இந்தியப் பிரிவினை மட்டும் போதாதே. நிரந்தர பிரச்சினை ஒன்று அவசியமாயிற்றே என்று பரபரத்த வெள்ளையர்களின் மைக்ரோ திட்ட மிடலின் மடி வலையில் வசமாகச் சிக்கியவர் காஷ்மீரத்தின் மகாராஜா டோக்ரா குலத்திலகம் ஹரிசிங்.
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனின் உயர் நிலைக் குழுவில் இரண்டாண்டுக் காலம் முக்கியப் பங்காற்றியவர்தான் இந்த ஹரிசிங். அப்போது முதலே அன்னியர்கள் ஹரிசிங்கை செல்லம் கொஞ்சி வந்திருப்பார்கள் என நம்ப இடமிருக்கிறது.
ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு நெருங்கிய தொடர்பிலிருந்தவரான இவர் பிரிட்டனின் கிளிப்பிள்ளையாக மாறிய துரதிர்ஷ்டத்தைப் இப்படிப் புரிந்து கொள்ள முடிகிறது.
1947 அக்டோபர் 26 ஆம் தேதி வைஸிராய் மௌண்ட்பேட்டனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஹரிசிங் இவ்வாறு எழுதுகிறார்…
“லார்டு மௌண்ட்பேட்டன் அவர்களே,
காஷ்மீர் என்பது கலாச்சாரம் மற்றும் பொருளாதார அடிப்படையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவானது. மேலும், சோவியத்தும் சீனாவும் காஷ்மீரத்தின் எல்லை நண்பர்கள் என்பதையும் மறுக்க முடியாது. எதை ஏற்றுக் கொள்வது என்னும் முடிவெடுக்கவோ அல்லது நல்லுறவோடு தனித்து நிற்கும் முடிவெடுக்கவோ எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும்…”
கவனிக்க வேண்டும். ஹரிசிங்கின் காஷ்மீர் மட்டுமல்ல, அன்றைய சமஸ்தானங்கள் மொத்தமும் கலாச்சார பொருளாதார அடிப்படையில் பின்னிப் பிணைந்ததுதான் என்பது உலகறிந்த உண்மை. இரண்டான பின்னே அதைப் பற்றி நீட்டி முழக்குவதில் அர்த்தமில்லை.
மேலும், தனித்து ஆள விருப்பமுள்ள ஒருவர் ‘எனக்குத் தேவை சுயாட்சிதான். எவரோடும் சேர விருப்பமில்லை…’ என்று ஒரே வரியில் அடித்துச் சொல்லியிருக்க வேண்டும் அல்லவா ?
மாறாக, பாகிஸ்தானோடு சீனாவையும் சோவியத்தையும் கடிதத்துக்குள் கொண்டு வந்து வழவழத்தது ஏன் ?
நான்கு எல்லைகளை முன்னே வைத்து நாடகமாடியது ஹரிசிங்கா அல்லது ஆங்கிலேயர்கள் எழுதிக் கொடுத்த திரைக்கதையா ?
**சூழ்ச்சி வலை**
அதாவது ஒருவரின் உடைமையை மறுத்து அதை இரையாக மாற்றிப் பொதுவில் வைத்து அதற்காக நான்கு பேரை அடித்துக் கொள்ளத் தூண்டுவதின் மூலம் அந்தப் பிரதேச நிம்மதியை நிரந்தரமாகக் கெடுப்பது.
அதன்மூலம், எதிர்காலத்தில் மத்தியஸ்தம் என்ற பேரில் பழைய முதலாளி என்னும் ஹோதாவில் உள்ளே நுழைவதற்கான வழியை திறந்தே வைத்திருப்பது.
இதுதான் அன்னியர்களின் குயுக்தி நிறைந்த தொலை நோக்குத் திட்டமாக இருந்திருக்க முடியும் என்று சொன்னால் அதை மறுக்க முடியாது அல்லவா ?
