ஸ்ரீராம் சர்மா
இளம்பெண் ஒருத்தி, தன் வாழ்வின் தீரா வெறுமையைச் சொல்லிச் சொல்லிப் புலம்பியபடியே, தூக்கில் தொங்கிச் செத்தொழியும் கண்ணராவிக் காணொளி ஒன்று சோஷியல் மீடியாக்களில் இரண்டொரு நாள்களாக வலம்வந்து பல லட்சம் பேரின் மனங்களைத் துண்டாடிக் கொண்டிருக்கின்றது.
அவளுக்கு என்ன குறை? அழகாக இருக்கிறாள். படித்தவளாகத் தோற்றம் அளிக்கிறாள். பேச்சுக் குறைபாடு இல்லை. காது கேளாமை இல்லை. பார்வைக் குறைபாடு இல்லை. அங்கஹீனம் ஏதும் அவளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
பிறகேன் செத்தாள்?
அவளுக்கு “பொழுதாள” தெரியவில்லை. அதனால் செத்தாள்.
அம்புஜம் கிருஷ்ணா என்னும் பெண்பாற் கவியின் “பொழுது மிகவாச்சுதே என்னைவிட்டுப் போன கண்ணன் வரக் காணேனே…” என்னும் அந்தப் பாடலை பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் மறுகிய குரலில் கேட்கும் போதெல்லாம் எனக்கு ஆற்றாமைதான் எஞ்சும்.
கண்ணனுக்குக் காத்திருக்கும் நேரத்தில் அவள் என்னவென்னமோ செய்திருக்கலாம். வண்ணம் தீட்டியிருக்கலாம். சுண்ணம் இடித்திருக்கலாம். வக்கீலுக்குப் படித்திருக்கலாம். வடையாவது சுட்டிருக்கலாம்.
வருவதாக இருந்தால் வரத்தானே போகிறான் அந்தக் கண்ணன். அவனுக்காக மருகி “பொழுதை” கொல்வதில் அர்த்தமென்ன?
ஒவ்வொருவருக்குள்ளும் குறைந்தது நான்கு திறமைகளாவது இருக்கும் என்கிறது ஒரு மனிதவள ஆய்வு. அந்தத் திறமைகளை “பொழுதுக்கு” தின்னக் கொடுத்துவிட்டால் போதும். வாழ்க்கை சுவாரஸ்யமாகிவிடும் .
அந்தப் பெண் அதை உணராமல் போய்விட்டாள். பரபரப்பான இந்த உலகத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டவள் அவளது “பொழுதை” ஆனந்தமாக அனுபவிக்காமல் கொடூரமாகத் துடித்து அடங்கிவிட்டாள்.
தன்னைச் சுற்றி இருக்கும் பத்துப் பதினைந்து நபர்கள்தான் இந்த உலகம் என்று நம்பிவிட்டாள். தொங்கிவிட்டாள்.
தனக்கென வாய்த்த அற்புதப் பொழுதைப் பறி கொடுத்துவிட்டாள். ஏழு கண்டங்களும், இருநூற்றுச் சொச்சம் நாடுகளும் கொண்ட இந்த பரந்த உலகைத் தன் தனித்த பொழுதோடு கொண்டாடத் தவறிவிட்டாள்.
நின்று சாதித்திருக்க வேண்டியவள் அவசரப்பட்டுவிட்டாள். சட்டெனத் தன் ஆருயிரை, ஒளிமயமான எதிர்காலத்தை அந்த ஸ்டூலோடு உதைத்துத் தள்ளிவிட்டாள்.
மயங்கும் மனங்களுக்கு மின்னம்பலம் வாயிலாக ஓர் எளிய உண்மையைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த உலகம் நமக்கு அதிகாரி இல்லை. நாம்தான் இந்த உலகுக்கு அதிகாரி.
நமது பொழுதுக்கு ஏங்கியபடிதான் சுற்றிக்கொண்டிருக்கிறது இந்த உலகம். ஆம், “பொழுது” என்பது இல்லாது போனால் இது செத்தக் கிரகம் ஆகிவிடும்.
பொழுது என்பது “உயிர்த்திருப்பதற்கு” மட்டுமே உரித்தானது. “உயிரற்ற சடலம்” ஒன்றுக்கு “பொழுது” என்பது கிடையாதே.
நகரும் நத்தை, பறக்கும் பறவை, ஆழ்கடல் திமிங்கிலம், ஓடும் மான் எனச் சகலமும் திரிந்து பறந்து முழுமையாகப் பொழுதாளுமை செய்தபடி கொண்டாடுகின்றன.
