– ஸ்ரீராம் சர்மா
சென்னை மாநகரெங்கும் மார்கழி மாத இசைக் கொண்டாட்டம் களை கட்டிக்கொண்டிருக்கின்றது.
சிறுவயது முதலே இசைப் பித்துப்பிடித்து இயன்றளவுக்கு சபாக்களில் ஏறி இறங்கும் பழக்கம் எனக்கு உண்டு. ‘அன்று பாடிக் கொண்டிருந்தார்கள். இன்று…’ என்று நீங்கள் கேட்கலாம். அதைப் பற்றிய எனது கருத்தைச் சொல்லி என்ன பயன்? ஆண்டி சொல் அம்பலம் ஏறுமா?
நமக்கெதற்கு வம்பு என்று மாமிகளின் ‘பாஷை’களும் அஃக்மார்க் ‘நெய்’யுமாகக் கமழும் சபா கேன்டீனில் வயிற்றை நிரப்பிக்கொண்டு சிவனே என்று திரும்பிவிடுவதை வழக்கமாகக் கொண்டுவிட்டேன்.
அந்த நேரங்களிலெல்லாம்… ‘இளையராஜா’ என்னும் அந்த இசை ராக்ஷசனை என் நினைவலைகளின் ஆழம் சென்று மூழ்கி துழாவி துருவிக்கொண்டே திரும்புவேன்.
என்னையறியாமல் என் வீட்டைத் தாண்டியும் நடந்து சென்றுவிடுவேன். நினைவு தட்ட, திரும்பி தேவையில்லாத ஷாப்பிங்கோடு வீடு திரும்பி, அசடு வழிந்துகொண்டே நல்ல பெயர் வாங்கிக்கொள்வேன்
ச்சே… என்ன ஒரு மகா மனுஷன்!?
அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்வேன், கேளுங்களேன்…
இசை என்பது ஒரு மகா சமுத்திரம் என்பார்கள்.
எனில், நம் இளையராஜா என்பவரோ அந்த சமுத்திரப் பரப்பெங்கும் மாலை நேரத்து மாருதங்களோடு முதுகில் நம்மைச் சுமந்து செல்லும் வெள்ளுடை தரித்த டால்ஃபின் எனலாம்.
கடந்த நான்கு தசாப்தங்களாக…
ஆர்த்து எழும் நுணுக்கம் பொதிந்த அந்த சப்தஸ்வர அலைகளின் மீது எவ்வளவு லாகவமாக நம்மை ஏற்றி இறக்கி அழைத்துச் செல்கிறார் என்பதை முழுமையாக அறியாமலேயே அவர் மீதேறி நாம் சுகசவாரி செய்து வருகிறோம்.
அவருடைய அந்த “லாகவம்” மட்டும் இல்லாது போயிருந்தால் இசை நமக்கு இவ்வளவு இனித்திருக்காது.
ஒரு சுகமான இசையைக் காதுகளில் கொண்டுவந்து சேர்ப்பதற்கு ட்யூன் என்பது மட்டும் போதாது.
அது ஓர் ஆரம்ப கட்டம் மட்டுமே.
மேலும், அது பல படி நிலைகளைக் கடந்துதான் சுகந்தம் என்னும் அந்தஸ்தைப் பெறுகிறது.
இதைக் கொஞ்சம் எளிமையாக்கி விளங்கிக்கொள்ளப் பார்ப்போம்.
**1. மெலடி:**
ஒரு பாடல் என்பது ஒரு குறிப்பிட்ட ராகத்தை முதன்மைப்படுத்திக் கொண்டு அமைகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குறிப்பிட்ட ராகம் என்பது ஒரு மெயின் ரோடு போல… ஒரு மெயின் ரோட்டை அடைய நாம் பற்பல குறுக்கு வீதிகள் மூலமாகப் பயணம் செய்வோம் அல்லவா?
அந்தக் குறுக்கு வீதிகள்தான் மெட்டுக்கள்.
அதாவது, ஒரு ராகத்தின் ஸ்வரங்களை வைத்துக்கொண்டு பலவிதமான Permutation and Combination செய்வது. எந்த வீதியின் வழியாக சென்றால் பயணம் சுகமாக இருக்கும் என்று கணிப்பது. அப்படிக் கணிக்கும்போது… அந்தக் கணிப்பு சரியாக இருக்குமானால் அந்தப் பாடல் ஹிட்.
**2. ஸ்ருதி:**
அதாவது ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு ஸ்ருதியை ஃபிக்ஸ் செய்வார்கள். அதை பிட்ச் என்பார்கள். உதாரணத்துக்கு, ஷ்யாம் – கல்யாண் ராகத்தில் அமைந்த இளையராஜாவின் காலத்தை வெல்லும் பாடலான “நீ ஒரு காதல் சங்கீதம்…” என்னும் பாடல் ஒரு ஸ்ருதியில் அமைக்கப்பட்டது. அதையே மூன்று ஸ்ருதிகளில் அல்லது ஆறு ஸ்ருதிகளில் பாடினால் இனிக்காது. ஆக, ஒவ்வொரு ட்யூனையும் எந்த ஸ்ருதியில் கொடுக்க வேண்டும் என்ற முடிவு மிக முக்கியம்!
