ஸ்ரீராம் சர்மா
1999ஆம் ஆண்டு மே மாதம் துவங்கி, ஜூலை மாதத்திலேயே முடித்துக்கொள்ளப்பட்ட அந்தக் கருமாந்தரக் கார்கில் போர் துவங்காமலே இருந்திருக்கலாம்.
வெற்றிகரமானதுதான் என்றாலும் அந்த வீரப் போரில், இந்தியத் தரப்பில் 527 வீரர்கள் தியாக மரணத்தைத் தழுவினர். கொண்ட குடும்பங்களை ஐயோவென ஆதரவற்றுத் தத்தளிக்க விட்டனர். 1,800க்கும் மேற்பட்ட நமது வீரர்கள் அங்கம் சிதறிப் படுகாயம் அடைந்தனர்.
வீம்புக்குப் போர் தொடுத்த சகோதர நாடான பாகிஸ்தான் 4,000 வீரர்களை இழந்து, பின்வாங்கிக்கொண்டது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான அந்த கார்கில் போர் நாட்களில் இந்தியத் தெருவெங்கிலும் “ஜெய் ஜவான்” கோஷம் நிறைந்திருந்தது.
“எங்கள் இந்திய வீரனை எவன் தொட்டாலும் எங்களுக்கு உறைக்கும்…” என்னும் ஓங்காரம், தமிழக வீதியெங்கிலும் ஆங்கரித்திருந்தது. கட்சி பேதங்கள் கடந்த தமிழ் மண்ணின் ஆக்ரோஷம் அன்று துல்லியமாக வெளிப்பட்டது.
“நமது வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ உங்கள் பழைய துணிகளையேனும் தாரீர்…” என்று நாடெங்கும் இந்தியர்கள் வீதி நிறைத்து மன்றாடினார்கள். தெருத் தெருவாக வண்டிகள் வந்தன. ஒவ்வொரு தெருவிலும் புதியதும் பழையதுமான துணிகள் குவிந்தன.
திருவல்லிக்கேணிக்கு அடியேன் பொறுப்பேற்றேன். கார்கில் மாதக் கைக்குழந்தையான எனது மகனை அருகிலிருந்து கவனிக்கவும் அவகாசம் இன்றி நண்பர்களோடு வீதியிலிறங்கினேன்.
ஒரு வேனை எடுத்துக் கொண்டு அந்த ஞாயிற்றுக்கிழமையில் துணி சேகரிக்க கிளம்பினோம். எனது நண்பன் வெண்ணிலா சங்கர் ஆட்டோ ஓட்டிக்கொண்டு வர, அதில் பேட்டரி ஸ்பீக்கரை வைத்துக்கொண்டு எல்லையில் நமது இந்திய வீரர்கள் செய்த சர்வபரித் தியாகத்தை உணர்ச்சிகரமாகப் பேசிக்கொண்டு முன்னே சென்றேன்.
மக்கள் ஆரவாரமாக வந்து அள்ளிக்கொடுத்தார்கள். நீலம் பாஷா தர்கா தெருவில் ஒரு இஸ்லாமியத் தாய் அலுமினிய அண்டாவையும், ப்ளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களையும் அள்ளிக்கொண்டு வந்து “எப்படினா இத சேர்த்துடுங்கப்பா…” என்றபோது கண்ணீரைக் காட்டிக்கொள்ளாமல் திரும்பிக்கொண்டேன்.
கையேந்தி வாங்கிக் குவித்த துணிகளும் பொருட்களும் அந்த வேன் நிறைய குவிந்துவிட்டன. நண்பர்கள் தோளில் தூக்கிச் சுமந்து வர சென்னை சென்ட்ரல் ப்ளாட்பாரத்தில் கொண்டு இறக்கினோம்.
எங்களைப் போலச் சென்னையின் பல திக்குகளிலுமிருந்து வந்த துணிமணிகள், மற்றும் பாத்திர பண்டங்கள் அந்த ப்ளாட்பாரம் முழுவதும் நிறைந்திருந்தன.
