ஓலக்கால்… ஜூலா! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

இந்தப் பூமி சமதளப்பட்டதல்ல !

மேட்டுக்கு வாய்த்த இளந்தென்றல் பள்ளத்துக்கில்லை. பள்ளத்துக்கு வாய்த்த நதியும் புனலும் மேட்டுக்கில்லை. தனித்து வாய்த்த வரத்தைப் பகிர்ந்துகொள்ளாமல் மறுகிக் கெடுகிறார்கள் மனிதர்கள்.

அவ்வாறு, மயங்கி உழலும் மக்களின் மனதைச் சமனப்படுத்தி, சமூகத்தை ஈடேற்றி வைக்க வேண்டியது இலக்கியம் அறிந்த பேரறிவாளர்களின் கடமை! அவ்வாறான பேரறிவாளர் ஒருவர் நம்மிடையே இருந்தார்.

1949இல் பிறந்து, மழலை தெளியும் முன் “சேஷாசலம்” எனப் பெயரிடப்பட்டு, பின் தனக்குத்தானே “பெரியார்தாசன்” எனப் பெயரிட்டுக்கொண்டு, இடையில் “சித்தார்த்தா” என்னும் முன் பெயரையும் கொண்டு, வைகோவின் அன்பால் அரவணைக்கப்பட்டு, மதிமுகவில் இணைந்து, முடிவில் “அப்துல்லா பெரியார்தாசன்” என்னும் திருப்பெயரோடு மறைந்தார்.

இந்த நான்கு பெயர்களைக் கடந்து ஐந்தாவதாக அவர் எனக்காக வைத்துக்கொண்ட பெயர் ஒன்று உண்டு .

“ஜூலா”!

**1980 – 90 களின் இலக்கியக் கூட்டங்கள்**

ஏதேனும் ஒரு கார்ப்பரேஷன் பள்ளியில், மாலை ஐந்து மணிக்கு மேல், மலிந்த மஞ்சளாய்த் தொங்கிக்கொண்டிருக்கும் தூசடைந்த குண்டு பல்பின் துணையோடு அமானுஷ்யமாய் நிகழ்ந்து கலையும்.

சொல்லப் போனால், ஏழையின் சமாதிக் கூட்டம் போல நாலைந்து பேரோடு நடந்து முடியும்.

அதிகபட்சமாக அன்றைய மவுன்ட்ரோடு எல்.எல்.ஏ. பில்டிங் ஹால் துணைக்கு வரும். அதற்கும் பஸ் வசதி கிடையாது. பின் கூட்டம் எப்படி வரும்?

நான் கண்டவரையில் ‘இலக்கியச்சுடர்’ இராமலிங்கம் அவர்கள் கட்சி ஒன்றைத் தொடங்க எண்ணிக் கூட்டிய கூட்டமே எல்.எல்.ஏ. பில்டிங் கண்ட அதிகபட்சக் கூட்டம் !

**உருது முஷைரா!**

சன் டிவியும், ‘கெக்கேபிக்கே’ பட்டிமன்றங்களும் இல்லாத அன்றைய காலத்தில், தூர்தர்ஷனில், ‘முஷைரா’ எனப்படும் உருது கவியரங்கம் காண்பிக்கப்படும்.

பளபளவென மெத்தை போடப்பட்டு, அதில் வெள்ளை நிற சாட்டின் கிளாத் விரிக்கப்பட்டு, ஏழைத் தலையணையை இளக்காரம் செய்யும் வெண் திண்டுகள் ஆளுக்கொன்றாய் கொடுக்கப்பட்டு, அதில் அமர்ந்தபடி அட்டகாசமாகக் கவிதை சொல்வார்கள் வட நாட்டுப் பெருங்கவிகள்.

“வாவ்வா…” என ஆர்ப்பரித்தபடி உற்சாகப்படுத்துவார்கள் அங்கிருக்கும் வாசகப் பெருமக்கள்..

அதனைக் காணக் காண எனக்குள் தமிழையும் இப்படி அலங்கரித்துப் பார்க்க வேண்டும் என்னும் ஆதங்கம் மீறி எழும்.