**3. தாளம்:**
ஒரு பாடலின் டெம்போவை மிகச் சரியாக ஃபிக்ஸ் செய்ய வேண்டும். அந்தக் குறிப்பிட்ட பாடல், அந்தக் குறிப்பிட்ட மூடுக்கு, எவ்வளவு வேகத்தில் பாடப்பட்டால் இனிமையானதாக இருக்கும் என்று கணிக்க வேண்டும்.
**4. குரல்:**
இந்த ட்யூனை இந்தக் குரல் பாடினால் உசிதம் என்று தெளிவாக முடிவு செய்ய வேண்டும். இதில், வியாபார நிமித்தமான சில நிர்பந்தங்களும் வரும். அதைத் தவிர்க்க இயலாது. ஆக, அந்தக் குரலுக்கேற்றாற்போல ட்யூனை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
**5. இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்:**
இந்த இந்த வாத்தியக் கருவிகளை இந்தப் பாடலில் இசைத்தால் அது இனிமையாகவும், புதுமையாகவும், காதுகளுக்குச் சுகமாகவும் இருக்கும் என்னும் யுக்தி முக்கியம்.
உதாரணத்துக்கு, தேவர் மகனில் வரும் அஃக்மார்க் நாட்டுப்புறப் பாடலான “போற்றிப் பாடடி பொண்ணே…” என்னும் பாடலில், இந்துஸ்தானி இசைக் கருவியான “ஷெனாய்” வாத்தியத்தை இசைத்திருப்பார்.
அந்தப் பாடலின் ஸ்ருதியில், அந்தக் குறிப்பிட்ட ஆக்டேவில், அது இந்துஸ்தானி வாத்தியமாக அல்லாமல் ஏதோ நம் கிராமத்து வாத்தியம் போல சவுண்ட் செய்யும்.
அந்த நூதனக் கலவைதான் வெற்றிக்கு முக்கியம். அதில் கரைகண்டவர் இளையராஜா.
**6. ஹார்மனி:**
கோரஸ் எனப்படும் குழுக் குரல்கள் இளையராஜாவின் பாடல்களில் ஸ்பெஷல் அம்சமாகும். அவரது பாடல்களில் கோரஸ் என்பது எதிர்பாராதபடி உள்ளே புகுந்து வரும்.
மேலும், புதுவிதமான “டிக்க்ஷனை” அதற்குக் கொடுத்திருப்பார்.
உதாரணத்துக்கு, புதிய வார்ப்புகள் படத்தில் அமைந்த “நம்தன… நம்தன தாளம் வரும்…” பாடலில் இதைப் பரிபூரணமாக உணரலாம்.
ஒரு தரமான ஸ்டீரியோ ஹெட்செட்டில் இந்தப் பாடலைக் கேட்கும்போது கண்கள் செருகிக்கொண்டு போகும்.
இதைத் தவிர, பல பாடல்களில் “கோயர்” பயன்படுத்தியிருப்பார்.
கோயர்களை பெரும்பாலும் சர்ச்சுகளில்தான் பயன்படுத்துவார்கள். அதை இளையராஜா தன் காதல் பாடல்களில் பயன்படுத்தியிருப்பார்.
அலைகள் ஓய்வதில்லை படத்தில் அமைந்த “காதல் ஓவியம்… பாடும் காவியம்….” என்னும் பாடல், காதலர்களின் தேசிய கீதம்.
அந்தப் பாடலில் கோயர் என்னும் யுக்தியை வைத்து அபாரமாக ஆரம்பித்திருப்பார். இப்படி எண்ணற்ற பாடல்கள் உண்டு.
தளபதி படத்தில் அமைந்த “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” என்னும் பாடலின் வார் பிஜிஎம்மில் “கோயர்” யுக்தியைப் பயன்படுத்திப் பின்னிப் பெடலெடுத்திருப்பார் !
**7. கார்ட்ஸ்:**
மூன்று அல்லது நான்கு ஸ்வரங்களை ஒன்றாகப் பிடித்தால் எழும் “ஹம்காரம்”. இதை ட்யூனுக்கு ஏற்றாற்போல பின்னால் பொருத்திக்கொண்டே வருவார்கள். இதில் பல டெக்னிக்குகள் உண்டு. இதில் இளையராஜா முதிர்ந்து கனிந்தவர்.
**8. ஸ்ட்ரிங்க்ஸ் மற்றும் பேட்ஸ்:**
ஒரு மெலோடியை அதன் முதுகு தாங்கி அழைத்துச் செல்லும் லேயர் இது. பல வகையான ஸ்ட்ரிங்க்ஸ் வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு டோன்.
குறிப்பிட்டப் பாடலுக்கு ஏற்ற வகையினைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
**9. பேஸ்:**
இது கார்ட்ஸ் ப்ரோக்ரஷனின் முக்கிய நோட்களைத் தொட்டுச் செல்லும்.
