மெட்ராஸ் இலக்கியம்! – ஸ்ரீராம் சர்மா

public

ஸ்ரீராம் சர்மா

மொழியும் – ரஸனையும் முத்தமிடும் தருணம், இலக்கியம் சிலிர்த்துக்கொள்கிறது. அத்தருணம் மொழி, இரண்டாம்பட்சமாகிவிட, இலக்கிய மனம் ரசனையைக் கொண்டே தழைக்கிறது.

மழலைக் காலம் முதல், மெட்ராஸ் மண்ணை அங்குலமங்குலமாக ஸ்பரிசித்த எனக்கு, அதன் இலக்கியத் தருணங்களைக் குறித்து விரித்துச் சொல்ல ஆயிரம் உண்டு. “மெட்ராஸ் இலக்கியம்” என்பது குறித்து ஒரு பி.எச்.டி ஆய்வே செய்யலாம்.

விரும்புவோருக்கு, என்னாலான சில முஸ்தீபுகள்…

மிளகு வியாபாரத்தில், உலக வியாபாரிகளோடு கொண்ட லாப – நட்ட சண்டையில் வெகுண்டெழுந்த பிரித்தானிய வியாபாரிகள், தங்களுக்குள் “ஈஸ்ட் இண்டியா கம்பெனி” என்னுமோர் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, கப்பலேறி, கடலாடி, மெட்ராஸ் கடற்கரை வந்திறங்கி…

அப்பாவி சென்னப்ப நாயக்கரிடம் நயந்து பேசி, அவரது எல்லையில்லா தென்னந்தோப்பை சில விலை கொடுத்து வாங்கி, தங்களது வியாபாரத்தை மட்டுமே முன் வைத்து விஸ்தீரணப்படுத்திக் கொண்டதே மெட்ராஸ் பட்டிணம்!

தரையிறங்கிய வெள்ளையர்கள் முதலில் தங்களது சீமாட்டிகளோடு குளுகுளுவெனத் தங்கி வாழ கட்டியது செயின்ட் ஜார்ஜ் கோட்டை. கூடவே, தங்கள் வியாபாரத்தையும் மெல்ல, மெல்ல கட்டி எழுப்பினார்கள். .

“விசுவாசமிக்க எழுத்தர்கள்” என்று ப்ராம்மணர்களைக் கருதினாலும், அவர்களைத் தங்களருகே தங்க வைத்துக்கொள்வதே நல்லது எனக் கருதி, விஸ்தீரணப்படுத்திய இடங்களே திருவல்லிக்கேணி மற்றும் மைலாப்பூர்.

தங்களிடமிருந்து கொள்முதல் செய்த பொருட்களை உரிய விலைக்கு விற்றுத் தந்துவிடும் நியாயஸ்தர்களாக அவர்கள் செட்டிமார்களைக் கருதினாலும், அவர்களை திருவல்லிக்கேணிக்கு இன்னும் சமீபமாக இருத்திக்கொள்ள எண்ணி அவர்களுக்கென உண்டாக்கிக் கொடுத்த இடமே சேப்பாக்கம்.

வெள்ளையர்களின் குதிரைகளை மேய்க்க வரவழைக்கப்பட்ட உருது மொழி பேசும் இராவுத்தர்கள் தங்கிக் கொள்ள கட்டமைக்கப்பட்ட காலனிதான் இராயப் பேட்டை. வெள்ளையர்களின் குதிரைகளைக் கொண்டு கட்ட உண்டாக்கப்பட்ட “லாயம்” தான் இன்றைய கோடம்பாக்கம். “கோடா” என்றால் குதிரை. “கோடா பாக்” என்பதுதான் கோடம்பாக்கமாக மருவியது.

அன்றைய ஆங்கிலேயர்களின் வியாபாரத்துக்குப் பெரிதும் உதவியவர்கள் “துபாஷி” எனப்படும் “தமிழ் – ஆங்கிலம்” என இரு மொழி பேசும் திறன் படைத்த முதலியார் பெருமக்கள். அவர்களையும் தங்களுக்கு அருகிலேயே தனியாக வைத்திருக்க விரும்பிய ஆங்கிலேய வியாபாரிகள், தங்கள் கோட்டைக்கு இடப் புறமாக அமைத்துக் கொண்டதே “கருப்பர் கோட்டை” எனப்பட்ட “ஜார்ஜ் டவுன்”.

