ஈஷோபலோகம்!

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

“இரைந்து அறையும் நகரச் சந்தடியில் இருந்துகொண்டு எப்படித்தான் சிந்திக்கிறீர்களோ? கோவை ஈஷாவில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து போகலாம், வாருங்கள்…” என்று அழைத்தபடியே இருந்தார் நண்பர் ஈஷா பாலசந்தர். படைப்பாளிகள் மேலும் கரிசனப்பட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும், அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

நல்வாய்ப்பாக குரு பௌர்ணமி வந்தது. கடந்த மாதம் 27, 28ஆம் தேதிகளில் ஈஷாவில் இருந்தேன்.

வெள்ளியங்கிரி மலையடிவாரம். சில்லெனும் சீதோஷ்ண நிலை. பூந்தூறலாய்ச் செல்ல மழை. ஏறத்தாழ 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈஷாவைச் சுற்றி 340 டிகிரிக்கு விரியும் மலைத்தொடரின் மேல் மஞ்சோடித் தவழ்ந்திருக்க, ஆடிக்காற்று வீசியடிக்கும் ஏகாந்தச் சூழல்.

ஊன்றிக் கவனித்ததில், ஈஷா சொல்ல வரும் தத்துவமாக நான் புரிந்துகொண்டது இதுதான்.

கட்டுச்சோற்றைக் கொட்டிவிடு;

உள்ளுள் உற்று நோக்கு;

புதியன படை; ஆதியை அடை!

மனிதர்கள் சர்வ நிம்மதியாய் வாழ்ந்த காலம் ஆதிகாலம். அதனை வேதகாலம் என்றும் சொல்லலாம் என்றாலும் அப்படிச் சொன்னால் மதம் பூசித் தெரியும் என்பதால் ஆதிகாலம் என்றே கொண்டு தொடர்வோம்.

ஆதிகாலம் நிம்மதியாய் இருந்ததற்குக் காரணம் உண்டு. அன்று, சதாசர்வ காலமும் படைப்புகளும் கண்டுபிடிப்புகளும் அதுகுறித்த தேடல்களுமாகவே நிகழ்ந்துகொண்டிருந்தன.

படைப்பூக்கம் மிகுந்திருந்ததால் எங்கெணும் பரவசமும் உற்சாகமும் படர்ந்திருந்தன.

உணவுக்குரிய தானியங்களைச் சிலர் தேடிக்கண்டுபிடிக்க, அதனைச் சமைப்பதற்குரிய வழியை சிலர் கண்டடைய, குடிலமைக்க, கிணறு தோண்ட, உடை தயாரிக்க, மருந்துகளை உண்டாக்க, ஆயுதம் செய்ய, இயந்திரம் உருவாக்க, பண்டமாற்று முறை காண, சமூகத்தைக் கட்டமைக்கும் வழி செய்ய என எந்த நேரமும் சிந்தனைவயப்பட்டவர்களாக ஆரோக்கியமான படைப்புத் தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருந்தார்கள் அன்றைய மனிதர்கள்.

ஒன்றும் முடியாதவர்கள் சும்மா இருந்தார்கள். “சும்மா” இருப்பதைப் போலொரு சமூக பங்களிப்பு வேறொன்றுண்டா ?

மறுபுறம், அண்டவெளி ரகசியங்களை உள்வாங்கி அதனை ஒலிக்குள் அடக்கி மேலுமவற்றை மந்திரங்களாகச் சமைத்துவைக்கும் பெரும்பணியில் ரிஷிகளும் முனிவர்களும் ஈடுபட்டு அருஞ்செயல் புரிந்தார்கள்.

எந்த நேரமும் படைப்பூக்கமும் சமூக அக்கறையுமாக உற்சாகமாகவே வாழ்ந்திருந்ததால் மக்கள் மனதில் தேவையில்லாத மாச்சரியங்கள் ஏதும் எழாமல் இருந்தது.

