ருது சம்ஹாரம்! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

மேற்கத்திய நாடக உலகில் ஷேக்ஸ்பியர் படைப்புகள் பிரஸித்தம். போலவே, இந்திய நாடக உலகில் காளிதாஸரின் சாகுந்தலம்.

அவரால் படைக்கப்பட்ட மற்றுமோர் ஆனந்த காவியம் “ருது சம் ஹாரம்”.

வடமொழியில் “ருது” என்றால் காலம் என்று பொருள்படும். “சம்” என்றால் வடிவு. “ஹாரம்” என்றால் மாலை. கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால் “ருது சம்ஹாரம்” என்பதை “காலம் சூடிய அழகிய மாலை” அல்லது “மாலை சூடிய அழகிய காலம்” என்று தமிழ்ப்படுத்திக்கொள்ளலாம்

காலத்தை, வஸந்த ருது, க்ருஷ்ம ருது, வர்ஷ ருது, ஷரத் ருது, ஹேமந்த் ருது, சிசிர ருது என வகைப்படுத்திக் கொண்டாடினார்கள் வடவர்கள். தொல்காப்பிய சாசனத்தில் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் என அறுவகை கொண்டு போற்றப்பட்டது.

காளிதாஸரின் ருது சம்ஹாரம், சிற்றின்பம் என்னும் ஸ்ருங்கார ரஸத்தைப் பிழிந்தெடுத்திருப்பதுதான் எனினும், காவியம் நெடுக விரிந்தோடும் இயற்கை வர்ணனைகளோடு ஆங்காங்கே சமூக அர்ப்பணிப்புகளையும் கொண்டிலங்குகின்றது.

அதன் வேனிற் காலப் படலத்தில் நாகத்தையும் – கேகயத்தையும் வைத்து காளிதாஸரால் படைக்கப்பட்ட ஓர் காட்சி அற்புதமானது.

பயின்றெண்ணி பயின்றெண்ணி நெகிழத் தக்கது.

**கேகயமும் – நாகமும்**

அது, முடுக்கியெடுக்கும் கடுங் கோடைக்காலம்.

உச்சிச் சூரியன் கொச்சை நிலத்தைத் தன் பாரிய கிரணங்களால் சுட்டுப் பொசுக்கிக்கொண்டிருக்கும் ‘சுள்’ளெனும் காலம்.

பட்டப் பகலின் வெட்ட வெளியில் இரை தேடிச் சலித்த மெலிந்த நாகம் ஒன்று, சக்தியற்ற நிலையில் மெல்ல மெல்ல ஊர்ந்து நகர்ந்து வந்துகொண்டிருக்கின்றது.

“கடவுளே, இரை கிடைக்காவிடினும் கேடில்லை, நிழலாவது எனக்கு கிடைக்கச் செய்யேன்…” என்றபடி கூரிய வெப்பத்தை மீறிக் கடக்க முடியாமல் அல்லாடிப் புரண்டுகொண்டிருக்கின்றது.

ஆங்கே, நீல மயிலொன்று தன் அகன்ற தோகையினை அழகாக விரித்தபடி ஒயிலாக நின்றிருக்கிறது.

அதன் விரிந்த தோகையினால் படர்ந்த பெரும் நிழல், ஆலரசம்போல் அசைந்தாடி சுகம் காட்டிக்கொண்டிருக்க,

நாகத்தின் அந்த நேரத்து எளிய மனம் விரிந்த மயிற்தோகை நிழலில் சற்றே இளைப்பாற இச்சை கொண்டு வளைந்தோடி அண்டுகிறது.

பாம்பும் மயிலும் பரம்பரை எதிரிகள் அல்லவா ?

“எங்கே வந்தாய்?” என்பது போல சடாரென நாகத்தை நோக்கிக் கோபத்தோடு திரும்புகிறது மயில்.

நீலமயிலின் கோபக் கண்களைக் கண்டு உயிர் சுருங்கிக்கொண்ட நாகம் மெல்ல எழுந்து நிமிர்ந்து கேட்டுக் கொண்டது…

“மயிலே, நாமிருவரும் பரம்பரை எதிரிகள் என்பது சரிதான். உன்னோடு போராடி நிற்பதுதான் என் பிறவிக்கழகு என்பதும் சாலச் சரியே.

