சங்க காலத் தமிழர்களால் ‘குரீஇ’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட பறவை சிட்டுக்குருவி.
குருவிகளோடு வாழும் வாழ்வு ரம்மியமானது.
இளஞ்சூட்டு ரத்தத்தோடு ஊரை சுற்றிவரும் குருவிகளால் அந்த ஊர் இன்னும் அழகாகிறது. காதுகளைக் கௌரவப்படுத்தும் சுநாதக் குரல் குயிலுக்கும், குருவிக்குமே உண்டு.
இன்று குருவிகள் இல்லை. குறிப்பாக நகரங்களில் இல்லவே இல்லை. எப்போதாவது ஒன்றைக் காண நேர்ந்துவிட்டால் வானவில்லைக் கண்ட குழந்தையைப் போல வாய்பிளக்க வேண்டியதிருக்கிறது.
குருவிச் சத்தம் கேட்காத ஊரில் வாழ்ந்தென்ன லாபம்? அம்மாவின் குரல் கேட்காத வீடொன்றில், எத்தனை செல்வம் இருந்தும் என்னதான் பிரயோஜனம் ?
மலடாக்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில், ஆண்டுதோறும் சிட்டுக் குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகமெங்கும், மார்ச் 20ஆம் தேதியை அதற்காக ஒதுக்கி, “MOTHERS DAY” என்பது போல WORLD HOUSE SPARROW DAY – WHSD என்று அதற்கு படாடோபமாக நாமகரணமிட்டு அனுஷ்டிக்கிறார்கள்.
மொத்தமும் பாசாங்கு.
உண்மையில் மனிதர்களுக்குச் சிட்டுக்குருவி மேல் அக்கறையிருக்குமேயானால், முதல் வேலையாக சிட்டுக்குருவிகளுக்கு எதிராக பூமியில் பதிக்கப்பட்டிருக்கும் செல்போன் டவர்களை 70 சதம் அழித்திருக்க வேண்டும். செய்யவில்லையே.
குருவிகளை விட இந்த வாழ்க்கையை செல்போன் அழகாக்கி விடுமா என்ன? உலக செல்போன் உரையாடல்களில் 90 சதவிகிதம் கெட்ட சமாசாரங்கள்தானே?
வாட்ஸ்அப்புகளில் ஓயாமல் என்ன அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்? கல்யாண செய்திகளையா?
இன்றைய உலகக் கருமங்கள், கலகங்கள் பாதிக்கு மேல் பாழும் வாட்ஸ்அப்புகளால் உண்டாக்கப்படுபவைகள் தானே?
கலக விரும்பியான மனிதன், சிட்டுக்குருவிகளை அழித்துவிட்டு, அதே செல்போன் கம்பெனிகளிடம் ஸ்பான்ஸர் பணம் வாங்கி, “சிட்டுக் குருவிகளே, வணக்கம்” என்னும் ஒய்யார பேனர்களைக் உலகமெங்கும் கட்டி, விழா எடுத்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.
அம்மாவுக்கு இரண்டு பிளாஸ்டிக் வளையல் வாங்கிப் போடத் தெரியாதவன், அவள் போன பின்பு, நைந்து போன அவளது கல்யாணப் புடவையை பீரோவில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு போவோர் வருவோரிடம் காட்டி மூக்கை சிந்திக்கொண்டிருப்பான்.
அப்படிப்பட்டதுதான் “சிட்டுக்குருவி தின” நாடகம்.
என்னுடைய சிறு வயதில், எங்கள் வீட்டு வராண்டாவில் சர்வ சுதந்திரமாக வந்தமரும் சிட்டுகுருவிகளைக் கவிழ்ந்து படுத்தபடி வெகு அருகில் தரிசித்திருக்கிறேன்.
குண்டு உடலோடு பம்மியமர்ந்திருக்கும். நொடிக்கொரு முறை தலையசைக்கும். திடீரென திரும்பி அமரும். அதன் கண்களில் சாந்தமும், பயமும் எந்த நேரமும் குடிகொண்டிருக்கும்.
சிட்டுக்குருவியின் கண்களில் கோபம் கண்டதேயில்லை. உன்னிடம் கோபப்பட எனக்கு என்ன இருக்கிறது என்பது போல சட்டெனப் பறந்து போகும்.
மனிதர்களோடு சேர்ந்தே வாழ விரும்பும் விலங்கு என்று பசுவை சொல்வார்கள். அப்படித்தான், பறவைகளில் சிட்டுக்குருவி.
