கவனம் புதிது – 3: ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

கிழக்கிந்தியக் கம்பெனியினருக்கு எதிராகத் தொடர்ந்து கலகம் செய்து கொண்டிருந்த பாளையக்காரர்களை ஒடுக்க முடிவெடுத்த கும்பினி மூளை… பொது சமூகத்திலிருந்து பிரிந்துவந்து தங்களிடம் சேர்ந்திருந்த இந்திய எளிய மக்களை நவாபுகளின் துணையோடு மெல்ல மெல்லக் கூலிப்படைகளாக மாற்றி அவர்களைப் பாளையக்காரர்களுக்கு எதிராக நிறுத்தி நரித்தனமாடியது.

**பிரித்து எழுதிய கும்பினி!**

சொந்தச் சகோதரர்கள் வெட்டிக்கொண்டு செத்தார்கள். அப்பாவிகளின் ரத்தச்சேறு தங்கள் கால்களில் பட்டுவிடாமல் நவாபுகளில் முதுகிலேறிக்கொண்டு வரலாற்றின் பக்கங்களை வெகு ஜாக்கிரதையாகக் கடந்தது பிரித்தானியப் பிசாச சைனியம்.

அழகுமுத்துக்கோன், பூலித்தேவன், கோபால நாயக்கர், தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், கட்டபொம்மன், தீரன் சின்னமலை போன்ற மதியூகி மன்னர்கள்… தமது சொந்தச் சகோதரர்களின் உயிர்ப்பலியைத் தடுக்கும்விதமாக மிகப் பொறுமையோடு பற்பல வியூகங்களை வகுத்தபடி வெள்ளையர்களை மட்டுமே குறிவைத்து அவர்களது உடைமைகளை மட்டுமே குறிவைத்துத் தங்கள் கலகங்களைத் தொடர்ந்தார்கள்.

நாம் கண்டு கொண்டிருப்பது தமிழக வரலாறு. வடஇந்தியாவிலும் வெள்ளையர்களுக்குத் தண்ணி காட்டியவர்கள் பலர் இருந்தனர்.

மராத்திய வீர சிவாஜி, மைசூரை ஆண்ட ஹைதர் அலி போன்றவர்கள் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்தனர். அது குறித்து நிறையவே படித்திருக்கிறோம். இந்தப்பக்கம் அடக்கப் பார்த்தால் அங்கே பிதுங்குவதும் அந்தப்பக்கம் ஓடி அடக்குவதற்குள் இங்கே பிதுங்குவதுமாக கும்பெனிக்குப் பெருந்தலைவலி கொடுத்துக்கொண்டிருந்தனர் அன்றைய குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும்.

வருமானம் அதிகம் வரும் ஒரு பிரதேசத்தில் எதிர்ப்பு வலுக்கிறது என்ற சேதி சென்றடைந்தது விக்டோரியாவுக்கு.

வருமானம் பிரதானம். அதை எதற்காகவும் விட்டுவிட முடியாது என்று முடிவெடுத்த விக்டோரிய அரசாங்கம் உடனடியாகத் தன் கடைநிலை படை பலத்தை இந்திய மண்ணில் இறக்கிக் கொடுத்தது. வந்திறங்கிய பிரித்தானியப் படை வீரர்களுக்கான பராமரிப்புச் செலவு – மாத சம்பளம் என மொத்தத்தையும் நவாபின் கணக்கில் கொண்டுவைத்தது விவரமான கும்பினி.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்த சுகவாச நவாபுகள் மன அழுத்தம் தாங்க முடியாமல் அந்தப்புரத்துக்குள் புகுந்துகொண்டு தன்னிலை மறந்து தப்பிக்கப் பார்த்தனர். வந்திறங்கிய பிரித்தானியப் படைகள் லோக்கல் கூலிப்படைகளை வைத்துக் கொண்டு அதிருப்தியாளர்களை ஆங்காங்கே உட்கலகம் செய்தும் சூதுப் போரில் தாக்கி அழித்து நசுக்கிக் கொண்டிருந்தது. கம்பெனி பெருமூச்சு விட்டது.