ஆனால், இந்தப் பொல்லாத கோடையில் நான் மிகவும் நலிந்து நொந்து கிடக்கிறேனே மயிலே! பரம்பரைக் குரோதத்தை இந்தக் கோடை முடிந்து வசந்தம் வரும்வரை கொஞ்சம் தள்ளி வைத்துக்கொண்டால் என்ன மயிலே?”

இயற்கையோடு ஊடாடி, சமூகம் சார்ந்த தன் மன வேட்கையை நெகிழ்ச்சியோடு அள்ளித் தெளிக்கிறார் காளிதாஸர்!

“மயிலே உனது பெருந்தன்மையால் இந்த ருதுவை சம்ஹாரமாய் சூட்டிக் கொடுத்து விடு..” என்கிறார் அந்த மகாகவி.

**இன்றைய தமிழகம்!**

வசந்த ருது வந்துவிடாதா என்று காளிதாஸரின் இளைத்த நாகம் ஏங்கியதைப் போல் இன்று தாய்த் தமிழகமும் ஏங்கித் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது.

கடந்த 30ஆம் திகதி, இந்தியாவின் உச்சகட்ட வெப்பம் உமிழப்படும் ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பம்.

அதே நாளில், தமிழகத்தின் வெப்ப அளவு 38 டிகிரி செல்ஷியஸ். வெறும் நான்கு டிகிரிதான் வித்தியாசம்.

அந்த நாளில்தான் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்குச் சென்று வந்தார்.

ஒட்டுமொத்த மீடியாக்களின் கேமிரா ஒயர்களும் – மைக்குகளும், வெள்ளெலியின் வீச்சம் கொண்ட நாகம் போல், அலைபாய்ந்து ஓடிப் புடைத்து எழுந்து நிற்க, மிச்சமிருந்த நாலு டிகிரியும் கூடியேறி அனல் கக்க ஆரம்பிக்க, தமிழகம் தகித்தது.

சோஷியல் மீடியாக்கள் எங்கும் பலவகை கூச்சல்கள், கலவரங்கள்.

ஒட்டுமொத்தத் தமிழர்களும், பூமி வெப்பம், மன வெப்பம். எதிர்காலம் குறித்த அச்ச வெப்பம் என மொத்தமாய் சூழக் கண்டு துவண்டு தள்ளாடிப் போனார்கள்.

இந்த அசாதாரண அதிர்வைப் படித்த, அறிவார்ந்த சமூகம் எளிதில் கடந்து போய்விடலாம். ஆனால், இதுபோன்ற அதிர்வுகளால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் உளவியல் உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல.

என்ன நடக்கிறது என்பது ஒவ்வொருவருக்கும் புரிகிறது. ஏதேனும் மறுவினையாற்றிவிட வேண்டும் என்று அவர்கள் மனம் துடிக்கிறது ஆனால், நம்மால் என்ன செய்துவிட முடியும் என்னும் இயலாமை அவர்களைச் சூழ்ந்தடித்துக்கொண்டிருக்கிறது.

இதுபோன்ற அலைபாய்தல்கள் அவர்களறியாமலேயே அவர்களது வீட்டிலும் வெளியிலும் வேலையிலும் எதிரொலிக்கும். சமூகம் கெடும். இந்த உளவியல் சூட்சுமத்தை அரசியல் மேலோர்கள் உணர்ந்தாக வேண்டும்.

ஆம், கடந்த சில வருடங்களாக விடாமல் விரட்டப்படும் தமிழக மக்களின் மனநிலை மிகக் கொடுமையானது. அதனை ஆதூரக் கண்கொண்டு பார்ப்பது அரசியலாளர்களுக்கு அழகு.

விவேக சிந்தாமணி என் நினைவுக்கு வருகின்றது.

