மரபு வழி அச்சம்! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

“தூத்துக்குடியில் இத்தனை தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உன் அரசியல் தொடர்புகள் எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீயோ அரசியலாடாமல் உன் போக்கில் இலக்கியம் எழுதிக்கொண்டிருக்கிறாய். இது சரியா? உனக்கென்று ஒரு சமூகப் பொறுப்பில்லையா ?”

கல்லூரி நண்பர் ஒருவர் இப்படிக் கடிந்துகொண்டார்.

எனது நந்தனம் கல்லூரி அடிப்படையில் திராவிட சித்தாந்தம் சார்ந்தது. கொஞ்சம் எமோஷனலானது. ஏறத்தாழ 30 வக்கீல்கள், 20 போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், வெளிநாடுகளில் செட்டிலானவர்கள் என பலதரப்பட்டவர்கள் இருந்தாலும் சித்தாந்தம் ஒன்றே என்று சுற்றிச் சுழலக்கூடிய அங்கத்தினர்கள் சூழ்ந்திருக்கும் எனது நண்பர்களின் வாட்ஸ் அப் க்ரூப். அதனை எளிதில் என்னால் புறம்தள்ளிவிட முடியாது.

என் மனதிற்கினிய மின்னம்பலத்து வாசகர்களுக்கும் இந்த எண்ணம் இருக்கக்கூடும். எல்லோருக்கும் சேர்த்து மொத்தமாகச் சொல்லிவிடுகிறேன்.

“நியோகி” வம்சத்திலான எனது பிறப்பு வழியில் எனக்கென்று எந்த அச்சமும் இருக்க வாய்ப்பில்லை என்றாலும், படைப்பாளன் என்னும் வகையில் மரபு வழி அச்சம் நிச்சயம் உண்டு.

எனது மரபு வழிக்குக் காரணமானவர்கள் மூவர். கவிச் சக்கரவர்த்தி கம்பன், மகாகவி பாரதி மற்றும் கவியரசு கண்ணதாசன் !

மகா கலைஞர்களாக இருந்தும் அரசியல் பேசியதால் மட்டுமே நட்டப்பட்ட அற்புதமான படைப்பாளிகள் அவர்கள். அவர்தம் மரபு வழி வந்த நான் அவர்களது திறமைக்கு முன்னே மிக மிக எளியன் என்பதால் எனது அச்சம் பல மடங்காகி நிற்கிறது.

ஒரு கலைஞனாக இன்று எனக்கிருக்கும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் மிகப் பெரிது. மன ஆளுமையோடு கூடிய அந்த அழகை அநாவசியமாக எதற்கு அரசியலில் பணயம் வைக்க வேண்டும் என்னும் தயக்கமே என்னை அச்சப்பட வைக்கிறது.

என்னைப் போன்ற கலைஞர்களை அச்சத்திலிருந்து விடுவித்துவிட்டால், அரசியலில் வேகமாகச் செயல்படுவோம்தான். ஆனால், அப்படி ஒரு அரசியல் இங்கே உண்டா ?

எனது கூற்றாக மட்டுமல்ல, மக்களின் கூற்றாகவும் கேட்கிறேன்…

அறிவு + இயல் அறிவியல். அதனை ஆள்பவர்கள் விஞ்ஞானிகள்! அரசு + இயல் அரசியல். அதனை ஆள்பவர்கள் அரசியலாளர்கள் !

ஒரு ராக்கெட் எழுந்து, தோற்று, அம்போவெனக் கடலில் வீழுமானால் அதன் அறிவும், இயலும் கேலிக்குறியதாகி கெக்கலி கொட்டப்படுகிறது. விஞ்ஞானிகள் தலை குனிந்து, தங்கள் மேல் நம்பிக்கை வைத்துக் காசை அள்ளி இறைத்த அரசாங்கத்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அடுத்த கட்டம் நோக்கி, தன்மானத்தொடு அல்லும் பகலும் போராடித் தங்களை நிரூபிக்கிறார்கள்.

