ஸ்ரீராம் சர்மா
டெக்னாலஜி சல்லிசாகிவிட்டதால் இன்றைய இளைஞர்கள் அவசரப்படுகிறார்கள். கேமராவைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு தெருத்தெருவாக அலைகிறார்கள்.
யூடியூப்பில் காணும் அயல்நாட்டு அவைலபிள் கான்ஸப்டுகளை எல்லாம் உடனுக்குடன் செய்து பார்த்துவிட வேண்டும் என்று பரபரக்கிறார்கள்.
அது தவறல்ல. ஆனால், அதற்கு முன்பு அதற்குண்டான செய்முறை நேர்த்தியைக் கற்றுத் தெளிந்த பின் புறப்பட்டால் அவர்களின் உழைப்பு இன்னுமின்னும் மிளிருமே.
ஓர் உதாரணம் பார்ப்போம் !
“ப்ராங்க் வீடியோஸ்” என்பது உலகளவில் பிரசித்தமானது.
மனிதர்கள் சுவாரஸ்யமாகக் கண்டு மகிழ மனிதர்களூடே புகுந்து விளையாடப்படும் “சிறுவகைக் கூத்து” அது.
சென்னையில், ஒரு விடுமுறை நாளில் சில்லெனும் பீரைத் தொண்டைக்குள் இறக்கிக் கொண்டு தன் வழியே ஏகாந்தமாகப் போய்க் கொண்டிருந்த ரஜினி ரசிகர் ஒருவரை, வலிய மடக்கிய சில இளைஞர்கள் எடுத்த அந்த ஃப்ராங்க் வீடியோ…
ஃபேஸ்புக் – இன்ஸ்டாக்ராம் – வாட்ஸ்அப் – மீம்ஸ் – என சோஷியல் மீடியாவின் சகல தளங்களிலும் “மெகா ஹிட்” ஆகிவிட்டது.
பெரிய திரையில் பல கோடி செலவில் எடுக்கப்பட்ட ரஜினியின் காலா திரைப்படத்தைக் காட்டிலும், சின்னத் திரையில் வண்ண வண்ண செட்டுக்களோடு புரண்டு போராடி எடுக்கப்படும் பிக் பாஸ் நாடகத்தைக் காட்டிலும் ஃபேமஸாகிவிட்டது.
மெட்ராஸ் பாஷையில் சொல்லப் போனால் “சில்லிக் ஃபேமஸ்”.
அந்த வீடியோவின் நடு நாயகர் “பிஜிலி ரமேஷ்”.
பிஜிலி ரமேஷை அந்த இளைஞர்கள் மடக்கி “கலாய்” செய்தார்கள் என்பதா அல்லது பிஜிலி ரமேஷ் தனது போதைக்கு வாய்த்த கருவாட்டு ஊறுகாயாக “பதில் கலாய்” செய்து அனுப்பினார் என்பதா என்பது மில்லியன் டாலர் தமாஷ். அது, இருக்கட்டும்.
படிப்பறிவு இல்லாது போனாலும் தனக்கென்று ஓர் அபிப்ராயம் வைத்துக் கொண்டு அதனை ஆணித்தரமாக எளிய பாஷையில் வெளிப்படுத்தக் கூடியவர்கள் கிராமத்து மனிதர்கள் மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில்…
தலைநகர்தான் என்றாலும் இந்தக் கேடுகெட்ட சென்னையில் வாழும் அடித்தட்டு மக்களும் “முன்னாள்” கிராமத்தவர்களே.
“செலிபிரிட்டிகள்” என்பவர்களை மிக அருகே கண்டு கண்டு சலித்துப்போன சென்னைவாசிகள் இன்னமும் வலிமையாகத் தங்கள் கருத்தை ஓங்கி உரைப்பார்கள் என்பதற்கோர் எடுத்துக் காட்டுதான் பிஜிலி ரமேஷ் அவர்களின் அந்த வீடியோ.
அந்த வீடியோவை சுவாரஸ்யமாக எடுத்த அந்த இளைஞர்கள், அதில் வெளிப்படும் சமூகச் சிந்தனையையும் இடையிடையே வெளிப்பட வைத்திருந்தால் வேறு தளத்துக்குப் போயிருப்பார்கள்.
இவர்களைக் கொஞ்சம் எஜுகேட் செய்துவிட்டால் இன்னமும் மிளிர்வார்களே என்னும் ஆதங்கம்தான் என்னை இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது.
இதுபோன்ற தருணங்களில் எனதருமை கம்யூனிஸ்ட் தோழர்களை உணர்கிறேன். திறனுள்ள இளையவர்களைத் தேடித் தேடிச் சென்று வழிகாட்டிச் சொல்லும் செந்தோழர்களின் அரவணைப்பை எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்.
