ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இன்று முதல் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக அமலுக்கு வந்துள்ளன. அதன்படி லடாக் மற்றும் காஷ்மீரின் கட்டுப்பாடுகள் முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 31) குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370, தீவிரவாதத்தை உருவாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
சர்தர் வல்லபபாய் படேலின் 144ஆவது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு குஜராத் அகமதாபாத் கேவாடியாவில் உள்ள உலகின் மிக உயரமான சிலையான படேல் சிலைக்குப் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் ஒற்றுமைக்கான உறுதிமொழியை மோடி எடுத்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ”சட்டப்பிரிவு 370 ஜம்மு காஷ்மீருக்குத் தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தான் வழங்கி வந்தது. இதனால் காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளில் 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், பல தாய்மார்கள் தங்கள் மகன்களை இழந்தனர். தற்போது அந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பிரச்சினையைத் தான் கையாண்டிருந்தால், அதைத் தீர்ப்பதற்கு இவ்வளவு நேரம் எடுத்திருக்காது என்று படேல் ஒருமுறை கூறியுள்ளார். காஷ்மீர் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு என்பது புதிதாக எடுக்கப்பட்டது அல்ல. இது படேல் கண்ட கனவு அதனை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரிவினைவாதத்தையும் தீவிரவாதத்தையும் பரப்புவதன் மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் அழிக்க சில கூறுகள் முயற்சி செய்கின்றன, ஆனால் பல ஆண்டுகளாக முயன்ற பிறகும், எங்களை யாரும் அழிக்கவோ தோற்கடிக்கவோ முடியவில்லை என்று பிரதமர் பாகிஸ்தானை மறைமுகமாகச் சாடியுள்ளார்.
முன்னதாக நேற்று பிரதமர் மோடி, தனது சொந்த ஊரான ராய்சன் கிராமத்திற்குச் சென்று அங்கு வசித்து வரும் தனது தாயார் ஹீராபென்னை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
�,”