அதனால்தான் ஆதிகாலம் மகிழ்ச்சியானதாகவும், ஏகாந்தமானதாகவும் நிம்மதியானதாகவும் இருந்தது.

ஒரு கட்டத்தில்…

இதுவரை படைத்ததும், கண்டுபிடித்ததும் போதும் என்னும் திமிரும் சோம்பல் குணமும் மனிதர்களுக்குள் உண்டாகிவிட, இனி உல்லாசமாக வாழ்ந்தால் மட்டும் போதும் என்றெண்ணத் தொடங்கி விட்டார்கள்.

அதன்பின் மெல்ல, மெல்ல மற்ற தீயகுணங்களும் வந்து சேர, உலகம் பல அநீதிகளைக் கண்டு மிரண்டது. பற்பலப் போர்களைக் கண்டு தள்ளாடியது.

ஆதி உலகின் இயல்புத் தன்மையாம் படைப்பூக்கத்திலிருந்து விலகியதால் மனித வாழ்க்கை அர்த்தமற்று வீழ்ந்துபோனது.

செக்கில் சிக்கிய சுக்காய் நொந்து நசிந்து இன்றிந்த நிலையில் வந்து நிற்கிறது.

பாழ்பட்ட இந்த உலகை மீட்டெடுத்து, நிம்மதியான அந்த ஆதித்தன்மையோடு மீண்டும் இணைத்துவிடமுடியுமென்றால் உயிர்கள் செழித்துவிடும்.

அதற்குச் செப்பனிடப்பட்டதோர் வாழ்க்கை முறை அவசியம். யோகா அதற்கு வழிகோலும் என்று ஈஷா நம்புவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஈஷாவில் நுழைந்ததும் என்னை வெகுவாகக் கவர்ந்தது அதன் கட்டுடைக்கும் தன்மை.

இவையெல்லாம் சதுரமாக இருக்க வேண்டும். இவையெல்லாம் செவ்வகமாகத்தான் இருக்க வேண்டும். இது கோள வடிவில் இருந்தால்தான் அழகு என்பது போன்று மந்தைத்தனமாக மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கும் வடிவங்களை எல்லாம் மெல்ல அகற்றி விடுதலை பெறுங்கள் என்கின்றன ஈஷாவின் உட்கட்டமைப்புகள்.

ஆன்மிகத்துக்கும் 360 டிகிரி உண்டு என்கிறது.

அங்கே, கதவுகள் உண்டு. சுவர்கள் உண்டு. குடில்கள் உண்டு. கூரைகள் உண்டு. எதுவுமே வழமையான தோற்றத்தில் இல்லை. நான் தங்கியிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த ஸ்டூலின் குறுக்குக் கட்டைகள் உட்பட அனைத்தும் புதிய கோணத்திலேயே இருந்தன.

மொத்தமும் மிஸ்டிக்கலாகவே இருந்தது என்பதைவிட ஆதித் தன்மையிலிருந்து வெகுதூரம் வந்து விட்ட நமக்கு அப்படித் தோன்றி நிற்கிறது என்னும் உண்மையை மெல்ல மெல்ல மனம் உள்வாங்கிக்கொண்டது.

ஈஷாவில் பல இடங்கள் மேடும் பள்ளமுமாக மண் தரையாகவே விடப்பட்டிருக்கிறது. பல இடங்களில் கல் தரை, சிமென்ட் தரை போடப்பட்டிருக்கிறது என்றாலும், அவையும் மேடும் பள்ளமுமாகவே இருக்கக் கண்டேன். இவ்வளவு செய்தவர்களுக்கு அதனைச் சமமாக நிரவிவிட முடியாதா என்ன? ஏன் அப்படிச் செய்யவில்லை?

மேடு பள்ளங்கள் உடையது பூமி. அதனை அவ்வாறே கொண்டுதான் ஆதி காலத்தில் நடந்தார்கள். அதுதான் நல்லது. அக்யூபங்க்ச்சர் போல நம் உடலுக்குச் சக்தியேற்ற வல்லது.