**வெண்ணிலா இலக்கிய வீதி**

நமது தமிழ்க் கவியரங்கத்தையும் மெத்தை விரித்து, திண்டுகள் பரப்பிக் கொண்டாடியே ஆக வேண்டும் எனச் செயலில் இறங்கினேன்.

எனது பள்ளித்தோழன் பாண்டியன் வழிமொழிய, நண்பர்கள் பலரும் ஆதரித்துவர, திருவல்லிக்கேணியை ஒட்டிய ஜாம்பஜாரில் அமைந்த ஆரிய சமாஜ் பில்டிங்கை அதன் அன்றைய செயலாளர் திருநாவுக்கரசு ஐயா அவர்கள் இலவசமாகக் கொடுத்து உற்சாகப்படுத்த, ஒரு பௌர்ணமி நாளில் ‘வெண்ணிலா இலக்கிய வீதி’ பிறந்தது!

‘நிலாவுக்கு ஒரு வார்த்தை’ என்னும் தலைப்பில்…

ஜான் தன்ராஜ், சௌமிய நாராயணன், பாலி ஸ்ரீரங்கம், ரோஸ் மேரி பூங்கோதை, சேஷாத்ரி, முத்தழகன், சந்திரசேகர், பாப்பா ரமேஷ்… இன்னும் முகம் நிறைந்து பெயர் மறந்துபோன எனது இலக்கிய நண்பர்கள் பன்னிருவர் ஒய்யாரமாக திண்டுகளில் சாய்ந்தபடி கவி பாட, 200க்கும் மேற்பட்ட கலா ரசிகர்கள் கூடி ஆரவாரம் செய்ய,

“இது இரண்டாம் கம்பன் கழகமாக ஓங்கி வளரட்டும்…” என மனமார வாழ்த்தினார் வெண் மெத்தையின் நடுவே அமர்ந்து கவியரங்கத் தலைமை கொண்ட பெருந்தகை ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்கள்.

இளைஞர்கள் எங்களுக்கு ருசி கண்டுவிட்டது. அடுத்தடுத்த பௌர்ணமிகளில் கூட்டங்கள் நிகழ்த்த ஆவல் மிகுந்தது.

நண்பர்களில் சிலர் பட்டிமன்றம் போடலாமே என்று கொளுத்திப் போட்டார்கள். பட்டிமன்றம் என்றால் பிரிவுக்கு மூன்று பேராவது வேண்டுமே.

எனது நண்பர்கள் கபாலி, திருப்பதிசாமி, குணசீலன், பண்டரிநாதன், பர்வீன் சுல்தானா, சாய் அமுதா தேவி, சித்ரா, சௌமிய நாராயணன், ஜான் தன்ராஜ், சைலேஷ், பத்ரி, முத்தழகன், மேரி, எனப் பற்பலரும் வந்து பேசி களைகட்ட வைத்துவிடுவார்கள் எனினும்,

நிகழ்ச்சி ஏற்பாட்டாளன் என்னும் வகையில், ஒவ்வொரு முறையும் ஒரு ஸ்டார் தலைமையைப் பிடித்தாக வேண்டுமே !?

அன்று எனக்கு வாய்த்த ஒரே வாகனம் ஓர் உலர்ந்த சைக்கிள். அதுவும்கூட என்னுடையது அல்ல. பொருளாளர் இளங்கோவுடையது. அவரோ, Hospital Accessories விற்பனை செய்யும் கம்பெனி ஒன்றின் ஊழியர்.

இலக்கிய தாகத்துக்கு மட்டையாகிப்போய் என்னோடு இணைந்தவர் மதிய நேரத்தில் வந்து என்னை அவரது சைக்கிளில் ‘பிக்கப்’ செய்துகொள்வார்.

ஓயாமல் சுற்றிச் சுற்றி நேரில் சென்று அழைத்தாலும் அன்றைய தமிழறிஞர்கள் தேதி கொடுக்காமல் டபாய்த்தபடியே இருந்தார்கள். திருக்குறள் முனுசாமி போன்ற அறிஞர்களை விடாமல் பிடித்திழுத்து வந்தது வேறு கதை.

