ஸ்ரீராம் சர்மா
**இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.**
என்பார் அறிவுப் பேராசான் திருவள்ளுவர்.
அதாவது, மலை போல் துன்பம் வந்த போதும் தன் உள்மன ஊக்கத்தினால் அந்தத் துன்பத்துக்கே துன்பம் தந்து ரசிப்பது அறிவுடையார் வழக்கம் என்கிறார்.
**“அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்”** என்னும் அந்தக் குறள் வரிக்கு உயர்சாட்சியாகத் திகழ்ந்து காவேரிக் கரையோரம் வல்லாடிக்கொண்டிருக்கிறார் நமது போற்றுதலுக்குரிய முத்தமிழறிஞர் கலைஞர்.
லண்டன் மருத்துவர்கள் எல்லாம் அவருடைய மனத்திட்பத்தையும் போர்க்குணத்தையும் எண்ணி எண்ணி வியக்கிறார்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் எனது தந்தையார் ஓவியப் பெருந்தகை வேணு கோபாலருக்கும் இடையே இருந்த நட்பும் பாசமும் நெகிழ்ச்சிக்குரியது.
1959இல் நிறைவு பெற்ற திருவள்ளுவர் திருவோவியத்தைக் காண அன்றைய அத்துனை அறிஞர் பெருமக்களும் கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் சென்னை இல்லத்துக்கு வந்தார்கள்.
அத்துணை அறிஞர்களும், திருவள்ளுவர் திருவுருவத்தைப் பற்றி வானளாவப் புகழ்ந்து நெக்குருகி பேசப் பேச… அந்த வரலாற்றுப் பேச்சுக்கள், அப்படியே ஒலிப்பதிவும் செய்யப்பட்டன. (பாதுகாக்கப்பட்டிருக்கிறது.)
கலைஞரும் திருவள்ளுவர் திருவுருவத்தைக் கண்டு விதந்தோதினார். அடடா, என்ன ஒரு பேச்சு அது. இன்றைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் அவசியம் கேட்டாக வேண்டிய ஈடு இணையற்ற சொற்பொழிவு அது!
ஏன், அந்த “நா” இந்தத் தமிழகத்தை இன்னமும் எழுந்தாண்டு வருகிறது என்பதை அப்போது புரிந்துகொள்ள முடியும்! ஆம், கேட்கக் கேட்கத் திகட்டாதது கலைஞரின் அன்றைய பேச்சு!!
**(1959இல் திருவள்ளுவர் திருவுருவம் குறித்துக் கலைஞர் பேசிய அந்த ஒலி நாடாவைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அழியாப் பொக்கிஷம் அது .)**
அந்தப் பேச்சின் முடிவில் சொல்கிறார்…
“இதுகாறும் தமிழ்நாட்டில் அழிக்க முடியாத விஷயங்களாகத் திருக்குறள் மற்றொன்று திருவள்ளுவர் என இருந்தது. தற்போது மூன்றாவதாக வேணுகோபாலரும் அதில் இணைந்துவிட்டார். ஆம், இந்தத் தமிழகம் உள்ளவரையில் திருக்குறள், திருவள்ளுவர், திரு.வேணுகோபால் சர்மா என்று இந்த மூன்றும் நிலைபெற்றுவிட்டன. தமிழகம் வேணுகோபாலருக்குக் காலமெல்லாம் நன்றிக்கடன் பட்டுவிட்டது!”
அவ்வாறு சொன்னதோடு நில்லாமல், பல்லாண்டுகளுக்குப் பிறகு அப்படியே செய்தும் காட்டினார். அதனால்தான் அவர் தனித்து நின்று கலை உலகையும் ஆண்டுவருகிறார் !
எங்களுடைய தகப்பனாருக்கும் குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி அவர்களுக்கும் இருந்த மாறாத நெருக்கத்தை அருகில் இருந்து பார்த்தவரான மூத்த நிருபர் திருமிகு. பால்யூ ஐயா அவர்கள்…
“திருவள்ளுவரை நமக்குத் தந்தவரின் இன்றைய நிலை நன்றாக இல்லை…” என்று சிறிய செய்தியாகக் குமுதத்தில் போட்டுவிட்டார்.
