Zஆரோக்கிய சேது: பாதுகாப்பா? ஆபத்தா?

Published On:

| By Balaji

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹேக்கர் ராபர்ட் பாப்டிஸ்ட். ட்விட்டர் தளத்தில் எலியாட் அல்டர்சன் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் இவர், வைரஸ் பரவலை கண்காணிப்பதற்கான இந்திய அரசின் செயலியான ஆரோக்கிய சேது குறித்து சமீபத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் ”ஆரோக்கிய சேது செயலியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. இதனால் 90 மில்லியன் இந்தியர்களுடைய தனிநபர் சுதந்திரம் ஆபத்தில் இருக்கிறது. நீங்கள் என்னை தனியாக தொடர்பு கொண்டு பேச முடியுமா” என்று பதிவிட்டிருந்தார். இதில் ஆரோக்கிய சேது செயலியின் அதிகாரப்பூர்வ பக்கத்தையும் டேக் செய்திருந்தார்.

மேலும், இது குறித்து ராகுல் காந்தி கூறியது சரியாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆரோக்கிய சேது செயலியை கண்காணிப்பதற்கான செயலி என்றும் பாதுகாப்பு குறைபாடுகள் இதில் இருப்பதாகவும் மே மாதம் இரண்டாம் தேதி டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து இந்த செயலியை சோதித்துப் பார்த்ததாக ராபர்ட் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட் வெளியான 49 நிமிடங்களில், ராபர்ட்டை இந்திய கணினி அவசர தொடர்பு அணி (CERT-In), மற்றும் தேசிய தகவல் மையம் (NIC) இரண்டும் 49 நிமிடங்களில் தொடர்பு கொண்டு இது குறித்து பேசி உள்ளன.

நிதி ஆயோக், ராபர்ட்டின் சந்தேகங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே ராபர்ட்தான் இதற்கு முன்பு அரசின் எம்ஆதார் செயலியின் குறைகளை வெளிப்படுத்தி செய்திகளில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் ஆரோக்கிய சேது செயலியை ஹேக் செய்திருக்கிறார். ஜெய் என்ற பெயர் மூலம் இயங்கும் இவர் இந்த செயலியின் பாதுகாப்புகளை நான்கே மணிநேரங்களில் உடைத்துள்ளார். Buzzfeed செய்தி நிறுவனத்துக்கு இது தொடர்பாக ஜெய் கூறும்போது, இந்திய அரசு இந்த செயலியை கொஞ்சம் கொஞ்சமாக கட்டாயமாக்கி வருகிறது. எனக்கு இந்த செயலியை எனது போனில் வைத்து இருக்க பிடிக்கவில்லை. அதனால் நான் என்ன செய்யலாம் என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன் என்று கூறியுள்ளார்.

இந்த செயலியின் பக்கங்களில் எந்த தகவல்களையும் பூர்த்தி செய்யாமல் அதாவது பெயர், வயது, பாலினம், பயண வரலாறு மற்றும் வைரஸ் அறிகுறி சோதனைகள் ஆகியவற்றை நிரப்பாமல் எங்கே செயலியின் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார். கேட்கப்பட்டிருக்கும் அவசிய அனுமதிகளை மறுத்தும் செயலியை உபயோகப்படுத்தும் அளவுக்கு செயலியை உடைத்திருக்கிறார் ஜெய்.

இந்த செயலி ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தயாரித்துள்ள செயலிகளை விட மிகவும் சுமாராக செயல்படுவதாகவும் மற்றும் அந்த செயலிகள் தனிநபர் விவரங்களை சேகரித்து கொள்வதில்லை என்றும் Buzzfeed செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கிய சேது செயலி ஏப்ரல் 2 ஆம் தேதி இந்திய அரசால் வெளியிடப்பட்டது. வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்காக மற்றும் விழிப்புணர்வுக்காக இந்த செயலி உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த செயலியை உபயோகப்படுத்துமாறு கூறினார். இந்த செயலி ஏற்கனவே ஒன்பது கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. வெகு விரைவாக 50 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனையும் புரிந்துள்ளது. வெறும் 13 நாட்களில் 50 மில்லியன் பேர் இதைப் பதிவிறக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் இந்த செயலியை வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கும், அரசாங்க ஊழியர்களுக்கும் கட்டாயமாக்கி உள்ளது. சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற பல நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதை கட்டாயமாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

கொரோனாவிலிருந்து தள்ளியிருக்க உதவும் என நம்பி லட்சக்கணக்கான இந்தியர்கள் இச்செயலியை பதிவிறக்கம் செய்து வரும் வேளையில் அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்கள் மூலம் தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு ஆபத்து என்னும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

**-பவித்ரா குமரேசன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share