வெள்ளையர்களோடு இணைந்து துபாஷி வேலை செய்ததால் சென்னையின் பெரும்பாலான சொத்துக்கள் அன்று முதலியார்கள் வசமாயின. உ.வே.சா. வரலாற்றில்கூட, அவரது தொகுப்புக்களை பதிப்பிக்க சென்னை வந்து முதலியார் பெருமக்களைத்தான் அதிகம் அண்டியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. முதலியார்களும் தங்கள் சொத்துக்களை கல்விக்கும், தான தர்மத்துக்கும் அள்ளி இறைத்தார்கள்.

இன்றளவும் முதலியார்களின் ஆங்கிலம் “ஃபைன் ட்யூனாக” ஒலிப்பதை போலவே, அவர்களின் “தமிழ் “ஆக்ஸன்ட்” சற்றே உடைந்து தொனிப்பதையும் கவனிக்கலாம்.

இவ்வாறு, பல மொழிகளும், பல்வித கலாச்சாரங்களும் கொண்டு கிளர்ந்தெழுந்ததோர் “விசித்திர மொழி” யோடு செழித்து வளர்ந்ததே மெட்ராஸ்.

மெட்ராஸ் மண்ணில் தோன்றிய இலக்கிய வடிவங்கள் பற்பல. அதில், ஆகச் சிறந்த வடிவமாக “கானா”வைக் கொள்ளலாம்.

நிற்க.

**புறக்கணிக்கப்பட்டதா…மெட்ராஸ் இலக்கியம்?**

நாட்டுப்புறப் பாடல்கள் – நாட்டார் இலக்கியம் என்று சொன்னால், நா. வானமாமலை அவர்களின் தொகுப்பே முதன்மையாக கொள்ளப் படுகின்றது.

“ஐயவர் ராசாக்கள் கதை, கட்டபொம்மு கூத்து, காத்தவராயன் கதை, கான்சாகிபு சண்டை” என்று தமிழ் பிரதேசங்கள் தோறும் தேடித்தேடி கண்டடைந்து தொகுத்துத் தந்த பெருமகன், தலைநகராம் சென்னை இலக்கியத்தைக் கண்டு சொல்லாமலே போனது ஏன் ? அவர் மட்டுமல்ல வேறு எவரது பதிவிலும், சென்னை இலக்கியத்தைப் பற்றி எந்த குறிப்பும், எங்கும் இல்லையே ஏன் ?

மானுடவியல், சமூகவியல், பண்பாட்டியல் என பல்துறைக் கூட்டாய்வுகளாக தமிழியலை வளர்த்தெடுத்ததில் மெட்ராஸ் இலக்கியத்துக்குண்டான பங்கையும் அவர்கள் கண்டு சொல்லியிருக்க வேண்டும் அல்லவா ?

நாட்டுப்புற, நாட்டார் பாடல்களை தொகுக்க முனைந்தவர்கள், மெட்ராஸ் புறப் பாடல்களைப் பற்றியோ – மெட்ராஸ் இலக்கியத்தைப் பற்றியோ ஏன் அக்கறை கொள்ளவில்லை ?

சென்னை வாழ் மக்கள் இலக்கியம் படைக்கவில்லையா ? மானுட, சமூக, பண்பாட்டியலில் சென்னை வாழ்க்கை சேர்த்தியில்லையா ?

இவ்வாறான மேலெழுந்தவாரிக் கேள்விகளையெல்லாம் ஊடறுத்துக் கொண்டே சென்றால் கிடைக்கும் விடை: “சென்னைக்கே உண்டான அந்த பாஷை”

ஆம், தமிழ் – ஆங்கிலம் – உருது இம்மூன்றும் கலந்த “பல பாஷை” யாக இருக்கிறது “மெட்ராஸ் பாஷை”.