**அதிகாரத்தை நோக்கிய வியாபாரிகள்**

ஒருகட்டத்தில் பிரித்தானியப் படைத் தலைமை கும்பெனியிடம் கேட்டது…

“எதற்காக நாம் இந்த தொப்பை நவாபுகளைச் சுமந்துகொண்டிருக்க வேண்டும்?” ஒரேயடியாக கழற்றிவிட்டு ரிஸ்க் எடுக்க விரும்பாத கம்பெனி அரசாங்கத்தார், நவாபுகளிடம் சும்மா பேருக்கு இருக்கச் சொல்லிப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நீண்ட நெடிய இந்திய மண்ணை ஒருங்கிணைத்து ஆளும் அதிகாரங்கள் மொத்தத்தையும் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டது.

சறுக்கல் தொடங்கியது. கிழக்கிந்தியக் கம்பெனியினர் மரபார்ந்த வியாபாரிகளாக இருக்கலாம். ஆனால், விவரமான ஆட்சியாளர்கள் அல்லவே? அன்று, பாகிஸ்தானையும் உள்ளடக்கியிருந்த நீண்ட நெடிய இந்திய மண்ணை, கலாச்சாரங்கள் பல அடங்கிய இந்தப் பரந்த பாரத நாட்டை ஒரு குடையின் கீழ் ஆள்வதென்பது சுலபமான விஷயமா என்ன? கடல்கடந்த தலைமை அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. என்னத்தையாவது செய்து கொண்டு போகட்டும். பாதிப்படையப்போவது எங்கோ இருக்கும் ஏதோ ஒரு தேசம்தானே. பலியாகப் போவதெல்லாம் அந்த மண்ணின் கறுப்பர்கள்தானே. போகும் வரை போகட்டும் கப்பல்; வந்தவரை லாபம் என்று வாளாவிருந்து விட்டது அன்றையப் பிரித்தானியப் பேரரசு.

வரிச்சீரமைப்பு, நிலச்சீரமைப்பு, வணிகச் சீர்திருத்தம் என்று என்னென்னமோ பெயரிட்டுக் காட்டி இந்திய மக்கள்மீது சகட்டுமேனிக்கு வரி விதித்துக்கொண்டே போனது கம்பெனி அரசாங்கம். திடீர் ஆட்சி சுகத்தைக் கண்ட கம்பெனி அதிகாரிகள் பரபரப்பும் பேராசையுமாக ஆளாளுக்குத் தனித்தனியாக அள்ளிச் சுருட்ட ஆரம்பித்தார்கள். அல்லும் பகலும் லஞ்ச ஊழலில் திளைத்தார்கள். அந்த அசிங்கங்களைக் குறித்து ஆங்கிலேயர்களே எழுதிய புத்தகங்கள் உண்டு. அது,பெருங்கதை.

அன்றைய ஐரோப்பிய அதிகாரிகளில் நல்லவர்களும் இல்லாமல் இல்லை. ஆனால், அவர்களது முயற்சியெல்லாம் பெருச்சாளிகளின் உறுமல்களுக்கு இடையே நசுங்கிய அணில் குரலாய் அமுங்கிப் போயின. இந்தியர்களின் ஓயாத கலகங்களால் ஆங்காங்கே வெள்ளையர்களின் வியாபாரப் பொருட்களும், சரக்கு குடோன்களும் சிறை பிடிக்கப்பட்டன. கண்ணில்படும் அவர்களது போக்குவரத்து சாதனங்கள் எல்லாம் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. உயிர்ப்பலிகளும் அடக்கம்.

