அஞ்சுகத்தாரின் சிரஞ்சீவி! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

ஒரு மகா சகாப்தம் நம்மிடமிருந்து விலகி நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறது.

எண்பதாண்டுக் காலம் இந்த மண்ணைப் புரட்டிப்போட்ட திராவிடப் புலத்தின் பெரும்புயல் ஒன்று ஓய்ந்தமைந்து கொண்டது.

கரகரத்த காந்தக் குரலில் திக்கெட்டிலும் தமிழைப் பாய்ச்சிக்கொண்டிருந்த அந்தக் குரல்வளையைக் காலம் கருணையின்றிப் பிடுங்கி நொய்யாட்டம் ஆடிவிட்டது.

காவிரியின் தென்கரையிலிருந்து புறப்பட்ட அந்தத் திரு, காவேரி மருத்துவத்தை மறுத்துக் கரைந்தேவிட்டது.

மனம் கசிந்து திமிறிக் கசந்து கனக்கிறது.

இனிக் காண முடியுமா அதுபோலொரு பனித்த முகத்தை?

“வாய்யா..” என்றழைக்கும் அந்த வாஞ்சையான குரல் எங்கே? பளீரென்னும் அந்த வெண்முல்லைச் சிரிப்பு எங்கே? சொல்லுக்குச் சொல் எகிறியடிக்கும் அந்த நா எங்கே? அதிகாலைத் துயில் விடுத்தெழுந்து “உடன்பிறப்பே” என்றெழுதிக் குவித்த அந்தக் கரங்கள் எங்கே?

கலித்தொகைக்கும் குறுந்தொகைக்கும் புறநானூற்றுக்கும் புதுக் கவிதையில் பொழிப்புரை எழுதிக் காவியத் தமிழ் கொண்டாடிய அந்தக் கற்பனைத் தரு எங்கே?

இந்தியத் தமிழ் அரசியலை விரல் நுனியில் வைத்திருந்த அந்தப் பேரறிவு எங்கே? அரியணையை ஓயாமல் அலங்கரித்த அந்த அனுபவம் எங்கே?

அன்றந்த கோபாலபுரத்து மாடியறையில் சிறுவன் என்னை அருகழைத்து வருடிக் கொடுத்த அந்த மென் விரல்கள் எங்கே? எங்கே? அந்தத் தமிழ்க் கோ எங்கே?

கோபாலபுரத்துக் குரிசிலின் பூத உடலை இந்த மண் சொந்தம் கொண்டாடக் காத்திருக்கிறது.

பிறப்பெடுத்த எவருக்கும் இது நேர்ந்துவிடக் கூடியதுதான் என்றாலும் இந்தப் பேரிழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் என தெளிய மனம் சிக்கித் தடுமாறிப் புலம்பிக்கொண்டே இருக்கிறது.

120 வயதுவரை வாழ்ந்தவர் மகான் இராமாநுஜர் என்பார்கள். அவரைக் கனியக் கனியக் கரைந்து எழுதிய கலைஞரை 94 வயதிலேயே அழைத்துக்கொண்டது ஏன் கடவுளே ?

கலைஞரது பூத உடல் வேண்டுமானாலும் இந்த மண்ணை விட்டு அகன்றிருக்கலாம். ஆனால், கலைஞரின் ஆன்மா இந்த மண்ணை விட்டு என்றும் அகலாது.

என்றும் வாழும் சிரஞ்சீவியாய் இந்தத் தமிழ் மண்ணைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருக்கும்.

அஞ்சனையாள் பெற்ற மகன் அனுமன் சிரஞ்சீவி என்றால் அஞ்சுகத்தாள் பெற்ற மகன் கலைஞரும் சிரஞ்சீவிதான்.

எங்கெல்லாம் ராமாயணம் சொல்லப்படுகின்றதோ அங்கெல்லாம் ஏதோ ஓர் மூலையில் அமர்ந்துகொண்டு கேட்டபடியே அனுமன் ஆசீர்வதிப்பார் என்பது உண்மையானால்…

எங்கெல்லாம் தமிழும் தமிழ் வரலாறும் கொண்டாடப்படுகின்றதோ அங்கெல்லாம் வந்தமர்ந்துகொண்டு கலைஞரும் ஆசீர்வதித்துக்கொண்டே இருப்பார்!

ஐயா, ஈடு இணையற்ற எங்கள் கலைஞரே…

ஓவியப் பெருந்தகை வேணுகோபால் சர்மா அவர்களின் குடும்பம் சார்பாக எனது நன்றி கலந்த கண்ணீரைத் தங்கள் பேரான்மாவின் வழிச்செலவுக்கு பணிந்தளித்து வணங்குகிறேன்.

பெரும்பொருளோடு ஒன்றி அமையும் ஐயா!

பேரமைதி கொண்டு அமையும்!!

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share