உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

Published On:

| By Balaji

நடப்பு ஆண்டுக்கான உலக டாப் 100 பல்கலைக்கழகங்கள் அடங்கிய தரவரிசை பட்டியலில் 12 இந்திய கல்வி நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகமும் அடங்கும்.

உலக பல்கலைக்கழக தர வரிசை 2021 ஆண்டுக்கான பட்டியலை நேற்று (மார்ச் 5) வெளியிட்ட மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “கடந்த சில ஆண்டுகளாக, வளர்ச்சிக்கான தொடர்ச்சியான கவனம் மற்றும் இந்திய உயர்கல்வியில் சீர்திருத்தம் ஆகியவற்றை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவால், இந்திய கல்வி நிலையங்களின் பிரதிநிதித்துவம் முன்னேற்றம் அடைந்து, உலக அளவில் புகழடைந்து, கியூ.எஸ் (

Quacquarelli Symonds) போன்ற மதிப்புமிக்க தர வரிசையையும் பெற்றுள்ளன.

இந்த தர வரிசை மற்றும் தர மதிப்பீடு, சர்வதேச சிறப்பு வாய்ந்த நிலையை நோக்கிச் செல்ல ஊக்கமளிக்கும் வகையில் இந்திய கல்வி நிலையங்களிடையே ஆரோக்கிய போட்டியை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதன்படி உலக டாப் 100 தரவரிசையில் மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி, சென்னை ஐஐடி, காரக்பூர் ஐஐடி, பெங்களூர் ஐஐடி, கவுகாத்தி ஐஐடி, பெங்களூர் ஐஐஎம், அகமதாபாத் ஐஐஎம், ஜேஎன்யூ, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகம் ஆகிய 12 இந்திய கல்வி நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.

இவற்றில் சென்னை ஐஐடி பெட்ரோலிய இன்ஜினீயரிங் பிரிவில் உலக அளவில் 30ஆவது தர வரிசையைப் பிடித்துள்ளது. உலக அளவில் மும்பை ஐஐடி 41ஆவது இடமும், காரக்பூர் ஐஐடி தாதுப்பொருட்களுக்காக 44ஆவது இடமும் பிடித்துள்ளன.

இதேபோல், டெல்லி பல்கலைக்கழகம் வளர்ச்சி படிப்புகளுக்காக உலக அளவில் 50ஆவது தரவரிசையைப் பெற்றுள்ளது என மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

**- ராஜ்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share