ஆர்ட்டிஃபீஷியல் ஃப்யூச்சரிஸம் – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

இன்றைய உலகில் நம்பர் ஒன் பிசினஸ் ஜோஸியம். உலகம் முழுவதும் ஏறத்தாழ 58 தினுசுகளில் ஜோஸியம் பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

பெட்ரோல், டொபாக்கோ, கள்ள ஆயுதச் சந்தைகளுக்கு இணையாக, சூழ்ச்சியும் சுறுசுறுப்புமாக சுழலும் ‘வொயிட் காலர் மாஃபியா’ இது. கொஞ்சநஞ்சமல்ல. லட்சக்கணக்கான கோடி டாலர்கள் இதில் புரள்கிறது. தசமங்களைக் கடக்கும் அதன் புள்ளிவிவரங்களை வெளியே சொன்னால், உழைக்கும் அப்பாவிகளின் வயிறு எரியும்.

ஆசையும் பதற்றமும் கொண்ட விவரமில்லாத மனிதர்கள்தான் ஜோஸிய மாஃபியாக்களின் சரி டார்க்கெட். என்ன செய்வது, பாழும் மனிதர்களுக்குத் தங்கள் எதிர்காலத்தை அறிந்துகொள்வதில் அப்படி ஒரு கிக்.

“நேற்று வரை கிடைத்த செருப்படிகளெல்லாம் போகட்டும்; நாளையாவது பொன்னாடை உண்டா” என்று ஒரு கூட்டம். “நேற்று என்னமோ பொன்னாடை கிடைத்துவிட்டது. நாளை செருப்படி விழாமல் இருக்க வேண்டுமே” என்னும் பதற்றத்தில் ஒரு கூட்டம். இந்த இரண்டு வகை கூட்டத்துக்கும் ஆப்பு சீவிக்கொண்டிருப்பது தான் மாஃபியா ஜோஸியம்.

மரத்தடி ஜோஸியம், கிளி ஜோஸியம், எலெக்ட்ரானிக் ஜோஸியம், கைரேகை, குறி சொல்றதோயீய்… போன்ற எளிய அன்றாடங்காய்ச்சிகள் எல்லோரும் நமது அனுதாபத்துக்குரியவர்கள்.

ஆகாயத் தோட்டிகள் எனப்படும் காக்கைகளைப் போல இவர்களும் ஒருவகையான சமூகத் தோட்டிகள்தான். இவர்களால் சமூகத்துக்கு ஒருவகையில் ரிலாக்ஸ் கிடைக்கிறது என்றே சொல்லலாம். மேலும், இவர்களால் இந்தச் சமூகத்துக்கு பெரிய ஆபத்து ஒன்றும் வந்துவிடாது. ஆனால் அலுவலகம், வெப்சைட்டுகள் என ஹைஃபை செட்டப்புகளோடு கன கம்பீரமாக வலைவிரிக்கும் ஜோஸிய மாஃபியாக்கள் அப்படியல்ல. ரத்தம் உறிஞ்சுபவர்கள். ஒண்ணாம் நம்பர் டுமீல்கள்.

ஆரம்பத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட வசீகரமான வார்த்தைகளால், உங்கள் ஜாதகக் கட்டங்களை அலசியபடி சொல்லிக்கொண்டே இருந்து மெல்ல, மெல்ல தங்களுக்குள் இழுத்து விடுவார்கள். மெயிலிலும், வாட்ஸ்அப்பிலும் ஓயாமல் துரத்தி ஆசை, பயங்காட்டி ஆட்டையைப் போடாமல் விடவே மாட்டார்கள். தாசி படிக்கட்டிலும் பாசிப் படிகட்டிலும் கால்வைத்துத் தப்பியவன்கூட இவர்களிடம் மாட்டிக்கொண்டால் ‘பச்சக்’தான்.