அதனைச் சமதளப்படுத்திக்கொண்டு நடப்பதன் மூலம் நாம் பல நூதனங்களை இழக்கிறோம் என்பதை மறைமுகமாக அறிவுறுத்துகிறது ஈஷா.

மூங்கில் தடுப்புகள், ஓலைக் கூரைகள், ஓய்வெடுக்க சுமைதாங்கிக் கல் போன்ற அமைப்புக்கள் என மெல்ல மெல்ல இயற்கையோடு இணையத் தூண்டியபடியே இருக்கிறது. பிளாஸ்டிக் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு கட்டத்திலும் ஆதித் தன்மையை மீட்டுக் கொண்டுவர விரும்பும் அந்த முயற்சியைத்தான் சிலர் ‘கார்ப்பொரேட் அப்ரோச்’ என்று புரிந்துகொள்கிறார்களோ என்னவோ !

கார்ப்பொரேட் அப்ரோச்சுக்குக் கவர்ச்சி காட்ட மட்டுமே தெரியும். விடிவைக் காட்டித்தர முடியாது. ஆனால், ஈஷா துல்லியமாக வழிகாட்டுவதாக எண்ண முடிகிறது.

ஆதிகாலத் தன்மையோடு மெல்ல இணைந்துவிடுவோம். மீண்டும் விடுதலையோடு கூடிய படைப்பூக்கத்தோடு வாழத் தொடங்குவோம் என்னும் அழைப்பை ஈஷாவின் ஒவ்வொரு அங்குலமும் வலியுறுத்திக்கொண்டே இருப்பதை உணர முடிகிறது.

அவ்வாறு ப்ரொடிக்டிவிட்டியோடு கூடிய வாழ்வில், பொறாமை, போட்டி போன்ற மற்ற கசடுகளுக்கு இடமில்லாமல் போக, சமூகம் மீண்டும் நிம்மதி பெறும் என்றே தோன்றுகிறது.

சரி, ஆதிக் குணத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்ட மக்களை எப்படித் திருப்பிக் கொண்டுபோவது?

முதலில், அந்த ஆதிகாலச் சூழலை உருவாக்குவது. அதன் மூலம் ஆதிகால மன நிலையை உருவாக்குவது. அதன் அற்புதம் பிடிபட்டுவிட்டால் பின்பு தானாகவே மனிதர்கள் ஆதித்தன்மையை நோக்கி நகரத் துவங்கிவிடுவார்கள் என்னும் நம்பிக்கை ஈஷா காம்பவுண்டின் ஒவ்வொரு சதுர அடியிலும் சூசகமாய் மறைந்திருப்பதாகவே எண்ணுகிறேன்.

ஆதிகால மனித சமூகம் எப்படி இருந்தது? அன்று அவர்களுக்குள் சாதி இல்லை. மதமில்லை. உயர்வு, தாழ்வில்லை. ஏழை, பணக்காரன் இல்லை. மொத்தத்தில் எல்லோரும் சமம் என்றிருந்தது. ஈஷாவுக்குள் அதனைக் காண முடிகிறது.

ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் பொறுப்பும் உரிமையும் கொடுக்கப்பட்டிருந்தாலும், கல்வி நிலையங்கள், தங்கும் இடங்கள், நிற்கும் வரிசைகள், சந்திர குண்ட், சூர்ய குண்ட் போன்ற குளிக்கும் இடங்கள், உணவு அருந்த அமரும் பிக்ஷா ஹால் என எங்கும் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் கூடவே சுதந்திரமாகவும்பாதுகாப்பாகவும் இருக்க வழி செய்யப்பட்டிருக்கிறது.

1875இல் ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களால் எழுதப்பட்ட ‘சத்யார்த்த ப்ரகாஸம்’ என்னும் நூலில் இதுபோல் வலியுறுத்தப் படித்திருக்கிறேன்.