தமிழ் ஆய்வாளர்கள், “மெட்ராஸ் தமிழை” தங்கள் கணக்கில் கொள்ளத் தயங்கியதற்குக் காரணம், அதன் “மல்ட்டி பாஷை” தரம் தானோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

சரி, பல பாஷைகள் கலக்கும் படைப்புகளுக்கு சிறப்பில்லையா என்றால், “நிச்சயம் உண்டு” என்கிறார் ஹிந்தி திரைப்படப் பாடல்களின் ஜாம்பவான் ஜாவேத் அக்தர்.

“வெறும் ஹிந்தியில் யோசித்தால் போரடிக்கிறது. கொஞ்சம் உருதும் கலந்து யோசிக்கும்போதுதான் “கிக்காக” இருக்கிறது…அப்படிப்பட்ட பாடல்கள்தான் மனித மனங்களை கிறங்கடிக்கின்றன“ என்கிறார்.

தமிழுக்கான பங்களிப்பில், இலக்கியச் சொல்லாடலின் ஆச்சரியம் எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது மெட்ராஸ் “பல பாஷை” சொல்லாடலின் ஆச்சரியம்.

உதாரணம்:

**“காதல், காதல், காதல்;**

**காதல் போயின்,காதல் போயின்**

**சாதல், சாதல், சாதல்”**

மகாகவி பாரதியாரின் செம்மாந்த காதல் தமிழை, புகழ்பெற்ற இந்த இலக்கிய வரிகளை அப்படியே நேரடிப் பாய்ச்சலாக வெளிப்படுத்திவிடுகிறது “சென்னை கானா”.

**“டாவு டாவு டாவுடா**

**டாவுல்லாட்டி**

**டையிடா…”**

2016 நவம்பர் 8ஆம் தேதி மோடியின் “பண இழப்பு அறிவிப்பில்” இந்தியாவே ஸ்தம்பித்திருந்த நேரத்தில், வட சென்னையின் எளிய கானா பாடகன் “வினோத்” டோலக் வாசித்துக்கொண்டே தன்னை மறந்து பாடிய அந்தப் பாடலை எப்படி மறக்க முடியும் !?.

(பல்லவி)

“ஆயிரம் ரூபா மாறாது

ஐனூறுபா மாறாது

கோட்டீஸ்வரன் கொல நடுங்கி

குழம்பி நிற்கிறான்.

(சரணம் 1)

எவனப் பாரு மெயின் ரோட்டுல

சுத்தினிருக்குறான் – அந்த

ஐனூறுபாவ மாத்தணும்னு

கத்தினுருக்குறான்.

இருக்கப் பட்டவன் ஏடிஎம்முல

இட்சினு நிக்கிறான்

இருக்கப் பட்டவன் ஏடிஎம்முல

இட்சினு நிக்கிறான் – அட

இல்லாதப் பட்டவன் நடு ரோட்டுல

தூங்கினுருக்கிறான் – நிம்மதியா

தூங்கினுருக்கிறான்…”

இதுதான் “மெட்ராஸ் இலக்கியம்”. சமூக நிகழ்வை, காணும் காட்சியை அதன் சுவை குன்றாமல் அப்படியே பாடலாய் கடத்தும் வல்லமையே இலக்கியத்தின் உச்ச நோக்கம் என்றால், இந்த மெட்ராஸ் கானாவின் நேரடி இலக்கியத் தாக்குதல் நம் ரசனை உள்ளத்தை எங்கோ கொண்டு சென்றுவிடுகிறது.

**கானா என்பது என்ன?**

“கானா” என்பதைப் பொறுத்தவரை அது மரண நிகழ்வில் பாடப்படுவது என்று பொதுவாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அது, தவறு.

உண்மையில், ஆதி மெட்ராசில் “கானா” என்பது இல்லவே இல்லை.

ஆதியில், சென்னை மண்ணில் வாழ்ந்த எளிய மனிதர்கள் யார்… அவர்கள் “மரணம்” என்னும் நிகழ்வை எப்படிக் கடந்தார்கள் என்பது குறித்த சுவாரசியத்தை அறிந்து கொள்வதில் வெளிப்பட்டு விடுகிறது அதன் விடை.

உலகின் ஆதி இறைச்சி மீன். உலகின் ஆதி குடிகள் மீனவர்கள். சென்னைக் கடற்கரை உலகின் இரண்டாம் பெரிய கடற்கரை. எனில், அதன் அருகே வாழ்ந்த மீனவர்கள்தான் மெட்ராஸின் ஆதிகுடிகள் என்பது வெள்ளிடை.

