மூன்றாவது நாளாக ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் சோதனை!

Published On:

| By admin

தமிழகம் முழுவதும் மிகப்பிரபலமான ஸ்கேன் மையங்களில் ஒன்றான ஆர்த்தி ஸ்கேன் மையத்தின் உரிமையாளருக்கு சொந்தமான சொத்துக்களில் வருமான வரி சோதனை கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையங்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜனுக்கு சொந்தமானது.

இந்த நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் வருமான வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்கேன் மையங்கள் மற்றும் அண்ணாநகரில் உள்ள நிறுவனத்தின் நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த 7ஆம் தேதி வருமான வரி சோதனையை தொடங்கினர்.

மேலும், கோவிந்தராஜனின் கோவில்பட்டியில் உள்ள வீடு உள்ளிட்ட 25 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் இந்த நிறுவனம் செய்த முதலீடுகள், மருத்துவ கருவிகள் கொள்முதல், வருவாய் மற்றும் செலவினங்கள் உள்ளிட்ட பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம் 25 இடங்களில் வருமான வரி துறையினர் 5 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் ஒரு சில முக்கிய ஆவணங்கள் ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையிலும் ஸ்கேன் மையங்களிலும், வீட்டிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து கோவிந்தராஜன் மனைவி மருத்துவர் கோமதி மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக வருமான வரி துறையினர் தெரிவித்தனர். மேலும், ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் பணியாற்றும் சில மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share