– ஸ்ரீராம் சர்மா
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித நாகரிகம் கீழடியில் சுமார் 353 சென்டிமீட்டர் ஆழத்தில் வெளிப்பட்டிருப்பது குறித்துப் பொதுமக்களுக்கு ஏகப் பெருமை. கொண்டாட்டம். அது சரியே!
ஆனால், இந்தக் கொண்டாட்டம் ஆராய்ச்சியாளர்களுக்கும் இருந்து விடலாகுமா? அவர்கள் செல்ல வேண்டிய திசை வேறு அல்லவா?
கீழடியைப் பொறுத்தவரை ஆர்க்கியாலஜி அதன் வேலையைச் செய்கிறது. அது மானிடப் புவியியலை நோக்கிய ஆராய்ச்சி. நடக்கட்டும்.
ஆனால், இயற்கைப் புவியியலை ஆராய வேண்டிய துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?
உண்மையில் கீழடியில் காண்பவை நமது அனுதாபத்துக்குரியது. அதிர்ச்சிக்குரியது. நம்மை அலர்ட் செய்யக் கூடியது.
எச்சரிக்கை என்னும் திசை நோக்கி நகர வேண்டிய கடமை பேரழிவு மேலாண்மைத் துறைக்கு உள்ளது. அப்படி ஒரு துறை இங்கு உள்ளதா என்பது தெரியவில்லை. அவர்களே வெளிப்படுத்திக் கொண்டால்தான் உண்டு.
கீழடியின் பள்ளங்களைக் காணக் காண அதிர்ச்சியாக இருக்கிறது. ஒன்றில்லை; இரண்டில்லை… ஒரு நகரமே பூமிக்குள் புதையுண்டு போயிருக்கிறது என்கிறார்கள்.
அதன் காரணமென்ன? எந்தவிதமான இயற்கை மாற்றத்தால் அந்தக் கொடுமை நிகழ்ந்தது? மீண்டும் அதுபோல் அங்கே நிகழ வாய்ப்புள்ளதா?
எப்போது நிகழும் என்பதைக் கணித்துவிட முடியுமா… அதன் மூலம் எதிர்காலத்துக்கான எச்சரிக்கை மணியை அடித்துவிட முடியுமா என்றெல்லாம் யோசித்தாக வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் வேண்டுகோள்.
SINK HOLE எனப்படும் சுண்ணாம்புப் பள்ளம்!
உலகமெங்கிலும் நிகழக்கூடிய இயற்கை விபத்துகளில் குறிப்பிடத்தகுந்தது இந்த ‘சிங்க் ஹோல்’ கொடூரம்.
இந்த வகையான விபத்துகளால் திடீர் திடீரென அகண்ட பள்ளங்கள் ஏற்பட்டு, அதனால் உயிர் உடமைகள் கபளீகரமாகின்றன. ஏன் அந்தப் புதைகுழிகள் உண்டாகின்றன?
பொதுவாக கார்பொனேட் பாறைகளை அடிநிலப் பாறைகளாகக்கொண்ட நிலங்களில்தான் இதுபோன்ற இயற்கை விபத்துகள் நிகழ்வதாகச் சொல்கிறார்கள்.
பூமிக்கு அடியில் இருக்கும் லேயர்களில் ஒன்று கார்பொனேட் லேயர்கள். அவை மேலிருந்து கீழ் நோக்கிச் செலுத்தப்படும் செயற்கையான நீர்க் கசிவுகளால் மெல்ல மெல்லக் கரையத் தொடங்குகின்றன என்கிறார்கள்.
ஒருகட்டத்தில் பாரம் தாங்க முடியாத அளவுக்குப் பலமிழந்து விடுகின்றனவாம். அந்தச் சமயங்களில்தான் மேலடுக்கில் இருக்கும் பூமிப் பாளங்களைத் தாங்கிப் பிடிக்க முடியாத நிலையில் அந்தச் சுண்ணாம்புக் கரட்டுப் பாறைகள் கைவிரித்து விடுகின்றன.