அவற்றுக்கு இருக்கும் பொழுதாளுமை, ஆறறிவுக்கொண்ட மனிதனுக்கு இல்லாமல் போவதைக் காணக் காண ஆயாசமாகிறது .
“பொழுதாளுமை” என்பது உயிர் வாழ்வின் முக்கிய அம்சமாக இருந்தாலும், அதைக் கையாள்வது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லைதான். அதற்கென்று ஒரு தன் அக்கறை தேவைப்படுகிறது.
சாதனையாளர்கள்பால் எனக்கிருக்கும் தீரா ஆச்சர்யங்களில் ஒன்று அவர்களது பொழுதாளுமைதான்!
எஸ்.இராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோரைச் சிறந்த உதாரணங்களாகக் கொள்ள முடியும். எத்தனை எத்தனைப் புத்தகங்கள், எத்தனை எத்தனை வாசிப்புகள், சிந்தனைகள்.
குறுகிய காலத்தில் மொத்தத்தையும் எப்படித்தான் எழுதி முடிக்கிறார்கள்?
பொழுதாளுமை!
வாசகரின் ஒரு சிறு கேள்விக்கே 1200 வார்த்தைகளில் பதில் சொல்ல முடிகிறது ஜெயமோகனுக்கு என்றால், அது பொழுதாளுமை அன்றி வேறென்ன?
“பொழுதாளத் தெரிந்தோர் புலவோர்” என்று என் தந்தையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
கம்பர் 70 வயது வரை வாழ்ந்தார். அரசியல் வம்பு, தாசி வம்பு என பற்பலக் காரணங்களால் நாடோடியாகத் திரிவதற்கே அவரது வாழ்நாளில் பாதி போக மீதியில்…
கம்ப ராமாயணத்தின் 10,589 பாடல்கள் மற்றும் சிலையெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, மும்மணிக்கோவை என மொத்தமும் படைத்துப்போனது எப்படி?
பொழுதாளுமை!
மகாகவி பாரதியார் வாழ்ந்தது வெறும் 38 வயது வரைதான். அதற்குள் அந்த மனிதன் சாதித்துப்போனது கொஞ்ச நஞ்சமல்ல.
பாஞ்சாலி சபதத்துக்கே ஓர் ஆயுள் தேவைப்படும். குயில் பாட்டுக்கு இன்னொன்று. கட்டுரைகளுக்கு மேலும் ஒன்று. மொத்தத்தையும் தன் சிறு ஆயுள் காலத்திலேயே முடித்துப்போனாரே, அது எப்படி ?
பொழுதாளுமை!
ஈடு இணையற்ற தொல்காப்பியம் தமிழ் வாழ்வியலை இரு பெரும் பொழுதுகளாகக் குறிக்கிறது.
ஒன்று, பெரும் பொழுது. மற்றொன்று, சிறு பொழுது!
“பெரும் பொழுது” என்பது பருவ காலங்களைக் குறிக்க, “சிறு பொழுது” என்பது ஒரு நாளைப் பகுத்துச் சொல்கிறது.
காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், மற்றும் வைகறை என்று அந்த “சிறு பொழுது” ஆறு வகையாகப் பிரிக்கிறது.
வைகறை என்பது ஆறு மணி வரை. ஆனால், அதற்கு ஒரு மணி முன்னமே எழுவது நம் முன்னோர் வழக்கம். மாலை என்பது இரவு 10 மணி வரை. அதற்கு ஒரு மணி முன்னரே உறங்கச் சென்றுவிடுவதும் நம் முன்னோர் வழக்கம்.
ஆக, அதிகாலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரை ஏறத்தாழ பதினாறு மணி நேரங்கள் விழிப்பில் இருந்தார்கள் முன்னோர்கள்.
பதினாறு மணி நேரத்தில் உணவு நேரம், இயற்கை உபாதை நேரம் தவிர்த்து மற்ற நேரமெல்லாம் படைப்புத் தொழிலாகவே வாழ்ந்து நிறைந்தார்கள். அதனால்தான் அவர்களால் அந்தக் குறுகிய காலத்தில் அவ்வளவு படைக்க முடிந்தது.
