சந்திரயான் 2: நாளைய தொடக்கம்! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

பூமியிலிருந்து ஏறத்தாழ 4 லட்சம் கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் நிலவை நோக்கிய இஸ்ரோவின் பெருமைக்குரிய சந்திரயான் 2 திட்டம் அண்டத்தின் ஆச்சரியங்களில் ஒன்றாகிப் போனது.

சந்திரயான் 2 திட்டம் தோல்விதானா ? அல்லது திருப்புமுனை ஒன்று தென்பட வாய்ப்புள்ளதா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒரு விஷயம் மட்டும் உறுத்திக் கொண்டே இருக்கிறது.

ஆரம்பத்தில் ஜூலை 14 ஆம் தேதிதான் சந்திரயான் 2 லாஞ்ச் குறிக்கப்பட்டிருந்தது. அது, செப்டெம்பர் 6 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டுக்கும் இடையே சரியாக 24 நாட்கள் இடைவெளி.

பின்பு எதிர்பாராத தொழில் நுட்பக் கோளாறுகளால் திட்டம் தடைப்பட்டு மீண்டும் 22ம் தேதி லாஞ்ச் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், லாண்டிங் நாள் செப் 7 என்று குறிக்கப்பட்டது. சரியாக 17 நாட்கள்தான் இடைவெளி.

முன்பு போட்ட திட்டப்படி 24 நாட்கள் கழித்து 14 ஆம் தேதிதான் நிலவில் இறங்கி இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் 7 நாட்களுக்கு முன்பே நிலவில் இறங்க முடிவெடுத்தது ஏன் என்பதை விவரம் தெரிந்தவர்கள்தான் விளக்க முடியும்.

எப்படியோ, நிலவின் தென் துருவத்தில் நிலாப் பெண்ணின் கன்ன மூலத்து ரோமங்கள் வரை ஸ்பரிசித்து முடித்தபின் வெற்றிகரமாக முத்தமிடும் தருணம் பார்த்துப் பட்டென்று தொடர்பிழந்து போயிருக்கிறது சந்திரயான் 2.

பதட்டப்பட வேண்டியதில்லை.

நிலவின் தென் துருவம் என்பது இதுவரை யாரும் பிரவேசிக்காத – இன்னமும் ஆராயப்படாத அனுபவப்படாததொரு இடம் என்பதால் இன்று மௌனித்திருக்கும் விக்ரம் லாண்டர் நாளை எங்கிருந்தாவது முனகி அழைத்துவிடக் கூடும்.வாய்ப்புள்ளது.

ஆம், அறிவியலைப் பொறுத்தவரை இறுதிக் கணம் என்று ஒன்று இல்லவே இல்லை. இன்றைய முடிவு நாளைய தொடக்கமாக இருக்கலாம். நம்பிக்கை முக்கியம்.

இன்றதிகாலை நாடு கண்ட கோலம் ஆச்சரியமாக இருந்தது. வழக்கமாக கிரிக்கெட்டுக்கும் கால்பந்துக்கும் கண்விழித்திருக்கும் இளைஞர்கள் இந்த முறை இஸ்ரோவின் சாதனைக்காக கண்விழித்தார்கள் என்பதே பெரிய முன்னேற்றமாகப்பட்டது.

நொடிக்கு நொடிப் பரபரப்பாகக் கழிந்த அந்தப் பின்னிரவுப் பொழுதில் பெங்களூரு இஸ்ரோ சென்டருக்கு முன்னமே வந்து சேர்ந்து விட்ட பாரதப் பிரதமர் உட்பட மொத்த அரங்கமும் ஒற்றைச் சிந்தனையாய் நிலவில் மனம் பதித்து நகக்கண்ணுக்குள் ஒளிந்திருந்தது.

சந்திரயானிலிருந்து வெளியேறிய விக்ரம் விண்கலம் நிலவை நோக்கி மெல்ல இறங்கத் துவங்கியது. எல்லாம் நெருங்கி வந்த நிலையில் சரியாக 1: 58 மணியளவில் விக்ரமின் தொடர்பு பட்டெனத் துண்டிக்கப்பட்டுவிட்டது.

இஸ்ரோவின் பல்லாண்டுக்கால உழைப்பு ஒரே நொடியில் ஏன் எதற்காக எதனால் என்ற காரணம் ஏதும் தெரியாமல் காணாமல் போனது. நிலைகுலைந்து போனார் இஸ்‌ரோ தலைவர் சிவன்.

வெற்றித் தருணத்தைக் காணக் காத்திருந்த பாரதப் பிரதமரை நோக்கி அவர் வந்தபோது, தயக்கத்துடன் கூடிய அந்தத் தளர் நடையைக் காணச் சகிக்கவில்லை. அந்த மனிதரின் முகபாவனையைக் காணக் காண மனதைப் பிசைந்தது.

கண்ணனிடம் வேலை கேட்டு நின்ற பாரதியாரின் வரிகள்தான் நினைவுக்கு வந்தது.

தோட்டத்தைக் கொத்திச்

செடி வளர்க்கச் சொல்லி

சோதனை போடாண்டே;

காட்டும் மழைக்குறித்

தப்பிச் சொன்னால் என்னைக்

கட்டி அடி ஆண்டே !

