ஸ்ரீராம் சர்மா
சபரிமலையில் பெண்கள் ஏறிப் போக அனுமதிக்க வேண்டும் என்றும், காலம் காலமாக இருந்துவரும் ஒரு நம்பிக்கையை இப்படித் தேவையில்லாமல் சீண்டுவது அநாவசியம் என்றும் அவ்வப்போது பேச்செழுந்து அடங்குவது வழக்கம்.
கால் நூற்றாண்டுக் காலமாக எழுவதும், அடங்குவதுமாக இருந்த அந்தக் குரல் இந்த முறை கொஞ்சம் “ஓவர் ஷூட்” ஆகிவிட்டது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தியாளர் கார்த்திகேயன் ஒரு விவாதத்தில் இந்தப் பிரச்சினையை எடுத்துப் பேசத் துவங்க, அவர் உதாரணம் காட்டிய சில வரிகளில் ஆபாசம் இருப்பதாக எண்ணிக் கொந்தளித்து விட்டார்கள் பக்தர்கள்.
இது சென்ஸிட்டிவான விஷயம்
பெண்ணுரிமை என்ற பெயரில் இதன் பின்னால் இருப்பது இண்டியன் லாயர்ஸ் அஸோஸியேஷன் என்பதும், அதன் தலைவராக இருந்துகொண்டு இந்துமத நம்பிக்கையான இதை எதிர்த்து வாதாடிக்கொண்டிருப்பவர் அந்த அஸோசியேஷனின் தலைவரான நௌஷத் அஹமது கான் என்பதும் விஷயத்தை மேலும் சென்ஸிட்டிவாக்கியிருக்கிறது.
தொட்டால் பற்றிக்கொள்ளக்கூடிய இதுபோன்ற விஷயங்களை மீடியாக்கள் குழாயடிச் சண்டை போல் டீல் செய்வதைத் தவிர்த்துவிடுவது சமூக அமைதிக்கு நல்லது.
முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த தேசத்தின் அடர்ந்த மக்கள்தொகைக்கு முன்னால் நம்மிடம் இருக்கும் போலீஸ் ஸ்ட்ரெங்த் தூசு. உலகிலேயே மிகக் குறைந்த போலீஸ் ரேஷியோ நம்முடையது. 720 பேருக்கு ஒருவர்.
ஏதோ, சொந்த தர்மத்தின் பேரில்தான் இந்த அளவுக்காவது யோக்கியம் காட்டிக்கொண்டிருகிறார்கள் மனிதர்கள். அந்த சொந்த தர்மம் நீர்த்துப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளக் காலம் காலமாகச் சில பழக்க வழக்கங்களையும் சில நம்பிக்கைகளையும் கடைப்பிடித்துவருகிறார்கள்.
பிரச்சினைகள் மலிந்திருக்கும் இன்றைய மனித வாழ்க்கையில் தீராத மன அழுத்தத்திலிருந்து விடுபடும் உபாயங்களாகத்தான் அவைகளைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட நம்பிக்கைகளையே அசைக்கப் பார்க்கும்போதுதான் வெடித்துவிடுகிறார்கள்.
பூதநாத மகாத்மியம்
சபரிமலைக்கு விரதமிருந்து செல்லும் வழக்கம் 5000 வருடங்களுக்கும் முந்தையது என பந்தளத்தின் ‘பூதநாத மகாத்மியம்’ என்னும் ஓலைச்சுவடி நூல் உறுதிப்படுத்துகிறது.
ஸ்ரீ ஐயப்பன் அங்கே “நைஷ்டிக ப்ரம்மச்சாரியாக” வீற்றிருந்து அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது. அந்த மலை குறித்து பலருக்குப் பல நம்பிக்கைகள். அதை அப்படியே விட்டுவிடுதல் நலம்.
30 சதவிகிதம் பேர் வறுமையில் தவிக்கும் இந்த நாட்டில், மூன்றில் ஒருவர் பசியோடு இருக்கும் மண்ணில் இதுபோன்ற பதற்றங்களைத் தவிர்ப்பது உசிதம்.
நடைமுறைச் சிக்கல்கள்….
பொதுவாகவே, காட்டு வழியில் பெண்கள் போகும்போது மாதவிடாய்க் கால ரத்த வாடை காட்டுப்புலிகள், செந்நாய் போன்றவற்றை ஈர்த்துவிடக்கூடும் என ஃபாரஸ்ட் ரேஞ்சர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
மேலும், தற்போது என்னதான் வசதிகள் செய்து வைக்கப்பட்டிருந்தாலும் சபரிப் பாதை என்பது கொடுங்காட்டுப் பாதைதான். அதுவும் சில இடங்களில் நெட்டுக் குத்தாக நின்று மிரட்டும் நீலி மலையேறிக் கடப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.
