மாதவன், அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
முழுக்க அமெரிக்காவின் சியாட்டிலில் படமாக்கப்பட்ட மாதவன் – அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தின் 1.15 நிமிட டீசர் வெளியாகியுள்ளது. குறுகிய நிமிடங்களே வரும் இந்த டீசர் பார்வையாளர்களுக்கு திகில் கலந்த த்ரில்லர் படத்துக்கான உணர்வை அளிக்கிறது. தற்போது பெரும்பாலும் ஹாரர் படங்கள், ஹாரர் – நகைச்சுவைத் திரைப்படங்களாக மட்டுமே நீண்ட காலமாக ஒரே பாணியில் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில், சந்தேகத்திற்கு இடமின்றி திகில் உணர்வுகளைக் கடத்தும் நிசப்தம் படத்தின் டீசர் கவனிக்க வைக்கிறது.
ஹேமந்த் மதுக்கர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அனுஷ்கா காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். தம்பதிகளான மாதவன் – அனுஷ்கா வாழ்வில் நடக்கும் நம்பமுடியாத திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களே படத்தின் மையமாக உள்ளது. அவர்கள் வீட்டில் நடக்கும் சில அமானுஷ்ய செயல்களால், அவர்களின் அழகிய பயணம் தடம் மாறுகிறது. அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த டீசரை படக்குழு வெளியிட்டிருக்கிறது.
2018ஆம் ஆண்டில் வெளியான பாகமதி படத்திற்குப் பின் அனுஷ்கா முழுமையாக ஒரு படத்தில் தோன்றுவது நிசப்தம் படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் இயக்குநர் டொரண்டினோவின் கில் பில் படத்தில் நடித்த மைக்கேல் மேட்சன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அஞ்சலி இந்தப் படத்தில் முதன்முறையாகக் காவல் துறை அதிகாரியாக பாத்திரம் ஏற்றிருக்கிறார். ஷாலினி பாண்டே முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்திருக்கிறது.
விரைவில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
�,”