“மனிதர்களே உங்களோடு நானும் வாழ்ந்துகொள்கிறேனே…” என்று கெஞ்சுவது போலவே தொனிக்கும் அதன் க்ரீச்… க்ரீச்…
இன்றைய காங்கிரீட் வாழ்வில், ஏதோ சில கிராமங்களில் மட்டும்தான் சிட்டுக்குருவிகள் உயிர்த்து இருக்கின்றன என்கிறார்கள்.
ஆம், சுயநலம் மிகுந்துவிட்ட இன்றைய பாழும் உலகில், கிராமங்களில் மட்டும்தான் காண முடிகிறது “அம்மாக்களையும்”, “குருவிகளையும்” !
அன்றைய திருவல்லிக்கேணியும் அழகானதொரு கிராமமாகத் தான் இருந்தது. நடு நாயகமாக பார்த்தசாரதி கோயில் இருக்க, அதைச் சுற்றி அமைந்த வீதிகள்தோறும், அழகழகான ஓட்டு வீடுகள் இருந்தன. தூசி பறக்கும் சாலைகள் இருந்தன. தூர தூரமாக தென்னந்தோப்புகள் இருந்தன.
குளங்கள் இருந்தன. செம்மண்ணோடு கூடிய திண்ணைகள் இருந்தன. மாடுகள் நிறைந்த கோசாலைகள் இருந்தன. வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டிக்கொண்டு வாழ்ந்தன. மனிதர்கள் இருந்தார்கள்.
சிட்டுக்குருவியைப் பற்றி எண்ணும்போதெல்லாம் என் அம்மாவின் நினைவைத் தவிர்க்க முடிவதில்லை. அம்மாவின் பெயர் “மல்லிகா” என்றாலும், சுற்று வட்டாரத்தில் “ஆர்டிஸ்ட் மாமி” என்றே அழைக்கப்பட்டாள்.
அற்புதமான சாரீரம் படைத்த கர்னாடக இசைப் பாடகி. அப்பாவைவிட அழகானவள். தவறாமல் சஷ்டிக் கவசம் பாடும் முருக பக்தை. எல்லோருக்கும் உதவும் ஒரு பரோபகாரி. அரிசிப் பஞ்சம் தலைவிரித்தாடிய நேரத்திலும், ராப்பிச்சைக்காரன் வந்து விட்டால் என்ன செய்வது என்று சோற்றுப் பானையில் தண்ணீர் ஊற்றாமல் வைத்திருந்த அவளது குணப் புண்ணியம்தான் இன்றைய எனது எழுத்துக்கு ஆதாரம்.
அம்மா, அதிகம் பதற்றப்பட்டது அப்பாவைப் பற்றித்தான். அவர், உள் அறையில் ஓவியம் வரைந்து கொண்டிருக்கும்போது நாங்கள் நடு ஹாலில் இரைந்து பேசிக்கொண்டிருந்தால் டென்ஷன் ஆகிவிடுவாள். காலில் விழாத குறையாக எங்களை அதட்டி விரட்டி விடுவாள்.
அதற்கு ஈடாக அவள் கவலைப்பட்டது ஒன்று உண்டென்றால் அது சிட்டுக்குருவிகளைப் பற்றித்தான்.
சிட்டுக்குருவிகள் பொதுவாக வீட்டு உத்தரங்களில்தான் கூடு கட்டி வாழும். ஆண்டுக்கு மூன்று முறைதான் முட்டையிடும். ஆணும் பெண்ணுமாய் குஞ்சுகளை அல்லாடி வளர்க்கும்.
அப்பாவின் ஓவிய அறைக்கும், ஹாலுக்கும் இடைப்பட்ட உத்தர மூலையில் ஓர் வாகான சாளரம் இருந்தது. குருவிகள் அதில் வழக்கமாக கூடு கட்டி குஞ்சு பொரிப்பதுண்டு .
“ஊர்க்குருவி” , “தூக்கணாங்குருவி” என்பது போல, “பழக்கப்பட்ட குருவிகள்” என்று தனி இனமே ஒன்று உண்டு. சங்க காலங்களில் வீட்டின் செல்லப் பறவைகளாக இவை வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றன.