அப்படியென்றால், ஜாதகம், ராசிக்கட்டம், நாள், நவகோள், ஜோஸியம் இவைகளெல்லாம் பொய்தானா என்றால் இல்லை. அப்படியும் சொல்லிவிட முடியாது. கோள்களின் அமைப்பும் மனிதர்களின் வாழ்வும் பின்னிப் பிணைந்தது என்று விவரமறிந்தவர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

அன்றைய வேத கால வாழ்க்கையில் ‘ஞான திருஷ்டி’ என்று ஒன்று இருந்தது. முனிவர்களாக, ரிஷிகளாக வாழ்ந்தவர்களில் சிலர் முக்காலமும் உணர்ந்தவர்களாக இருந்தார்கள். அந்த கூற்றுகள் மொத்தமும் அறிவியல்தான் என்கிறார்கள் விஷயமுள்ளவர்கள். ஜோஸியத்தை ‘வேதிக் சயின்ஸ்’ என்று பல்கலைக்கழகங்களில் பாடமாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

பண்டைய தமிழில்கூட குமார சுவாமீயம், சாதகலங்காரம், சாதக சிந்தாமணி, சந்தான தீபிகை, கார்த்திகேயம், அம்மணீயம், விதான மாலை என்று ஏகப்பட்ட நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்கிறது ஆ.சிங்காரவேலு முதலியார் அவர்களால் 1890இல் தொகுக்கப்பட்ட அபிதான சிந்தாமணி.

“ஜோஸியம் என்பது மகா உண்மை, ஆனால், அதை சரியாக உணர்ந்து சொல்லத்தான் இங்கே ஆட்களில்லை. அப்படியே, ஒருவர் சரியாக சொன்னாலும் அவரால் 60 முதல் 70 சதவிகிதம் வரைக்கும் மட்டுமே நெருங்கி சொல்ல முடியும்” என்று ஆயாசப்பட்டுக் கொள்கிறார்கள் விவரமுள்ள அறிஞர்கள்.

சரி விஷயத்துக்குள் போவோம்…

‘ஞான திருஷ்டி’ என்பது என்ன? எதிர்காலத்தை 100 சதவிகிதம் ‘அகக்கண்’ணால் காணும் ஓர் அற்புதமான வாய்ப்பு.

சரி, அந்த அகக்கண்ணை, ஞான திருஷ்டியை அறிவியல்பூர்வமாக செயற்கையாக உண்டாக்கிவிட முடிந்துவிட்டால்?

ஓர் உன்னதமான லேப்பில் வைத்து, தகுந்த சிகிச்சையில் ஒருவருக்கு ஞான திருஷ்டியைச் செயற்கையாக உண்டாக்கிவிட முடிந்தால், எதிர்காலத்தை நாம் 100 சதவிகிதம் கண்டுகொண்டு விட முடியும் அல்லவா?

இது சாத்தியம்தானா? ‘அகக்கண்’ என்பது உண்மையில் என்ன? அது நமக்குள் எங்கிருக்கிறது? அதை, மருத்துவ முறையில் ‘ஞான திருஷ்டி’யாக மாற்றுவது எப்படி? அதன் சாத்தியக் கூறுகள், வழி முறைகள் என்னென்ன?

இதுகுறித்த சில சிந்தனைகளை மின்னம்பலத்தின் மதிகூர்ந்த, செழித்த வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நான் ஆழங்காற்பட்டதொரு மருத்துவனா என்றால் இல்லை. அறிவியலில் பிஎச்டி செய்தவனா என்றால் இல்லைதான். ஆனால், ஆர்ட்டிஃபீஷியல் ஃப்யூச்சரிசத்துக்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவே கருதுகிறேன்.

எதிர்காலம் என்ற ஒன்று, ஏதோ இனிமேல்தான் புதிதாக பிறக்கப் போகிறது என்று நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம். இல்லை, எதிர்காலம் என்பது இங்கேயேதான் இருக்கிறது என்கிறது எனது ஆழ்மனம். ஏற்கெனவே இந்தப் பிரபஞ்ச வெளியில் எங்கோ புதைந்து இருக்கிறது என்று பரிபூரணமாக நம்புகிறேன்.

அதனால்தான் எதிர்காலத்தை ‘எழுதி வைக்கப்பட்டது’ (written script) என்றார்கள் நமது தத்துவ ஞானிகள்.