அதற்கெனவே அன்று தனி ரயில் விடப்பட்டிருந்தது. அந்த ரயிலில் இடம் போதாமல் மீதத் துணிமணிகளை ப்ளாட்பாரத்தில் அப்படியே விட்டு விட்டு வந்தோம். அந்த ஆங்கரிப்பு அடங்க எங்களுக்குப் பல காலம் ஆனது.
பாகிஸ்தான் உடனான எனது இன்றைய பார்வை, பாரத விதுரரையும் மகாகவி பாரதியையும் ஒருங்கே கொண்டு எதிர்காலத்தை எண்ணியபடியே நகர்கிறது.
அடங்கிப்போன எந்தப் பகையையும் தூண்டிவிட்டுவிடக் கூடாது என்றார் பாரதக் களம் கண்ட மகாத்மா விதுரர்.
ஆத்திரக்காரன் சம்பாதித்துக் கொண்ட பகை “வெந்நரகு சேர்த்துவிடும்; வித்தை தடுத்துவிடும்…” என்று எச்சரிக்கிறார் மகாகவி பாரதியார்.
பகையை அழிக்க வல்லது தர்மம். அந்த, தர்மத்தை அழிக்க வல்லது சூதும் வாதும். அந்த “சூதும், வாதும்” இந்த பாழுலகில் பசப்பி, பலன் கொண்டு வாழ்கிறதே என்று அன்று விசனப்படார் விதுரர்.
சூதும் வாதும்தான் வாழும் என்றால் பின், நீதி – நியாயத்தின் கதி?
அது “மருமத்தே பாயும்” என்றார் பாரதியார். “மருமத்தே பாயும்” என்னும் பாரதியின் வார்த்தைகள் ஆழ்ந்த பொருளுடையவை. உணர்வோரை உலுக்கிவிடக்கூடியவை.
“மருமம்” என்பது சகல சூட்சுமங்களையும் கடந்ததோர் ரகசிய இடம். அந்த மருமத்தில் நீதி பாய்ந்து விட்டால் பின்பு எவராலும் எழுந்திருக்கவே முடியாது.
அதனை விதியின் பாய்ச்சல் என பேராசான் வள்ளுவனும், இளங்கோவடிகளும் குறித்து வைத்திருக்கின்றார்கள் .
இந்தப் புண்ணிய மண்பால் எழுந்த நீதி நூல்கள் ஆயிரமாயிரம். அவற்றில் பதினெண் அத்தியாங்களாக விரிந்த கீதையும், கீதையைக் காட்டிலும் பொருள் பொதிந்த பற்பல நீதி நூல்களும் உண்டு என்று எடுத்தோதுவார்கள் பெரியோர்கள்.
அப்படியாக, பாரதப் பெரும் போரின் இடையே அம்புப் படுக்கையில் கிடந்தபடி பாண்டவர்களுக்காக அருளப்பட்டதுதான் “பீஷ்ம நீதி”.
அந்த அம்புப் படுக்கையின் அப்புறத்தில் பாண்டவர்களோடு நின்று கண்ணில் நீர் சோர பீஷ்ம கீதையைக் கேட்டு முடித்த கண்ண பெருமான்…
“பீஷ்ம பிதாமகரே, என்னிலும் பெரிய நுட்பத்தை இன்று தாங்கள் அருளிக் கொடுத்துவிட்டீர்கள். ஐயனே, இதனை தாங்கள் முன்பே அருளியிருந்தால், கீதையை ஓங்கி சொல்லும் அவசியமே எனக்கு ஏற்பட்டிருக்காதே…” என்றாராம்.
பெருமூச்செரிந்தபடி பீஷ்மர் சொன்னாராம்….