தள்ளாடும் கடலில், நிச்சயமில்லாத வாழ்க்கையை வாழ்ந்த எளிய மீனவப் பெருமக்களிடம், மண்ணில் நிகழும் தங்கள் இனத்தின் மரணம் குறித்து ஓர் அச்சம் இருந்தது.

இன்றைய வெளிச்ச உலகில், “எல்லாம் மூட நம்பிக்கை…” என்று நாம் ஆணவக் கொட்டமடித்து காட்டினாலும், அன்றைய இருள் சூழ்ந்த வாழ்வின் பெரும்பாட்டில் அவர்களுக்கு நிச்சயம் அந்த அச்சம் இருக்கத்தான் செய்தது.

ஆம், இறந்த பிரேதத்தை “பிசாசம்” தூக்கிக்கொண்டு போய்விடும் என்னும் மூட நம்பிக்கை அன்று அவர்களுக்கு இருந்தது. இறந்த பிரேதத்தை எரிக்கும் வரை அல்லது அடக்கம் செய்யும் வரை,

“ஹே, பிசாசமே, இந்த நல்ல மனிதனை நாங்கள் வழியனுப்ப வழி விடு…” என்று ஓயாமல் கூடி மன்றாடிக்கொண்டார்கள்.

பகல் நேரத்தில் ஒருவர் மரணம் அடைந்து விட்டால், பெண்கள் எல்லோரும் பிரேதத்தின் அருகில் கும்பலாய்க் கூடி அமர்ந்துகொண்டு, இறந்தவர் பெருமையை ஓலமிட்டு சொல்லி “மாரடிப்பு” செய்து “பிசாசம் விரட்டுவார்கள்”.

ஒருவேளை, இரவு நேரத்தில் ஒருவர் இறந்துவிட்டால், ஆண்கள் எல்லோரும் பிரேதத்தின் அருகில் கும்பலாய் கூடி அமர்ந்துகொண்டு, தங்கள் ஓலப் பாடல்களின் வாயிலாக இறந்தவர் பெருமையை உரக்கப் பாடிப் “பிசாசம் விரட்டுவார்கள்”.

உண்மையில், “பிசாசம் விரட்டுவதாய்” சொல்லிக் கொண்டு ஆண்களும் – பெண்களும் தங்கள் மனக் குமுறல்களை மற்றும் தங்கள் இலக்கியக் கற்பனைகளை எல்லாம் காற்றில் விசிறடித்துக் கொண்டிருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

நாளடைவில், ஜனப் பெருக்கம் அதிகமாகி, முக்குக்கு முக்கு எலக்ட்ரிக் கம்பங்கள் நடப்பட்டு விட, மெட்ராஸ் நகரமாகி நாகரீக மடைந்து விட, பேய் – பிசாஸ மூட நம்பிக்கைகள் யாவும் மொத்தமாய் காணாமல் போனது.

பகலில் செத்தாலும் – இரவில் செத்தாலும், ஐஸ் அவுஸ் “ரூபி ஐஸ் கம்பெனி” யில், ஆறுக்கு நாலு ஐஸ் கட்டியை இறக்கச் சொல்லி பிரேதங்களை பதப்படுத்தி வழி அனுப்பும் நூதனம் கண்டுவிட்டவர் களுக்கு “பிசாசக் குளிர்” விட்டுப் போய்விட்டது.

கால மாற்றத்தால் மூட நம்பிக்கைகள் கிழிந்து தொங்க, இட்டுக் கட்டிப் பாடும் சுகம் கண்ட “படைப்பாளப் பாடகர்கள்” வேறு வழி தேடி அலைந்தார்கள்.

நார்த் மெட்ராஸ் – நரியங்காட்டில் ஒன்று கூட ஆரம்பித்தார்கள்.

**கானாவில் நரியங்காட்டின் பங்கு:**

நரியங்காட்டில் அவ்வப்போது கூடிய அன்றைய கானாப் பாடகர்கள் இறந்தவர் புகழைப் பாடியது போதும் என்று, சமூகத்தைப் பாடத் தொடங்கினார்கள். அதில், தங்கள் மெட்ராஸ் சமூகத்தை இணுக்கு இணுக்காக வடித்தெடுத்தார்கள். அப்படிப்பட்டவர்களை ஒன்று கூட்டி உற்சாகப்படுத்தியவர் நரியங்காடு தன்ராஜ் பிள்ளை.