இயற்கை உபாதைகளுக்குப் புதர் ஓரங்களும், சுத்தப்படுத்திக்கொள்ளத் திறந்தவெளி ஓடைகளும், நதிக்கரைகளும்தான் அங்கே இருக்கும் ஒரே வழி. இளம் பெண்களுக்கு இது எப்படிச் சரிப்படும்?
அடர்ந்த புதர்கள். ஆளரவமற்ற பகுதிகள். கும்மிருட்டு என எதற்கும் துணிந்த சமூக விரோதிகள் பெண்களைச் சூறையாட வாகான இடம் அந்த அத்துவானக் காடு. அப்படி ஒன்று நிகழ்ந்துவிட்டால் யார் பொறுப்பு ?
பாக்கு போட்டுக்கொண்டும், ஹான்ஸ் திணித்துக்கொண்டும் ஏன் மது அருந்திக்கொண்டும் மலையேறி வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். க்ஷேத்திரப் பாவிகளான அவர்களிடம் பெண்கள் சிக்கினால் பின் கதி என்ன? அந்தக் கடுங்காட்டில் காவல் செய்தபடியே இருப்பது கடினம் அல்லவா?
சந்நதியை நெருங்கும் நேரம் ‘நடபந்தல்’ என்று ஓரிடம் வரும். 500 மீட்டர் தூரமுள்ள அந்தச் சிறிய இடத்தில் மூச்சுவிடக்கூட இடமில்லாமல் நெருக்கியபடி பக்தர்கள் நிற்பது வழக்கம். அந்தக் கூட்டத்தின் இடையே இளம் பெண்கள் நிற்பது சாத்தியம்தானா ?
ஏன், திருப்பதி மலைக்குப் பெண்கள் செல்லவில்லையா என்று கேட்கலாம். திருப்பதி மலைக்கு காரிலும் பஸ்ஸிலும் செல்கிறார்கள். சபரிமலைக்கு காரில் போக முடியாது. நடந்தேதான் சென்றாக வேண்டும்.
மந்திர பூமி, யந்திர பூமி, தந்திர பூமி என்பதில் மலையாள பூமியானது மந்திர பூமி. மந்திரம் என்றாலே அது நம்பிக்கை சார்ந்த ஒன்று என்றாகிவிடுகிறது. அந்த நம்பிக்கையிலேயே கை வைப்பது அடிப்படையையே அசைக்கப் பார்ப்பதாகும்.
ஒரு பெருங்கூட்டத்தின் சென்டிமென்ட்டைச் சீண்டிப் பார்ப்பது தேவையற்ற ஒன்று என்றே கருதுகிறேன்.
பெண்களின் சபரிமலை என்றே ஒன்று இருக்கிறது.
கிள்ளியாத்தங்கரையில் அமைந்துள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் மிகப் பிரசித்தம்.
அங்கே ஆண்டுதோறும் மாசி மாதத்தில் லட்சக்கணக்கான பெண்கள் கூடிப் பொங்கல் வைப்பார்கள்.
ஒருமுறை 15 லட்சம் பெண்கள் ஒன்றாகக் கூடிப் பொங்கல் வைக்க, அதை கின்னஸ் பதிவு செய்துகொண்டது. சென்ற ஆண்டு அங்கே கூடிய பெண்களின் கூட்டம் 35 லட்சம் என்கிறார்கள்.
பெண்கள் மட்டுமே கூடிப் பொங்கல் வைப்பது அங்கே காலம் காலமாக இருந்துவரும் ஒரு நம்பிக்கை, பழக்கம், பக்திக் கொண்டாட்டம். அதோடு அதை விட்டுவிட வேண்டும்.
“ஏன் ஆண்களும் போய் அங்கே ஃப்ரைட் ரைஸ் கிண்டக் கூடாதா…?” என்று மூக்கை நுழைத்து விதண்டாவாதம் செய்வது அபத்தம்.
செங்கண்ணூர் பகவதி அம்மன் கோயிலில் அம்மனுக்கு மனிதர்களுக்கு ஆவது போலவே மூன்று நாள் மாதவிலக்காகிறது என்கிறார்கள். அப்போது, மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மன் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேனி குளிர பூ அலங்காரம் செய்விக்கப்படுகிறது.
தீட்டுக் கறைப்பட்ட அந்தச் சேலையைப் புனிதமாகக் கருதிப் பெரும் விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கிறார்கள். எல்லாம் நம்பிக்கை.
அந்த நம்பிக்கையினால் மனிதர்களுக்கு நிம்மதி ஏற்பட்டுவிடுகிறது என்றால் அதைக் கேள்வி கேட்காமல் நகர்ந்துவிடுவதுதான் நல்லோர்க்கு அழகு. “ஏன் நம்பிக்கை வைக்கிறாய், உனக்கெதற்கு நிம்மதி…” என்று கேட்பது மனப் பிறழ்ச்சியே!
சக்குளத்துக் காவு – நாரி பூஜையும் அப்படித்தான் . அதாவது பெண்களை அமரவைத்து அவர்களுக்கு பயபக்தியுடன் பூஜை செய்வதே “நாரி பூஜை”.