“கண்ணா, இதுகாறும் நான் கொண்ட சோறு பேராசை பிடித்த துரியனின் சோறு. இப்போது, அர்ச்சுனன் அம்புபட்டு எழுந்த பாதாள கங்கையின் ஒரு துளி நீர் பட்டு என் புத்தி நெறி கொண்டுவிட்டது. அதன் காரணப்பட்டுப் புறப்பட்டதே உனக்கு இன்று பீஷ்ம கீதையாகப் படுகிறது. கண்ணா, சொன்னவன் நான் அல்லன். சொல்லச் செய்தது நல்லவன் புகட்டிய நன்னீர்…”
பீஷ்ம நீதிக்கு இணையானது “விதுர நீதி”!
**அகந்தை, பீறிட்டெழும் கோபம், உயிரழிக்கும் குற்றம், சுயநலம் கொண்ட பேராசை, ஆணவப் பேச்சு, நம்பிக்கை துரோகம்** இவை ஆறும், ஆயுளை வெட்டும் கூரிய கத்திகளாகும் என அளந்து அறிவுறுத்துகிறார் விதுர மகாத்மா.
இவையத்தனையையும் ஒருங்கே கொண்ட துரியோதனன், சித்தப்பன் முறை கொண்ட விதுரரை ஏக வசனத்தில் அழைத்து உத்தரவிடுகிறான்…
“போ…அந்த துருபதன் மகளை, திருட்டத்துய்மன் உடன்பிறப்பை, இரு பகடையென்று சூதில் வென்றுவிட்டேன்; போய் அழைத்து வா அந்தப் பாஞ்சாலியை என் திருச்சபைக்கு…”
உள்ளம் துடிக்க மறுத்து தயங்குகிறார் தருமமே வடிவான விதுரர்.
கொதிக்கிறான் பாரதியின் துரியன்…
**நன்றி கெட்ட விதுரா – சிறிதும்**
**நாணமற்ற விதுரா**
**தின்ற உப்பினுக்கே – நாசம்**
**தேடுகின்ற விதுரா**
மனம் வெதும்பும் விதுரரின் உள்ளத்தே புகுந்து மேலும் நீதி புகட்டுகிறார் மகாகவி பாரதி…
“துரியோதனா, உன் சித்தப்பன் என்னும் முறையில் உனக்கு வலிந்து சொல்கிறேன் மகனே… உனக்கு முன்னே பகை எதிர்கொண்டு வருவதை கிஞ்சித்தும் அறியாமல் இருக்கிறாய் நீ. உனக்கென இருக்கும் கீழ்மையான பொறாமையினால் பல மொழி சொல்கிறாய்…”
**மூட மகனே கேடுவர அறியாய்;**
**கீழ்மையினாற் சொல்லிவிட்டாய்.**
ஒரு புள்ளி மானைப் போலன் நீ; கடுமாம்புலியைப் போய் அறையப் பார்க்கிறாய். அல்லவை அறியாப் பிள்ளைத் தவளையைப் போல் சினங்கொண்ட நாகத்தின் முகத்தில் மோதப் பார்க்கிறாய்.
**புள்ளிச் சிறுமான்**
**புலியைப்போய்ப் பாய்வதுபோல்**
**பிள்ளைத் தவளை**
**பெரும்பாம்பை மோதுதல் போல்**
**ஐவர் சினத்தின் அழலை வளர்க்கிறாய்.**
துரியன் அடங்காச் சினம் கொள்கிறான் .
வானத்து தேவர் வயிற்றிலே தீப்பாயும்படியாக, சோதிக் கதிர் விடுக்கும் சூரிய தெய்வத்தின் முகத்தே இருள் படரும்படியாக அப்பாவி த்ரௌபதையை நா கூசாது பல பேசிக் கூத்தாடும் துரியோதனக் கூட்டத்தின் கொட்டத்தை அகக் கண்ணில் கண்ட பாரதியார் சொல்வதறியாது திகைக்கிறார்.
