தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அனுமதியின்றி நடைபெறும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து தமிழக டிஜிபி பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை உட்படத் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிஏஏவுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் திருச்சியில் அந்தந்த மாவட்ட காவல் ஆணையர்கள் போராட்டம் நடத்தத் தடை விதித்துள்ளனர்,. சென்னையைப் பொறுத்தவரைக் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 4 முறை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி காவல்துறை அனுமதியின்றி போராட்டம் நடைபெறுகிறது.
சேலத்தில் கோட்டை பகுதியிலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவதாகவும், இதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் கலந்துகொள்வதாகச் சேலத்தைச் சேர்ந்த கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “அனுமதியின்றி நடைபெறும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது எனச் சட்ட விதிகள் உள்ளதா என்று கேள்வி எழுப்பி வழக்கை மார்ச் 2ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இன்று (மார்ச் 2) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியின்றி நடைபெறும் போராட்டங்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவுக்காக காவல்துறையினர் ஏன் காத்திருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும் தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராக அனுமதியின்றி நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு மற்றும் டிஜிபி பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
**கவிபிரியா**�,