ஜனநாயகத்தில் ஒரு அரசும், இயலும் தோற்று விழும்போது அந்தளவுக்கு கேலிக்குரியதாகி கெக்கலி கொட்டப்படுகிறதா? தங்கள் மேல் நம்பிக்கை வைத்து ஏமாந்த இந்த மக்களை எண்ணி சம்பந்தப்பட்டவர்கள் தலைகுனிகிறார்களா? மன்னிப்புக் கேட்கிறார்களா? தன்மானத்தோடு அடுத்த கட்டம் நோக்கிப் போராடித் தங்களை நிரூபிக்கிறார்களா? இல்லையே!

அவ்வாறானவவர்களோடு இணைந்து சுத்தமானதொரு கலைஞன் ஒருவன் இயங்க முடியுமா? “விலகி நில்” என மரபு வழி அச்சம் குறுக்கிட்டுத் தடுக்காதா ?

சென்னையில், தலைமைச் செயலகத்துக்குள் ஒரு மியூஸியம் உண்டு. அதனைப் பராமரிப்பது மத்திய அரசு. அங்கு சென்று பாருங்கள்.

கண்ணெனப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ஓங்கி உயர்ந்த ஓவியங்கள் மொத்தமும், “லார்டு – பிரபு” என்று நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேய அடக்குமுறையாளர்களின் ஓவியங்கள்தாம்.

கலாபூர்வமாக அந்த ஓவியங்கள் அனைத்தும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவைதாம். அன்னியர்களின் ஓவியங்களையும் பாதுகாத்து வைப்பது என்பது கலை சார்ந்த நாகரீகம்தான். மறுக்கவில்லை . ஆனால், அந்த நல்ல கலைப் படைப்புகளை எல்லாம் வேறோர் இடத்தில் கொண்டு வைத்துக் காப்பாற்றலாமே? இடமா இல்லை இங்கே?

அடிமை செய்த அன்னியர்களின் போர்ட்ரேய்ட்டுக்களைக் கோட்டை மியூஸியத்தில் கொண்டு வைத்துக் கொண்டாடுவது சரிதானா? சரி, அதனால் என்ன கேடு என்கிறீர்களா? சொல்கிறேன்…

மியூஸியத்துக்கு வந்து காணும் பள்ளி மாணவ மாணவியர்களின் மனதில் என்ன பதியும்? அடிமை செய்து பிழைத்தவர்கள் நாம் என்பதாகத்தானே பதியும்? அம்பாரக் கோட்டையும், அதிலொரு அசட்டு மியூஸியமும் இதற்காகத்தானா?

நாகரீகம் கருதி நலம் பாடுகிறோம் என்னும் தூர்ந்த பாட்டை எல்லாம் தூக்கித் தூரப்போட்டுவிட்டுக் கேளுங்கள்…

இந்த மண்ணுக்கெதிரான ஆங்கிலேயர்களின் அழித்தொழிப்பை எதிர்த்துக் கலகம் செய்த சுதந்திர வீரர்களின் புகைப்படமோ அல்லது சிலையோ அங்கு வைக்கப்பட்டிருக்க வேண்டாமா?

இந்தியத் தமிழகத்தின் கோட்டை மியூஸியத்தில், அன்னிய பிம்பங்களை அகற்றி, இந்த மண்ணுக்காகத் துணிந்து செயலாற்றியவர்களின் காட்சிகளை வைக்க என்ன கேடு இந்த அரசுக்கு?

இந்திய விடுதலையின்போது அந்தக் கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி ஒரு மூலையில் கந்தலாகக் கிடக்கக் கண்டு பதறியடித்து , அதனை அள்ளி எடுத்து வந்து அக்கறையாகக் கோர்த்து, வருங்காலத் தலைமுறையின் பார்வைக்கு வைத்த அந்த மியூஸியத்தின் இயக்குனர் மூர்த்தீஸ்வரி அவர்களை எவ்வளவு தொழுதாலும் தகும்.