இதைப் படித்ததும் கவலைகொண்ட கலைஞர், தனது குறளோவியம் வெளியீட்டு விழாவில் அதன் முதல் வரவுத் தொகையான ரூபாய் பத்தாயிரத்தை அப்பாவுக்கு வழங்கி…
“இது பணமுடிப்பு என்று யாரும் கருதிவிடக் கூடாது. திருவள்ளுவரை வரைந்த ஓவிய மேதைக்கு என்னுடைய “காணிக்கை” என்றார். முரசொலியில் இரண்டு பக்கங்களுக்கு அந்தச் செய்தி வந்தது.
**சொல்லுதல் யார்க்கும் எளிய ; அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.**
என்பது பொய்யாமொழி!
1959இல் வேணுகோபாலருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று சொன்னதை, 1987இல் குறளோவிய விழாவில் “காணிக்கை” என்று சொல்லிய வண்ணம் செயல்படுத்தி முடித்தார்!
கலைஞரும் அப்பாவும் பரஸ்பரம் செலுத்திக்கொண்ட அன்புக்கும் மரியாதைக்கும் எடுத்துக்காட்டாக, ஏறத்தாழ 13 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்த தருணம் ஓர் நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்தேறியது. அந்த நிகழ்வுக்குக் காலம் என்னை சாட்சியாக நிற்க வைத்தது.
அது 1989. சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அரியணை ஏறியிருக்கும் தன் நண்பரை வாழ்த்த விரும்பினார் என் தந்தையார். ஆனால், எங்கும் நகர முடியாதபடிக்குப் படுத்த படுக்கையாய் அவரது உடல்நிலை.
படித்துக்கொண்டிருந்த சிறுவன் என்னை அழைத்து, “ஒரு சந்தன மாலையை வாங்கிக்கொண்டு சென்று கலைஞருக்கு என் சார்பில் மரியாதை செலுத்தி வா…” என்றார்.
எனக்கோ, சிறுவன் நம்மையெல்லாம் எங்கே உள்ளே விடப் போகிறார்கள் என்னும் தயக்கம் இருந்தாலும், அப்பா சொல்லி விட்டார். செய்து விடுவோம் என்றபடி கிளம்பிச் சென்றேன்.
மவுன்ட் ரோடு காதி கிராமத்யோக்கில் ஒரு சந்தன மாலையை வாங்கிக்கொண்டு, லாயிட்ஸ் ரோடு வரை சென்றவன் பிறகு, கோபாலபுரம் வீட்டிற்கு நீந்திச் சென்றேன்.
ஆம், மீண்டும் கலைஞருக்கு அரியணை என்று ஆர்ப்பரித்த தொண்டர்களின் ஓயாத வாழ்த்தொலிகள் எங்கும் ஓங்கியபடியே இருக்க, கடல் போன்றதொரு கூட்டம் நெரிந்துகொண்டிருந்தது.
ஒருவழியாக வீடுவரை சென்றவன் என் தந்தையார் பெயரை எழுதி உள்ளே அனுப்பினேன்.
என்ன ஆச்சரியம்! உடனடியாக ஒரு செக்யூரிட்டி வந்து என்னை அழைத்துக்கொண்டு போய் கலைஞரின் உதவியாளர் திரு.சண்முகநாதன் அவர்கள் முன் நிறுத்தினார்.
வேறெங்கும் காண முடியாத, கலைஞர் வீட்டுக்கே உண்டான தனிப்பண்பு அது.
புன்னகையோடு என்ன அமரச் சொன்னார் திரு.சண்முகநாதன்.
அங்கே மரியாதைக்குரிய இசைமுரசு திரு. நாகூர் ஈ.எம். அனிஃபா அமர்ந்திருந்தார். அவரும் நானும் மட்டும்தான் அங்கிருந்தோம். முதலில் நாகூர் அனீஃபா அவர்கள் மேலே அழைக்கப்பட, அவர் இறங்கியதும் நான் அழைக்கப்பட்டேன்.
மாடி அறையில் கலைஞரைக் கண்டதும் என்னையறியாமல் கண்கள் பனித்தன. பணிவோடு அவரிடம் சந்தன மாலையை ஒப்படைத்தேன்.