**ஆவீன; மழைபொழிய; இல்லம் வீழ;**

**அகத்தடியாள் மெய் நோக; அடிகை சாக;**

**மாவீரம் போகுதென்று விதை கொண்டோட;**

**வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள;**

**சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற;**

**தள்ளவொணா விருந்து வர; சர்ப்பம் தீண்ட;**

**கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க;**

**குருக்கள் வந்து தட்சணைக்கு குறுக்கே நிற்க;**

**பாவேந்தர் கவிபாடி பரிசும் கேட்க;**

**பாவி மகன் படும் துயரம் பார்க்கொணாதே!**

தமிழக வாக்காளரைத் தத்ரூபமாக வடிக்கும் இந்த விருத்தத்தை என் மனம் கொண்ட அளவில் விரித்துரைக்க விரும்புகிறேன்.

**ஆ – ஈன:**

ஆ என்றால் பசு. வீட்டுப் பசு குட்டி போட்டுவிட்டதாம். பசு குட்டி போட்ட இடம் சுற்றிலும் சகதியாகத்தானே இருக்கும்?

சகதியைச் சீர் செய்துகொண்டிருக்கிறான் அதன் உரிமையாளன்.

அந்த வேளையில்…

**மழை பொழிய:**

“சோ” வென்று மழை பொழிய ஆரம்பித்து விட்டதாம்.

பசு கன்றீன்ற இடம் மேலும் சகதியாக, மழைச் சகதியிலிருந்து பசுவையும் குட்டியையும் காப்பாற்ற, துவட்டுக் கோல் தேடி எடுத்து வந்து சகதியை ஓரங்கட்டியபடியே இருக்கும் தருணம்…

**இல்லம் வீழ:**

வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுகின்றது.

இல்லம்தான் இடியட்டுமே, என் மனையாள் எங்கே என்று தேடிப் போகிறான் அந்த அப்பாவி.

**அகத்தடியாள் மெய் நோக:**

அந்த நேரம் பார்த்து அந்த அப்பாவியின் மனைவி மூச்சிளைப்பு வந்து படுத்துவிட்டாள்.

மழைக்கு நடுவே ஓடி, வைத்தியனைக் கெஞ்சி அழைத்து வந்து வைத்தியம் பார்த்து, அவளை உச்சித் தடவி உறங்க வைத்த பின்பு சற்றே ஓய்வாகச் சாயலாம் எனத் திண்ணைக்கு போனால்…

**அடிமை சாக:**

மாடு, மனை மொத்தத்தையும் காவல் செய்து வந்த அவனது விசுவாசமிக்க வேலைக்காரன் விதி வசத்தால் அந்த திண்ணையில் செத்து கிடக்கிறான்.

தலையிலடித்துக்கொண்டே முறைக்கு சொல்லிவிட்டு, உரிய மரியாதையைச் செய்து அவனை வழியனுப்பிய பின் வீடடைந்து உறங்கப் போக…

உறக்கம் கொள்ள விடாமல் உசுப்புகிறது முன்னாள் பெய்த மழை…

மழை பெய்த உடனே விதை விதைத்தால் அல்லவா அடுத்த வேளை சோறு?

**மாவீரம் போகுதென்று விதை கொண்டோட:**

மா என்றால் நிலம். நிலத்தில் ஈரம் காயும் முன்னே விதை விதைத்தாக வேண்டுமே… தெறிக்க ஓடுகிறான் அந்த அப்பாவி.

ஓடும் பாதையில் அடுத்த பிரச்சினை ஒன்று வந்து நிற்கிறது…

**வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள:**

“வாங்கிய கடனில் மீதம் எங்கே?” என்று வழி மறித்து நிற்கிறான் கருணையற்ற அந்த வட்டிக்காரன்.

“ஐயா, இன்னமும் பத்து சதவிகிதம்தானே மிச்சம். உழுதெழுந்தால் தந்துவிட மாட்டேனா?” என்கிறான் அப்பாவி.

“ஆகட்டும், வட்டியோடு வந்து கொடுத்துவிடு” என்றவனிடமிருந்து தப்பித்து ஓடினால்…

எதிரே தந்தி சுமந்தொருவன் வருகிறான்…

**சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற:**

“சா” என்றால் சாவு. ஓலை என்பது அந்தக் காலத்துத் “தந்தி”.

