நாங்குநேரியில் அமைச்சர் தூண்டுதலின் பேரில் புதிய தமிழகம் நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பதாக கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணனும், திமுக சார்பில் ரூபி மனோகரனும் களத்தில் உள்ளனர். தொகுதியில் தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகள் கணிசமாக உள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி, இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட மூலக்கரைப்பட்டியில் கடந்த 10ம் தேதி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிரசாரம் செய்தார். அவருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் விநியோகித்த நோட்டீஸில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் ஜீப்பை முற்றுகையிட்ட புதிய தமிழகம் ஒன்றியச் செயலாளர் தளவாய்பாண்டி தலைமையிலான நிர்வாகிகள், இதுதொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் கட்சி கொடிகள், படங்களுடன் அமைச்சர் பிரச்சாரம் செய்தால் மறியலில் ஈடுபடுவோம் என புதிய தமிழகம் கட்சியினர் தெரிவித்ததையடுத்து, பிரச்சாரத்தில் ஈடுபடாமல் அமைச்சர் அங்கிருந்து கிளம்பினார். இது குறித்து அதிமுக நகர செயலாளர் அசோக்குமார் அளித்த புகாரின் பேரில் தளவாய் பாண்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுகவினர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்துடன் இருப்பதால், ஆட்சியாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்க்கட்சியினர் மீது பயன்படுத்தி வருகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தளவாய் பாண்டி கைது சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள கே.எஸ்.அழகிரி, “ஜனநாயக நாட்டில் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைச்சரின் தூண்டுதலின் பேரில் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் காவல்துறையினர் ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றனர்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள அழகிரி, “காவல்துறையினரின் இத்தகைய செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி, சுயேச்சையாகவும், சுதந்திரமாகவும், பாரபட்சமின்றி நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் நடப்பதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
�,