சிறுவன் என்னைக் கண்டதும் பளீரென்று சிரித்தபடியே அருகில் அழைத்தார் கலைஞர்.
பரிவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி,
“சீட்டு ஏதும் கொண்டாந்தியா…?”
“இல்லீங்களே…!”
புருவம் உயர்த்தி அழுத்திக் கேட்டார்…
“அப்பா, ஏதும் சொல்லிவிட்டாரா…?”
“இல்லீங்களே, ஐயா..!”
சற்றே முகம் மாறி… இரண்டொரு நொடிகள் வழக்கம்போலத் தன் உதட்டில் விரல்களை வைத்து அழுத்தியவர்…
“சரி, நீ போய் அப்பா கிட்ட கேட்டு, என்ன தேவை என்பதை எழுதி வாங்கி வா…புரியுதா…?” என்றார் சற்று கனக் குரலில்…
வேகமாகத் தலையை ஆட்டி வைத்தேன்.
சட்டென்று எழுந்தவர் படிகளில் இறங்க ஆரம்பித்தார். தபதபவென்று எல்லோரும் அவர் பின்னால் இறங்க நானும் இறங்கினேன்…
கீழே கூடியிருந்த மக்கள் வெள்ளம் கலைஞரின் தலையைக் கண்டதும் எழுப்பிய ஆரவாரத்தில் உறைந்துபோனேன்.
மக்கள் வெள்ளம் அப்படியே அவரை அலாக்காகத் தூக்கிக்கொண்டு போய் காரில் அமர வைக்க, கார் பறந்தே போனது கோட்டையை நோக்கி…
வீட்டுக்குத் திரும்பி வரும் வழியிலெல்லாம் யோசித்துக்கொண்டே வந்தேன்.
ஏறத்தாழ 13 ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார். இழந்த தன் முதல்வர் பதவியை மீண்டும் பிடித்து இன்றுதான் பதவி ஏற்கப் போகிறார்.
ஒட்டுமொத்தத் தமிழகமும் பத்திரிகைகளும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்க, இனிதான் கோட்டைக்கே போகப் போகிறார். வாசலில் ஆயிரக்கணக்கான மக்கள் அடைத்துக்கொண்டு ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனர்.
அத்தனை பரபரப்புக்கிடையிலும், முடியாமல் படுத்திருக்கும் தன் நண்பருக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்று முனைந்து முனைந்து கேட்ட கலைஞரை வியந்தபடியே, அரியணை கண்ட அடுத்த கணமே அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்துவிட்ட அந்த அரச குணத்தை எண்ணி மனம் நெகிழ்ந்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.
தந்தையார் உறங்கிக்கொண்டிருந்தார். வழக்கமாக அவர் உறங்கும்போது யாரும் தொந்தரவு செய்வதில்லை. நம்பி டாக்டரின் அட்வைஸ் அப்படி.
கண் விழித்தவுடன், கலைஞருக்கு சந்தன மாலை வாங்கிய சீட்டின் பில்லை அவரிடம் கொடுத்து விவரம் சொன்னேன். அப்பா மிகவும் மகிழ்ந்தார்.
நான் சொல்வதற்கு காது கொடுத்தபடியே, உதடுகளை அழுத்தி விம்மியபடியே அந்த பில்லை இடது கையால் ஆதூரமாக தடவி உருட்டிக் கொண்டிருந்தார்.
கடைசியாக விஷயத்துக்கு வந்தேன்.
“அப்பா, கலைஞர் ஐயா என்னை அருகே பரிவோடு அழைத்து, அப்பாவிடம் சென்று என்ன தேவை என்று எழுதி வாங்கி வா என்று சொன்னார். இன்று மாலையே சென்று கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். பேப்பர் எடுத்து எழுதிக்கொள்ளட்டுமா…?”
சட்டென்று என் முகத்தை நோக்கினார் அப்பா. அவர் விழிகள் என் மேல் இருந்தாலும் அவர் பார்வை என் மேல் இல்லை என்பதை சர்வ நிச்சயமாக உணர முடிந்தது. கண்கள் லேசாகக் கலங்க ஆரம்பித்து அப்படியே உறைந்து நின்றது.
