கோளறிஞர் ராமச்சந்திரன் – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

அன்று பௌர்ணமி.

மாலை சரியாக 6 மணி.

கல்பாக்கம் கடற்கரையில் அந்தப் பாட்டியும் பேரனும் அமர்ந்திருக்க, தொடுவானக் கடலில் அகண்ட சந்திரோதயம் நிகழ அதன் பேரழகை அணு அணுவாக ரசித்த பேரன் வாயைப் பிளந்தபடி பாட்டியின் முகம் பார்க்க, பாட்டி கண்சிமிட்டியபடி பேரனின் தலைகோதினாள்.

அந்தச் சிறுவன் ஆர்வம் மேலிடக் கேட்டான்…

“பாட்டி, நாளைக்கும் இதேபோல ஆறு மணிக்கு வந்து சந்திரோதயம் பார்க்கலாமா..?”

“6 மணிக்கு வேண்டாம்”

“ஏன்…?”

“மெல்ல 6.45க்கு வந்தா போதும்.”

“ஏன்…?”

“அப்பதான் சந்திரோதயம் நிகழும்”

“ஏன்..?”

“அதுதாண்டா கணக்கு”

பரம்பரையாய் கடத்தி வரப்பட்ட வேத விஞ்ஞானத்தை அந்தப் பாட்டி மெல்ல அடுத்த தலைமுறைக்குக் கடத்த ஆரம்பித்தாள்.

அப்படி ஆரம்பித்த அறிவியல் போதனையும் நாட்டமும்தான் அந்தச் சிறுவனைப் பௌர்ணமிக்கு எட்டாம் நாள் நள்ளிரவைக் கடந்த கடற்கரையில் காத்திருந்து சந்திரோதயத்தைத் தரிசித்து ஆனந்தப்பட வைத்தது.

கல்லூரிக் காலத்தில் தன் சொந்த முயற்சியில் கோள்களை ஆய்ந்தறியத் தொடங்கினார் திரு.ராமச்சந்திரன். சந்திர சூரியர்கள் செல்லும் வழி சப்தரிஷி மண்டலங்களின் மூவ்மண்ட், வெறும் அரை மணிக்கே தோன்றி மறையும் அபிஜித் முகூர்த்தம் எனப் பலவித வான விளையாட்டுகள் அவரது மனதை ஆக்ரமிக்கத் தொடங்கின.

ஆரம்பத்தில், தன் தொழிலையும் குடும்பத்தையும் கவனிக்க வேண்டியிருந்ததால் பகுதி நேரத்தை மட்டுமே கோளாராய்ச்சிக்குக் கொடுத்திருக்கிறார்.

1991இல்தான் மரபு வழி வான சாஸ்திரத்தைச் சற்று முழு வீச்சில் அணுகத் தொடங்கியிருக்கிறார்.

அவரது நுண்ணிய ஆய்வும் அடங்காத முனைப்பார்வமும் கடந்த 25 வருடங்களாக உருண்டு திரண்டு இன்று வியக்கத்தக்க வடிவத்தை அடைந்திருக்கின்றன.

கமர்ஷியல் மீடியா உலகம் அவருக்கு “புயல்” ராமச்சந்திரன் எனப் பெயர் சூட்டி அழைத்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், அவர் சொல்ல வருவது அதற்கும் மேல். அவரைப் பொறுமையாக அணுகிச் சரிவரப் புரிந்துகொள்ள இன்னமும் எவரும் முனையவில்லை என்றே தோன்றுகிறது.

திரு. ராமச்சந்திரன் அவர்கள் சென்னையில் இன்ட்டீரியர் டெகரேஷனுக்குப் பேர் பெற்றவர். சக்ஸஸ்ஃபுல் பில்டர்.

ஆனாலும், அவரது எண்ணமெல்லாம் வான மண்டலத்தையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்க, அவருடைய மனைவியாரும் அவருக்குப் பக்கபலமாக நின்று உற்சாகப்படுத்த 1991ஆம் ஆண்டு முதல் தன் அன்றாடத்தின் பெரும்பகுதியை வான சாஸ்திரத்தின் பக்கம் திருப்புகிறார் “கோளறிஞர்” திரு.ராமச்சந்திரன்.

அது, கணினி இல்லாத காலம். கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவும் கூகுளும் அன்று பிறந்தே இருக்கவில்லை. வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் இருப்பதுபோல பிரம்மாண்ட உபகரணங்களெல்லாம் துணைக்கு இல்லை.