இந்த வகைக் குருவிகள்தான், கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி வள்ளலுக்கு ஆபத்துக் காலத்தில் நெற்கதிர்களைக் கொண்டுவந்து சேர்த்து பசியாற்றியதாகச் சொல்வார்கள்.
குருவி சத்தங்களோடு வாழும் அந்த இரண்டு – மூன்று மாதங்கள், ஆண்டு முழுவதையும் எங்களுக்கு சௌந்தர்யமாக்கிவிடும்.
ஆண்டுதோறும் புதிய குருவிகள் வரும். போகும்.
அவைகளில் ஏதோ ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து “வள்ளி” எனப் பெயர் சூட்டி வைப்பாள் அம்மா.
குருவிகள் உலவும் வீட்டில் வாழ்வது தனிச்சுகம்.
பொங்கல் பண்டிகைக் காலங்களில் சென்னையில் கிரிக்கெட் மேட்ச் நடக்கும். ஒருபுறம் குருவிகளின் சத்தமும் , ஒருபுறம் அப்துல் ஜப்பாரின் கிரிக்கெட் வர்ணனையும் சேர்ந்து பொங்கல் வாசனையோடு வீடே சொர்க்கமாக மாறும்.
சில நேரங்களில் இரை தேடிப்போகும் “தாய்க் குருவி” திடீரென வீட்டுக்குள் வந்து விடும்.
அந்த நேரம் எப்படித்தான் அம்மாவுக்குத் தெரியுமோ, ஓடோடி வந்து வீட்டின் அத்தனை மின் விசிறிகளையும் “பட்,பட்” டென்று அணைத்து விடுவாள். அப்பாவின் ஓவிய அறை உட்பட…
தயாராக வைத்திருக்கும் ஒட்டடைக் கொம்பை ஃபேன் ப்ளேடுகளுக்குள் சரேன்று புகுத்தி நிறுத்தி விடுவாள். ப்ளேடுகள் வளைந்தாலும் அவளுக்கு கவலையில்லை. குருவி அடிபட்டுவிடக் கூடாது, அவ்வளவுதான்.
வீடே நிசப்தமாக இருக்கும்.
கூட்டுக்குள் புகுந்துகொண்ட குருவிகளும், மனிதர்களைத் தொந்தரவு செய்து விடக் கூடாது எனும்படியாக தன் குஞ்சுகளோடு கொஞ்சமாய் “க்ரீச்”சிட்டுக் கொள்ளும்.
மின் விசிறிகள் அணைக்கப்பட்டு, நிசப்தமாக இருக்கும் வீட்டில்…
மெல்லிய குரலில் “வ..ள்…ளீ” என்பாள் அம்மா!
ஒரே ஒரு சிட்டுக் குருவியின் குரல் மட்டும் “க்ரீச்…க்ரீச்…” என பதிலுக்கு மெல்லக் கேட்கும்.
ஆம், குருவிகள் மனிதர்களோடு பரஸ்பரம் உறவாடக் கூடியவைகள்.
நாங்கள் ஆச்சர்யமாக வாயைப் பிளந்தபடி அம்மாவையே பார்த்துக் கொண்டிருப்போம். அம்மா மெல்லக் கண் சிமிட்டிக் காட்டுவாள்.
கொஞ்சம் பொறுத்து… “வ..ள்…ளீ” என்பாள். மீண்டும், “க்ரீச்…க்ரீச்…”
“போதும், போதும்…அம்மாவை தொந்தரவு செய்தால் படிப்பு வராதுன்னு, பாட்டி சொல்லியிருக்காங்க இல்லையா..?” என்றபடியே எங்களை விளையாட அனுப்பி விட்டு, குருவிக் கூட்டுக்கு அருகில் மாட்டப்பட்டிருக்கும் பெரிய சைஸ் வள்ளி தெய்வானை சகித முருகன் படத்தைக் கும்பிட்டபடியே கவசம் சொல்ல ஆரம்பித்துவிடுவாள்.
ஆம், குருவிகள் மனிதர்களோடு பரஸ்பரம் உறவாடக் கூடியவைகள்…
அம்மா, சட்டென ஒருநாள் சிட்டுக் குருவியைப் போல காணாமலே போனாள்!
ஊர், உறவுகள் கூடி அழுதது. அப்போது எனக்கு பன்னிரண்டு வயதுதான். ஆனால், நான் அழவில்லை. மயான வேலைகளில் இறுக்கமாக இருந்தேன்.