கேட்கிறேன், அந்த மியூஸியத்தின் நடு ஹாலில் நேதாஜியின் லைஃப் சைஸ் ஓவியத்தை வரைந்துவைக்க என்ன கேடு இந்த அரசின் கஜானாவுக்கு? காணும் இளந்தலைமுறை எழுச்சி கொண்டால் இந்த நாட்டுக்குத்தானே நல்லது? வரைந்து தர இந்த மண்ணில் ஓவியர்தான் இல்லையா?

தீரன் சின்னமலை யார்? மருது பாண்டியர்கள் யார்? பூலித்தேவர் யார்? சிதம்பரம் பிள்ளை யார்? சுப்பிரமணிய சிவா யார்? வாஞ்சி நாதன் போன்ற பெருமக்கள் எல்லாம் இந்த மண்ணுக்காகப் பட்ட பாடென்ன என்பதையெல்லாம் அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தியாக வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமை அல்லவா?

இதோ, என் கண்ணறிந்ததோர் உண்மையைப் பகிர்கிறேன்…

திருவல்லிக்கேணியில், துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் பார்த்தசாரதி கோயில் வாயிலுக்குக் கிடைநேர் கொண்டு அமைந்திருந்தது “பாரதியார் இல்லம்”. அதனைக் கடந்துதான் என் சிறு வயதில் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.

அன்று, உள்ளடங்கியதொரு பில்டிங்காக அது இருந்தது. அதன் உள்ளே குப்பையும் கூளமுமாக அடைந்திருந்தது. பாழடைந்த அந்த பில்டிங்கின் வெளியே, ஏறத்தாழ நான்கடி அடி உயரத்துக்கு இரும்பு வேல்கள் வரிசையாகச் சொருகி வைக்கப்பட்டு இருக்கும்.

பள்ளி செல்லும் பருவத்தில், பாரதியார் வீட்டைக் கடக்கும்போதெல்லாம், அரையடி மர ஸ்கேலை எடுத்து, அந்த இரும்பு வேல் கம்பிகளில் “சட்டட…சட்டட..” என்று உரசி சப்தமெழுப்பிக்கொண்டே நடந்து செல்வோம்.

பாரதியார் வீட்டில் அப்படி சப்தமெழுப்பிக்கொண்டே சென்றால் நன்றாகப் படிப்பு வரும் என்றொரு நம்பிக்கை எங்களுக்கு.

ஒரு பாழும் நாளில் அந்தக் கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாரதியார் வாழ்ந்த வீட்டின் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டது. “ஐயோ” என்று அலறித் துடித்தாலும் செய்வதறியாத பருவம் அது.

அது ஒரு வட நாட்டவருக்கு விற்கப்பட்டிருந்தது. அவர், தன் மனம் போன போக்கில் “பள பள” வென வீடு கட்டி, அதில் தன் “வட்டிக் கடை” யையும் திறந்து “ஆஹெம்” என்று அமர்ந்தார்.

பாரதியாரின் ஒண்டுக் குடித்தனம் எங்கே அமைந்திருந்ததோ அதே இடத்தில் தன் வட்டிக் கடையையும் அமைத்து அவர் அமர்ந்திருந்ததுதான் கொடூரம். அது சரி, அவர் வாங்கிய இடம். ரைட் ராயலாய் அமர்ந்திருந்தார்.

ஆனால், அதை விட்டுக் கொடுத்தவர்கள் யார்?

காணப் பொறுக்காத என்னைப் போன்ற திருவல்லிக்கேணி சிறுவர்கள் விளையாட்டுக்காக வைத்திருந்த கோலிகளை அந்தக் கடையின் மீது போக வர எத்தனை முறை விட்டெறிந்திருப்போம் என்பதற்குக் கணக்கே இல்லை.

அந்த உணர்வு அன்றைய அரசியலாளர்கள் எவரிடமும் இல்லை!

பள்ளி ஆசிரியராக இருந்த சுப்பு ரத்தினம் என்னும் கவிஞர் பாரதியார் மேல்கொண்ட அபாரமான பற்றினால் அவருக்கு தாசனாகிறேன் என்னும் பொருள்படப் பாரதிதாசன் என்று பெயர் சூட்டிக் கொண்டார். அதன் பின் பாரதிதாசன் வழி வந்தவர்கள் ஓராயிரம் பேர். பாரதிதாசன் பரம்பரை என்கிறார்கள்.