“கோளறிஞர்” ராமச்சந்திரன் தனி மனிதனாகத்தான் போராடியாக வேண்டும். சமூகத்துக்கு நன்மை பயக்கும் என்றாலும் தனி மனித ஆய்வுக்கு அரசாங்கம் உதவ, இது அமெரிக்காவோ, ஜெர்மனோ இல்லை.

தனக்குத் தோன்றும் ஆய்வுத் தகவல்களைக் கொண்டு கூட்டி சரிபார்த்தால் அல்லவா அவரால் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். என்ன செய்வது ?

அன்று அவரை வழிநடத்தவல்ல ஒரே சாதனமாக இருந்தது “பஞ்சாங்கம்”.

மைலாப்பூரில் கௌசிகன் என்னும் பெரியவரைத் தேடி அடைந்து அவரின் நன்மதிப்பைப் பெற்று அவர் சேகரித்து வைத்திருந்த 50 வருட பழைய பஞ்சாங்கங்களை எல்லாம் ஜெராக்ஸ் எடுத்துக்கொள்கிறார்.

அன்று வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த திரு.எஸ்.கே.சுப்ரமண்யம் அவர்கள் இவரது கூரிய ஆராய்ச்சி அறிவை மெச்சி 1893 முதல் 1993 வரையிலான 100 வருட சூறாவளிக் குறிப்புகளுக்கான டேட்டாவைக் கொடுத்து உதவுகிறார்.

சிலவற்றை வெளியே தருவதற்கில்லை என்று சொல்லிவிட அங்கேயே அமர்ந்து அத்தனையையும் தன் கைப்படப் பிரதி எடுத்துக்கொள்கிறார்.

இதில் போற்ற வேண்டிய இன்னொரு விஷயம் அவருடைய மனைவியார் திருமதி பத்மா ராமச்சந்திரன் அவர்களும் கூடவே அமர்ந்து கை ஓயப் படிகளைப் பிரதியெடுத்தபடி கணவரின் ஆய்வுக்குத் துணை நிற்கிறார்.

அதன் பின் தீவிர ஆய்வில் இறங்கியவரை 25 ஆண்டுகளாகப் பெரிதும் வழி நடத்தியது மரபு வழி ஞானம் என்றே சொல்லலாம்.

ஆரம்பத்தில், புயல் மழை பூகம்பம் குறித்த தனது கண்டுபிடிப்புகளை வெளியே சொல்லாமல் தன்னளவில் வைத்தபடி கவனித்துக்கொண்டே இருந்திருக்கிறார்.

இவரது கணிப்புகளின் வெற்றிச் சதவிகிதம் 80 சதவிகிதத்தை அடைந்துவிட, சாதித்துவிட்டோம் என்பதைவிடக் குற்ற உணர்வே அவருக்கு மேலிட்டிருக்கிறது.

“அடடா, முன்கூட்டியே சொல்லியிருந்தால் பொருள் – உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாமே…” எனத் தன்னைத் தானே நொந்துகொள்கிறார்.

அதன் பிறகே வானிலை குறித்த தன் முன் அறிவுப்புகளை வெளியிட ஆரம்பிக்கிறார். கோளறிஞரின் கணிப்புகள் ஒரு நாள் தள்ளி நடக்கலாம் அல்லது இரண்டு மூன்று டிகிரிகள் தள்ளி வேறொரு பிரதேசத்தில் நடக்கலாம். ஆனால், கணிப்புகளுக்கான நிகழ்வுகள் பொய்த்ததேயில்லை.

வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இ-மெயிலின் மூலமாக இவருக்குத் தூண்டில் இட்டபடியே இருக்கிறார்கள்.

ஆனால், இந்த அரசாங்க அமைப்புகளோ, அதிகாரிகளோ அசைந்து கொடுப்பதாக இல்லை. கோளறிஞரின் குறிப்புகளை அசட்டை செய்தபடியே காலம் தள்ளுகிறார்கள். எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாததால் இவரும் தன் போக்கில் நகர்ந்துகொண்டிருக்கிறார்.

வேத விஞ்ஞானம் சார்ந்த தன் முன்னறிவிப்புகளை ஏறத்தாழ ஒரு வருடத்துக்கு முன்பே வெளியிட்டுவிடுகிறார். அந்த அளவுக்கு அதை இவர் நம்புகிறார்.

அதன் துல்லியம் 80 சதவிகிதத்தைக் கடந்து தற்போது 90 சதவிகிதமாகி நிற்கிறது.