நபிகள் அறுபத்து ஆறு ஆண்டுகள் வாழ்ந்தவர். அதில், அவர் வியாபாரியாக வாழ்ந்ததுபோக, மதத் தலைவராகப் பரிணமித்து உலகுக்குப் போதித்தது வெறும் 23 ஆண்டுகள் மட்டுமே,
ஏசுபிரானின் வாழ்நாள் 40 ஆண்டுகளுக்குள்தான். அதிலும், பெரிய ஏரோதின் அடக்குமுறையால் எகிப்து நாட்டுக்குத் தப்பிப்போய் எருசேலம் மீண்டு வந்து போதித்தது சொற்ப காலம்தான்.
புத்தர் 80 வயது வரை வாழ்ந்தார் என்றாலும், 35 வயதுவரை கௌதம சித்தார்த்தராகவே வாழ்ந்தார். அவர் புத்தராகப் போதித்து வாழ்ந்தது வெறும் 45 வருடங்கள்தான்.
குறுகிய காலத்தில் அவர்கள் சாதித்துப் போனார்கள் என்றால் அப்படிச் சாதிக்க முடிந்ததற்குக் காரணம், “பொழுதாளுமை” !
இன்று எப்படி நடக்கிறது பொழுது…?
இந்த மண்ணுக்கும், கலாசாரத்துக்கும் சம்பந்தமேயில்லாத வேக வேகமான மேலை நாட்டுப் பாணியிலான அலுவலக முஸ்தீபுகள், பெட்டிகளுக்கு முன்னால் முதுகு வலிக்க அமர்ந்துகொண்டு தட்டித் தட்டிக் கூட்டிக் குறைக்கப்படும் பைனரிகள், வந்ததும் போனதுமான கணக்குகள், கவலைகள்…
ஒருவழியாக மாலை வேலை விட்டு வந்தால் விரல் நுனியில் தத்தளிக்கும் நூற்றுக்கணக்கான சேனல்கள், இடையிடையே நொய்… நொய்… எனும் வாட்ஸ்அப் கண்ணராவிகள், முக நூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என்றாகிவிட 24ஆவது மணிக்கான பெண்டுலம் நெற்றிப் பொட்டில் வந்து “டாங்” என ஒரே அடியாய் அடித்துப் படுக்க வைத்துவிடுகிறது.
நமக்காகச் சிந்திக்க நேரமில்லை. வாழ்க்கையை நோக்கிய அனுபவமில்லை. பண்பு கெட்டு, பாசம் கெட்டு, உறவுகள் கெட்டு, உன்னதமான இந்த உலக வாழ்க்கையும் கெட “ஐயோ”வெனக் கெட்டழிகிறது மனம்.
அதனால்தான் சொல்கிறேன்… நமக்கான பொழுதுகளை நாம் பிரத்யேகப்படுத்திக்கொள்ள வேண்டும். இழுத்த போக்கில் போவோம் என்று எண்ணி வெறும் நடை போட்டால் மனம் சலிக்கும். ஸ்டூல் உதைக்கத் தூண்டும்.
நமக்குள்ளும் எத்தனையோ திறமைகள் இருக்கின்றன என்று நம்ப வேண்டும். ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கித் தீனி போட்டுக்கொண்டே வந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமாகிவிடும்.
எடுக்கக் கை, உண்ண வாய் என்று தனித்தனியாக இருப்பது போல… வசதிக்கு வேலை, நிம்மதிக்கு வாழ்க்கை என்று நாம்தான் நம் பொழுதைத் தெளிவாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஓடி ஓடி மூளையைக் கசக்கிப் பிழிந்துகொண்டேயிருந்தால், ஒரு கட்டத்தில் மனம் பேதலித்துவிடும். அந்த நேரம் பார்த்து உணர்வலைகள் மீறியடித்தால் தவறான பாதைக்கு இட்டுச் சென்றுவிடும்.
நம் பொழுதை நமதாக்குவோம். எடுத்த பிறப்பை சுகமாக்குவோம். விரைந்து உறங்கி, விரைந்து எழுந்து ஆன வரை நம் பொழுதை நீட்டிக்கொள்வோம்.
அடுத்தொரு மூளையில் நம்மைத் திணித்துக்கொள்ளாமல், நம் மூளையின் வீரியத்தை இந்த உலகமெங்கும் விசிறியடிப்போம்.
நமக்கே நமக்காக வாய்த்த “பொழுதை” அணு அணுவாக ரசித்து வாழ்வோம். நமது பொழுதாளுமையால் இந்த உலகை ஆள்வோம்.
இனி ஒரு ஸ்டூல் உதைக்கப்படாமல் இருக்கட்டும்!
**கட்டுரையாளர் பற்றிய குறிப்பு**
திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகைகே. ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.