இந்தியப் பிரிவினைத் திட்டத்தை திரைமறைச்சதியாகக்கொண்டு ஆங்கில அரசாங்கத்தால் அன்று விதைக்கப்பட்ட மதபேதத்துக்கு அடி உரமாகப் போனது முகம்மது அலி ஜின்னாதான் என்பார்கள் சிலர்.
அல்ல, அல்ல அது காந்தி என்ற பக்கிரிக்கோல ஆளுமைக்கும் ஜின்னா என்ற மேட்டிமைக்கார ஆளுமைக்கும் இடையே நிகழ்ந்த தன் முனைப்புப் போர் (Ego War) என்பவர்களும் உண்டு.
கொஞ்ச நஞ்சமல்ல. அன்றந்த ஜூன் மாதத்து வெட்டவெளிப் பொட்டலில் ஏறத்தாழ இரண்டு கோடிப் பேர் தங்கள் வீடிழந்து உடைமைகள் இழந்து அண்டை அயல் சுற்றங்களை இழந்து… எங்கோ இருக்கும் புதிர்ப் பூமியை நோக்கி விரக்தியே வடிவாக ஊர்ந்து நகர்ந்த அந்தக் கொடுங்காட்சியை அமைதியான மனநிலையோடு எழுதி விட முடியாது.
இருபுறத்திலிருந்தும் நிகழ்த்தப்பட்ட அந்த கொடூர நகர்வு நவீன வரலாற்றின் மிகப்பெரும் இடப்பெயர்வாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.
**வல்லிடப் பெயர்வின் தாக்கம் !**
பசிக்கு அலையும் விலங்குகள் அல்லர் மனிதர்கள். மனிதர்களின் பாசமும் நேசமும் ஈரமும் சாரமும் பிறந்த மண்ணோடு இரண்டறக் கலந்தது.
பரம்பரை பரம்பரையாக உறங்கி எழுந்து வாழ்ந்த பூமி, உண்டு செரித்த தாவரம், அள்ளிக் குடித்த தண்ணீர், நீந்திப் பழகிய கிணறு, நிலவொளியில் ஆடிக்களித்த விழுது, பொழுதைக் கழித்த ஏரிக்கரை, குருவியின் க்ரீச்சுகள், உறவைச் சொல்லி அழைத்த கறவைகள், மடி நிறைந்த கனவுகள் அத்தனையையும் அம்போவென போட்டுவிட்டு…
இஸ்லாமியராக மாறிப்போன ஒரே காரணத்துக்காக கண்காணாததொரு பூமியை நோக்கி கனத்த மௌனத்தோடு நகர்ந்துபோவது என்பது அப்பாவிகளின் மனத்தை எப்படிப்பட்ட மனக்கிலேசத்துக்கு உள்ளாக்கும் என்பதை அனுபவித்தாலன்றி உணர்வது கடினம்.
போலவே, இந்துவாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்தால் நடுகல் உட்பட சகல சுகங்களையும் துறந்து குலதெய்வக் கோயிலின் கடைசி தரிசனக் காட்சியை மட்டுமே பழந்தனமாகச் சுமந்து கொண்டு… ஏதிலிகளாக இடம்பெயர்ந்து ஏழைகளாக வந்து சேர்ந்தவர்களின் மனநலச் சிதைவை எண்ண எண்ண எழுதும் விரல்கள் நடுங்குகிறது. பேரச்சம் மனதில் கவிந்து கலவரப்படுத்துகிறது.
சுமார் 4 லட்சம் உயிர்ப்பலிகள். 75,000த்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள். கண்ணீரோடு நடந்து முடிந்த இந்தியப் பிரிவினை எனப்படும் அந்த வல்லிடப் பெயர்வு பிரித்தானியக் கொடுமைகளின் அதி உச்சம். குரூரம். அமானுடம்.