2018 ஆகஸ்ட் 12 முதல் 16 வரை கடும் புயல் ஒன்று வங்காள விரிகுடாவில் வீசும். அது ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் முதல் ஒடிசாவின் சந்திப்பூர் வரையில் பேரழிவுகளைச் செய்து அடங்கும் என்றார். அப்படியே நடந்தது. சமீபத்திய ஹாங் காங்கின் மான்க்ஹூட் புயலும் இவர் சொன்னபடியே வீசியது.

எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவைக் கலங்கடித்த ஃப்ளாரன்ஸ் புயலை உலக விஞ்ஞானக் கழகமே ஒன்று கூடித் தவறாக கணித்தது. ஃப்ளாரன்ஸ் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தும் என்றும் 14ஆம் தேதியே வீசிவிடும் என்றும் சொன்னது.

ஆனால், “இல்லை, ஃப்ளாரன்ஸ் 15ஆம் தேதிதான் கரை கடக்கும். பேரழிவெல்லாம் செய்யாது. பெருவெள்ளம் மட்டும் உண்டு” என்று அடித்துச் சொன்னார் கோளறிஞர் ராமச்சந்திரன்.

அவர் சொன்னபடியே வெள்ளிக்கிழமை முழுவதும் கரோலினா கடற்கரையிலேயே விண்டோ ஷாப்பிங் போல வெட்டியாகச் சுற்றியிருந்துவிட்டு 14ஆம் தேதிக்குப் பிறகுதான் வலுவிழந்து கரையைக் கடந்தது. பேரழிவும் இல்லை. வெள்ளம் பெருக்கெடுத்து மூழ்கடித்தது.

இது ஆச்சரியம் என்றால் இதையெல்லாம் ஒரு வருடத்துக்கு முன்பே எந்த சாட்டிலைட் உதவியும் இல்லாமல் இவர் சொல்லிவிடுவது பேராச்சரியம்.

“எப்படி சார்…?”

“எல்லாம் வெறும் கணக்கு..” என்று சாதாரணமாக சிரிக்கிறார்.

“அப்படிச் சொல்லிவிடாதீர்கள். இது வெறும் கணக்கில்லை. அப்படியென்றால் அரசாங்க அதிகாரிகளே போட்டுவிடுவார்களே. இது நாஸாகூடப் போட முடியாத பெருங்கணக்கு. அதை சர்வ சாதாரணமாக நீங்கள் போடுகிறீர்கள் என்பது ஆச்சரியக் கணக்கு…”

“ஆச்சரியம் என்றால் அதற்குக் காரணம் இந்த மண்ணுக்கே உரிய வேத விஞ்ஞானம்தான். நான் வெறும் கருவி. அவ்வளவே.”

ஆம், இவரது கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக இவர் சொல்வது வேத விஞ்ஞானத்தை.

“விஞ்ஞானம் என்று சொன்னால் போதாதுங்களா. வேத விஞ்ஞானம் என்று இணைத்தேதான் சொல்ல வேண்டுமா..?”

“பெற்றவர் பெயரை இனிஷியலாக வைத்துக்கொள்வது கௌரவமல்லவா… அந்தக் கௌரவத்தை இழக்கச் சொல்கிறீர்களா?”

கோளறிஞர் ராமச்சந்திரன் அவர்கள் சொல்வதை ஊன்றிக் கவனித்தால் வேதத்தை விஞ்ஞானப் புத்தகமாக அணுகிவிட்டால் பல நன்மைகள் பிறந்துவிடும் என்றே தோன்றுகிறது.

ஆம், பாரத தேசத்தில் வாழ்ந்த ரிஷிகள், முனிவர்களெல்லாம் இந்த மண்ணில் நிறைந்து வாழ்ந்த ஈடு இணையற்ற அக்காலத்து விஞ்ஞானிகளாகவே இருந்திருக்க வேண்டும்.

விஞ்ஞானத்தின் முடிவில் அவர்கள் மெய்ஞ்ஞானத்தை உணர்ந்ததால் தனி மனித சாதனைகள் சாம்பலுக்கே சொந்தம் என விபூதி பூசி நின்றிருக்கக்கூடும்.

கருத்தை விட்டுவிட்டுத் தோற்றத்தைப் பற்றிக்கொள்ளக் கூடாது. அது அறிவுலகுக்கு ஆகாது.

குங்குமம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதினார்.

பகலில் தோன்றும் நிலவு; – கண்

பார்வைக்கு மறைந்த அழகு.