அன்றொரு நாள் பீர் அருந்திய பின் வந்த பிஜிலி ரமேஷை மடக்கி எடுக்கப்பட்ட அந்த வீதி வீடியோவையும் பாருங்கள், அதன் பின் அவரைத் தேடி அடைந்து எடுக்கப்பட்ட விகடன் வீடியோவையும் பாருங்கள்…
“பாமர மனங்கொண்டது பல பாஷை” என்பதைத் தவிர மெத்தப் படித்தவர்கள் எனக் கதையளந்து கொண்டிருக்கும் மற்ற பலருக்கும் இல்லாததோர் உறுதியை ஓங்கிக் காட்டுகிறார் பிஜிலி ரமேஷ்.
அந்த வீடியோவில் அப்படி என்னதான் சொல்கிறார் பிஜிலி ரமேஷ் ?
“சிவனேன்னு போயிக்கின்னு இருந்த என்னை லாக் பண்ணி, பப்ளிக்கில்…ஹாங்…” என்னும் அந்தப் பரஸ்பர கலாய்ப்பை வீடியோவாக வெளியிட்டுச் சம்பாதித்த காசில், ஒரு சல்லி டாலர்கூட எனக்கெனத் தராமல் அவர்களே தின்று விட்டார்கள் என்பதை, அவரைத் தேடி சென்றழைத்த விகடன் சினிமா வீடியோவில் சூசகமாக நொந்துகொண்டார் பிஜிலி ரமேஷ்.
காப்பிரைட் சட்டம் அல்லது 20 ரூபாய் டோக்கனுக்கு இணையான குற்றச்சாட்டு அல்லவா அது?
அதனை அந்த வீடியோவில் மெல்ல எடுத்துச் சொல்லியிருந்தால் அந்த இளைஞர்கள் மேலும் உயர்ந்திருப்பார்களே!
கலாய்சலான ஃபுட்டேஜ் மட்டுமே போதும் என்று எண்ணி விட்டுவிட்டார்களே! கமர்ஷியல்தான் என்றாலும் அதிலும் கொஞ்சம் சமூக அக்கறை வேண்டும் அல்லவா?
இதுபோன்ற சமூக விழிப்புணர்வு நையாண்டிகளை கேரள ப்ராங்க் வீடியோக்காரர்கள் சுவாரஸ்யமாகச் செய்வதைக் கண்டு வியந்திருக்கிறேன்.
ஏதோ படித்துவிட்டவர்களைப் போல தன்னைப் பார்த்துக் கேள்வி கேட்கும் அந்த இளைஞர்களைப் பார்த்து,
“இந்த கவர்ன்மென்ட்டுக்கு காசு கொடுத்துவிட்டு வருபவன் நான். என்னைக் “குடிகாரன்” என்று சொல்லக் கூடாது… லார்டுன்னா டாஸ்மாக்கை மூடச் சொல்லி அவர்களைப் போய் கேளுய்யா…” என்கிறார் பிஜிலி ரமேஷ்.
நியாயம்தானே? அந்த நியாயத்தை, குடியழிக்கும் அரசின் கேவலத்தைக் கேமராவுக்கு எடுத்துச் சொல்லிக் கடந்திருந்தால் அந்த இளைஞர்கள் மேலும் உயர்ந்திருப்பார்கள்.
உறுதியாகச் சொல்கிறேன்.
கேமிராவைத் தூக்கும் முன் பாரதியை, பட்டுக்கோட்டையாரைப் படித்திருந்தால் பளிச்சென்று முடித்திருப்பார்கள். தவறிவிட்டார்கள் !
“டாஸ்மாக்கை மூடச் சொல்லு. கூப்பிடு அந்த ஓபிஎஸ் – ஈபிஎஸ்ஸை” என்பவர் கூடவே, “அந்த மோடியையும் கூப்பிடு…” என்கிறார்.
எது – எதை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கிறது என்று எளிய மனிதர்களின் மனதில் ஆழப் பதிந்திருப்பதைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறார் பிஜிலி ரமேஷ்.
அதனை நயம்பட வெளிப்படுத்தியிருந்தாலும் அந்த இளைஞர்கள் மேலும் உயர்ந்திருப்பார்கள்.
சுவாரஸ்யம் – கருத்து இரண்டையும் எந்த அளவில் கலப்பது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாததால் மேலும் தவறிவிட்டார்கள்.
“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில ப்ரச்சினையாம்…. அத மொதல்ல பேசுப்பா…” என்கிறார்.
அதன் ஆழத்தை அநாவசியமாகப் புறந்தள்ளிவிட்டார்கள்.
“அப்பா, அம்மா கால்லதான் விழணும்ப்பா, என் கால்ல விழ பார்ப்பது தப்பு…” என்கிறார்.