பரம்பரைக்கு மூலம் பாரதியார் அல்லவா? பலன் பெற்றவர்கள் பாத்தியதை உள்ளவர்கள் அல்லவா? பாரதியார் பெயர் சொல்லிப் புகழ் கொண்டவர்கள் அனைவரும் ஒன்று கூடி அவரை முன்னெடுத்துக் காத்திருக்க வேண்டாமா? அவர் வாழ்ந்த வீட்டிலேயே தமிழர்களிடம் வட்டி வசூலிக்கும் துலாபாரத்தைத் தொங்கவிட்டுப் பார்ந்திருந்தது என்ன வகை?

ஒருவழியாக, சேட்டின் வசம் இருந்த அந்த பில்டிங் 1992ஆம் ஆண்டு அரசுடைமை ஆக்கப்பட்டது. அந்த வடநாட்டு வட்டிக் கடைக்காரரிடம் இருந்து சுமூகமாக மீட்டெடுக்கப்பட்ட அந்தப் “பள பள” பில்டிங்…

பாரதியார் வாழ்ந்த அந்தப் பழைய பில்டிங்கின் படத்தை மாதிரியாக வைத்துக்கொண்டு அதே போலவே கட்டப்பட்டது.

1993ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அந்த மகாகவியின் இல்லம் அது போலவே திறக்கப்பட்டது. அதுதான் இன்று நாம் காணும் “பாரதியார் வீடு “.

அந்த நற்காரியத்தைச் செய்து முடித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா!

இன்றதில் பாரதியார் குறித்த பற்பல செய்திகளையும் புகைப் படங்களையும் மாட்டி வைத்துக் காண்போரைப் பரவசப்படுத்தி அனுப்புகிறார்கள். உள்ளே ஒரு அரங்கம். அதற்கொரு கட்டணம். அலுவலகம், அதற்கொரு அரசாங்க பி.ஆர்.ஓ.

பீச் ரோட்டிலிருந்து திரும்பும்போதே “பாரதியார் இல்லம் செல்லும் வழி” என்று போர்டு என்றெல்லாம் வைத்து அட்டகாசப்படுத்துகிறார்கள் .

பாரதியார் செத்தது 1921ஆம் ஆண்டு. அவர் செத்து 70 ஆண்டுகள் கழித்துத்தான் அவரது புகழை உலகுக்கு அறியத் தந்திருக்கின்றது இந்த தமிழ் மண்.

1981இல் மறைந்த கண்ணதாசனுக்கு மணி மண்டபம் கட்டப்பட்டது 1992இல்தான்.

நாட்டரசன் கோட்டை கிராம எல்லையில் சமாதியாகிப்போன கம்பனுக்கு அதுவும் வாய்க்கவில்லை. அந்தப் பகுதிவாழ் மக்கள் எல்லோரும் பிறக்கும் குழந்தைகளின் நாவில் அவன் சமாதி மண்ணை எடுத்துப் பூசி “நல்ல தமிழ் வரணும்” என்று வேண்டிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

எனது மரபுவழி அச்சம் புரிகிறதா? அதை மேலும் உறுதிப்படுத்த வேண்டுமா , கேளுங்கள்…

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆகப்பெரிய தமிழ் வரலாறு வேலு நாச்சியார் வரலாறு.

ஆங்கிலேயரை ஓட ஓட விரட்டி தன் இந்தியத் தமிழ் மண்ணை மீட்டுக்கொண்ட ஒரே வெற்றி மகாராணி வேலு நாச்சியார்.

பெரிய மருதனாரும் – சின்ன மருதனாரும் யுகப் புரட்சியாய் வெடித்தெழுந்து 16 குறுநில மன்னர்களை ஒன்று திரட்டி, வேலு நாச்சியாரின் வீரத் தலைமைக்கு வலு சேர்த்த மாபெரும் வரலாறு .