கவனியுங்கள்.

வளர்பிறை அஷ்டமத்து சந்திரன் என்பது பட்டப்பகலில் சூரியன் உச்சியில் இருக்கும் தருணத்தில் கிழக்கில் உதயமாகும். பட்டப்பகல் என்பதால் சூரிய வெளிச்சத்தில் அது பார்வைக்குத் தெரியாது.

இந்த விஞ்ஞானத்தைக் கண்ணதாசனுக்குள் கடத்தியது எது? வேத விஞ்ஞானத்தில் தோய்ந்த இந்த மண்ணின் பரம்பரை மரபணுச் சாதனை அல்லவா அது?

அந்த பேராச்சரியத்தைப் பாழும் மாச்சரியங்களுக்கிடையே போட்டு நசுக்கிக்கொள்வதால் இந்த சமூகத்துக்குத்தானே நட்டம் !

“கோளறிஞர்” திரு. ராமச்சந்திரன் அவர்களிடம் அவரது கண்டுபிடிப்புகளின் சூட்சுமங்களைப் பற்றிக் கேட்டேன்.

“மன்னிக்கவும். வேத விஞ்ஞானம் என்பது இந்த தேசத்தின் சொத்து. அரசாங்கம் பேட்டண்ட் செய்துகொள்ளும் வரை அதனை வெளியிடவே மாட்டேன். ஆனால், நீங்கள் இவ்வளவு கேட்பதால் பொது அறிவுக்காகச் சில விஷயங்களை மட்டும் சுருங்கச் சொல்கிறேன்.

விண்ணில் இயங்கும் கோள்களும் நட்சத்திரங்களும் இந்த பூமியைக் கட்டாயம் பாதிக்கின்றன.

ஒவ்வொரு முறை இந்த பூமி பாதிக்கப்படும்போதும் கோள்களின் வியூகங்கள் வேறுபட்டு இருப்பதை வேத விஞ்ஞானத்தின் மூலம் என்னால் புரிந்துகொள்ள முடிந்துவிட்டது.

கோள்களுக்கிடையேயான அந்த முஸ்தீபுகள்தான் உலக வானிலையை நிர்ணயிக்கின்றன.

அதன்படிதான் புயலும் பெருமழையும் பூகம்பமும் எரிமலை வெடிப்பும் தொடர் மின்னல் தாக்குதல்களும் இந்தப் பூமியில் நிகழ்கின்றன.

கோள்களின் மொழியை அரும்பாடுபட்டுப் புரிந்துகொண்டு, அதை மனித மொழிக்குப் பெயர்த்துச் சொல்கிறேன். அதுவே என்னுடைய எல்லை.

குறித்துக்கொள்ளுங்கள். இயற்கையை எந்தச் சக்தியாலும் தடுத்துவிட முடியாது.

ஆனால், ஒருவர் நம் மேல் தண்ணி ஊற்றுவதைக் கண்டுவிட்டால் சட்டென நகர்ந்து தப்பித்துக்கொள்கிறோம் அல்லவா? அதுபோல் நகர்ந்து தப்பித்துக்கொள்ளத்தான் வேத விஞ்ஞானம் நமக்கு உதவுகிறது.

ஒரு முன்னறிவிப்பாளனாகத்தான் நானும் சொல்கிறேன். தீர்க்கதரிசி என்னும் தோரணையெல்லாம் இங்கே யாருக்கும் இருக்க முடியாது.

தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.

தமிழகத்தில் செப்டம்பர் 25 முதலே மழை ஆரம்பித்துவிடும்.

அக்டோபர் 31 – நவம்பர் 25 காற்றுடன் கூடிய மழையும் புயலும் தாக்கவிருக்கிறது. ஒன்றல்ல இரண்டு புயல்கள். இரண்டும் நாகப்பட்டினத்தில் கடக்கும்.

நவம்பர் 27 முதல் டிசம்பர் 31 வரை புயலற்ற மழை கட்டாயம் உண்டு.

கோள்களின் முஸ்தீபுகளுக்கு ஒரு ட்ராக் ரெக்கார்டை வைத்திருக்கிறேன். அதனைத் தொடர்ந்து ஆராய்ந்துகொண்டே போனபோது 1670 வரைக்கும் அதாவது கடந்த 350 வருடங்களில் இப்போது கோள்களுக்கிடையே ஏற்படப் போகும் முஸ்தீபுகளின் தடயம் எங்குமே காணப்படவில்லை. அது சில சமிக்ஞைகளை எனக்குக் கொடுக்கின்றன.