**குன்று குதிப்பதுபோல் – துரியோதனன்**
**கொட்டிக் குதித்தாடுவான்**
**மன்று குழப்பமுற்றே – அவர் யாவரும்**
**வகைதொகை யொன்றுமின்றி**
**அன்று புரிந்ததெல்லாம் – என்றன் பாட்டிலே**
**ஆக்கல் எளிதாகுமோ?**
விதுரர் காலில் விழாத குறையாகக் கெஞ்சி அறிவுரைக்கின்றார்…
**நின்னுடைய நன்மைக்கிந்**
**நீதியெலாஞ் சொல்கிறேன். **
**என்னுடைய சொல் வேறு**
**எவர்பொருட்டும் இல்லையடா! **
அடங்காத துரியோதனன் மூறுகிறான்.
**“ஹ… நீ பிள்ளைக் கதைகள் விரித்தது போதும். போ, சூதில் எடுத்த விலை மகள் பால் சென்று; நின் ஓர் தலைவன் நின்னை அழைக்கிறான், நீள்மனையில் ஏவலுக்கே என்றவளை இங்கு கொண்டு வா…” **
உள்ளம் வெதும்ப உரைக்கிறார் விதுரர்…
**நெஞ்சஞ்சுட உரைத்தல்**
**நேர்மை எனக் கொண்டாயோ?**
**மஞ்சனே அச்சொல்**
**மருமத்தே பாய்வதன்றோ..?**
**பாண்டவர்தாம் நாளைப்**
**பழியிதனைத் தீர்த்திடுவார்,**
**மாண்டு தரைமேல்,**
**மகனே, கிடப்பாய் நீ! **
அன்று கேட்கவில்லை துரியன்.
ஆனால், இன்று கேட்டாக வேண்டும் பாகிஸ்தான்.
ஆம், பாகிஸ்தான் இன்று துர்பாக்கிய நிலையில் துவண்டிருக்கிறது. உலக ஆயுத வியாபாரிகளோடு இணைந்து, பாகிஸ்தானை சீனா நெருக்கிக்கொண்டிருக்கிறது.
ஆசிய சக்தியாக எழுந்து வரும் இந்தியாவைக் கண்டு இறுகி மறுகும் சீனத்தின் புளித்த கண்கள் பாகிஸ்தானை ஊடுருவுகின்றன.
முந்தைய போரில் தோற்ற மனக் குமைச்சலோடு இருக்கும் பாகிஸ்தானை அது மேலும் உசுப்பிக்கொண்டிருக்கிறது.
தென் சீனக்கடலில் ஏற்கனவே இந்தியாவுக்கும் சீனத்துக்கும் பகையெரிச்சல் உண்டு. அதனைத் தீர்க்கும் தக்க சமயமாகக் கருதி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை முன்தள்ள முயலக்கூடும் என்றே எனக்குப் படுகிறது
ஜூன் 20ஆம் தேதியிட்ட ‘தி எகனாமிக் டைம்ஸ்’ வெளியிட்டதொரு கட்டுரை, பாகிஸ்தானை அடிமைகொள்ள ஆயத்தம் செய்கிறது சீனா என்னும் பொருள்படும்படியாக அமைந்திருப்பதை எளிதில் கடந்துவிட முடியாது.
அமெரிக்கா தங்களைக் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், இந்தியாவோடு நட்புறவும் பாராட்டுகிறதே என்னும் தாழ்வு மனப்பான்மை கொண்டு தத்தளிக்கும் பாகிஸ்தான் சீனாவின் கைப்பாவையாகத் தடுமாறித் தவழக்கூடும்.
எந்தக் காரணம் கொண்டும் போர் ஒன்று மூண்டுவிடக் கூடாது.
அப்படி மூண்டுவிட்டால் இந்த முறை அது சீனர்களின் குயுக்தியாகத்தான் இருக்கும். ஆசியப் பிரதேச வல்லாண்மையை நோக்கி நகரும் சீனா பாகிஸ்தானை நிச்சயம் முன்னிறுத்தும்.
அது சிறு போராகத்தான் இருக்கும். அப்படி ஒரு சிறு போர் மூண்டால் இரு நாடுகளும் மறைந்திணைந்து தமிழகத்தையும் தாக்கக்கூடும் என்னும் அபாயச் சங்கு என் ஆழ்மனதில் நாராசமாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.
