pதொழிலாளர்களின் பசியைப் போக்கிய போலீசார்!

Published On:

| By Balaji

மும்பையிலிருந்து சென்னை திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரின் வேண்டுகோளை ஏற்று ஆந்திர போலீசார் தங்கள் சொந்த செலவில் உணவு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து தற்போது வெளி மாநிலங்களில் தங்கியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர் . இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மும்பையிலிருந்து சென்னைக்கு 1500 தமிழர்கள் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்கள் அனைவருக்கும் நேற்று காலை வரை உணவு இருந்தது. இதையடுத்து அவர்கள் தங்களைத் தமிழ்நாடு அழைத்து வர உதவி செய்த பூமிகா டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்திற்குத் தொடர்பு கொண்டு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யுமாறு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரயிலில் வரும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனிடம் பூமிகா டிரஸ்ட் நிறுவனம் கோரிக்கை வைத்தது.

இதை அறிந்த ஆணையர் விஸ்வநாதன் ரயிலில் வரும் நபர்களின் எண்ணிக்கை, என்ன உதவி தேவை என்பதை அறிந்துகொண்டு உதவி செய்ய முன்வந்தார். அப்போது தொழிலாளர்கள் வரும் ரயில் மதியம் 3 மணியளவில் ஆந்திரம் மாநிலம், குண்டக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும் என்பதை அறிந்து கொண்டு, குண்டக்கல் எஸ் பி சத்ய இயேசு பாபுவை தொடர்பு கொண்டு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி உதவுமாறும், அதற்கான செலவு தொகையை அனுப்பி வைப்பதாகவும் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

இந்த தகவலை குண்டக்கல் எஸ்பி ஆந்திர மாநில டிஜிபி தாமோதர் கௌதமிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த ஆந்திர டிஜிபி தமிழ் மக்களுக்கு உதவி செய்வதற்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது என்று கூறி, தொழிலாளர்களுக்கு உணவினை நம் சொந்த செலவிலேயே வழங்கலாம் என்று தெரிவித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

அதன்படி நேற்று மதியம் 3 மணிக்கு குண்டக்கல் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த 1500 தொழிலாளர்களுக்கும் போலீசார் 300 பாக்கெட் பிரியாணி, ஜீரா சாதம், தக்காளி சாதம், உப்மா, பிஸ்கட், 1500 தண்ணீர் பாட்டில்களை வழங்கி பசி ஆற்றினர்.

உணவினை பெற்றுக்கொண்ட பயணிகள் மகிழ்ச்சியுடன், சென்னை காவல் ஆணையர், ஆந்திர டிஜிபி, குண்டக்கல் எஸ் பி, மற்றும் பூமிகா தொண்டு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

மனிதாபிமான அடிப்படையில் உதவிய ஆந்திர போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் நன்றி தெரிவித்துள்ளார். அதுபோன்று குறுகிய காலத்தில் திறமையுடன் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான உணவுப் பொருட்களைத் தயார் செய்து வழங்கியதற்காக குண்டக்கல் எஸ்பி பாபுவுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார் காவல் ஆணையர் விஸ்வநாதன் .

**கவிபிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share