திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் மகன் சுர்ஜித் வில்சன் (வயது 2). வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.ஆழ்துளை கிணறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழைப்பொழிவால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வேலூரில் கைவிடப்பட்ட, பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடும்படி ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று (அக்டோபர் 26) உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரமே திறந்த நிலையில் இருந்த பல ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொள்ளும் குழந்தையை மையமாக வைத்து ‘அறம்’ என்ற படத்தை இயக்கிய கோபி நயினார் ஊடகத்திடம் கூறும்போது, “இதுபோன்ற சம்பவங்களில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை மீட்க அதி நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவற்றை தீயணைப்புத் துறையினரிடமும், தேசியப் பேரிடர் மீட்புப் படையினரிடமும் கொடுக்க வேண்டும். மக்களுக்கும் பயன்பட வேண்டும். ராக்கெட் மீது நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். அதேசமயம், சாமானிய மக்களுக்கும் விஞ்ஞானம் பக்க பலமாக இருக்க வேண்டும், பயன்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.�,