ஆம், மறைந்து இருக்கும் ‘எதிர்காலம்’ நம் வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களை மெல்ல மெல்ல அவிழ்த்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.

சரியாக சொல்வதென்றால், நாம்தான் நம் வாழ்க்கையை காலத்தால் சற்று ‘பின் தங்கி’ வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

மனித மூளைக்குள் சில மாற்றங்களை செய்துவிட முடிந்தால், பரந்து விரிந்த இந்தப் பிரபஞ்சத்தில் புதைந்திருக்கும் எதிர்காலத்தை ஈஸியாக ரீச் செய்து விட முடியும் என்றே தோன்றுகிறது

வேத காலத்தில் முனிவர்கள், ரிஷிகள் போன்றவர்கள் காட்டுக்குள் சென்று, கடுமையாக தவம் செய்து, ‘ஞான திருஷ்டி’யை ‘வரமாக’ வாங்கிக்கொண்டு வந்தார்கள் என்று நாம் படிக்க, சொல்லக் கேட்டிருக்கிறோம். அதில் பழுத்த உண்மை இருந்தாலும், முழு உண்மையையும் அவர்கள் நமக்கு சொல்லி விடவில்லை.

தவம், வரம் என்பதெல்லாம் வேறு மாதிரியான விஷயம் என்றே தோன்றுகிறது.

**தவம் என்பது என்ன?**

எந்தவிதமான கெட்டப் பழக்கங்களாலும் உடம்பைக் கெடுத்துக் கொள்ளாத, ஆரோக்கியமானதொரு மனிதன், பொல்யூஷனே இல்லாத, ஆக்ஸிஜன் அபரிமிதமா கிடைக்கிற ஒரு காட்டைத் தேடி அதன் நடுவில் சென்று அமர்ந்துகொண்டு, மனதை ஓயாமல் ஒருமுகப்படுத்தும்போது, ரத்தம் ஓர் அற்புதமான கொதி நிலையை அடைகிறது.

வெதுவெதுப்பான அந்த ரத்தமாகப்பட்டது, முதலில் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு, பிறகு உடம்பில் இருக்கிற மொத்த டாக்ஸின் (Toxin) களையும் துப்புரவாக அழிக்கிறது. நரம்புகளை நீவி விட்டபடி முன்னைவிட வேகமாக, ஒவ்வோர் அணுவிலும் சுத்த ரத்தம் பாயப் பாய ‘சுவாச நடை’ தெளிவாகிறது.

மனித உடலில் நடக்கும் வழக்கமான டபுள் சர்க்குலேஷனின் தேவை கணிசமாகக் குறைக்கப்பட்டு, அளவுக்கு அதிகமான ஆக்ஸிஜன் மூளைக்கு சப்ளை ஆகிறது. இந்த ப்ராஸஸைத்தான் அந்த நாளில் ‘தவம்’ என்று சொன்னார்கள்.

**வரம் என்பது என்ன?**

மேற்கண்ட ப்ராஸஸ் நடக்க நடக்க, மூளைக்குள் ஒரு நுணுக்கமான ‘கெமிக்கல் ரியாக்க்ஷன்’ நடந்தேறுகிறது. அதன் ரிசல்ட்டாக, மூளையின் மடிப்புகளில் இருந்து, இதுவரைக்கும் கண்டறியப்படாத பலப்பல புதிர்கள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. அதைத்தான் ‘வரம்’ என்று சொன்னார்கள்.

இன்றைய அறிவியல் உலகத்தின் அதிகபட்ச சாதனை ‘ஆர்டிஃபீஷியல் இன்டலிஜென்ஸ்’. ஆனால், நமது வேதிக் சயின்ஸை தீவிரமாக உள்வாங்கினால் அதையும் கடந்து சென்று விடலாம் என்று உறுதியாக நம்புகிறேன்.