நாற்பதாண்டுக் கால நினைவலைகளை அவரது மெடுல்லா வேகமாக அலசி நிற்பது புரிந்தது. சட்டென்று இடது பக்கமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டவர் நீண்ட நேரம் கழித்துத் திரும்பி மெல்லிய குரலில் இப்படிச் சொன்னார்…
“ஸ்ரீராம், நான் சொல்றதை நல்லா புரிந்ஞ்சிக்கோ. கலைஞருக்கு என்மேல் ரொம்ப அன்பும் பாசமும் உண்டு. அதனால எனக்கு நிறைய செய்யணும்னு நினைக்கிறார். அதே மாதிரி, எனக்கும் அவர் மீது அன்பும் பாசமும் ரொம்பவே உண்டு. அதனால, நான் இப்போ அவரை தொந்தரவு செய்யக் கூடாது.”
அடுத்த பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறார் என்பதைப் புரிந்தவனாக அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பா தொடர்ந்தார்…
“அவர் எப்பேர்ப்பட்ட தலைவர் தெரியுமா…? எத்தனைப் போராட்டத்துக்கு பின்பு அவர் மறுபடியும் ஆட்சிக்கு வந்திருக்கிறார் தெரியுமா? முதலில், அவர் நிம்மதியாக இந்த நாட்டை ஆளட்டும். இந்த தமிழ்நாட்டுக்குப் பல நன்மைகளை அவர் செய்ய வேண்டியதிருக்கிறது ! செய்வார் ! செய்யட்டும்! பிறகு பார்த்துக்கொள்ளலாம். என்ன புரியுதா?”
அடுத்த ஏழாவது மாதத்தில் 31–08 –1989இல் ஓவியப் பெருந்தகை வேணுகோபாலர் மறைந்தார். திருவல்லிக்கேணி வீட்டில் குலுங்கி அழுதபடியே நின்றிருந்த பேராசிரியப் பெருந்தகை அவர்கள் பத்திரிகையாளரிடம்….
“ஒரு சூரியன் தன்னை ஒளித்துக்கொண்டது. இது எங்களுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பு” என்றார்.
எந்த அரசாங்கத்திடமிருந்தும் வீடு, நிலம் என்று எந்தவிதமான சலுகையையும் பெறாமலேயே இறுதி வரைக்கும் வாழ்ந்து மறைந்தார் ஓவியப் பெருந்தகை திரு.கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்கள்.
அதன் பிறகு, ஆறு மாதத்திலேயே திருவள்ளுவர் ஓவியத்தை அரசுடைமையாக்கினார் கலைஞர். “எழுத்தாளர் சாவியும் ஓவியப் பெருந்தகையும் எனது இரு கண்கள்” என்று பலமுறை குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர்.
தனது சட்டமன்றப் பொன்விழா பேச்சிலும் தன் கெழுதகை நண்பராம் ஓவியப் பெருந்தகையைக் குறிப்பிட மறக்கவில்லை நமது கலைஞர்.
துணிந்து சொல்வேன். எத்தனையோ முதல்வர்கள் இந்த மண்ணை ஆண்டிருக்கிறார்கள். இன்னமும் ஆள்வார்கள்.
ஆனால், **கலைஞரது காலம்** மட்டும்தான் கலைகளின் காலம். கலைஞர்களுக்குண்டான காலம்.
இன்று, இருள் சூழ்ந்தால் புரளி கிளம்புவது வழக்கமாகிவிட்டது. போலவே, அதிகாலைச் சூரியன் உதித்தெழுந்து தன் கிரணங்களால் அதைப் பொசுக்குவதும் வழக்கமாகிவிட்டது.
தன் அறிவுத் திண்மையினால் அனைத்தையும் உடைத்துக்கொண்டு அவர் மீண்டு வரும் காலம் பக்கம்.
காவேரிக் கரையேறி நின்றுகொண்டு அவர் பாடப்போகும் தமிழ் கண்டு மீண்டும் இந்த மண் சொக்கும்.
கலைஞர் என்னும் அந்த நான்கெழுத்து இந்தத் தமிழ் மண்ணைக் திசைக்கொன்றாய் நின்று என்றும் காக்கும்.
வாழிய முத்தமிழறிஞர் கலைஞர்!
வாழிய அவரது நீடு புகழ் !!
கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதனைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன் ஸ்ரீராம் சர்மா.�,”