காதலை, காதல் தோல்வியை, நட்பை, தாய்ப் பாசத்தை, தந்தை அருமையை, அக்கா – தங்கைகளின் எளிய பாசத்தை இன்னும் தங்களைப் பாதிக்கும் மற்ற பிற சமூக ஏற்றத் தாழ்வுகளை எல்லாம் அவர்கள் உறக்கப் பாடினார்கள்.

அவ்வாறு, அவர்கள் உணர்வு பூர்வமாக கூடிப் பாடுவதை, வட சென்னையில் வியாபாரம் செய்ய வந்தடைந்த “சேட்டுக்கள்” எனப் படும் வட நாட்டவர்கள், கூடிக் கேட்டு களிக்கத் துவங்கினார்கள்.

ஆரம்பத்தில் அவர்களுக்கு மொழி புரியாமல் போக, தங்களுக்குப் பிடித்த “ஹிந்தி சினிமா மெட்டுகளில்” இட்டுக் கட்டிப் பாட முடியுமா என்று கேட்க…

“சேட்டு…அதெல்லாம் எங்களுக்கு சப்ப சேட்டு…தோ கேளு…” என்ற வடசென்னை கானா பாடகர்கள் ஹிந்தி மெட்டிலும் இட்டுக் கட்டிப் பாடிக் காட்டி அசத்த…

”அச்சா கானா…அச்சா கானா..” என்று காசை அள்ளி இறைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

“நாலிக்கு, நம்பல் ஃப்ரெண்டு பர்த்டேபா…”கானா” வெச்சுக்கலாம்ப்பா…” என்று நரியங்காட்டுக்கு ஆளனுப்பி அழைக்க ஆரம்பித்தார்கள்.

“கானா” என்னும் சொல் அப்படித்தான் தோன்றியது.

**கானாவின் பரிணாமம்:**

1995இல், புளியந்தோப்பு பழனி அவர்கள் பாடி வெளியான “கானா உலகம்” என்னும் கேஸட்தான் கானாவின் முதல் ஹிட். “கானா” என்னும் ஒரு வகைப் பாடல் உண்டு என்பதை உலகுக்கு தெரியப்படுத்தியது அந்த ஆல்பம்தான். அதில் தொனித்த எளிமையான இலக்கிய அட்டாக்கும், எளிய மனிதர்களின் குரல் நெகிழ்வும் அனைத்து மக்களின் மனதையும் கொள்ளை கொண்டது.

ஆச்சரியம் என்னவென்றால், “கானா உலகம்” என்னும் அந்த முதல் கானா காஸட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் ஒரு வட நாட்டவரே. அவர் பெயர் திரு.க்ரோவர்.

ஒரு பிரபல வட நாட்டுக் காஸட் கம்பெனியில் விற்பனையாளராக வேலை செய்து வந்த க்ரோவர், வேலையை விட்டு வெளியேற்ற பட்டபொழுது அவர் நாடிச் சென்றது கானா படைப்பாளர்களைத்தான்.

“இனிமேல என்ன செய்யப் போறேன்னு தெரியல ஃப்ரெண்ட்ஸ்… உங்கல நம்புறேன், பார்த்துப் பண்ணிக் கொடுங்க…” என்று வெறும் 3000 ரூபாயை எடுத்துக் கொடுக்க…

“அட, காசு என்ன காசு…தோ, வாங்கிக்க சேட்டு அச்சா கானா..” என்று புளியந்தோப்பு பழனி க்ரூப் பாடிக் கொடுக்க, அடித்தது ஜாக்பாட்.

கொஞ்ச நஞ்சமல்ல இளையராஜா பாடல் கேஸட்டுகளுக்கு ஈடாக பல லட்சம் விற்றுத் தீர்ந்தது “கானா உலகம்” என்னும் அந்த ஆல்பம். 1995 ல் வெளிவந்த அதுதான் “கானா” உலகின் முதல் சாதனை. அதன் பின் க்ரோவர் சொந்தக் கார் வாங்கி, அதில் புளியந் தோப்புக்கே சென்று படைப்பாளர்களைத் தேடித் தேடி உரிய மரியாதை செய்து வந்தார் என்பது நெகிழ வைக்கும் வரலாறு.