அன்னியர்களின் திட்டப்படி தனது பங்களிப்பை செய்து விட்டாலும் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து எழுந்த மூர்க்கமான திடீர் வல்லாக்ரமிப்பைக் கண்டு அலறிய ஹரிசிங்…
‘இது சரிப்படாது. இந்தியாவோடு இணைந்து கொள்வதே சரி…’ என முடிவெடுத்து நேருவுக்குக் கடிதம் போட்டே விட்டார்.
**வரலாற்றுப் பிழை ( Monumental Mistake )**
அடடா, காஷ்மீர் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்துவிடும் போலிருக்கிறது என்று எல்லோரும் நம்பிக் கொண்டிருந்த வேளையில், பண்டித நேரு அடுத்த உபயதாரராக காட்சிக்கு வந்தார்.
காஷ்மீர் பிரச்சினையை தேவையே இல்லாமல் ஐ. நா சபைக்கு கொண்டு போய் சேர்த்தார். ஐ. நா. வுக்கு எடுத்துச் செல்ல தூண்டியது பாகிஸ்தான்தான் எனினும் அந்தத் தூண்டுதலுக்கு பின் இருக்கும் அரசியல் சூழ்ச்சியை உணர முடியாதவரல்லர் நேரு.
இது இந்தியாவின் எதிர்கால நிம்மதிக்கு பங்கம் விளைவித்துவிடும் என அன்றைய உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல் அவர்களோடு ஆச்சாரிய கிருபளானி, வி.பி.மேனன் போன்ற விவரமறிந்தவர்கள் பலரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட ரோஜாத் தலைவர் நேரு காது கேளாதது போல் இருந்துவிட்டது ஏன் என்பது மில்லியன் டாலர் கேள்வி !
எது, எப்படியோ பிரித்தானியர்களின் எண்ணம் போல காஷ்மீரை கருமை சூழ்ந்தது. ஏறத்தாழ 73 வருடங்களுக்குத் தீராத் தலைவலியாக இருந்து இன்று தீர்க்கப்பட்டிருக்கிறது.
மொத்தமாகத் தீர்ந்துவிட்டதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தீர்ந்து விடுமா என்றால் அது, அரசியல்வாதிகளின் கைகளில் இருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் வாக்கு வங்கி 40 லிருந்து 49 சதவிகிதமாக அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டும் பாஜக நாங்கள் இஸ்லாமியர்களின் மனங்களை வென்றுள்ளோம் என்கிறது.
அமைதியை விரும்பும் இஸ்லாமியர்களின் அரவணைப்பாகவும் அதைக் கொள்ளலாம். அந்த அமைதிப் பயணத்தைக் காஷ்மீரிலும் கொண்டு நிறுத்த வேண்டியது ஆளுங்கட்சியின் பொறுப்பு. செய்யும் என்று நம்புவோம். பிரார்த்திப்போம்.
எளியவர்களான நம்மிடம் இருப்பது இரண்டே ஆயுதங்கள்தான். ஒன்று ஓட்டு. மற்றொன்று பிரார்த்தனை.
ஓட்டை பணப்பிசாசுக்கு தின்னக் கொடுத்து பல காலம் ஆகிறது. மிச்சம் இருப்பது பிரார்த்தனை ஒன்றே. காஷ்மீரின் நிம்மதிக்கு அதைக் காணிக்கையாக்குவோம்.
**ஒரு சொல் கேளீர் !**
காஷ்மீர் மக்கள் மட்டுமல்ல. உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் ஆர்ப்பாட்டமற்ற, அமைதியான, நிம்மதியான வாழ்க்கைக்கு ஏங்குகின்றார்கள். அதற்குண்டான பாதையைத் தேர்ந்தெடுத்து நகரத் துவங்கி விட்டார்கள்.
