அமமுக பொதுச் செயலாளர் தினகரன், தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக அமமுகவின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது.
2018 பிப்ரவரி மாதம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த தினகரன், தற்போது அதனை பதிவு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நிரந்தர சின்னம் கிடைக்காததால் வேலூர் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த தினகரன், தற்போது நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.
இந்த நிலையில்தான் மக்களிடமிருந்து அமமுகவுக்கு இடைவெளி ஏற்படாமல் தவிர்க்க ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியை பின்பற்றி தினகரனும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பிரஜா சங்கல்ப யாத்ரா என்ற பெயரில் ஆந்திர மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். அதனையடுத்து, நடந்த தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி.
அதே பாணியில் நாள் ஒன்றுக்கு 20-25 கி.மீ வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ள தினகரன், ஒவ்வொரு ஊரில் பொதுமக்களை சந்தித்து ஆட்சிக்கு எதிராக பேசவுள்ளார். ஆட்சிக்கு வரும்போது அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை சொல்லி, ‘சொன்னார்களே, செய்தார்களா’ என்று முழக்கத்துடன் மக்களிடமே கேள்வி எழுப்பவுள்ளார். தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் இந்த பயணத்தை விரிவுபடுத்துவதற்காக ஏற்பாடுகள் ரகசியமாக நடைபெற்று வருகின்றன. கடைசி கட்டத்தில்தான் இந்தத் தகவல் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கே தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் அமமுகவுக்கு ஏற்பட்ட தோல்வியையடுத்து, அமமுக நிர்வாகிகள் பலரும் கட்சியை விட்டு வெளியேறி மாற்றுக் கட்சிகளில் அடைக்கலமாகி வருகின்றனர். தினகரனின் அரசியல் நடவடிக்கைகள் அமமுகவினருக்கு பிடிக்கவில்லை என்றும், தினகரனை வரவேற்க தொண்டர்கள் பூரணகும்பம் வைத்துக்கொண்டு நிற்பார்கள். அவர்களிடம் காரில் உட்கார்ந்துக்கொண்டே தொட்டுப்பார்த்துட்டு பார்த்துக்கொண்டே போகிறார் என்றும் [நிர்வாகிகளே அதிருப்தி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/09/23/110) தெரிவித்திருந்தனர். பல நிர்வாகிகள் விரைவில் வெளியேறவுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதையெல்லாம் விட அதிமுக-அமமுக இணைப்பு விரைவில் நடைபெறவுள்ளதாக அமமுக கட்சிக்கு உள்ளேயே பேசிவருகிறார்கள்.
இதனையடுத்து, அமமுகவிலிருந்து மாற்றுக் கட்சிக்குச் செல்லும் முடிவில் இருக்கும் நிர்வாகிகளை சமாதானப்படுத்தவும், ஆட்சிக்கு எதிராக பேசுவதன் மூலம் அமமுக-அதிமுக இணைப்பு நிகழாது என்று சொல்வதற்காகவும் இந்த பயணத்தை பயன்படுத்தவுள்ளார் தினகரன்.
�,