**ஆர்ட்டிஃபீஷியல் ஃப்யூச்சரிஸம்**

எதிர்காலத்தைச் செயற்கையாக தெரிந்துகொள்வதே ஆர்ட்டிஃபீஷியல் ஃப்யூச்சரிஸம். என் ஆழ்மனதில் தோன்றும் சாத்தியக்கூறுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள அனுமதியுங்கள். எனது சிந்தனைச் சிலருக்கு ‘கஞ்சாத்தன’மாகப்படலாம். ஆனால், இன்றில்லை என்றாலும் என்றேனும் ஒருநாள் அறிவியல் உலகம் இதை செய்தே தீரும்.

**கார்டெக்ஸ்**

மருத்துவ உலகில், இதுகாறும் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட, மூளைக்குள் இருக்கும் ஒரு மெகா புதையல்.

கார்டெக்ஸில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஃபோல்டர்களுக்குள் என்னவெல்லாம் புதைந்திருக்கிறது என்று இதுவரைக்கும் மனித இனம் எக்ஸ்பீரியன்ஸ் செய்ததே இல்லை. இதை மருத்துவ உலகமும் ஏற்றுக்கொள்கிறது.

கார்டெக்ஸுக்குள் இருக்கும் பல கோடிக்கோடி நியூரான்களில் இது வரைக்கும் மனிதகுலம் பயன்படுத்தியிருப்பது வெறும் 2% கூட இல்லை. மீதமிருக்கும் எண்ணற்ற கோடி நியூரான்கள் மூளையின் ஆக்ஸிபிட்டல் லோபின் மடிப்புகளில் புதைந்தபடி, யுக யுகாந்தரங்களாக சீந்துவாரற்று உறங்கிக் கொண்டிருக்கின்றன.

அவற்றை, நவிசாக உசுப்பி எழுப்பி விடுவதன்மூலம் நாம் நம் எதிர்காலத்தை அறிந்து கொள்ள முடியும் என்பதே எனது துணிபு.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதலில், என் மனதில் இருக்கும் அந்த ‘மாமருந்து’ கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

மாசு மருவற்ற, படு சுத்தமான ‘லேப்’ ஒன்று அமைக்கப்பட வேண்டும். போலவே, 90 சதவிகிதமேனும் ஆரோக்கியமாக இருக்கும் மனித உடல் ஒன்று ‘சப்ஜெக்ட்டாக’ கிடைக்க வேண்டும்.

அந்த ப்யூர் சப்ஜெக்ட்டை (சுத்தமான மனித உடலை) ஆழ்ந்த உறக்கத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். பிறகு, அந்த வீரியமான மருந்தை சப்ஜெக்ட்டுக்குள் இஞ்செக்ட் செய்துவிட வேண்டும். அது, கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

ஆரம்பத்தில், ரத்தத்தை தியானச் சூட்டுக்கு ஈடா – பதமா சூடேற்றும். அப்புறம், அந்த ரத்தத்தைச் சீரான வேகத்தில் மூளைக்கு இடைவிடாமல் அனுப்பிக்கொண்டே இருக்கும். அதே சமயத்தில் சப்ஜெக்ட்டோட சுவாசத்தை ஒரே சீராக நிலைப்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கும். மேலே சொன்னபடி டாக்ஸின்களை அழித்து முன்னேறும் அந்தச் சுத்த ரத்தம் மூளைக்குள் புகுந்து, கார்டெக்ஸுக்குள் பாயும்!

மூளையின் சீந்தப்படாத புதையலான கார்டெக்ஸுக்கு 50% ஆக்ஸிஜன் கிடைக்கும்படி செய்துகொண்டே இருக்கும். இந்த ப்ராஸஸ் தொடர்ந்து 48 மணி நேரம் நடந்துகொண்டே இருந்தால், 100 பில்லியன் நியூரான்கள் கொண்ட சிக்கலான மனித மூளையின், ஆயிரக்கணக்காண நுண் மடிப்புகள் மொத்தமும் பதமான சூட்டில் இருக்கும் சுத்த ரத்தத்தால் மெல்ல மெல்ல தூண்டப்பட்டு, ஹுயூமன் ஹிஸ்ட்ரியில் இதுவரை இல்லாத அளவுக்கு மெல்ல மெல்ல இளகிக்கொடுத்து, விரிய ஆரம்பிக்கும்!