உலகின் முதல் பெண்கள் இராணுவத்தை அமைத்து ஹைதர் அலியை திகைக்க வைத்த மகா போராளி நமது வேலு நாச்சியார். சாதி, மத, பேதங்களைச் சுக்கு நூறாக்கிச் சாதித்தவர் வேலு நாச்சியார்.

அவரது, உண்மை வரலாறை முயன்று மீட்டெடுக்க விரும்பினேன். சிங்கப்பூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவரான திரு. கிருட்டிணன் அவர்கள் ஆதரவாக தோள் கொடுக்க, ஓயாமல் உழைத்தேன்.

நாட்டிய நாடகமாக எழுதி முடித்து அதனை அரங்கேற்ற விரும்பி, 2004ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுக் காலம் பெரிய மனிதர்கள் எனப்படும் யார் யாரையோ சந்தித்தேன். யாரும் அதனை சட்டை செய்யவில்லை.

2010ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மாலையில் “துணிந்து முன்னெடுங்கள் உங்கள் வேலு நாச்சியார் படைப்பை… என்ன வேண்டுமோ என்னிடம் கேளுங்கள்…” என்று ஆதரிக்க வந்த ஒரே தமிழ்த் தலைவர் , தமிழ்ப் பண்பாளர் திரு. வைகோ.

அதன் பின் அமெரிக்கா வரை சென்று புகழ் கொடி நாட்டி வந்திருக்கிறது வேலு நாச்சியார் படைப்பு என்றால் அதற்கு, வைகோ என்னும் பெருங்கொடையாளரின் முன்னெடுப்பே காரணம்.

அவரும், எந்த நிலையிலும் அரசியலை கலக்காமல், “இது தமிழர் வரலாறு. அதனை முன்னெடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை. இதோ, என் சக்திக்குத் தேர் அமைக்க உதவிவிட்டேன். வடம் பிடித்து அழைத்து செல்ல எல்லீரும் வாருங்கள்…” என இரு கரம் கூப்பினார். யாரும் முன்னெழுந்து வரக் காணவில்லை.

இந்த மண் சார்ந்த உணர்வுபூர்வமான நல்லரசியலைத்தான் எனது படைப்பு முன் நிறுத்துகிறது. இந்த வீர காவியத்தை ஒவ்வொரு பள்ளிக்கும் கல்லூரிக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று உரக்கச் சொன்னார் டாக்டர் பத்மா சுப்ரமண்யம். தட்டாத கதவுகளில்லை. தாள் திறப்பார் யாருமில்லை.

இந்த மண்ணின் உயர்ந்த வரலாற்றை, வேலு நாச்சியார் என்னும் “பெண்மையின் பிம்பத்தை” ஊருலகுக்கெல்லாம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு உண்டா இல்லையா ?

அது மத்திய ஆட்சியோ, மாநில ஆட்சியோ தன் சொந்த மண்ணின் வரலாற்றை எடுத்தோதும் கடமையை மறுக்கலாமா? தோற்ற ஜான்ஸி ராணியைத் தமிழ்நாட்டில் கொண்டு வந்து சேர்த்தவர்கள், வென்ற நம் வேலு நாச்சியார் வரலாற்றை தேசமெங்கும் கொண்டு சேர்க்க வேண்டுமா இல்லையா ?

எனது வேலு நாச்சியார் படைப்பின் அருமையை நிரூபித்தும்கூட இன்னமும் ஏன் பாராமுகமாக இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. நானும் விடுவதாக இல்லை. வேலு நாச்சியார் வரலாற்றை மீட்டெடுப்பதை, என் பிறவிப்பயனாக எண்ணி என் வழியில் ஓயாது உழைத்துக்கொண்டேயிருக்கிறேன்.

நண்பர்களே, மின்னம்பலத்தார்களே… மீண்டும் சொல்கிறேன்.

கம்பன், பாரதி , கண்ணதாசன் மரபு வழிவந்த எளிய படைப்பாளன் நான். படைப்பாளர்களுக்கே உண்டான மரபு வழி அச்சத்தின் மிச்சத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். நளினம் விரும்பும் கலைஞன் எனக்கு அரசியல் ஒத்துவராது.

தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள் !

*

(கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ovmtheatres@gmail.com)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share