அரியர் மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனாலும், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில்தான் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொறியியல்,கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் தற்போது ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நேற்று முதல் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. தேர்வு கால அட்டவணையில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பருவத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி கூறுகையில், “மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்தல் நடத்தப்படுவதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேர்வு நடத்தப்படுகிறது. சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், விரைவாக தேர்வுகளை நடத்தி முடிக்கும்படி உயர் கல்வித்துறை உத்தரவிட்டதன் பேரிலேயே ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. அதன்படி 6, 13, 20 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேர்வு நடைபெறும். அரியர் மாணவர்கள் தவிர, நடப்புக் கல்வியாண்டில் படிக்கும் பிற மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று தேர்வு இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.
**-வினிதா**