**கிழக்கிந்திய கம்பெனியின் மேற்கு**

தொடர்ந்துகொண்டிருந்த எதிர்பாராத இந்த இழப்புகளினால் காலப்போக்கில் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிகர லாபம் குறையத் தொடங்கியது. ஆடும் வரை ஆட்டம் என்று இருந்தவர்களுக்கு ஒருகட்டத்தில் வந்து இறங்கியிருந்த பிரித்தானியப் படைகளுக்குச் சம்பளம் போடவே முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

ஏமாந்த நவாபுகளின் கஜானாக்களிலிருந்த விலைமதிப்பற்ற நகைகளையெல்லாம் விற்றுக் காசாக்கிய பின்னும் கம்பெனி உதட்டைப் பிதுக்கியது. கம்பெனியின் மீது நம்பிக்கை குறையத் தொடங்கியது. நிலைமை மோசமாவதை உணர்ந்து படைகளின் குணம் மாறிவிடக் கூடாது என்று விக்டோரியம் கவலைப்பட்டது.

19ஆம் நூற்றாண்டின் சரி மத்தியில் தன் படை வீரர்களுக்கு உண்டான சம்பளப் பாக்கியைச் சரிக் கட்டுவதற்காக விக்டோரியாவிடம் பெருந்தொகை ஒன்றை கடனாகக் கேட்டு நின்றது கிழக்கிந்தியக் கம்பெனி.

**விக்டோரிய பேரரசின் அதிகார வெறி**

தன்னெதிரே முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு நின்ற கம்பெனியாளர்களை உற்று நோக்கி மூர்க்கப் பார்வையை எறிந்த விக்டோரியப் பேரரசு, ‘இனி, நீங்கள் உங்கள் வியாபாரத்தை மட்டுமே கவனிக்கலாம்…’ என்னும் உத்தரவைப் பிறப்பித்துவிட்டு நேரடியாகவே களமிறங்கியது.

அறிவித்துக்கொண்ட ஆண்டு 1858 என்றாலும் அதற்கு முன்பே தன் ஆட்சி அதிகார படைபல பராக்கிரமங்களை ஆங்காங்கே இறக்கியிருந்தார்கள் என்பதே உண்மை வரலாறு. வியாபாரம் என்னும் எல்லையைக் கடந்து அதிகாரம் என்னும் நிலையேறி வந்து வரிக்கு மேல் வரி விதித்து அடக்குமுறை கொடுங்கோல் செய்தது பறங்கியர் அரசாங்கம். ஏறத்தாழ இரண்டு தலைமுறைக்கும் மேல் அந்தக் கொடுமையினை இந்தியர்கள் அனுபவித்து மெலிந்தார்கள்.

தங்கள் அப்பாவி முன்னோர்கள் அந்நியரை நம்பியது எத்தனை பெரிய தப்பு என்பதை எண்ணி எண்ணி மனம் சலித்தார்கள்.

விடுதலை ஒன்றே குறி என்று அனைவரும் ஒன்று சேர்ந்ததொரு காலகட்டத்தில் ராணுவத்துக்கு உள்ளும் புறமுமாக வெடித்தெழுந்த ஒட்டுமொத்த இந்திய சமூகமும்… ‘வெள்ளையனே வெளியேறு…’ என்னும் வீரிய கோஷத்தை ஓங்கி எழுப்ப… திகைத்து நின்ற வெள்ளை அரசாங்கம் “போர் முடியட்டும் பொறுங்கள்…” என்று சமாதானப்படுத்தி வைத்தது. இரண்டாம் உலகப் போருக்கு ஒத்துழைத்து அதிகார மாற்றத்தைப் பெறுதல் என்னும் இந்திய தேசியக் காங்கிரஸின் பேரத்தை இந்தியர்கள் எவரும் ரசிக்கவில்லை.

முன்பொரு நாள் கம்பெனியாரின் வலைவீச்சினால் ஆசைக்காட்டி வளைத்திழுக்கப்பட்டுப் படை வீரர்களாக நின்ற அப்பாவி மக்கள்தான் அதிகம் மிரண்டார்கள். ஆளாக்கி வைக்கிறோம் என்று சொன்னதை விடுத்து வேளா வேளைக்குச் சோறு போட்டு வளர்க்கும் விக்டோரியம் இதுகாறும் தங்களைத் தன் போர்களில் மட்டுமே முன்னிறுத்தி அழித்துவரும் விதம் குறித்து சபித்தார்கள்.