பூமி உள்வாங்கிவிட அதன் மேல் அமைந்திருக்கும் ஊரோ, காடோ மெல்ல மெல்லக் கட்டி எழுப்பிய தன் மொத்த வளங்களோடு மௌனமாகப் புதைகுழிக்குள் இறங்கி சமாதியாகி விடுகிறது.
இந்தப் புதையும் நிகழ்வில் இரு வகைகளுண்டு. ஒன்று மெல்ல மெல்ல அமிழ்வது. இன்னொன்று ‘தொபுக்கடீர்…’ என அதளபாதாளத்துக்குள் போய் விடுவது.
கீழடியில் நிகழ்ந்த விபத்து மெல்ல மெல்ல அமிழும் வகையான ‘சிங்க் ஹோல்’ வகையாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
புதைய தொடங்குகிறது என்று தெரிய ஆரம்பித்தவுடனேயே மனிதர்கள் தங்கள் வாழ்விடத்தைக் கைவிட்டு வெகுதூரத்துக்கு நகர்ந்தோடியிருக்க வேண்டும். கீழடி அகழ்வாய்வில் மனித எலும்புகள் ஏதும் கிடைக்காமல் இருப்பதற்கு அதுவே காரணமாக இருக்கக் கூடும்.
கீழடி என்பது மதுரைக்குக் கிழக்கு, தென்கிழக்காக அமைந்துள்ளது. அதன் வடகிழக்கில் இயற்கை நீர்நிலை ஒன்று உள்ளது. 2 கி.மீ தூரத்தில் வைகை ஆறு ஓடுகிறது. மணலூர் கிராமத்தின் வடக்கில் ஒரு கண்மாயும் அமைந்துள்ளது. ஆக பொதுவாக நீர்நிலைகள் சூழ்ந்த பகுதியாகவே அது இருக்கிறது.
ஈராயிரம் வருடங்களுக்கு முன் என்ன நடந்திருக்கக் கூடும் என்று யோசிக்கையில் மூன்று விதமான சாத்தியக் கூறுகள் எனக்குள் தோன்றுகின்றன. மேலும் இருக்கலாம்.
நான் புவிசார் வல்லுநனா என்றால் இல்லை. உள்ளுணர்வின் அடிப்படையிலேயே எழுதுகிறேன். வித்தை அறிந்த வல்லுநர்கள் ஆய்ந்தறிந்து விளக்கிவிட்டால் வருங்காலத்துக்கு நல்லது.
சாத்தியம்: ஒன்று
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அகண்ட ஆறு ஒன்று வழிமாற்றி விடப்பட்டிருக்கலாம். அல்லது மாபெரும் தடுப்பணையால் அந்த ஆறு தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம்.
அதன் காரணமாக மேலடுக்குப் பூமியிலிருந்து நூற்றாண்டுக் காலமாக நீர் இயற்கைக்கு மாறாகக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறங்கியிருக்கலாம்.
இயற்கைக்கு மாறாக அளவுக்கு அதிகமாக உள் இறங்கிய நீரால் சுண்ணாம்புக் கரட்டுப் பாறைகள் இடைவிடாமல் அரித்து எடுக்கப்பட்டிருக்கலாம். கீழ் லேயர்கள் வலுவிழந்து போக, மேல் பாரம் தாங்காததொரு கட்டத்தில் மெல்ல மெல்லக் கீழடி புதைய தொடங்கி இருக்கலாம்.
ஆபத்தை உணர்ந்த மனிதர்கள் தப்பித்து ஓடிவிடக் கைவிடப்பட்ட அந்த ஊர் அல்லது பள்ளம் பற்பல நூற்றாண்டுக்காலப் போக்கில் மீண்டும் மணலால் நிரவப்பட்டிருக்கலாம். உடைந்த அணையின் மிச்சங்கள் எத்தனை அடி ஆழத்துக்குள் இருக்கின்றதோ யார் கண்டார்கள்?