**தலைமுறைச் சோகம்**
ஆங்கிலத்தில் Psychological Trauma என்பார்கள். வல்லிடபெயர்வு போன்ற கொடூர ட்ரௌமாவால் பாதிக்கப்படும் குடும்பங்கள் சகஜவாழ்க்கைக்கு மீள்வதென்பது மிகக் கடினம்.
மூத்தோர் அனுபவித்த துயரக் கதறலை கண்ணால்கண்ட தகப்பன் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து தேறி வந்தாக வேண்டும். தகப்பன் முகத்தில் அப்பியிருக்கும் மிச்ச சோகத்தை அள்ளிப் பிள்ளை விழுங்கி முடித்தாக வேண்டும்.
திருவிழாக்கள் கடக்கக் கடக்க மனக்கிலேசம் மறக்கடிக்கப்பட்டு நிலைக்கு வந்து நிற்பதற்குள் குறைந்தது இரண்டு தலைமுறைகளேனும் கடந்துவிடும்.
அதற்குள் மனித மூளைக்குள் மரபு வழிப் பொதிந்திருந்த பிரதேசம் சார்ந்த உணவு, மருந்து, மண்ணியல், வானியல் உள்ளிட்ட அத்துணை அற்புதத் தகவல்களும் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டிருக்கும்.
மரபுத் தொடர்ச்சி அறுபட்ட வலியை உணராமல் உணர்ந்து பரிதவிக்கும் மனித மூளை சிக்கித் தடுமாறும்.
தடுமாறும் மூளைக்குள் இரு தரப்பிலும் பகைமையும் குரோதமும் ஊட்டி வளர்க்கப்பட்டுவிடும். பிறகு, நிம்மதி என்பதேது ?
சொல்லுங்கள். ஆங்கிலேயர்கள் கொடுத்ததற்குப் பெயர் சுதந்திரமா? சூனியமா?
**பாகிஸ்தான்!**
பாகிஸ்தான் என்ற கலகத்தை முதன்முதலில் தொடங்கியவர் சவுத்ரி ரஹமத் அலி.
கலக சிந்தனை வந்த நேரம் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? கேம்பிரிட்ஜ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். கேம்பிரிட்ஜ் எங்கிருக்கிறது? லண்டனில்.
அந்நிய மண்ணில் பிறந்த கலக சிந்தனையை அலியின் சொந்த சிந்தனை என்று நம்ப இடமில்லை.
ஜின்னாவின் கதையும் அப்படித்தான். தன் பணக்காரத் தந்தையின் வியாபார நண்பரும் லண்டன் அரசியலில் தொடர்புடையவருமான சர் ஃப்ரெட்ரிக் லே க்ராஃப்ட் என்பவரால் லண்டனுக்கு வலிந்து அழைத்துச் செல்லப்பட்டவர்தான் ஜின்னா.
பாரிஸ்டர் முடித்து இந்தியா வந்து இறங்கிய ஜின்னா மும்பையில் வக்கீலாகப் பதிந்து கொண்டாலும் தெரிந்த தொழிலைப் பார்க்காமல் அவசரமாக தேசிய அரசியலில் இறங்குகிறார். அப்படி என்ன அவசியம் ஜின்னாவுக்கு?
கவனத்தைப் புதிதாக வைத்துப் பார்த்தால்…
வலைவீசித் தேர்ந்தெடுக்கப்பட்டு கடல் கடந்து கொண்டு செல்லப்பட்டு சொந்த நிலத்தில் பாதுகாப்பாக வைத்துக் கிளி நாக்கை கீறிக் கீறி மொழி சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
அப்படிச் சந்தேகிப்பதில் தவறென்ன இருக்கிறது? கேளுங்கள். பிரிவினை நடந்த சில வருடங்களில் சவுத்ரி ரஹமத் அலி இங்கிலாந்தில் சோற்றுக்கில்லாமல் தனிமையில் வாடி செத்தார் என்று அறிவிக்கிறது கேம்பிரிட்ஜ் நிர்வாகம்.