அதையும் காமெடியாக்கி ஃபுட்டேஜை மட்டுமே குறிவைத்து அருமையானதொரு வாய்ப்பைத் தவற விட்டுவிட்டார்கள்.
இரண்டு வீடியோக்களிலும், எத்தனை மடக்கிக் கேட்டாலும், “சார், என் தலைவன் சூப்பர் ஸ்டார்தான்…நோ கமெண்ட்ஸ்” என்கிறார்.
சரியோ , தப்போ பாமரனின் அந்த உறுதியை மனம்கொண்டு பாராட்டி நகர்ந்திருந்தால் அந்த இளைஞர்கள் மேலும் உயர்ந்திருப்பார்கள். அதுவும் போச்சு.
எமோஷனலான ஒரு பாமரன், தான் ஏழாம் வகுப்பு படித்த வருடத்தைத் தவறுதலாகச் சொல்லிவிடுவதை மீண்டும் ஒளிக்காட்சி செய்து ரசிக்கக் கேட்கிறார்கள்.
தவிர்த்திருக்கலாம். இலக்கிய மனம் வாய்த்திருந்தால் அதுவும் கைகூடியிருக்கக் கூடும்.
“என்னை கிண்டல் செய்வோர்கள் செய்துகொள்ளட்டும்… அது பத்தி ஒண்ணுமில்ல…” என்கிறார் பிஜிலி ரமேஷ்.
“சார்…என்னை பிரபலப்படுத்தினாங்க. இல்லன்னு சொல்லல… ஆனா, அசிங்கப்படுத்தவும் செஞ்சாங்க. அது தப்பு…” என்கிறார். தனிமனித உரிமையை எவரும் எதற்காகவும் மீறக் கூடாது என்கிறார்.
“இன்றைய எனது பிரபலத்துக்கு காரணம், என் தலைவன் ரஜினிதான்” என்று ஓயாமல் சொல்லும் பிஜிலி ரமேஷ்…
“பரபரப்புக்காக எதையும் செய்யக்கூடியது இந்தப் பாழும் மீடியா” என்றும் சீச்சீச்சரித்து முகம் சுளித்துச் சாடுகிறார்.
எல்லாவற்றுக்கும் வீடியோ எடுத்த இளைஞர்கள் பக்கமிருந்து வந்த பதில்வினை என்ன? எதையும் விடுவிக்காமல், எல்லாவற்றுக்கும் கெக்கேபிக்கே என்று இந்த சமூகத்தைச் சிரிக்க மட்டுமே வைத்து மேலும், மேலும் மூளியாக்குவதில் காணும் மேன்மையென்ன ?
“நான் வெறும் ஏழாவது படித்தவன்தான்…“ என்று சொல்லிக் கொள்ளும் பிஜிலி ரமேஷ் எண்ணற்ற “பாமர நியாயம்” பேசுகிறார்.
அவற்றை அடுக்கியடுக்கி இடையிடையே சுவாரஸ்யத்தையும் சேர்த்துத் துல்லியமாக எடிட் செய்திருந்தால் அந்த இளைஞர்கள் மேலும் உயர்ந்திருப்பார்களே !
மெத்தப் படித்துவிட்ட இன்றைய இளைஞர்கள் பாமரர்களின் கோபத்தை காமெடியாக மட்டுமே கடந்து செல்வது பேரவலம்.
அந்த இளைஞர்கள் என்னைக் கோபித்துக்கொள்ளக்கூடும். ஆனாலும் எனது உற்ற நண்பர்களாய் அவர்களைக் கருதிக்கொண்டு துணிந்து சொல்லிவிடுகிறேன்.
வயதில் மீறிய பாமரர் ஒருவர் தன்னளவில் கொண்ட அரசியலைப் பேச எத்தனிக்கிறார். வயதில் இளைய நான்கு இளைஞர்கள் அதனைக் கடத்தவும் வகையற்று கெக்கேபிக்கே என்று நகர்ந்து செல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
நண்பர்களே, உங்களிடம் ஊக்கமும் உழைப்பும் அபரிமிதமாக இருக்கிறது. அதனைச் செழுமைப்படுத்திக்கொள்ள பழைய இலக்கியங்களை நிறையப் படிக்க வேண்டும் என்பது எனது எளிய வேண்டுகோள்.
அது, மனதளவில் உங்களை இன்னுமின்னும் அலங்காரப்படுத்தி உங்கள் தரத்தை மேலும் மேலும் உயர்த்தி சாதிக்க வைத்துவிடும்.
நண்பர்களே, எதிர்காலம் உங்களை நம்பித்தான் இருக்கிறது.
நிறைந்து நின்று காக்க வேணும்!
*
(கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ovmtheatres@gmail.com)
�,”