பின் ஆறு அதன் போக்கில் ஓடத்தொடங்க பற்பல நூற்றாண்டுக்காலமாக மெல்ல மெல்ல கீழ் லேயரில் சுண்ணாம்புக் கரடுகள் ஏற்பட்டு உறுதியாகி தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கலாம்.
சாத்தியம்: இரண்டு
சுற்றிவரத் தாறுமாறாக நீர் உறிஞ்சப்படுவதால் புவியின் அடிப்பாகம் மிக மோசமாக வலுவிழந்து பட்டெனப் பிளந்துகொள்கிறது.
அதைத்தான் ‘சிங்க் ஹோல்’ என்கிறார்கள்.
அப்படியென்றால் பல்லாயிரம் ஆண்டுக்காலத்துக்கு முன்பும் நீர் தாறுமாறாக உறிஞ்சப்பட்டிருக்க வேண்டும்.
அப்படியென்றால் இப்போது மிகப் பிரமாண்டமான கார்ப்பரேட் நிறுவனங்களால் போடப்படும் ஆழ்துளைக் கிணறுகள் எனப்படும் ஜெயன்ட் போர் டெக்னிக்கை அன்று அங்கு வாழ்ந்த மனிதர்கள் அறிந்து வைத்திருந்தார்களா என ஆராய்ந்தறிய வேண்டும் .
பூமியின் அடி லேயர்கள் வலுவிழக்கும் அளவுக்கு அவர்கள் எப்படி நீரை உறிஞ்சு வெளியேற்றினார்கள்… ஏன் வெளியேற்றினார்கள்… அவ்வாறு உறிஞ்சு எடுத்த தண்ணீரை என்ன செய்திருப்பார்கள் என்பதெல்லாம் ஆய்வுக்கு உரியது.
பூமிக்குள் இருந்த தண்ணீரையெல்லாம் தாறுமாறாக உறிஞ்சு எடுத்ததனால் அந்தப் பிரதேசமே ஈரப்பசையின்றிக் காய்ந்து போயிருக்க வேண்டும். பூமியின் அடிப்பாளங்கள் வலுவிழந்ததால் ‘சிங்க் ஹோல்’ ஏற்பட்டு புதைய தொடங்கியிருக்க வேண்டும்.
110 ஏக்கருக்கு ‘சிங்க் ஹோல்’ என்றால் நிகழ்ந்த பாதிப்பின் வீரியம் மிகப் பெரிதாக இருந்திருக்க வேண்டும்.
அதன் காரண காரியங்களை ஆய்ந்தறிந்து சொல்ல முடிந்தால் இன்று தாறுமாறாகத் தண்ணீரை உறிஞ்சி அதை கோககோலா வாங்கிக் குடித்துக்கொண்டிருக்கும் மனிதர்களுக்குப் பாடமாக இருக்கும்.
சாத்தியம்: மூன்று
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பரந்த பூமியின் பெரும்பாலான நிலம் கடலால் சூழப்பட்டிருக்க வேண்டும்.
இந்த தியரியை திருப்பதி மலைக்கும் பொருத்திச் சொல்வார்கள். ஆம், திருப்பதி மலை ஒரு காலத்தில் கடலுக்கு கீழே இருந்ததாகவும், அங்கிருக்கும் புகழ்பெற்ற சிலாதோரணப் பாறைகளில் கடல் அலைகளால் ஓயாமல் அரிக்கப்பட்டதன் தன்மைகள் காணப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
ஏன் இமயமலைகூட கடலுக்குக் கீழிருந்து கண்டத் திட்டுகளின் மோதலால் வெளிக்கிளம்பியதுதான் என்னும் தியரியும் உண்டு.
அந்த தியரிப்படி பெரும்பாலான நிலம் கடலால் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். சூழப்பட்ட நிலம் அழுத்தம் காரணமாகக் கடலுக்குள் கடையப்பட்டிருக்க வேண்டும்.
