பதவியிலிருக்கும்போதே குழந்தை பெற்றுக்கொண்ட துணைமுதலமைச்சர் எனும் பெயரைப் பெற்றிருக்கிறார், புஷ்பாஸ்ரீவாணி. ஆந்திர மாநிலத்தில்தான் இவர் துணை முதலமைச்சராக இருக்கிறார்.
ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திரப்பிரதேச அமைச்சரவையில், பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார், புஷ்பா ஸ்ரீவாணி. மாநிலத்தின் ஐந்து துணை முதலமைச்சர்களில் இவரும் ஒருவர். நாட்டின் மிக இளம் வயது துணை முதலமைச்சர்களில் ஒருவரும்கூட.
34 வயதாகும் புஷ்பா ஸ்ரீவாணி- சத்ருசர்லா பரிக்சித் ராஜு தம்பதியருக்கு இப்போதுதான் குழந்தை பிறந்திருக்கிறது. துணை முதலமைச்சர் புஷ்பா ஸ்ரீவாணிக்கு முதலமைச்சர் ஜெகன் மோகனும் அவரின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் சக அமைச்சர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தின் விழியநகரம் மாவட்டத்தில் உள்ள குருபாம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றவர், பாமுல புஷ்பாஸ்ரீவாணி.
அமராவதி மாவட்டம் போலவரத்தில் இவரின் குடும்பம் வசித்துவருகிறது. துணை முதலமைச்சர் புஷ்பா ஸ்ரீவாணிக்கு அக்கா ஒருவரும் தம்பியும் தங்கையும் உள்ளனர். அறிவியல் பட்டப்படிப்பைப் படித்து கல்வியியலிலும் பட்டம் பெற்றவர், அரசியலில் நுழைய சட்டமன்ற உறுப்பினர், துணை முதலமைச்சர் என அடுத்தடுத்த உயரங்களை எட்டிப்பிடித்தார்.
குழந்தை பெற்றுள்ள வாணியை நம்ம ஊரு கதாநாயகியும் ஆந்திர அரசியல்வாதியுமான ரோஜா, நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். வாணியின் வீட்டுக்குச் சென்று குழந்தையைக் கொஞ்சிவிட்டு வந்திருக்கிறார், ரோஜா.
இந்தக் காட்சி இணையத்தில் பரவிவருகிறது. புஷ்பாஸ்ரீவாணியே சமூக ஊடகத்தின் மூலம்தான் அரசியலுக்கு வந்தார். குருபாம் தொகுதியில் பல சமூகப் பணிகளில் ஈடுபட்டு சமூக ஊடகம் மூலம் பிரபலமான இவர், ஜெகன் மோகனின் கவனத்தைப் பெற்றார். இவர், ஜெகனைப் பற்றிப் பாடிய பாடல் டிக்டாக்கில் அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
�,”