ஒரு காலத்தில் இயந்திரப் புரட்சி, பசுமைப் புரட்சி, தொழில்நுட்பப் புரட்சி என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருந்த மேல்தட்டு மக்கள்,
இன்று அவைகளால் வந்து சேர்ந்துவிட்ட மன அழுத்தத்தின் கொடுமையை உணர்ந்து கொண்டவர்களாக அமைதியான வாழ்க்கையே போதுமடா சாமி என ஆன்மீக வகுப்புகளை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதை உலகமெங்கும் காண்கிறோம்.
இந்திய மக்களுக்குத் தேவை நிம்மதி. அதை பாஜக கொடுத்தாலும் சரி, காங்கிரஸே கொடுத்தாலும் சரி என்பதே கணக்கு.
தங்களது வாழ்க்கையை மீண்டும் மீண்டும் மன அழுத்தத்தில் தள்ளக் கூடிய நடவடிக்கைகளை யார் எடுக்கப் பார்த்தாலும் அப்படிப்பட்டவர்களை இந்திய மக்கள் அடியோடு ஒதுக்கி விடப் போகிறார்கள் என்பது சர்வ நிச்சயம்.
**இந்திய அரசியல்வாதிகளே…**
பொது நலத்தையே இழந்த பின் சுய உரிமை பேசத் தகுதி உண்டா அந்தத் தருமனுக்கு ? என அன்றிந்த மண்ணில் பாஞ்சாலி கேட்ட அமிலக் கேள்வியை மனதில் நிறுத்துங்கள்.
**அன்பு பாகிஸ்தானியர்களே…**
ஆஃப்கன் தாலிபான்களால் நீங்கள் அளவுக்கு அதிகமான சேதங்களைக் கண்டாகி விட்டது. இந்தியாவிடமிருந்து வெறும் இருபது சதவிகித நிலத்தைத்தான் பாகிஸ்தானாகப் பெற்றீர்கள். அதையும் கூட செழிப்பாக வைத்திருக்கத் தெரியவில்லை என்றால் உலகம் உங்களைப் பழிக்கும்.
பழியும் பகையும் போதும். மக்களுக்காகத் தோன்றியவைகள்தான் மதமும் கொள்கைகளும். எந்த மதமும் தனக்காக மக்களைத் சாகச் சொல்லவில்லை. அப்படித் திரித்துக் கூறுபவர்கள் கலகக்காரர்களிடம் கையூட்டுப் பெற்றவர்களே என்பதை ஒட்டுமொத்த உலகமும் இன்று உணர்ந்து கொண்டுவிட்டது. தயவு செய்து சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடியுங்கள்.
இனி ஒரு உலகப் போருக்கு எந்த நாடும் தயாராக இல்லை.
முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகளின் தேவையற்ற பஞ்சாயத்துகள், அதிகப் பிரசிங்கித் தனமான மத்தியஸ்தங்கள், காலம் கடந்த மேல் பூச்சு அக்கறைகள் எல்லாம் மக்களாலேயே பழித்து ஒதுக்கப்படட்டும்.
மனிதத்தை மட்டுமே முன் வைக்கும் உயர்தத்துவ அரசியல் உயர்ந்து எழட்டும். அன்பின் அலைகளால் இந்த பூமி தழைக்கட்டும்.
கலகங்களுக்கான அனைத்துக் கதவுகளும் அடைக்கப்படட்டும்.
காஷ்மீரின் கதுப்பான சிகப்பு ஆப்பிள் இன்னும் இன்னும் தித்திக்கட்டும்.
I முற்றும் I
[கவனம் புதிது 1](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/21/12)
[கவனம் புதிது 2](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/23/10)
[கவனம் புதிது 3](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/25/11)
[கவனம் புதிது 4]( https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/27/8 )
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/26/52)**
**[ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/27/19)**
**[ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/26/28)**
**[மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி: ரிசர்வ் வங்கி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/27/20)**
**[ஆந்திராவுக்கு நான்கு தலைநகரங்கள்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/27/4)**
�,”