விக்டோரியப் பேரரசின் உலகளாவிய மற்றும் லோக்கல் போர்களுக்குத் தங்கள் அப்பாவி வம்சம்தானா பலியாக வேண்டும் என்று எண்ணி எண்ணிக் குமைந்து நொந்தார்கள். நாம் மீளும் வழி எதுவோ? இப்படியே செத்தொழியத்தானா பொது சமூகத்தில் இருந்து விலகி இவர்களிடம் வந்து சேர்ந்தோம்? இனி கரையேற வழியே இல்லையா என்றெல்லாம் அன்றந்த எளிய மக்கள் குன்றிக் குமைந்து கொண்டிருந்த வேளையில்…

நடந்ததையெல்லாம் புறந்தள்ளி தன் சொந்தச் சகோதரர்களை அள்ளி அணைத்துக்கொண்டது பொது சமூகம். அது, இந்த மண்ணுக்கே உண்டானப் பெருங்குணம்.

ஆயிரம் உண்டிங்கு சாதி; எனில்

அன்னியர் வந்துப் புகல் என்ன நீதி ?

எனும் பாரதியின் கோப வரிகள் அதன்பாற்பட்டதுதான்.

ராணுவத்துக்கு உள்ளும்புறமும் ஒருமை உணர்வு மேலோங்கத் தொடங்கியது. குறிப்பாக, சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்துக்கு பிரிட்டன் இழைத்த சொல்லொணாக் கொடுமைகள் ஒட்டுமொத்த இந்தியர்களையும் கொந்தளிக்கச் செய்தது.

இரண்டாம் உலகப் போரில் தனது தரப்பில் மட்டும் ஏறத்தாழ பத்து லட்சம் பேரை பலி கொடுத்து மிக மோசமாகத் தன் உலகத் தலைமைத்துவத்தை இழந்திருந்த பிரித்தானியம்… தனது ராணுவத்தில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் சுபாஷ் சந்திர போஸின் வழியினைப் பின்பற்றி முறுக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து இனியும் இந்த மண்ணில் காலனியாதிக்கம் செய்து பிழைக்க முடியாது என்னும் முடிவுக்கு வந்து கிளம்ப எத்தனித்தது.

கிளம்ப முடிவெடுத்துவிட்டாலும் மேலாதிகத்துக்கே உண்டான வயிற்றெரிச்சல் அதற்கும் இருக்கும் அல்லவா ? இருந்தது.

காலம் காலமாக அடிமை செய்து வந்த இந்தியம் நமக்கெதிராக இடைவிடாமல் போராடி ஒன்றுபட்டுப் போர்க்குரல் எழுப்பி இன்று நம்மை நாட்டை விட்டே கிளப்பிவிட்டதே என மனமெரிந்தார்கள். தங்கள் உலகளாவிய அனுபவங்களைக்கொண்டு இந்திய மண்ணில் போட்டுக் கொடுத்த நீண்ட நீண்ட சாலைகள், ரயில் பாதைகள், அணைகள், வானளாவிய கட்டடங்கள், நவீனத் தொழிற்கூடங்கள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டுப் போகப் போகின்றோமே என உள்ளுக்குள் குமைந்த பிரித்தானிய அரசாங்கம்…

பிரியாவிடை கொடுக்கிறோம் என்ற பெயரில் நரியாயிரம் செய்யும் வேலை ஒன்றை நாசூக்காகச் செய்தது. ஆம், மதபேதம் என்னும் மாபாதக சூழ்ச்சியினைப் பாரதப் பெரு நிலத்தின் மீது வீசி எறிந்தது.

(தொடரும்…)

 

**

மேலும் படிக்க

**

 

**[டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!](https://minnambalam.com/k/2019/08/24/66)**

 

**[எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!](https://minnambalam.com/k/2019/08/24/6)**

 

**[தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்](https://minnambalam.com/k/2019/08/24/36)**

 

**[விமர்சனம்: கென்னடி கிளப்](https://minnambalam.com/k/2019/08/24/14)**

 

**[உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி](https://minnambalam.com/k/2019/08/24/15)**

 

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share