இன்ஜினியரிங் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கான இறுதி பருவத்தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகமும் சென்னைப் பல்கலைக்கழகமும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவை வெளியிடவுள்ளன.
கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பொறியியல் மாணவர்களுக்கான இறுதி பருவத் தேர்வில் 93 சதவீத மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டதாகவும், 17 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை, 10,000 மாணவர்கள் ஆன்லைன் தேர்வின் போது தொழில் நுட்ப பிரச்சனைகளை சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கும் தொழில்நுட்ப பிரச்சனையைச் சந்தித்த மாணவர்களுக்கும் துணைத் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் அண்ணா பல்கலைக்கழகம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்வின் போது செல்போன் கேமரா, மைக், மின்விளக்குகள் ஆகியவைகள் எந்த இடையூறும் இல்லாமல் செயல்பட வேண்டும், சிரமங்கள் ஏற்பட்டால் உடனே ஆசிரியர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், தேர்வு எழுதிய மாணவர்களை அண்ணா பல்கலைகழகம் கண்காணித்துள்ளது.
இதில் சில மாணவர்கள் படுத்துக் கொண்டே தேர்வு எழுதியதும், டீக்கடையில் அமர்ந்து கொண்டே தேர்வு எழுதியதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த செயல்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
**-பிரியா**�,