“இன்னுமா அவன் என்னைக் காண வரவில்லை என்று உன்னைக் குறித்து ஏங்கி விசாரித்தபடியே இறந்துபோனாராம் அந்த பண்டிதர். உனக்குக் கல்வி புகட்டியவராமே…?” ஓலை கொடுத்தவன் தயங்கிபடியே சொல்ல…

“ஐயகோ, அவருக்காக ஏழு வேட்டிகளை வாங்கி வைத்திருந்த என் ஆசை எல்லாம் பாழாய் போய்விட்டதே ” என்று முகத்தில் அறைந்து குமுறிக்கொண்டிருக்கும் வேளையில்…

**தள்ளவொணா விருந்து வர:**

மேள தாள சத்தம் கேட்கிறது. தலை நிமிர்த்திப் பார்த்தால்… எதிரே, பெருங்கூட்டம் வந்து கொண்டிருக்கிறது.

அசலூரில் கட்டிக் கொடுக்கப்பட்ட பாசத்துக்குரிய உடன்பிறப்பை வளைகாப்புக்காக அழைத்து வருகிறார்கள். மூத்தவன் என்னும் முறையில் அவர்களை இன்முகத்தோடு வரவேற்றே ஆக வேண்டும்.

“வாங்க..வாங்க….” என அவசரமாக வரவேற்க ஓடும் வேளையில்…

**சர்ப்பம் தீண்ட:**

புதரில் இருந்து வெளிப்பட்டு தன் வழியே போய்க் கொண்டிருந்த பாம்பு ஒன்று அவன் காலில் பட்டுவிட்டது. காரணமில்லாமல் மிதி பட்டதால் திமிறித் தீண்டிவிடுகிறது நாகம்.

வலிமிகுத்து விஷமேறிக்கொண்டிருந்தாலும் வந்த உறவினர்களிடம் அதைக் காட்டிக்கொள்ள முடியுமா? சகுனம் சரியில்லை என்று உடன்பிறப்பை அல்லவா தூற்றுவார்கள்?

“தயவுசெய்து எல்லோரும் எனது வீட்டில் சென்று இருங்கள். பிள்ளை சுமந்து வந்த என் தங்கையின் உடல் நலத்தைப் பரிசோதிக்க ஊர் வைத்தியரை அழைத்துக்கொண்டு இதோ ஓடி வந்துவிடுகிறேன்…”

என்றபடியே குறுக்கு வழியில் புகுந்து வைத்தியரின் வீட்டுக்கு ஓடும் போது எதிர்பட்டுவிடுகிறார்கள் அரண்மனைக் காசாளர்கள்.

**கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க:**

“ஆகா, எங்கே உன் வரிக் கூலிப்பணத்தைக் கேட்டுவிடுவோமோ என்று குறுக்கு வழியில் புகுந்து ஓடுகிறாயா…”

“இல்லை ஐயா, விதைத்தது முளைத்தவுடன் முதல் தவணையே உங்கள் தவணைதானே. என்னை அறிய மாட்டீர்களா ?”

ஒருவழியாகத் தப்பித்து, வைத்தியம் செய்துகொண்டு, உயிர் மீண்டு, வீடு வந்து, உறவுகள் சூழ கோயில் சென்று கும்பிட்டுத் திரும்பினால்…

**குருக்கள் வந்து தட்சணைக்கு குறுக்கே நிற்க:**

“என்ன ஓய், தட்சணை வைக்க மறந்துட்டீரா?” என்றார் குருக்கள்.

அவருக்கும் அழுதான்.

“சுபமஸ்து“ என்றபடியே குருக்கள் திரும்பக் கொடுத்த அந்த வெள்ளித் தாம்பாளத்தோடு வெளிவந்த அந்த அப்பாவியை,

கட்டக் கடைசியாக மடக்கினான் ஒரு புலவன்.