நடை உடையில் நாகரிகத்தைத் தடை செய்யாவிட்டாலும் ஒழுக்கமும் கலாச்சாரமும் வலியுறுத்தப்படுகின்றன.

ஈஷாவுக்குள் இருக்கும் ரெஸ்டாரென்ட் ஒன்றிற்கு “பெப்பர் வைன்” என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

பெப்பர் வைன் என்றால் “மிளகுக் கொடி” (Pepper Vine) என்றுபொருள். அதனை “பெப்பர் ஒயின்” (Pepper Wine) என்று தவறாகப் புரிந்துகொள்வது அத்துமீறுவதற்குச் சமம் என மெல்ல நகைக்கிறது ஈஷா.

லிங்க பைரவி சன்னதியில் பெண்கள் மட்டுமே ஆராதனை செய்து தொழவைக்கிறார்கள். அகன்ற இரு விழிகளும் திலகமும் மூக்குத்தியும் மட்டுமே கொண்டு அந்தப் பெண் தெய்வம் வசீகரிக்கிறது. தியான லிங்க சன்னதியில் வெறும் லிங்கம் மட்டுமே இருக்கிறது. ஆங்காங்கே புடைப்புச் சிற்பங்கள்தான் இருக்கிறதே தவிர, வழக்கமான விக்கிரகங்களைக் காண முடியவில்லை.

அங்கு எல்லாமே குறியீடுகளாகவே இருக்கின்றன. யோகம் பயிலுங்கள். பயிலப் பயில இங்கே காணும் குறியீடுகளுக்குள் மறைந்திருக்கும் சூட்சுமங்கள் புரிபடத் துவங்கும் என்கிறது ஈஷா.

ஆதி மனிதர்களால் வணங்கப்பட்ட முதல் விலங்கு நாகம். ஈஷாவின் உட்கட்டமைப்புகள் எங்கும் நாக ரூபம் நீக்கமற நிறைந்திருப்பதைக் காண முடிகிறது. நாகம் என்பது குண்டலினியின் வடிவம். யோக சாஸ்திரத்தின் மூலம்.

கட்டுடைத்து இருந்தாலும் ஈஷாவின் உள் கட்டமைப்பில் கலை நயம் கொட்டிக் கிடக்கிறது.

ஈஷாவுக்குள் ஏறத்தாழ 2000 பேர் வரை தங்கியிருக்கிறார்கள். இதன் உட்கட்டமைப்பை வெளியிலிருந்து யாரும் வந்து செய்ததில்லை. இங்கே தங்கியிருப்பவர்கள்தான் சிறிது சிறிதாக டிசைன் செய்து மெருகேற்றுகிறார்கள் என்று சொல்லி ஆச்சரியப்பட வைத்தார்கள்.

அங்கே இருக்கும் கேட் முதற்கொண்டு ஆதி யோகி சிலை வரை ஈஷாவில் தங்கி யோகம் பயிலும் தன்னார்வலர்களால் டிசைன் செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது என்கிறார்கள்.

ஆம், ஆதிப்படைப்பூக்கம் அங்கே மெல்லத் துவங்கி நிகழ்ந்துகொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

கிட்டத்தட்ட 300 நாட்டு மாடுகளை வளர்க்கிறார்கள். மரபுவழி விவசாயம் செய்கிறார்கள். இயற்கைத் தானிய உணவுமுறையைப் பின்பற்றுகிறார்கள். இந்த மண்ணின் கலாச்சாரத்தை மீட்டெடுக்கப் பார்க்கிறார்கள் என்றாலும் அதில் முரட்டுத்தனம் காட்டாமல் இருக்கிறார்கள்.