அப்படியான விடாமுயற்சியில் சிக்கியவர்தான் பெரியார்தாசன்!

அவர் குறித்துச் சொல்லும் முன்னர், சிக்கலேதும் செய்யாமல் வெண்ணிலா இலக்கிய வீதிக்கு மனமுவந்து வந்திருந்து வாழ்த்திக் கொடுத்த ஈரோடு தமிழன்பன், பேராசான் ஜெயகாந்தன், பெருங்கவி நா.காமராசன், இலக்கியச் சுடர் இராமலிங்கம், டாக்டர் காந்தராஜ், இலக்கிய நடிகர் கமல்ஹாசன் ஆகியோரை நன்றியோடு இங்கே குறித்தாக வேண்டும்.

**பேராசிரியர் பெரியார்தாசன்**

அன்றைய நாளில் பேராசிரியர் பெரியார்தாசன் ஸ்டார் பேச்சாளர். அவர் தேதியை வாங்குவது குதிரைக் கொம்பு.

காஞ்சிபுரத்தில் அவர் பேசுகிறார் என்றால் சுற்றுவட்டார தியேட்டர்கள் அனைத்தும் இழுத்து மூடப்படும்.

விடிய விடியப் பேசுவார். எனக்குத் தெரிந்து, மேடைப் பேச்சுக்கு மூன்று இடைவேளை விட்ட ஒரே பேச்சாளர் அவர் மட்டுமே.

இடைவேளை நேரங்களில் பாத்ரூம் அவஸ்தைகளைக்கூட பொருட்படுத்தாமல் கம்மென்று அமர்ந்திருக்கும் ஜனம்.

அப்படி ஒரு சப்ஜெக்ட் நாலேட்ஜ் அவரிடம்!

சைதாப்பேட்டை பக்கம் அவருக்கு வீடு என்றார்கள். ஸ்டார் பேச்சாளரை அணுக ஸ்கூட்டரில் போனால்தான் ஒர்க்கவுட் ஆகும் என்று முடிவெடுத்தோம்.

அன்றைய எங்கள் வெண்ணிலா இலக்கிய வீதிக் குழுவில் ஸ்கூட்டர் வைத்திருந்தவர் ஆனந்த் மட்டும்தான். அவரோ தன் தகப்பனார் தொழிலை வழி நடத்தும் பொறுப்பிலிருந்தார்.

ஆனாலும், வட்டி வசூலிக்கும் சாக்கில் நைஸாக ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வர, இருவரும் சேர்ந்து பெரியார்தாசனின் வீட்டைத் தேடிப் போனோம். அகப்படவில்லை. திரும்பிவிட்டோம்.

இனியொரு முறை ஸ்கூட்டரை எடுக்க முடியாது என்று தெரிந்துவிட, திருவல்லிக்கேணி ஜீவா சைக்கிள் கடையில் வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு தனியே கிளம்பினேன்.

“எந்த வீட்டை கேக்குறப்பா…?” என்று அலறவிட்டார்கள் ஆட்டோக்காரர்கள். ஆளாளுக்கு மனம் போன ரூட்டைச் சொல்லி அலையவிட்டார்கள். ஏற்கனவே நான் “ரூட் ப்ளைண்ட்”. தலை சுற்றிப்போனது.

எங்கெங்கோ சுற்றி ஒரு வழியாக வளசரவாக்கத்தில் ஒரு வக்கீல் வீட்டின் மொட்டை மாடியில் வைத்துப் பிடித்தே விட்டேன் பெரியார்தாசனை! இரவு 7 மணிபோல இருக்கும்.

கண்டதும் வாஞ்சையாய் சிரித்தார்.

“உங்களைத் தேடி எங்கெங்கயோ அலைஞ்சுட்டேன்…”

“கீஞ்சுது…எல்லா வூட்டலயும் போய் என்னை அசிங்கப்படுத்திட்டு வந்துட்டேன்னு சொல்லு…”

“சாரி…”

“இது ஒண்ணு கத்துக்குனீங்கப்பா. சரி, சொல்லு என்னா விஷயம்?”