இந்தக் கட்டத்தில் மூளை ஸ்தம்பித்துப் போகலாம். இதுவரை அதன் டிஎன்ஏ-வில் இல்லாத புது அட்டெம்ப்ட் இது என்பதால், திடீரென்று எதிர்பாராத வேகத்தில் நியூரான்கள் சுழல ஆரம்பிக்கும்போது, அதைச் சமாளிக்க, மூளைக்குப் பலமடங்கு சக்தி தேவைப்படலாம்.

அதனால்தான் அந்த மருந்து 50% ஆக்ஸிஜனை அதற்கு ஆரம்பத்திலிருந்தே சப்ளை செய்ய ஆரம்பித்து விடும். இது, வழக்கமான ஆக்ஸிஜன் சப்ளை அளவான 20%-ன் இரண்டு மடங்குக்கும் அதிகம். எனவே, மூளை ஸ்தம்பிக்காது. குழம்பாது. ஸ்டேபிளாக ‘சப்ஜெக்ட்டை’ சப்போர்ட் பண்ணும்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பிளவுகளில் மறைந்திருக்கும் மில்லியன் கணக்கான நியூரான் சக்திகள் முதன்முறையாக வெளிப்பட்டு மிக வேகமாக சுழல ஆரம்பிக்கும்!

இப்படி கார்டெக்ஸிலருந்து வெளிப்படும் மில்லியன் கணக்கான நியூரான்கள், அண்டவெளியில் புதைந்திருக்கும் எதிர்காலப் பிரபஞ்ச அலைகளோடு தொடர்புகொள்ள தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கும்.

அப்போது சப்ஜெக்ட்டின் முகம் 10,000 வாட்ஸ் பல்பு போட்டது போல ஒளிரக்கூடும். கண் முழிகள் இரண்டும் மூடியிருக்கும். இமைகளுக்கு உள்ளே குட்டிப்போடும் முயலைப் போல உப்பிக் கொண்டிருக்கக் காணலாம்.

பிரபஞ்சத்தில் இருக்கும் எதிர்கால அலைகளுக்கும், சப்ஜெக்ட்டின் நியூரான்களுக்கும் இடையே நடக்கும் இந்த உறவுப் போராட்டத்தின் ஒருகட்டத்தில், திடீரென்று இரண்டும் ஒரே அலை வரிசையில் சந்தித்துக்கொண்டு விடும். அதைத்தான் நாம் ‘காட்லி மினிட்ஸ்’ என்று சொல்கிறோம்.

அந்த மகா நிகழ்வின் அற்புதமான கணங்களில், சப்ஜெக்ட்டின் கார்டெக்ஸிலிருந்து வெளிப்படும் கற்றையான புதிய நியூரான்கள் முழு சக்தியோடு எழுந்து, அண்டத்தில் பொதிந்திருக்கும் எதிர்காலக் காட்சிகளை மூளைக்குள் இழுத்துகொடுத்து விடும்.

அந்தக் காட்சிகள் எல்லாம் மூளையின் ‘செரிபெல்லம்’ என்னும் பகுதியில் மொத்தமாக போய் சேர்ந்துவிடும். அதை ‘ஆக்ஸிப்பிட்டல் லோப்’ எனப்படும் பகுதி செட், செட்டா தனக்குள் அடுக்கி வைத்துக் கொள்ளும்.

அவ்வளவுதான். ப்ராஸஸ் ஓவர்.

பிறகு, சப்ஜெக்ட்டுக்கு மாற்று மருந்தைக் கொடுத்து, ஆக்ஸிஜன் அளவை மெல்ல மெல்ல இறக்கி, சகஜமான 20% அளவுக்கு கொண்டுவந்து, பல்ஸ் ரேட்டை நார்மலாக்கி, ரத்தத்தின் டெம்ப்ரேச்சரை பழையபடியே கொண்டுவந்து நிறுத்திவிட வேண்டும். போதுமான ஓய்வை சப்ஜெக்ட்டுக்குக் கொடுக்க வேண்டும்.