மரபு வழியில் நின்று விறகடுப்பில்தான் சமைப்போம் என்று கண்ணைக் கசக்கிக்கொள்ளாமல் அல்ட்ரா மாடர்ன் கிச்சன் ஒன்றை வடிவமைத்து இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஏறத்தாழ 3000 பேருக்கு வடித்துக் கொட்டிக்கொண்டிருக்கிறது அக்ஷயா என்னும் அந்த அதி நவீன சமையலறை.

அதன் முதல் மாடியில் இருக்கும் ஸ்டோர் ரூமில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அறையின் நடுவே ஐந்து அடிக்கு பெரிய சைஸ் ஓமகுண்டம் போலிருக்கும் அமைப்பு ஒன்றிலிருந்து மெல்லப்புகை வெளியேறிக்கொண்டிருந்ததைக் கண்டேன். விசாரித்தால், ஆதிகால பூச்சிக் கொல்லி டெக்னிக் என்கிறார்கள்.

“பழைமையிலே புது நினைவு பாய்ந்தெழுந்தாற் போலே…” என்றார் பாரதிதாசனார்.

அதுபோல்…

நவீனத்தைப் பயன்படுத்திக் கொள்;

ஆதித் தன்மையைக் காத்துக்கொள்!

என்கிறது ஈஷா.

சுத்தம் சுகாதாரம், துல்லியம், எங்கெணும் ஓர் ஒழுங்கு என காலத்தோடு வழுக்கிக் கொண்டே நாளை நகர்த்திக் காட்டுகிறது ஈஷா.

மாலை, சூர்யாஸ்தமனம் ஆகும் நேரம்.

பிரம்மாண்டமான குகை போன்றதொரு அமைப்பில் இருக்கும் தியான லிங்கத்தின் முன் அனைவரும் கூடுகிறார்கள். நிசப்தம் வலியுறுத்தப்படுகிறது.

ஆதிகாலத்தில் இமயமலையடிவாரத்தில் பயன்பாட்டில் இருந்த ஹிமாலயன் பௌல் எனப்படும் செம்பும் வெள்ளீயமும் கலந்த ஒரு வகையான வாத்தியம் மரக்கட்டை ஒன்றால் வருடப்பட்டு சன்னமாக இசைக்கப்பட, அதன் ரீங்காரம் குகை முழுவதும் மெல்லப் பரவி தியான மன நிலைக்கு இட்டுச் செல்கிறது.

அனைவரது விழிகளும் அனிச்சையாக மூடிக்கொள்கின்றன.

ஹிந்துஸ்தானி மார்வா ராகத்தை ஒட்டியதொரு ஆலாபனையை ஆர்ப்பாட்டமில்லாமல் மெல்லத் துவங்கிப் பாடுகிறார் ஒருவர்.

மூடிய விழிகளுக்குள் ஆதிகாலம் விரிகிறது. அந்தி நேரத்துத்தெளிந்த நதி ஒன்றில், மாரளவு நீரில், ஆதி மனிதர்கள் தலைமேல் கரம் கூப்பிக்கொண்டு, நாளெல்லாம் படைக்கவும் உழைக்கவும் ஒளி தந்த சூரியனை வணங்கியபடி மூழ்கி மூழ்கி எழுந்திருக்க,

நதிக்கரையோரத்துப் புல்வெளிகளில் கறவைகள் அமைதியாக அமர்ந்து அசைபோட்டுக்கொண்டிக்க, மலைக்காற்று வீச, மரங்கள் மெல்ல அசைய, சுகந்த மணம் எங்கெணும் வீச, ஆதிகாலச் சூழலுக்குள் புகுந்துகொள்ள மனம் ஏங்க, அந்த ஏகாந்தம் இருபது நிமிடங்கள் நீடிக்கிறது.

சரியாக 6.10க்கு இசை நின்றுவிட, எல்லோரும் அமைதியாக எழுந்து கலைந்து செல்கிறார்கள். அவ்வளவுதான்.

மந்திரம் சொல்லவில்லை. மணியொலி ஓங்கவில்லை. அர்ச்சனை இல்லை. சூடம் காட்டவில்லை.