அதன் காரணமாக மேலுள்ளது கீழாகவும் கீழுள்ளது மேலாகவுமாக புரட்டப்பட்டுக் கலைந்திருக்க வேண்டும்.
இயற்கையின் பற்பல நூற்றாண்டுக்கால அலைக்கழிப்புக்குப் பின் இப்போதுள்ள பூமி மெல்ல மெல்ல வெளிப்பட்டிருக்க வேண்டும்.
வெளிப்பட்ட இடங்களை அண்டி அண்டி மனித நாகரிகம் மெல்லத் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும்.
அப்படியென்றால் ஏன் கடல் கொண்டது என்பதைக் கண்டறிந்தாக வேண்டும். இன்று, சென்னையிலேயே நிலத்தடி நீரை சகட்டு மேனிக்கு உறிஞ்சு எடுத்து இடம் கொடுத்ததால் கடல் நீர் உள் புகுந்து கரிக்கத் தொடங்கவில்லையா?
பூமிக்கு உள்ளே புகுந்த கடலுக்குப் பூமிக்கு மேலே ஏற எவ்வளவு நேரம் ஆகும்? கீழடியை வெளிப்படுத்தியதன் மூலமாக இயற்கை நம்மை அலர்ட் செய்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.
நாம் பழம்பெருமை மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் புவியியலின் அடுத்த கட்டம் நோக்கி வேகமாக நகர்ந்தாக வேண்டிய காலம் இது. அதற்குண்டான அறிவியலை நாம் வளர்த்துக் கொண்டாக வேண்டிய கட்டம் இது.
மில்லியன் ஆண்டுக்கால மர்மத்தை ஆராயப் புகுவது மிகப் பெரிய அறிவியல்தான். அதற்குண்டான வேலை மிக மிகப் பெரிதுதான்.
ஆனால், நமது முன்னோர்கள் அவற்றையெல்லாம் கடந்து வென்றிருப்பார்கள் என்பதை முதலில் நாம் நம்ப வேண்டும்.
இயற்கையின் மீது நாம் செய்யும் அராஜகங்கள் அனைத்தையும் உடனடியாக அடியோடு நிறுத்தியாக வேண்டும். விஞ்ஞானத்தை முடுக்கியது போதும் என்று அடங்கியாக வேண்டும். ஓரளவேனும் இயற்கையோடு இணைந்து வாழப் பழக வேண்டும்.
இயற்கைக்கு எதிராக நடக்கும் அநீதிகள் தொடர்ந்து கொண்டே இருக்குமானால் பூமிப் பந்தின் எந்தப் பகுதி வேண்டுமானாலும் கீழடியாகப் போகலாம். இதுவரை இழைத்த கொடுமைக்கு மறுவினையாக இயற்கை என்ன செய்துவிடப் போகிறதோ என அஞ்சப் பழக வேண்டும்.
எல்லாவற்றையும் கடந்து வந்த நமது முன்னோர்கள் நம்மைவிடப் புத்திசாலிகள். பஞ்ச பூதங்கள் எப்படி எல்லாம் குணம் காட்டும் என்பதையும் நிச்சயமாகக் கண்டு குறித்து வைத்திருப்பார்கள். அந்த சூட்சுமங்களைத் தேடிக் கண்டு பிடித்துவிட வேண்டும்.
வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், சங்கப் பாடல்கள், சித்தர் பாடல்கள் என எங்கு ஒளித்து வைக்கப்பட்டிருந்தாலும் ‘முன் மறுப்புச் சிந்தனை’ இன்றி அவற்றை ஆய்ந்தறிந்துவிட வேண்டும்.
அந்த ஆய்வின் முடிவைக்கொண்டு இன்றைய சந்ததியினருக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை இந்தப் பூமியில்…
“இந்த பூமியை இன்னும் இன்னும் பத்திரமாக வைத்துக்கொள்வதில்தான் உங்கள் பெருமை இருக்கிறது…” என்கிறது கீழடி!
கட்டுரையாளர் குறிப்பு:

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.