அவரை புதைத்ததும் கேம்பிரிட்ஜ் நகர நிர்வாகமே. கூடவே, சில ரகசியங்களும் புதைக்கப்பட்டிருக்குமோ?
பாகிஸ்தான் என்னும் கோட்பாட்டை உருவாக்கியவரே அவர்தானே. தனது கனவுப் பூமியில் ரஹ்மத் அலியால் ஏன் வாழ முடியவில்லை? அவருக்கும் ஜின்னாவுக்கும் இடையே தகராறு. பிரச்சினை. சரி.
ஜின்னாவின் பக்கம் நின்ற அன்றைய பாக் அரசாங்கம் அவரை கூல் செய்யும் விதமாக மனசாட்சியே இல்லாமல் ரஹ்மத் அலியை வெறுங்கையோடு நாட்டை விட்டு வெளியேற்றுகிறது.
வெறுங்கையோடு நாட்டை விட்டு வெளியேறிய ரஹ்மத் அலி, தீவிர இஸ்லாமியரான அந்த ரஹ்மத் அலி வேறு எந்த இஸ்லாமிய நாட்டிலும் அடைக்கலம் புகாமல் நேராக லண்டனுக்குச் சென்றது ஏன்?
அனுப்பி வைத்தவர்களிடமே அடைக்கலம் கேட்பதுதான் சரி என்று முடிவெடுத்தாரோ?
ஜின்னாவை எதிர்த்த அலியைப் புதைப்பதில் கேம்பிரிட்ஜுக்கு அப்படி என்ன அக்கறை என்று பின்னாளில் யாரும் சந்தேகப்பட்டுவிடக் கூடாது என்று எண்ணித்தான்…
அலியைப் புதைத்ததற்கு ஆன செலவை பாகிஸ்தான் ஹை கமிஷனிடமிருந்து மிகத் தாமதமாகக் கேட்டு வாங்கி அதை ஆவணப்படுத்தி வைத்துக்கொண்டதா குற்றமனமுள்ள பிரிட்டன் என்று கேட்டால் அதை யோக்கிய மனதோடு மறுக்க முடியுமா ?
போகிறபோக்கில் கேட்கப்படும் கேள்விகளல்ல இவையெல்லாம்…1950லேயே காஷ்மீரைக் குறிவைத்து “பாகிஸ்தானா? பாஸ்தானா?” என்று சவுத்ரி ரஹமத் அலி எழுதிய புத்தகம் (Pakistan or Pastan? Destiny or Disintegration?) உட்பட அனைத்துமே கேம்பிரிட்ஜ் வெளியீடுதானே? சந்தேகம் வராமல் என்ன செய்யும்?
சொந்த மண்ணில் அவர்களுக்கு சுயராஜ்ஜிய சிந்தனைகள் வராததேனோ?
ஆக, எல்லோருமே கைப்பாவைகள்தாம். சூத்திரதாரியின் விரல்கள் இந்திய மண்ணுக்கும் சொந்தமானதல்ல. பாகிஸ்தான் மண்ணுக்கும் சொந்தமானதல்ல. பேராசையும் பெருங்கர்வமும் பிடித்த வந்தேறிகளுக்கே சொந்தமானவை.
ஒருவழியாக மத வேற்றுமையை அரங்கேற்றி இந்தியப் பிரிவினையைச் சாதித்து முடித்த பின்னரேனும் அந்நியரின் மூளை ஓய்ந்ததா என்றால் இல்லை.
அடுத்த மின்னலடித்தது.
(மதியப் பதிப்பில் நிறையும்…)
[கவனம் புதிது 1](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/21/12)
[கவனம் புதிது 2](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/23/10)
[கவனம் புதிது 3](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/25/11)
**
மேலும் படிக்க
**
**[ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/26/28)**
**[டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/26/52)**
**[ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/25/42)**
**[நிதி நெருக்கடியில் லைகா!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/26/14)**
**[ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/26/31)**
�,”