அது பொய்த்தால் நிம்மதி.
அப்படி ஒருவேளை தாக்க வந்தால், சென்னையும் ராமநாதபுரமும் தூத்துக்குடியும் அவர்களின் இலக்காக இருக்கக் கூடும்.
இந்தியத்தைத் தாக்கினால் பாகிஸ்தான் ராணுவத்துக்குத்தான் பேரிழப்பு நேரும்.
ஆம், தமிழர்கள் சொந்தத்தில் அடித்துக்கொள்வார்கள். ஆனால், தங்கள் மண்ணுக்கொரு கேடென்றால் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.
தீரன் சின்னமலையாய், பூலித் தேவனாய், வேலு நாச்சியாராய், மருது பாண்டியர்களாய், மாவீரன் அழகுமுத்துக் கோனாய், பகத்சிங்காய், வாஞ்சிநாதனாய் சீறி எழுவார்கள் என்பதை நாம் வரலாறு நெடுகக் கண்டிருக்கிறோம்.
ஆம், உயிர் பிரியும் நேரத்திலும் இரண்டு பாகிஸ்தான் வீரர்களைச் சுட்டு வீழ்த்திய பின் களச்சாவு கண்ட மேஜர் சரவணன் அவர்களின் வீரத்தியாக வாழ்வை இன்றளவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது தமிழகம். வீரத்துக்கும், தியாகத்துக்கும் பேர் கொண்ட தமிழகத்தைத் தாக்கித் தப்பித்துவிட முடியாது.
ஏற்கெனவே எனதொரு கட்டுரையில் தமிழகத்தைச் சீனம் குறி வைத்திருக்கிறது என்னும் அச்சக்குறிப்பைப் பதிந்திருக்கிறேன். அந்த அச்சம் இன்னும் என் மனதைவிட்டு அகன்றபாடில்லை.
ஈழத் தமிழர்களை அழித்ததில் பெரும் பங்கு சீனர்களுக்கு உண்டு என்பதை உணர்ந்துவிட்ட தமிழர்கள் அவர்களைக் கருவறுக்கக் காத்திருக்கிறார்கள்.
சீனத்தின் கிளிப்பிள்ளையாக பாகிஸ்தான் வந்து மாட்டினால் வறுத்தேவிடுவார்கள்.
அயலுறவில் நன்மதிப்பைப் பெற்றுவரும் பாரதப் பிரதமர் மோடியின் தலைமையிலான இன்றைய இந்தியத் துருப்புகள் வீறுகொண்டு எழுந்து பாகிஸ்தானின் மருமத்தே பாய்ந்துவிடும்.
ஏற்கெனவே பொருளாதாரத்தில் நொந்து கிடக்கும் பாகிஸ்தான் மேலும் நையும். நைந்த பாகிஸ்தானை சீனம் மேலும் கபளீகரம் செய்து தன் காலனி நாடாக்கிக் கசக்கிவிடும்.
துரியோதனாதிகளின் பேராசையையும் பொறாமையையும் ஒருங்கே கொண்ட சீனாவின் சோற்றை உண்டுவிட்ட நம் சகோதர நாடான பாகிஸ்தான் கடன்பட்டுவிட்ட பீஷ்மரைப் போல இன்று சரப் படுக்கையில் சங்கடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானுக்கு நல்ல புத்தி புகட்ட, பாதாள கங்கையை பீறிட்டெழச் செய்யும் அர்ச்சுனன் இன்று இல்லை.
ஆனால், அல்லாஹ் என்னும் பெருங்கருணையாளன் இருக்கவே இருக்கிறான்.
பாகிஸ்தானுக்கு ‘நன்னீர்’ புகட்ட அவனால் மட்டுமே முடியும்.
இந்தக் கட்டுரையின் பலன் அப்போது விடியும்.
*
(கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: [ovmtheatres@gmail.com](mailto:ovmtheatres@gmail.com)�,”