“என் பேர் ஸ்ரீராம். வெண்ணிலா இலக்கிய வீதின்னு ஓர் அமைப்பை கஷ்டப்பட்டு நடத்திக்கிட்டு வரேன். ஒவ்வொரு பௌர்ணமி அன்னிக்கும் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

அடுத்து வரும் பௌர்ணமிக்கு ‘பெண்ணுரிமை அன்றும் – இன்றும்’ அப்படீங்கற தலைப்புல நீங்க பேசணும் ஐயா…”

“இந்த ஐயா, கொய்யால்லாம் நிறுத்திக்க. அது இன்னாது இலக்கியக் கூட்டமா? சரி, எத்தினி பேர் வருவாங்க?”

“குறைஞ்சது 300 பேர் வருவாங்க… உங்களுக்குன்னா 400 பேர்கூட வருவாங்க ஐயா…”

“யோவ், மறுபடியும் ஐயாங் கொய்யான்றியே…”

“எப்படித்தான் கூப்பிட..?”

“என் பேரிட்டுதான் கூப்பிடு..”

“அது எப்படிங்க..?”

“ஆவாதா..? சரி, ஜூலான்னு கூப்பிடு…”

அடுத்த ஆஃப் பாட்டிலை மேஜையில் தூக்கிவைத்தபடி அவரது வக்கீல் நண்பர் வெடித்துச் சிரிக்க, பெரியார்தாசன் அடக்கினார்.

“யோவ், இன்னாத்துக்கு இப்போ சிரிக்கிற? தம்பி இன்னான்னு நினைச்சுக்கும்? ‘ஜூலா’ அப்படீன்னா ஆடிக்கினே இருக்கறதுன்னு அர்த்தம்ப்பா. எனக்குப் புட்சுக்கிது. வெச்சுக்குறேன். அவ்ளோதான். நீ சொல்லு ஸ்ரீராம்… உன் கூட்டத்துக்கு வந்தா எனுக்கு எவ்ளோ குடுப்ப…?”

“என்கிட்ட இப்போ ஆறு ரூபா இருக்கு”

“அதுக்கு ஒரு க்வோட்டருனா வருமா..?”

“அது எனக்கு தெரியாது.”

“தெரிஞ்சுக்கடா…”

“…………”

“இன்னா உம்முன்னு பாக்குற…கோஷிக்குனியா..?”

“இல்லை…”

“ஏன்…கோஷிக்குனுதான் பாரேன்..?”

வெடித்துச் சிரித்தவர் அழுந்தச் சொன்னார்…

“தம்பி கேட்டுக்க… உன் கூட்டத்துக்கு கண்டிப்பா நான் வரேன். ஒரு சல்லிக் காசும் கேக்க மாட்டேன். ஏன் சொல்லு, நான் இல்லாமயே 300 பேரு வருவாங்கன்னு அட்சு வுட்ட பாரு… அந்த தெகிரியம் எனக்குப் புட்சுப்போச்சு… போட்றா என் பேர… உட்றா பாத்துக்கலாம்…”

அதன் பிறகு வெண்ணிலா இலக்கிய வீதிக்குச் சொன்ன நேரத்துக்கு முன்பே வந்திருந்து, ஏறத்தாழ இரண்டு மணி நேரம் பேசிக் கொடுத்தார் பேராசிரியர் பெரியார்தாசன். கூட்டம் 400ஐத் தாண்டியது. போகப் போக வாசலெல்லாம் நின்று கேட்டது. ஆரிய சமாஜம் பிதுங்கித் திணறியது.

அன்று அவர் சொன்ன இறுதிக் கருத்து இன்னமும் என் நெஞ்சில் தங்கி நிற்கிறது…

“பெண்ணுரிமை பத்தி என்னைப் பேசச் சொல்லுச்சி ஸ்ரீராம் தம்பி.