அள்ளி அணைத்துக் கொண்டார் மோடி….

“எனதருமை இந்திய விஞ்ஞானிகளே…உங்களுக்கு ஆறுதல் சொல்ல அல்ல, உங்களிடமிருந்து உறுதியைக் கற்று கொண்டு போகவே வந்தேன்… ஒட்டு மொத்த இந்தியாவும் உங்கள் பக்கம் நிற்கும். நீங்கள் அடுத்த கட்டம் நோக்கி நம்பிக்கையோடு முன்னேறுங்கள்…” என்று மோடி பேசியபோது…

நாட்டின் ஒட்டு மொத்த இளைஞர்களும் உணர்வு பூர்வமாக நமது சிவன் பக்கம் நின்றார்கள். இந்தியத் தமிழ் மண்ணின் ஒன்றுபட்ட சக்தியாக இஸ்ரோவின் சிவன் உணரப்பட்டார்.

சொல்லப் போனால் அறிவியல் என்பதே “ட்ரையல் எண்ட் எர்ரர்” விஷயம் தான். உயர் அதிகாரப் பொறுப்பில் இருக்கும் சிவன் கலங்கியிருக்க வேண்டிய அவசியமேயில்லை.

“ஆமாம், எல்லோரும் சேர்ந்துதான் முயற்சி செய்தோம். ஏதோ தவறி விட்டது. பொறுங்கள், ஆராய்ந்து அறிக்கை அளிக்கிறோம்…” என்று தன் பதவிக்குண்டான தோரணையோடு சொல்லிப் போயிருக்கலாம்.

ஆனால், கைலாசவடிவு சிவன் என்னும் அந்த எளிய மனிதர் தன் வசமிழந்து போனார்.

‘ஓர் விவசாயியின் மகனான நான் விதை நெல்லைத் தொலைத்து விட்டு நிற்கிறேனே…’ என்ற குற்றவுணர்வு மேலிட்டுவிட்டது போல் மோடியின் தோள் சாய்ந்து குலுங்கினார்.

பொறுப்புணர்வோடு கூடிய அவரது கண்ணீர் இந்தியர்களை – தமிழர்களை உலக அரங்கில் உயர்த்தியிருக்கிறது.

வரைபடத்தின் கடைக்கோடியில் இருக்கும் தமிழகத்தில் கழிப்பறை கூட இல்லாத கார்பொரேஷன் பள்ளி ஒன்றில் கிடைத்த ஆத்திச்சூடிக் கல்வியைப் பொத்திப் பொத்திப் புலனடக்கிப் பெருக வளர்த்து…

நாகர்கோயில் இந்து காலேஜ் .சென்னை எம்.ஐ.டி , பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி என மெல்ல மெல்ல ஓங்கி இன்று இந்திய விஞ்ஞான இயலையே வழி நடத்தும் உன்னதப் பொறுப்பில் பணிவோடு நிற்கும் அந்த எளிய மனிதரைக் கண்டு நாடே வியக்கிறது.

இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களது குழுவின் அசாத்திய முயற்சி இந்தியர்களை உலகளவில் உயர்த்தி வைத்திருக்கிறது.

உலக நாடுகள் அண்டவே எண்ணியிராத – என்னவென்றே தெரியாத தென் துருவத்தை ஊடுருவி பார்க்கும் சிவன் அவர்களது குழுவின் தைரியம் இந்திய விஞ்ஞான மரபின் கம்பீரம் !

இந்தியாவின் பெருமிதத்துக்காக அல்லும் பகலுமாக உழைத்துப் பாடுபட்ட இஸ்ரோவை வணங்கி வாழ்த்துவோம் !

இன்னமும் கூட நான் நம்புகிறேன். இஸ்ரோவுக்கு இது தோல்வியல்ல. உற்றுக் கவனித்துக் கொண்டேயிருந்தால் இன்றில்லை ஓர் நாள் நிலவின் மடியில் விழித்தமர்ந்து கொண்டு விக்ரம் எழுப்பும் சமிக்ஞையைக் கேட்டு விடலாம்.

நம்பிக்கைதானே வாழ்க்கை, அறிவியல் மற்றுமெல்லாம்…

**கட்டுரையாளர் குறிப்பு:**

ஸ்ரீராம் சர்மா…

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.

**

மேலும் படிக்க

**

**[பாஜகவுடன் பேச தினகரனுக்கு சசிகலா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/09/06/64)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக -காங்கிரஸ் கூட்டணி தொடருமா?](https://minnambalam.com/k/2019/09/07/20)**

**[சந்திரயான் 2 திடீர் திருப்பம்: விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னல்கள் கிடைக்கவில்லை!](https://minnambalam.com/k/2019/09/07/87)**

**[கிணற்றைக் காணவில்லை: வடிவேலு காமெடி அல்ல வழக்கு!](https://minnambalam.com/k/2019/09/06/53)**

**[விமர்சனம்: மகாமுனி](https://minnambalam.com/k/2019/09/07/17)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share