**பாவேந்தர் கவி பாடி பரிசும் கேட்க:**

“வள்ளலே, நீ பசு மாடு ஒன்று வாங்கும்போது உன்னை போற்றிப் பாடினேனே, அப்போது பரிசில் ஏதும் தராமல் போனாயே நினைவிருக்கிறதா? புதிதாக ஒன்றும் பாடுவதாக ஐடியா இல்லை. இப்போது மனதார நீ எனக்குப் பரிசில் கொடுத்துவிட்டால் என் வறுமை ஒழியும். அல்லவெனில், வீதிதோறும் நன்மாடஞ் சிறக்கவே என்பதுபோல் வசை பாடிவிடுவேன். எப்படி சௌகரியம்?”

வம்சம் தழைக்க வேண்டுமே என்ற கவலையில் அந்தக் கடைசி வெள்ளித் தாம்பாளத்தையும் புன்சிரிப்போடு அவரிடம் கொடுத்துவிட்டு தனக்குள் நொந்தபடி நடந்தான் அந்த அப்பாவி.

**பாவி மகன் படும் துயரம் பார்க்கொணாதே:**

பாவி மகன் என்றால் – தன் துயரம் கேட்பாரில்லாமல் தவிக்கும் ஓர் மகன் என்று பொருள்.

எக்கேடோ கெட்டு ஒழியட்டும் என்று சீழ்பட்டுக் கிடக்கும் ஒருவன் என்றும் பொருள்படும்.

விவேக சிந்தாமணி காட்டும் பரிதாபத்துக்குரிய அந்த அப்பாவிகள் சூழ்ந்த பாழ்நிலமாகத்தான் இன்றைய தமிழகம் இருக்கின்றது.

சொல்லிக்கொள்ளாத பீதி ஒவ்வொருவரையும் பீடித்திருக்கிறது.

வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும் வெம்மை சூழ்ந்த வெறுமை அவர்களின் மனதைச் சூழ்ந்திருக்கின்றது.

இன்னமும் எவ்வாறெல்லாம் நம்மை பந்தாடப் போகிறார்களோ என்னும் அச்சம் தமிழர்களைப் பிடித்தாட்டிக்கொண்டிருக்கிறது.

கொடி ஆட்டிக் கூவியழைக்கும் அரசியலாளர்களே, இந்த அப்பாவிகளுக்காக உங்கள் சொந்த மாச்சரியங்களை கொஞ்சம் விட்டுக் கொடுப்பீர்களா? மயங்கித் தள்ளாடும் இந்த மக்களைத் தோளோடு அரவணைத்து அனுசரணை காட்டுவீர்களா ?

ஆம், தமிழக அரசியல் களத்தில் இது, “கொடுங் கோடைக் காலம்”.

இந்தக் காலத்தை நீங்கள்தான் “சம்ஹாரம்” செய்து குளிரவைக்க வேண்டும். உங்கள் தயவால், இந்தக் கொடுங்கோடையை மக்கள் நிம்மதியாகக் கடந்தேறியாக வேண்டும்.

வாக்குத் தத்தம் செய்த – செய்யப்போகும் மக்களை அரவணைக்க நீங்கள் உங்களுக்குள் கொஞ்சம் விட்டுக்கொடுத்தாக வேண்டும்.

காளிதாஸரின் நலிந்த நாகம் நெளிந்து கேட்ட வாசகத்தை உங்கள் நினைவுக்குக் கொண்டுவருகிறேன்…

“இந்தப் பொல்லாத கோடையில் நான் மிகவும் நலிந்து நொந்து கிடக்கிறேனே மயிலே! பரம்பரைக் குரோதத்தை இந்தக் கோடை முடிந்து வசந்தம் வரும்வரை கொஞ்சம் தள்ளி வைத்துக்கொண்டால் என்ன மயிலே ?”

விவேக சிந்தாமணியின் மற்றொரு பாடல்:

**வேதமோதிய வேதியர்க் கோர் மழை;**

**நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை;**

**மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை;**

**மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!**

**மூன்றும் பெய்தால் சுகம்!**

இரண்டுதான் என்றாலும் இதம்!

அட, ஒன்றாவது பெய்து தொலைக்கட்டும்!

*

(கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ovmtheatres@gmail.com)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share