�டிஜிட்டல் திண்ணை: இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட தினகரன் – அதிமுகவோடு இணைகிறதா அமமுக?

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.

 நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடவில்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். கட்சிப் பதிவுக்கான நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருப்பதால் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தினகரன் ஏற்கனவே தெரிவித்து விட்டார்.அப்படி என்றால் இந்த இரண்டு தொகுதிகளிலும் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் என்ன செய்வது என்ற கேள்வி அவர்களுக்குள்  எழுந்தது. இதுபற்றி தினகரனிடம் கேட்பதற்கு  சில நிர்வாகிகளும் முயன்று வந்தனர்.  பொதுவாகவே டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் வாட்ஸ்அப் அழைப்புகளில் தான் பேசுவார். இல்லையென்றால் லேண்ட்லைன் ஃபோன் பயன்படுத்துவார். .சமீப காலமாகவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஆடியோ சர்ச்சைகள் அதிகமாகிக்கொண்டே இருப்பதால் இந்த முறையைத்தான் டிடிவி தினகரன் பின்பற்றுகிறார்.

இந்த நிலையில் தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு  டிடிவி தினகரன் இடம் இருந்து விழுப்புரம் மாவட்ட அமமுக  செயலாளர்,  நாங்குநேரி பொறுப்பாளர்களுக்கு வாட்ஸப் கால் போயிருக்கிறது. ‘நாமும் இந்த தேர்தலில் போட்டியிடலைன்கிறது உங்களுக்கு தெரியும். நம்ம கட்சி தேர்தல் நிக்காததால் கட்சி நிர்வாகிகள் என்ன பண்றதுன்னு தெரியாம இருக்க கூடாது. நான் சிறையில் இருக்கிற சின்னமாவிடம் இது பற்றி பேசி விட்டேன். அவங்க சொல்றத நான் உங்களுக்குச் சொல்கிறேன். இந்த முறை நம்ம ஓட்டு அத்தனையும் அதிமுகவுக்கு தான் விழணும். நம்மால திமுக ஜெயிச்சுடுச்சுன்னு ஆகிடக்கூடாது. அதனால நம்ம ஓட்டு அதிமுகவுக்கு விழ வேண்டும் ‘என்று  கூறியிருக்கிறார் தினகரன்.இதைக் கேட்ட நிர்வாகிகள் அதிமுகவும் அமமுகவும் விரைவில் இணைய கூடிய வாய்ப்பு இருக்கா என்று தினகரனிடமே கேட்டு வைக்க”என்கிட்ட சின்னம்மா சொன்னத நான் உங்ககிட்ட சொல்றேன். இப்போதைக்கு இதைப் பண்ணுவோம் மத்ததை அப்புறம் பேசிக்கலாம் என்று கூறியிருக்கிறார் தினகரன். இந்த வகையில்தான் அமமுகவினரின் வேலை அமைந்தது. குறிப்பாக நாங்குநேரியில் முக்குலத்தோர் வாக்கு வங்கியில் அமமுகவின் செல்வாக்கு கணிசமாக இருக்கிறது. இந்த வாக்குகள் முழுக்க அதிமுகவுக்கே விழுந்திருக்கிறது. இதேபோல விக்கிரவாண்டி தொகுதியிலும் அமமுகவினரின் வாக்குகள் இரட்டை இலைக்கே விழுந்திருக்கின்றன.

இதற்கிடையே தேர்தலுக்கு முன்பே அமைச்சர்களிடம் முதல்வர் எடப்பாடி, ‘தினகரனைப் பற்றியோ சசிகலாவை பற்றியோ பிரச்சாரத்தில் பேச வேண்டாம்’என்று உத்தரவே போட்டிருக்கிறார்.  

தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் நேற்று சசிகலாவை பெங்களூரு சென்று சந்தித்திருக்கிறார்  தினகரன். அவருடன் விவேக், ராமச்சந்திரன், கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், சசிகலாவின் உதவியாளரான கார்த்திக் உள்ளிட்டோர் சென்று சந்தித்துள்ளனர். பொதுவாகவே தினகரனும் மற்றவர்களும் சசிகலாவை சந்தித்துவிட்டு சிறை வளாகத்திலேயே தனித்தனியாக பிரிந்து சென்றுவிடுவார்கள். ஆனால் நேற்று எல்லாரும் கூடியிருந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.  சசிகலாவை சந்தித்தபோது, ‘நீங்க சொன்னபடியே நம்ம நிர்வாகிகள் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்திருக்காங்க. இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டிருக்காங்க’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு சசிகலா, ‘இரட்டை இலைதான் அக்கா எனக்கு அறிமுகப்படுத்தின சின்னம். அதுதான் நம்ம சின்னம்’ என்றும் பதில் கூறியிருக்கிறார்.இடைத்தேர்தலில் உருவான இந்த அமமுக, அதிமுக ஒத்துழைப்பு விரைவில் இரு கட்சிகளும் இணைவதற்கான ஒத்திகையாக  நடந்திருக்கிறது என்கிறார்கள் அமமுகவினர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ச் அப்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share