சப்ஜெட்டை மறுபடியும் டீப் சப் கான்ஷியஸுக்குக் கொண்டு சென்று, ‘ப்ரெயின் இமேஜிங் டெக்னிக்ஸ்’ வழியாக, அதோட செரிபெல்லத்தில் கலெக்ட் செய்து வைத்திருப்பதையெல்லாம், ஆக்ஸிபெட்டல் லோப் வழியாக வெளியே எடுத்து, அதை ‘டீடெய்ல்’ பண்ணிப் பார்க்கப் பார்க்க, நமக்கு முன்னால் சட்டென வந்து நின்று விடும் ‘எதிர்காலம்’.

இதைத்தான், 12ஆம் நூற்றாண்டில், ஃபாதர் ஆஃப் சூஃபியிஸம் என்று போற்றப்படும் அருளாளர் அல் கஸாலி (AL Ghazali) அவர்கள் வேறு விதமாக சொல்கிறார். “சூஃபி பாதையில் செல்லும்போது எந்தக் கணத்திலும் இறைவனின் அருகில் ஈர்க்கப்படலாம்…” என்கிறார்.

இந்த ஈர்ப்பை அவங்க “ஜத்மா” என்கிறார்கள். அந்த நேரத்துப் பரவசத்தை “வாசித்” என்கிறார்கள். “அல்காயப்” அதாவது “கண்ணுக்கு தெரியாததை தெளிவாக பார்ப்பது” என்கிறார்கள்.

நமது வேதங்களில், புராணங்களில் இதைப் பற்றி போதும் போதுமெனச் சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே, செயல் முறைகளும், க்ளூக்களும் ஏராளமாகக் கொடுத்தும் வைக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் ஊக்கத்தோடு தீர ஆராய வேண்டும்.

முன்னோர்கள் எல்லாவற்றையும் செய்து முடித்து ‘சென்று’ விட்டார்கள். நாம்தாம் அனா ஆவன்னாவில் ஆரம்பித்து தவழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சைவ சித்தாந்த நூல்களைப் புரட்டினால் எவ்வளவு மூலிகைகள், எவ்வளவு ரஸவாதங்கள், எத்தனை எத்தனை சூட்சுமங்கள்… நமக்குப் புரியாததால் அவைகளையெல்லாம் டூப் என்று சொல்லி நாம்தான் ஏமாந்துக்கொண்டிருக்கிறோம். எதுவும் பொய்யில்லை. புரட்டில்லை. எல்லாமே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் மிச்சக் குறிப்புகள்.

வேகம் கொண்ட நமது மருத்துவ மாணவர்கள் சிலர் ஒன்றுகூடி, ஓயாமல் அவற்றை அலசி ஆராய்ந்தால் ஆர்ட்டிஃபீஷியல் ஃப்யூச்சரிசத்தை சாதித்து விட முடியும். அப்போது, இந்திய அறிவியல் சாதனையைக் கண்டு உலகமே வியந்து நிற்கும்.

உலகத்தில் இருக்கும் 196 நாடுகளும் நம்மை அண்டி நிற்கும். இந்த பூமி அழியுமா… என்றைக்கு, எப்படி அழியும் என்பது வரைக்கும் தெரிந்துகொள்ள முடியும்.

இது புது தியரியாக இருக்கலாம். ஆனால், இது ப்ராமிஸிங்கான தியரி. இதுவரைக்கும், வேறு யாரும் இந்த மாதிரி யோசிக்கவே இல்லை என்னும் ஒரே காரணத்தினால் என்னுடைய இந்த கட்டுரையை, மின்னம்பல வாசகர்கள் புறம் தள்ளிவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

சயின்ஸ் என்பதே ட்ரையல் அண்ட் எர்ரர்தான். ஆனால், ஆர்ட்டிஃபீஷியல் ஃப்யூச்சரிஸத்துக்கான சாத்தியக்கூறுகள் 100% உறுதி. தேவை, கடுமையான அர்ப்பணிப்போடு கூடிய பொறுமையான ஆராய்ச்சி மட்டுமே.

