Jமோடி-ஜின்பிங்: நடந்தது என்ன?

Published On:

| By Balaji

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் இன்று (அக்டோபர் 12), கோவளத்தில் உள்ள பிஷர்மேன் கேவ் ஓட்டலில் நடைபெற்ற முறைசாரா மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த மாநாட்டிற்காக சீன அதிபரும், பிரதமர் மோடியும் நேற்று சென்னை வந்தனர். ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் சீன அதிபரும், பிரதமர் மோடி பிஷர்மேன் கேவ் நட்சத்திர ஓட்டலிலும் தங்கினர். நேற்று மாலை இருவரும் மாமல்லபுர சிற்பங்களைச் சுற்றிப் பார்த்தனர். இரவு கலை நிகழ்ச்சிகள் முடிந்து ஐடிசிக்கு திரும்பிய சீன அதிபர் மீண்டும் இன்று காலை மோடி தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றார். அங்குக் கடற்கரை அருகிலிருந்த கண்ணாடி அறையில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இருவரது தலைமையில் இரு நாட்டு அதிகாரிகள் மத்தியில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் விஜய் கோக்லே மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

**இந்தியாவும் சீனாவும் பொருளாதார சக்திகள்**

’வணக்கம்’ என தமிழில் பேசத் தொடங்கிய பிரதமர், ”இந்தியா-சீனா கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளுக்குத் தமிழகமும் பண்டைய நகரமான சென்னையும் சாட்சியாக உள்ளன. எங்கள் கலாச்சார புதையல்களில் சிலவற்றை உங்களுக்கு (ஜீ ஜின்பிங்) அறிமுகப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த 2000 ஆண்டுகளில் இந்தியாவும் சீனாவும் உலகின் முக்கிய பொருளாதார சக்திகளாக உள்ளன” என்று தெரிவித்தார்.

”கடந்த ஆண்டு வுஹானில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டின் காரணமாக, இரு நாட்டு உறவுகள் ஸ்திரத்தன்மையையும் புதிய வேகத்தையும் கண்டன. மூலோபாய தொடர்பு வளர்ந்துள்ளது. வேறுபாடுகளை விவேகத்துடன் நிர்வகிக்க முடிவு செய்துள்ளோம். ஆனால் இதில் சர்ச்சை ஏற்படக்கூடாது” என்று பிரதமர் மோடி பேசினார்.

** முன்னேற்றத்தை ஏற்படுத்தும்**

”உங்களின் விருந்தோம்பல் எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நானும் எனது சகாக்களும் இதனை மிகவும் வலுவாக உணர்ந்திருக்கிறோம். இந்த பயணம் எனக்கும், எனது நாட்டு அதிகாரிகளுக்கும் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்” எனச் சீன அதிபர் தெரிவித்தார். “நேற்று நீங்கள் (மோடி) சொன்னது போல், நீங்களும் நானும் நண்பர்களைப் போன்ற நேர்மையான உரையாடலில் ஈடுபட்டோம், இதயபூர்வமான உடையாடல் அது. இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தோம். இந்த முறைசாரா மாநாடு புலப்படும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார் ஜீ ஜின்பிங்.

**பட்டும் தட்டும் பரிசு**

இந்த ஆலோசனையை தொடர்ந்து, மோடி தங்கியிருந்த ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை இருவரும் பார்வையிட்டனர். கோவை கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அப்போது சீன அதிபருக்குச் சிறப்புச் செய்யும் வகையில், ஜீ ஜின்பிங் உருவம் நெய்யப்பட்ட பட்டு சால்வையைப் பிரதமர் பரிசளித்தார். கோவை, சிறுமுகையைச் சேர்ந்த நெசவாளர்களால் இந்த சால்வை தயாரிக்கப்பட்டது. அதுபோன்று காஞ்சிபுரம் பட்டுப்புடவை ஒன்றையும் பரிசளித்துள்ளார். இதையடுத்து பிரதமர் மோடியின் உருவப்படம் கொண்ட தட்டு ஒன்றினை சீன அதிபர் வழங்கினார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கு மற்றும் ஐம்பொன்னால் ஆன சிலைகள் குறித்துச் சீன அதிபருக்கு விளக்கினார் மோடி. திட்டமிடப்பட்ட இரண்டு நாள் பயணம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஓட்டலிலிருந்து விமான நிலையம் திரும்பிய சீன அதிபர் 1.30 மணியளவில் அங்கிருந்து நேபாளம் புறப்பட்டார். அதுபோன்று பிரதமர் மோடியும் டெல்லி புறப்பட்டார். மோடியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், உள்ளிட்டோர் அனுப்பி வைத்தனர்.

**திரும்பிப் போக வேண்டாம்**

வழக்கமாகப் பிரதமர் மோடி தமிழகம் வந்தால் #gobackmodi ஹேஷ்டேக் ட்ரெண்டாகும் நிலையில், இன்று #dontgobackmodi ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் மோடி இன்று காலை தூய்மை பணியில் ஈடுபட்டது, பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்தது குறித்தும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இரண்டு நாள் பயணம் குறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நன்றி. #ChennaiConnect இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும். தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்குச் சிறப்பு நன்றி. எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும். அழகிய மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய- சீன முறை சாரா உச்சி மாநாட்டிற்கு உறுதுணை புரிந்து உபசரிப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக கலாச்சார அமைப்புகள், அரசுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

**காஷ்மீர் குறித்து விவாதிக்கவில்லை**

இந்த முறைசாரா மாநாடு குறித்து வெளியுறவு செயலாளர் விஜய் கோக்லே செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இரு நாட்களும் 6 மணி நேரம் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசினர். பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து ஜீ ஜின்பிங் பேசினார். மோடியும், சீன அதிபரும் உலகளாவிய வர்த்தக முறையின் முக்கியத்துவம் குறித்து விவாதித்தனர். உலகில் அதிகரித்துவரும் பயங்கரவாதத்தை முறியடிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் பேசினர்” என்று தெரிவித்தார்.

உலகளாவிய பிரச்சினைகளுக்கு இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரம் பற்றி எதுவும் பேசவில்லை. உள்நாட்டு விவகாரம் என்பதால் இப்பிரச்சினையில் இந்தியா தெளிவாக உள்ளது. சீன அதிபரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

”வர்த்தகம், முதலீடு மற்றும் சேவைகள் குறித்து விவாதிக்க ஒரு புதிய வழிமுறை நிறுவக் குழு அமைக்கப்படும். இதில் சீனாவிலிருந்து வைஸ் பிரீமியர், ஹு சுன்ஹுவா மற்றும் இந்தியாவிலிருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருப்பார்கள். இந்தியாவிலிருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதாகச் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உறுதியளித்துள்ளார். தமிழகம் மற்றும் சீனாவின் பியூஜியான் மாகாணம் தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை மோடி, ஜீ ஜின்பிங்கிற்கு வழங்கினார்” என்று விஜய் கோக்லே கூறினார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share