அதன் தாத்பரியம் பெண்கள் போற்றப்படும் இடத்தில் தேவதைகள் சந்தோஷித்து அருள்மழை பொழிகிறார்கள் என்பதே.
கார்த்திகேயன் செய்த தவறு என்ன?
“அந்த மூன்று நாட்களில்
கோயிலுக்குச் செல்வது
தீட்டாகவே இருக்கட்டும்.
எந்த மூன்று நாட்களில்
பெண் தெய்வங்கள்
கோயிலுக்குள் இருக்காதெனெக்
கொஞ்சம் சொல்லுங்களேன்…”
இதுதான் கார்த்திகேயன் எடுத்துக் காட்டிய அந்தத் “துணுக்கு”. ஆம் இது வெறும் துணுக்குத்தான். இதைக் கவிதை என்று நம்பியதுதான் அவர் செய்த ஆதித்தவறு.
ஒரு சீரியசான விவாதத்தில் ஒரு தமாஷ் துணுக்கை யாரும் உதாரணம் காட்ட மாட்டார்கள். அந்தத் துணுக்கைக் கவிதை என்று அவர் நம்பிவிட்டதால்தான் மேற்கோளாக எடுத்துக் காட்டிவிட்டார்.
மரபிலக்கணத்தை மீறியதுதான் புதுக்கவிதை என்றாலும் அதற்கும் சில இலக்கணங்கள் உண்டு. ஒரு வெண்பா எழுதுவதற்கான கூரிய முனைப்பு புதுக்கவிதை எழுதவும் தேவைப்படுகிறது.
ஆனால், பலர் அதை தமாஷாகப் புரிந்துகொண்டு மனம் போன போக்கில் எழுதிக்கொண்டும் இன்னும் பலர் அதைக் கவிதை என அடையாளப்படுத்திக்கொண்டும் இருக்கிறார்கள்.
நா. காமராசன் ஒரு முறை இப்படி வெகுண்டு கேட்டார்.
“வரிகளை ஒடித்து ஒடித்துப் போட்டுவிட்டால் அது புதுக்கவிதை ஆகிவிடுமா? கம்பத்தில் சிக்கிக்கொண்டு பறக்கும் கந்தைத் துணிக்கெலாம் சல்யூட் அடிக்க முடியுமா?”
ஆம், கார்த்திகேயன் எடுத்துக் காட்டிய வரிகள், வித்தியாசமாக எழுதப்பட்டதொரு துணுக்கு. அவ்வளவே.
கவிதைக்குண்டான கன பரிமாணங்கள் எல்லாம் அதில் இல்லவே இல்லை.
காயங்களுடனும்
கதறல்களுடனும்
ஓடி ஒளியுமொரு
பன்றியைக் கொத்தும்
பசியற்ற காகங்கள்
உன் பார்வைகள்!
கலாப்ரியாவின் உலுக்கிப்போடும் இந்தக் கவிதையில் இருக்கும் ஓலமும் எள்ளலும் அலாதியானது. இதில் ஒரு ஸ்ட்ரக்ச்சர் இருக்கிறது. என்றோ எழுதப்பட்ட இந்த கவிதையின் “பசியற்ற காகங்கள்” என்பதில் இந்தக் கட்டுரையின் மையப் பொருளும் அடங்கிவிடுகிறது.
நள்ளிரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை
போன்றவைகளெல்லாம் சுவாரசியமான துணுக்கு வகைகளே அன்றி வேறில்லை.
ஈராயிரம் ஆண்டுக்கால இலக்கிய வளம் நம்முடையது. வெறும் 90க்குப் பிறகான எழுத்துகளை மட்டுமே படித்துவிட்டு அரங்கமேறும் ரிஸ்கை எடுக்கவே கூடாது.
வாழ்வியல் பேசும் கவிதை எது, போகிற போக்கில் சொல்லப்படும் துணுக்கு வகை எது எனப் பிரித்து உணர்ந்துகொண்டிருந்தால் அந்தத் துணுக்கை அவர் விவாதத்துக்குள் கொண்டு வந்திருக்கவே மாட்டார். இந்தப் பிரச்சினையே வந்திருக்காது.
ஆனாலும், இன்று அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுவிட்ட நிலையில் இத்தோடு விட்டுவிடுவது நல்லது. குடும்பஸ்தனான அவரை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் சென்று உறவுகளை இழுத்து தரக்குறைவாக தாக்குவது நாகரிகமாகாது.
தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு மேலெழுந்து வருவதுதான் மனித இயல்பு.
பொதுவாகச் சொல்லிவைக்கிறேன்.
கடவுளைப் புரிந்துகொள்வதை அப்புறம் வைத்துக்கொள்வோம்.
முதலில் கவிதையைப் புரிந்துகொள்வோம்.
———————————————————————————————————————————
(**கட்டுரையாளர் குறிப்பு:** எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதனைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். ஸ்ரீராம் சர்மா.)