மேலும், 2019இல் அபூர்வமானதோர் வானவியல் சம்பவம் நிகழவிருக்கிறது.

மொத்தத்தையும் கொண்டு கூட்டிப் பார்த்தால் அடுத்த மூன்று மாதங்களுக்குத் தமிழகத்தை நோக்கிய கோள்களின் முஸ்தீபுகள் வித்தியாசமானவையாக, அச்சமூட்டுவையாகவே இருக்கின்றன.

எனது கணிப்பு, 90 சதவிகிதம் மத்திய – தென்தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்குப் பெருமழை கொட்டித் தீர்க்கும். இது இலங்கை, அந்தமான் பக்கமாக திரும்பிவிட ஒரு 10 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது.

குறி தப்பலாம். ஆனால், நிகழ்வு தப்பவே தப்பாது.

அரசாங்கமும் மக்களும் எச்சரிக்கையாக இருந்து பொருள், உயிர் சேதமில்லாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமே என்னும் அக்கறைதான் எனது இந்த முன்னறிவிப்பின் நோக்கம். இதனையும் நான் ஒரு வருடத்துக்கு முன்பே கணித்துவிட்டேன்…”

மிக அமைதியாகச் சொல்லி முடித்தவரிடம் கேட்டேன்.

“ஒருவேளை நீங்கள் சொல்வது நடக்கவில்லையென்றால்…?”

“சாஸ்திரமறிந்தவர்கள் சேலஞ்ச் செய்ய மாட்டார்கள். தனிமனித சவால்கள் என்றுமே கூடாது. அது அபச்சாரம் என்று போதிக்கின்றன நமது சாஸ்திரங்கள். தவறு ஏற்பட்டுவிட்டால் அதற்கு எளிய மனிதனாகிய ராமச்சந்திரன்தான் பொறுப்பு. அகண்ட வேத விஞ்ஞானம் எந்த வகையிலும் பொறுப்பாகாது.”

அதுசரி, ஒருவேளை “கோளறிஞர்” ராமச்சந்திரன் அவர்கள் சொல்வது போலவே எல்லாம் துல்லியமாக நடந்துவிட்டால் அவருக்கு நாமென்ன பாரத ரத்னாவையா தூக்கிக் கொடுத்துவிடப் போகிறோம்? மேலும், இது போன்ற கேள்விகளை எல்லாம் நாஸாவிடம் சென்று கேட்டுவிடத்தான் முடியுமா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

“சரி, 80% கண்டுவிட்ட உங்கள் வேத விஞ்ஞானம் 100%ஐ அடைந்துவிட என்ன செய்ய வேண்டும் சார்?”

“அது மிக எளிது. குறைந்த செலவே பிடிக்கக்கூடிய சில வசதிகளை எனக்குக் கொடுக்க வேண்டும். எனக்கு உதவ ஐம்பது இந்திய ஆராய்ச்சி மாணவர்களை அனுப்ப வேண்டும். இரண்டே வருடங்கள் போதும்.

அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு வீசக்கூடிய புயல், கொட்டக்கூடிய மழை, வெடிக்கக் கூடிய பூகம்பம், தாக்கக் கூடிய இடி மின்னல்களை எல்லாம் பட்டவர்த்தனமாக என்னால் கணித்துவிட முடியும்.

எந்தெந்த நகரங்களை எந்தெந்த நாளில் தாக்கும் என்பதைக்கூட மிகத் துல்லியமாகச் சொல்லிவிட முடியும்…”

ஆர்ப்பாட்டமில்லாமல் தன்னம்பிக்கையோடு அவர் சொல்லிக்கொண்டே போக எனக்கு ஆயாசம் மேலிட்டது.

தொழிலில் தன்னிறைவு அடைந்த ஒருவர், தன்னுடைய சொந்த செலவில் பல்லாண்டுக் காலம் போராடிப் பற்பல ஆய்வுகளைச் செய்து பொக்கிஷம் ஒன்றைக் கண்டடைந்து, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தச் சமூகத்துக்கு அதனை அர்ப்பணிக்க முன்வரும்போது அவரை நன்றியோடு வரவேற்பதுதான் நாகரிகம்.

கோளறிஞரின் எச்சரிக்கையை மனதில் குறித்துக்கொள்வோம்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

(**கட்டுரையாளர்:** ஸ்ரீராம் சர்மா எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதனைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். ஸ்ரீராம் சர்மா.)

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**

**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**

**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**

**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share