பெரியார் பெண்ணுரிமையை பேசுனாருன்னு நாங்கள்லாம் சொல்லினுக்குறோம். அவருக்கு முன்னாலயே வெள்ளக்காரன் பெண்ணுரிமைப் பத்தி சொல்லிட்டுப் போயிட்டான். எப்படின்னு கேளுங்க…

இந்த மண்ணை ஆளவந்த பிரிட்டிஷ்காரன்கிட்ட அன்னிக்கு மிலிட்டரி கெப்பாஸிட்டி இல்ல. படிக்காம சுத்திக்கினு இருந்த நம்ம கிராமத்தானுங்களையெல்லாம் மிலிட்டரிக்கு ஆளெடுத்தான்.

மிலிட்டரிக்கு ஆளடுத்தவன் ‘பரேடு’ வெச்சான். அதுல, “லெஃப்ட் – ரைட்”, “லெஃப்ட் – ரைட்..” அப்படீன்னான்.

படிக்காத கிராமத்தானுங்களுக்கு லெஃப்ட் தெரியுமா? ரைட்டுதான் தெரியுமா? முழிச்சிக்கினு இருந்த நம்மாளுங்களுக்கு ஈஸியா சொல்லிக் குடுக்க ஒரு ப்ளான் போட்டான் வெள்ளக்காரன்.

நம்ம ஊர்ல சல்லிசா கிடைச்ச பனமர ஓலைங்களையெல்லாம் தூக்கியாரச் சொல்லி அத, அத்தினி பேரோட இடது காலுலயும் கட்டிக்க சொன்னான்.

வலது கால ஃப்ரீயா வுட்டான்.

அடுத்த நாளு சொன்னாம் பாரு…

“ஓலக்கால் – வெறுங்கால்”, “ஓலக்கால் – வெறுங்கால்”

பரேடு பிச்சிக்கினு போச்சு.

புரிஞ்சுக்குங்க…

பெண்கள் ஓவரா சத்தம் போட்டா அது லெஃப்ட்!

சைலண்டா இருந்தா அது ரைட்டு !

வணக்கம்!”

ஆரிய சமாஜ அரங்கம் அதிர்ந்தது.

அதுவரைக்கும் இல்லாத ஆச்சரியமாக பலர் வந்து என்னிடம் பணம் கொடுத்துப் போனார்கள். மொத்தமாக 172 ரூபாய் சேர்ந்தது. அப்போதைக்கு அது பெரிய காசு.

பெரியார்தாசன் அவர்களை முதல் மாடியிலிருந்து இறக்கிக் கொண்டுவருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

வழக்கமாக விருந்தினர்களைக் கொண்டுசென்று விடும் கடமையைச் செய்யும் ‘வெண்ணிலா சங்கர்’ ஆரிய சமாஜத்தின் வாசலில் ஆட்டோவோடு தயாராக இருந்தான்.

பெரியார்தாசன் அவர்களை அதில் ஏற்றி விடப் போகும்போது…

“உங்களுக்காக வந்த பணம் இது…” என்று சொல்லி மொத்தத்தையும் அவரிடம் கொடுத்தேன்.

அதை வாங்க மறுத்த பெரியார்தாசன் சொன்னார்…

“தம்பி, நீயும் சரி, உன் பசங்களும் சரி ரொம்ப பர்ஃபெக்ட்டா இருக்கீங்க. எனக்கு ரொம்ப புட்சிப்போச்சி. எல்லாரையும் இட்டுக்கினுப் போய் இந்தப் பணத்துக்கு எதுனா வாங்கிக் குடுப்பா… நமக்கென்னாப்பா…அப்புறம் பாத்துக்கலாம்…வா ! ”

குதூகலமாய் எகிறி ஆட்டோவுக்குள் செட்டிலானார் பெரியார்தாசன்.

வெண்ணிலா சங்கர் ஆட்டோவை வீரு வீரென்று முடுக்கி மெல்லக் கிளம்பினான் .

நகர்ந்தபடியே கரம் கூப்பி சொன்னேன்.

“விஷயம் ஆட்டோ பின்னால வெச்சிருக்கேன். ரொம்ப நன்றி ஜூலா…”

எகிறிக் கத்தினார்…

“அட்சாம் பார்றா…”

விர்ர்ர்ர்ர்ர்….

*

கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதனைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். ஸ்ரீராம் சர்மா.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share