தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான மசோதாவைத் துணை முதல்வர் பன்னீர் செல்வம் இன்று (பிப்ரவரி 4) தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் பலர் தங்கள் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் முத்துக்குமார், முகமது ரஸ்வி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த நவம்பர் 5ஆம் தேதி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இளைஞர்களின் உயிர்களைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யச் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார்.
கடந்த நவம்பர் 18ஆம் தேதி ஆன்லைன் ரம்மிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, இவ்விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும், சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய எவ்வளவு காலம் ஆகும் என்றும் கேள்வி எழுப்பியது.
கடந்த நவம்பர் 20ஆம் தேதி, ஆன்லைன் ரம்மிக்குத் தடைவிதித்து தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் சட்ட மசோதாவைத் துணை முதல்வர் பன்னீர் செல்வம் இன்று (பிப்ரவரி 5) சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
1930ஆம் ஆண்டு தமிழ் நாடு சூதாட்டச் சட்டம், சென்னை நகரக் காவல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து 2021 தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் (திருத்த) சட்டம் எனத் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம், சூதாட்ட விளையாட்டில் பணம் வைத்து விளையாடுவோரையும் அதில் ஈடுபடுத்தப்படும் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களையும் தடை செய்ய முடியும்.
தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம், 6 மாத சிறை தண்டனை வழங்கவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதமும் 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கவும் இந்த சட்டத் திருத்தம் வழி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**�,