நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் என்று பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து ஒரு பங்கு பாதிப்பு உள்ளதென்றால் சென்னையில் மட்டும் ஒரு பங்கு பாதிப்பு இருக்கிறது. இதனால் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக வளாகங்களும் ஜூலை 5ஆம் தேதி வரை மூடப்படுவதாகப் பல்கலைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
தற்போது சென்னையில் நாளை முதல் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் என்று அதன் பதிவாளர் அறிவித்துள்ளார். பேராசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோர் கட்டாயம் பணிக்கு வர வேண்டுமென்றும், பணிக்கு வராதவர்கள் விடுப்பு எடுத்தவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பணிக்கு வருபவர்களுக்குப் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 4 வளாக கல்லூரிகளும் இயங்கும் என்றும் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொறியியல் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பான பணிகள் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பல்கலைக்கழக விடுதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப் படுத்துவதற்கான முகாமாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
**-கவிபிரியா**�,