கூடவே, ரிதத்தோடு இணைந்து அதை மெருகேற்றும்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், மெலோடி செல்லும் பாதையெங்கும் இதமாக மெத்துமெத்தென்று மலர்களைத் தூவி செல்லும்.
இவ்வாறு இன்னும், பார்ட்ஸ், செகண்ட்ஸ், ஆப்ளிகேட்டர்ஸ், இண்டர்ல்யூட்ஸ் எனப் பற்பல யுக்திகள் உள்ளன.
அத்தனை உன்னதங்களையும் இளையராஜாவின் பாடல்களில் நாம் அனுபவிக்கலாம்.
அது மட்டுமல்ல, மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களைவிட இளையராஜாவின் பாடல்களை முற்றிலும் புதிய கோணத்தில் அனுபவிக்கலாம்!
இன்றைய இசையமைப்பாளர்கள் தங்களது படத்தில் ஒரு பாட்டை ஹிட் ஆக்குவதற்குள்ளாகவே முக்கி முனகுகிறார்கள்.
ஆனால், இளையராஜா தன் படத்தின் மொத்த பாடல்களையும் ஹிட் அடித்துக் காட்டினார். அப்படி ஒன்றல்ல இரண்டல்ல… தொடர்ந்து ஹிட் அடித்துக்கொண்டே இருந்தார்.
அவரது இசை வீதிகள்தோறும் மாவிலையும் தோரணங்களும் மங்கலக் கோலங்களுமாய் களை கட்டிக்கொண்டிருக்கின்றன !
அவரது ஸ்டைலை அப்படியே காப்பியடித்துப் பார்த்தவர்களும் உண்டு. ஆனால், எடுபடவில்லை.
நோட்ஸ்கள் அடங்கிய அவரது புத்தகத்தை, நைஸாக லவட்டிக்கொண்டு வந்து அதை அப்படியே காப்பியடித்து இன்னொரு பாடல் அமைப்போம் என்றாலும், அது எடுபடாது.
ஏன்? ஏன் எடுபட மாட்டேன் என்கிறது?
அதே கார்ட்ஸ்தான்… அதே டோன்தான்… இன்னும் சொல்லப்போனால் அதே வாத்தியக்காரராகவும்கூட இருக்கலாம்.
ஆனாலும் ஏன் க்ளிக் ஆக மாட்டேன் என்கிறது?
கவனியுங்கள்!
திருநெல்வேலி அல்வா என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் ஃபார்முலாவை திருடிக்கொண்டு வந்து சென்னை நகரத்தில் கடை போட்டால்… போணியாகாமல் ஊற்றிக்கொள்கிறதே ஏன்?
திருநெல்வேலி அல்வாவின் சுகம் அதன் ஃபார்முலாவிலா இருக்கிறது? இல்லை, தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் இருக்கிறது!
சென்னையில் எல்லாம் இருக்கலாம்! ஆனால், தாமிரபரணி ஆறு இல்லையே!
அதுபோல், இளையராஜாவின் கம்போஸிங்குகளுக்கு அடிப்படை ஆதார சுகமாக மிளிர்வது, அவரது ஆன்மாவுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் அவரது “இசையொழுக்கம்” என்னும் வற்றாத ஜீவ நதி!
அந்த “இசையொழுக்கமும்” கூட ட்யூஷன் வைத்துக் கொண்டால் வந்து விடாது.
என்னிடம் பணம் காசு இருக்கிறது, நிறைய ஃபீஸ் தருகிறேன் என்றால் கிடைத்துவிடாது.
நான் மாட மாளிகையில் பிறந்தவன், வேத குலத்தில் உதித்தவன் என்று இன்ஃப்ளூயன்ஸ் செய்தாலும் இசைந்துவிடாது.
அது, அதுவாக வாய்க்க வேண்டும். ஆம், அதைத் தவிர வேறு வழியே இல்லை!
அதுவாக வாய்க்கும் வரை, பணிவே உருவானதொரு பிச்சைக்காரனாய்… தாயின் “கர்ப்பங்களை” அமைதியாகக் கடந்துகொண்டே இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பிறவியிலும், நிரம்பி முடிந்ததோர் அணைக்கட்டைப் போல… காலத்தை நோக்கி, ஏங்கித் தளும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
“எனக்கும் ஒரு வாய்ப்புக் கொடேன்; இந்த சமூகத்துக்கு சில சேதிகளை சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன்…” என மன்றாடிக்கொண்டே இருக்க வேண்டும்!
காலம் கனியுமொரு கணத்தில்… அதுவாகவே முன்வந்து, இந்த அகண்ட சமூகத்தில் இருந்து நம்மைச் சரேலென உருவி, வெளி உலகுக்கு உயர்த்திக் காட்டிவிடும்!
அதன் பிறகும்கூட, நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதற்கு உண்மையாக இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு காலம் மகிழும் .
அள்ளிக்கொண்டு செல்லம் கொஞ்சும்!
இன்றைய காலம் கொஞ்சிக்கொண்டிருக்கும் செல்லக் குழந்தைக்குப் பெயர்…
இளையராஜா!…