப்படுத்திக் கொள்வதும்தான் மானுட வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்பதை உணர்வோம்! சக மாந்தரை நெக்குருக நேசிப்போம்!
“கொட்டிக் கிடக்கிறது வாழ்க்கை… அள்ளிக் கொடுக்கத்தான் தெரியவில்லை மனிதனுக்கு – அன்பை” என்னும் சத்தியத்தைப் பிறைமாதம் நமக்குப் போதிப்பதைப் புரிந்துகொள்வோம்!
புனித ரம்ஜானுக்கான இந்தக் கட்டுரையை எனது பால்ய நண்பன் அஸ்கர் அலியின் கடையில் அன்று கேட்ட நாகூர் சலீம் அவர்களின் பாடலோடு முடிக்க விரும்புகிறேன்!
“கொடுத்ததுக்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்;
மேலும், மேலும் கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்…”
அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் வாழ்த்துகள்!
கட்டுரையாளர் குறிப்பு:
ஸ்ரீராம் சர்மா…
திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.�,”