ஊரும் உறவுகளும் கலைந்து போக, அன்றைய இரவின் நிசப்தத்தில் படுத்துக் கிடந்தேன். தூக்கம் கண்களைத் தழுவிய நேரம்… எங்கிருந்தோ ஒரு வள்ளியின் “க்ரீச்” கேட்டது. அந்தக் கணத்தில் சடாரென உடைந்து போனேன். வாயை இறுகப் பொத்திக் கொண்டு, உருண்டு, புரண்டு, அழுது தீர்த்துக் கொண்டேன்.
இன்று வரை, அம்மாவின் குரலையும், அந்த “வள்ளி”யின் “க்ரீச்” சப்தத்தையும் ஆன வரைக்கும் போராடி, என் மூளையின் அறைகளுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டேயிருக்கிறேன்.
ஆம், நிம்மதியான மானுட வாழ்வுக்கு “பத்திரப் படுத்தல்” முக்கியம்.
அந்த பத்திரப்படுத்தலில் உத்தமமானது “அம்மாக்களும்” – “சிட்டுக் குருவிகளும்”!
தெருவில் ரோஜாக்களை விற்றுக்கொண்டிருந்த வியாபாரியைப் பார்த்து, பலகணியில் நின்றுகொண்டிருந்த உலகப் புகழ்பெற்ற பாரசீகக் கவிஞரான உமர்கையாம் கேட்டாராம்…
“ஹே…
ரோஜா வியாபாரியே…
ரோஜா வியாபாரியே…
இந்த
ரோஜாக்களை விற்று
வேறு எதை
வாங்கிவிடப் போகிறாய்
இதைவிட
அழகானதாய்…?”
அப்படித்தான் நாம் சிட்டுக் குருவிகளை விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அம்மாக்களை டிவி சீரியல் பாத்திரங்களோடு உறவாட விட்டுவிட்டு, சுயநலத்தோடு, நகர உலகில் பிழைப்பு என்ற பெயரில், மனிதத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தியாவின் ஈடு இணையற்ற “சேர்ந்திசை அமைப்பாளர்” எம்.பி. ஸ்ரீனிவாசன் அவர்கள் இசையமைப்பில், “பாவேந்தர் பாரதிதாசனார்” அவர்கள் எழுதிய பாடல் ஒன்று…
“அம்மா உந்தன் கை வளையாய் ஆக மாட்டேனா – நீ
அலுங்கிக் குலுங்கி நடக்கையிலே பாட மாட்டேனா?”
கேட்காமலேயே கிடைக்கப் பெற்ற ஓர் அற்புதத்தை வாரிக் கொடுத்து விட்டுப் பின் வருந்தி என்ன பயன் ?
ஓர் உயிரினம் அழிக்கப்படுமேயானால், உணவுச் சங்கிலியில் ஓர் கண்ணிவிடப்படுமேயானால் அதன் தொடர்ச்சியாக எல்லாமும் பாதிக்கப்படும் என்பது அறிவியல். முடிவில், அது மனிதனிடம் வந்து தான் நிற்கும்.
சுகத்தை அனுபவித்துவிட்ட மனிதன் இனி செல்போனை விட்டுக் கொடுத்துவிடப் போவதில்லை. “ரசாயனம் கலந்த உரத்தை மண்ணுக்குப் போடாதே; உன் குடல் மெல்லக் கருகிவிடும்” என்று எச்சரிக்கும் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கும் அவன் காது கொடுக்கப் போவதில்லை.
குறைந்தபட்சம், பறவைகளுக்கு, “ஒரு பிடி அரிசி”யாவது அன்றாடம் வைக்கட்டும். எதிர்காலச் சந்ததிகளுக்கு குருவிகளை அடையாளம் காட்டட்டும்.
அடுத்த தலைமுறையினராவது புத்தி தெளிந்து, சிட்டுக் குருவிகள் கூடு கட்டும் சொர்க்கத்தலமாக தங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டு வசிக்கட்டும். நிறைந்து வாழட்டும் .
கல்லூரிக் காலத்தில் எழுதியதொரு புதுக் கவிதை…
728 முறையாக
கனவில் வந்து
கொத்திப் போகிறது…
வேப்பமரத்தடியில்
புதைத்து வைத்த
அந்த
மெத்தென்ற
சிட்டுக்குருவி!
கட்டுரையாளர் குறிப்பு:
ஸ்ரீராம் சர்மா…
திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத்தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: vesriramsharma@gmail.com
�,