**ஒருவேளை, எனது எண்ணம்போல் அந்த மாமருந்து கண்டு பிடிக்கப்பட்டுவிட்டால்… இந்த உலகம் என்னவாகும்?**

**கிரவுண்டில் இறங்கும்போதே, “உன் ஸ்கோர் இன்றைக்கு 152 நாட் அவுட். மிட் விக்கெட்டில் ஒண்ணு, ஸ்லிப்ல ஒண்ணுன்னு ரெண்டு லைஃப்…” என்று சொல்லிவிட்டால் பிறகு ஆட்டத்தில் என்ன சுவாரஸ்யம்? அம்பயருக்கு எதற்கு தண்ட சம்பளம்? பிக் பாஸில் ஜெயிக்கப் போவது இன்னார் தானென்பது முதல் நாளே தெரிந்து விட்டால் பாக்கி 100 நாள்களுக்கு யார் விளம்பரம் தருவார்கள்? சேனலின் டிஆர்பி, நடிகர்களுக்குக் கொடுத்த அட்வான்ஸ் எல்லாமே அதோகதி ஆகிவிடாதா?**

அடுத்து இதுதான் என்பது தெரிந்துவிட்டால் மனித வாழ்வின் சுவாரஸ்யம் கலைந்து சப்பென்று ஆகிவிடாதா? பத்து வருடங்கள் கழித்து இவன்தான் என் சோற்றில் கைவைக்கப் போகிறான் என்று இப்போதே தெரிந்துவிட்டால் கலகமும், குரோதமும் கொண்டு மனிதர்கள் ஒருவருக்கொருவர் துரத்த ஆரம்பித்து விட மாட்டார்களா?

**காஸினோக்கள் இல்லாத உலகம் போரடிக்காதா? இப்படியென்று தெரிந்திருந்தால் அந்தக் கிணற்றை ஓ.பி.எஸ். தோண்டியிருப்பாரா? நாளை காலை கான்ஸ்டிபேஷன் நிச்சயம் உண்டு என்றால் இன்றைய பிரியாணியும் சோறும் நிம்மதியாக இறங்குமா? எதிர்காலத்தை அறிந்துகொள்ள முடிவது நன்மையா? தீமையா?**

சுவாரஸ்யமான இந்தக் கட்டுரையை ஒரு திரைப்படத்துக்கான ஸ்கிரிப்ட்டாக முழுமையாக எழுதி வைத்திருக்கிறேன்.

நாகப்பட்டினம் அருகே இருக்கும் ஒரு குக்கிராமம், சென்னை ஓ.எம்.ஆரில் ஆண்டிக் ஷாப் வைத்திருக்கும் ஓர் இளைஞன், டென்மார்க்கிலிருந்து தமிழ் கற்றுக்கொள்ள வந்திருக்கும் இளம் பெண் கேத்ரீன், இண்டியன் மெடிக்கல் கவுன்சல், உலக மருத்துவ மாஃபியா கும்பல், மூடியே கிடக்கும் இரண்டு அப்பார்ட்மெண்ட்கள், மூன்று கொலைகள், சூஃபீக்களின் ரகசிய உலகம், மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் அனிச்சாவின் மெல்லிய காதல்… எல்லாமும் கலந்து கட்டிய “சயின்ஸ் த்ரில்லர்” வகையான ஸ்கிரிப்ட் அது.

**எப்போது அது திரைப்படமாகும்? தயாரிப்பாளர் யார்? அட்வான்ஸ் எப்போது கிடைக்கும்?**

அதைத் தெரிந்து, சொல்லவாவது அந்த மாமருந்தை யாரேனும் சீக்கிரம் கண்டுபிடித்துவிட வேண்டும் எனது குலதெய்வம் கிளி முத்தி அம்மனை மனமுருகி வேண்டிக் கொள்கிறேன். கார் லோன் கழுத்தை நெரிக்கிறது கடவுளே!

கட்டுரையாளர் குறிப்பு:

ஸ்ரீராம் சர்மா…

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத்தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: vesriramsharma@gmail.com

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share