இது ஓர் உபலோகம். நீங்கள் கண்ட ஏகாந்தம்தான் இங்கே லிங்கார்ச்சனை. இங்கே சகலம் மறந்து ஆழ்ந்து அமர்ந்திருந்தீர்களே அதுதான் இறைவழிபாடு.

நிம்மதியான, ஏகாந்தமான இந்த மனநிலையை நீட்டிக்கொள்வது அவரவர் சொந்த விருப்பு, பொறுப்பு என்று ஒப்படைத்துவிடுகிறது ஈஷா.

முழு நிலவின் கீழ், வெள்ளியங்கிரியின் பின்புலத்தில் ஆதியோகியின் பிரமாண்டமான 112 அடி உயர தியான சிலை “டெக்னிகல் எக்ஸலென்சாக” உயர்ந்திருந்து நம்மை மௌனப்படுத்துகிறது.

குரு பௌர்ணமி அன்று இரவு நெருங்க நெருங்க பல்லாயிரக் கணக்கானவர்கள் கூடி வந்தமர, ஆதிகாலத்து அமெரிக்க பூர்வகுடிகள் இசைப்பதைப் போன்ற மெகா சைஸ் ட்ரம்கள் அதிர்கிறது.

சேர்ந்திசைப் பாடல்களோடு இரவு முற்றும் நேரம்…

ஜம்மென்று பெரியதொரு ஜீப்பில் வந்திறங்குகிறார் அவர்களின் சத்குரு. காவியும் கௌபீனமுமாக இல்லாமல் ஸ்டைலாக இருக்கிறார். ஆனால், அலட்டல் இல்லாமல் மேடையேறுகிறார். ரட்சகன் என்னும் தோரணை காட்டாமல் தோழமை மனோபாவத்தை விசிறியடிக்கிறார்.

சிறிது நேரம் யோகத்தின் அவசியத்தை, மனதை ஒருமுகப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டியதன் கட்டாயத்தை மெல்ல வலியுறுத்துகிறார். நளினமான ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாகப் பேசுகிறார். இடையிடையே ஜோக் அடிக்கிறார். மக்களிடையே ரேம்ப்பில் நடந்து துள்ளலோடு நடனமாடுகிறார்.

சட்டெனக் கிளம்பி ரேஸ் பைக் ஒன்றில் தாவி ஏறி விர்ரெனக் கிளம்பி மறைகிறார்.

உருவத்தைப் பின் தொடர்வதைக் கைவிடுங்கள். கருத்தைக் கைக்கொள்ளுங்கள். என் உருவம் இங்கு முக்கியமில்லை. நான் சொல்லும் கருத்துதான் முக்கியம்.

உருவம் நேற்று ஆதியாக இருந்தது. இன்று ஜகி வாசுதேவாக வந்திருக்கிறது. நாளை வேறு ஒரு வடிவெடுத்து வரும். தோற்றம் என்பது மாறும். மறையும்.

மாறாதது உண்மை. உண்மை ததும்பும் இந்த ரம்மியமான சூழல். இதனைக் கொண்டாடுங்கள்.

இந்த ரம்மியத்தை நித்தியப்படுத்திவிட முயலுங்கள். யோகத்தின் வழியே ஆதிதன்மையோடு இணைந்து படைப்பூக்கம் பெறுங்கள். உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம்.

வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதை ஆனந்தமாய் ஆடிக் களியுங்கள். ஆட்டத்திலிருந்து வெளியேறும் வித்தையை இங்கு வந்து கற்றுக்கொள்ளுங்கள் என்றபடி ரயிலேற்றி வழியனுப்பி வைத்தது ஈஷா.

டிவைன் எக்ஸ்பீரியன்ஸ்!

கட்டுரையாளர் குறிப்பு:

ஸ்ரீராம் சர்மா

எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதனைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்..)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share