அடுத்த கட்டமாக இசையமைப்பாளர் தேவா கானாவில் புது ட்ரெண்ட் பதித்து, ஏறத்தாழ பத்தாண்டுக் காலம் தூள் கிளப்பினார்.

“கானா”வைப் பொறுத்த மட்டில், புளியந்தோப்பு பழனி, அந்தோணி, புண்ணியர், உலகநாதன், மரண கானா விஜி, வினோத் என்று பலர் இன்று புகழ் பெற்று இருந்தாலும், “கானா உலகின் பிதாமகர்” என்றால், திரு. தினகர் அவர்களைத்தான் சொல்ல வேண்டும்.

இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கானா பாடகர்கள் பற்பலர். இன்று, ஏ.ஆர். ரஹ்மான் வரை பாடி புகழ் பெற்று விளங்குகிறார் பாடகர் “முகேஷ்”. அந்த இஸ்லாமிய சிஷ்யருக்கு “முகேஷ்” என்று பெயர் சூட்டி கானாப் பாடகராக முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் திரு. தினகர் .

திரு. தினகர் சாதாரணப்பட்டவரில்லை. அந்தக் காலத்தில் “நட பஜனை” என்று ஒன்று நடக்கும். சென்னையில், திருப்புகழ் பாடிக்கொண்டே முருகன் கோயில்களைத் தேடித் தேடி அடியார்கள் தெண்டனிடும் வழக்கம் அது. அதனை முன்னின்று நடத்திச் செல்பவராக அன்று திகழ்ந்தவர் “திருப்புகழ் கலைமாமணி” சொக்கலிங்கம் பிள்ளை பாகவதர் அவர்கள்.

அவரது அருமை மகனார்தான் “குங்குமப் பொட்டார்”. நார்த் மெட்ராஸில், பாகவத பரம்பரையில் பிறந்த இவர் சாஸ்திரீய இசையினை முறைப்படி முயன்று கற்றவர். இவரது இசையில் பாடாத புகழ் பெற்ற பாடகர்களே இன்று இல்லை எனலாம். எல்.ஆர். ஈஸ்வரி அவர்களின் அன்றைய கச்சேரிகளில் ஆஸ்தானமாக இவர்தான் இருப்பார்.

“குங்குமப் பொட்டு” தினகர் என்று அவரை எல்லோரும் அன்போடு அழைத்தாலும், பிறருக்கு அறிமுகப்படுத்தும்போது “குங்குமப் பொட்டார்” என்று மரியாதையோடு அறிமுகப்படுத்துவதே எனக்கு வழக்கம்.

102 ராகங்களில் திருக்குறளையும், திருப்பாவை – திருவெம்பாவை – திருப்புகழ் என குறைந்த பட்சம் 500 ஆல்பங்களுக்காவது இசையமைத்திருப்பார் “குங்குமப் பொட்டார்”.

எந்த நேரமும் சிரித்த முகத்தோடு இருக்கும் வெள்ளந்தியான மெட்ராஸ்காரர். “கீ போர்டில்” இவர் விரல்களோடும் வேக – நளினங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

“பாடணும்னு ஆசையா இருக்கு சார்..” என்று இவர் எதிரில் சென்று நின்றுவிட்டால் போதும், எப்படியாவது ஆளாக்கி விட்டு விடுவார். அப்படி ஒரு கைராசிக்காரர்.

நாளை “கானா” பாடல்களைக் குறித்து யாரேனும் பி.எச்.டி செய்ய வேண்டுமென்றால் இந்த குங்குமப் பொட்டாரைத்தான் அணுகியாக வேண்டும்.

கொஞ்ச நஞ்சமல்ல, ஏறத்தாழ மூவாயிரம் கானா பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்த சாதனைக்காரர்.

**அத்தினியும், “அச்சா கானா”!**

[சுட்டுக](https://www.youtube.com/watch?v=F87NPeqWtMM)

====================================================================================

(கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ovmtheatres@gmail.com)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *